Thursday, October 2, 2014

உயிரற்ற வாழ்க்கையா? உடன்கட்டை ஏறலா?

சில தினங்களுக்கு முன்னால் எனக்கு மிக அணுக்கமான மைத்துனர் உறவுமுறை கொண்ட ஒருவர் இறந்துவிட்டார்.

கடந்த பத்தாண்டுகளாகப் படுத்த படுக்கையாகவே அவருடைய வாழ்க்கை நகர்ந்து வந்தது. இறக்கும் பொழுது அவருக்கு வயது 48. அதாவது அவர் படுக்கையாகப் படுக்கும் பொழுது அவர் வயது 38.

அவருக்கு வாழ்க்கை இறையருளால் இவ்வளவு சுருக்கமாகவே வழங்கப்பட்டது.

அவருடைய துணைவியாரும் எனக்கு மிக அணுக்கமான கொழுந்தி முறைப் பெண்மணி. அவருக்குத் தற்போது வயது 44. இளமைப் பருவத்தில் கிடைத்த வாழ்க்கையின் பயனாக ஒரு மகனும் ஒரு மகளும் அவளுமாகத் தனித்து விடப் பட்டிருக்கின்றனர்.

முப்பத்து நான்கு வயதில் அவளுக்குத் தாம்பத்திய வாழ்க்கை இல்லாது போயிற்று. 44 வது வயதில் கைம்பெண் வாழ்க்கைக் கற்றுக் கொடுக்கப் படுகிறது.

இந்த இளம் விதவையின் வாழ்வு முறையை எண்ணிப் பார்க்கும் பொழுது மனதில் ஒரு பாராங்கல் வந்து அமர்கிறது.

விதவை என்ற வார்த்தையைப் படிப்பவர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான், அந்தச் சொல்லை நான் பயன்படுத்துகிறேன்.

அப்படி ஒரு சொல்லே எனக்கு உகப்பானது அன்று. விதவைத்தனம் என்பது பெண்கள் மீது ஒரு சமூகம் நடத்துகின்ற கொடூரமானத் தாக்குதல் என்றுதான் வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தாலி பெறுவதும், தாலி அறுப்பதும் என்ற சடங்குகளுக்கு முன்னும் பின்னும் நடுப்பகுதியிலும் அமைகின்ற நம் தமிழகச் சமூகத்துப் பெண்களின் வாழ்வுமுறை தனியாகப் பதிவு செய்ய வேண்டிய ஒன்றுதான்.

அதைத் தனியே சில பதிவுகளாக வாய்ப்பு வரும் பொழுது நானே எழுத இருக்கிறேன்.

இங்கே ஒரு வரலாற்றுப் பெண்ணின் பதிவினைப் பதிவு செய்கிறேன்.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன். இவன் பாண்டிய மன்னன். இந்தப் பூதப் பாண்டியன் மரணித்து விடுகிறான். இந்த மன்னனின் மனைவி தேவி கோப்பெரும் பெண்டு விதவை வாழ்க்கையைப் பதிவு செய்கிறாள்.

இந்தப் பதிவு ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பானது அல்ல. புறநானூற்றுக் காலத்துப் பதிவு.

விதவை வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

கணவனை இழந்துவிடும் பெண்கள் உடன்கட்டை ஏறிவிட வேண்டும். அதை ஏற்கத் தயங்கிய பெண்கள் சில சட்டதிட்டங்களுக்குக் கட்டுபட்டு வாழ்ந்தாக வேண்டும்.

பொடி அரிசி சாதத்தை அவர்கள் உண்ணக் கூடாது. நெய் பட்ட எந்த உணவையும் அருந்தக் கூடாது. முதல் நாள் சோற்றை நீர் ஊற்றி மறு நாள் அந்த நீரில் இருக்கும் பருக்கையை கைகளால் பிசைந்து உருண்டைச் செய்து எள் துவையல், புளி சேர்த்து வெந்த வேளைக் கீரை உடன் சேர்த்து மூன்று வேளையும் உணவாக்கிக் கொள்ள வேண்டும்.

பாய் விரித்துப் படுக்கக் கூடாது. பரற்கற்களைப் பரப்பி பாயில்லாமல் அதில்தான் படுத்துத் தூங்க வேண்டும்.

இந்தக் கோர வாழ்க்கைதான் கைம்பெண் (விதவை) வாழ்க்கை.

பாண்டியன் மனைவி இந்த அவல வாழ்க்கையை வாழ்வதைவிட கணவன் எரியூட்டப்பட்ட எரிதழலிலேயே வெந்து சாம்பலாகி விடுவது மேலானது எனக் கருதி உடன்கட்டை ஏறி எரிந்து விடுகிறாள்.

உடன்கட்டை ஏறுவதற்கு முன்னர் அவள் பதிப்பித்த அந்தப் பதிவுதான் புறநானூற்றில் பதிவாகி இருக்கிறது.

தினம்தினம் வெந்து மடியும் வாழ்வைவிட ஒருமுறை எரிந்து அழியும் வாழ்க்கை மேலானது என்று கருதிவிட்டாள்.

சில சடங்குகள் பிழையாகப் பதிவாகி விடுவதால் ஒரு அரும் வாழ்க்கை அழிந்துப் போவது கூட உயர்வானதாக ஆகிவிடுகிறது.

அரசாண்ட மன்னனின் மனைவிக்கு இதுதான் நிலையென்றால் அங்கு வாழ்ந்த குடிமக்களுக்கு இந்த வாழ்வு முறை எப்படியெல்லாம் திணிக்கப்பட்டிருக்கும்?

வரலாற்றின் ரத்தக் கசிவுகள் இவைகள்.

தமிழர்களுக்கும், உடன்கட்டை ஏறுதலுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது?

இது தமிழகத்து வாழ்க்கை முறையா?

எங்கிருந்து இது திணிக்கப்பட்டது?

இவைகள் எல்லாம் தனியே பதிவு செய்யப் பட வேண்டிய தகவல்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் இதைப் பற்றி பேசுவோம்.

என் உறவுக்கார பெண்மணிக்கு இப்பொழுது நடைமுறைப்படுத்த வழங்கப்படும் அறிவுரைகள் மிக வேதனையாக இருக்கிறது.

கணவனை இழந்த ஒரு பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் அவர்கள் தங்கி இருக்கும் இல்லத்திலேயே கொஞ்சம் தனித்து இருக்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது.

கணவனை இழந்த ஒரு பெண் தானே உழைத்துத் தன் உணவையும், தன் குடும்பத்தார் உணவையும் பெற்றாக வேண்டும் என்ற நிலை இருந்தால் நான்கு மாதம் 10 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை முறையைப் பாதுகாப்பான நிலையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதும் இஸ்லாம் சொல்லும் கருத்து.

இந்தக் காலகட்டத்திற்குச் சொல்லப் படும் காரணம், மறைந்த கணவன் மறைவுக்கு முன்னர் இவர்களுக்கு இடையே தாம்பத்யம் நடைபெற்று அவள் கருத்தரித்து இருந்தால் அதைக் கண்டறிய நான்கு மாதங்கள் தேவைப் படுகிறது. மறைந்த கணவனுக்குரியதுதான் அந்தக் கரு என்ற உறுதிக்கு இந்த இடைவெளி அவசியமாகிறது.

இந்தக் காலகட்டத்திற்குப் பின் அந்தப் பெண் தனித்து தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கோ, இல்லையென்றானால் பல அவசிய காரணங்களுக்காகவோ மறுமணம் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டால் அவளுக்கு அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள உரிமை இருக்க வேண்டும்.

இந்த உரிமையைப் பெறுவதற்கு நான்கு மாதம் பத்து நாள் இடைவெளி தேவைப் படுகிறது. இந்த நான்கு மாத கால இடைவெளியில் அவள் கருத்தரித்து இருப்பது உறுதியானால் அந்தக் கரு மண்ணுலகுக்கு வரும் காலம் வரை பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

அதற்குப்பின் அவள் தனி வாழ்க்கையையோ மண வாழ்க்கையையோ மேற்கொள்ளலாம் அது அவள் விருப்பம்.

இந்தக் கால இடைவெளிக்கு பெயர், “இத்தா இருத்தல்”. இந்த இத்தா இருத்தலை இன்று நெல்லை மாவட்டத்து முஸ்லிம் சமூகம் வரைமுறைப் படுத்தி இருக்கக் கூடிய போக்கினைப் பார்த்தால் இஸ்லாம் இவ்வளவு கடுமையாகவா இருக்கிறது? என்று எண்ணத் தோன்றுகிறது.

என் உறவுக்கார பெண்மணியிடம் சமூகத்து ஆண்களும் பெண்களும் இத்தா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்என்ற ஒரு செயற்பாட்டை வற்புறுத்துகிறார்கள்.

இந்தச் சமூகம் வற்புறுத்தும் இந்த நடைமுறைகளை இஸ்லாம் நிச்சயம் வலியுறுத்தவில்லை.

இத்தா இருக்கும் அந்தப் பெண்,
கலர் ஆடைகளை உடுத்தக் கூடாது.
அடுக்களைக்குச் செல்லக் கூடாது.
நெருப்பைப் பார்க்கக் கூடாது. அது தீட்டு.
உணவைப் போதிய அளவு அருந்தக் கூடாது.
குளியலை காலை மாலை வேளைகளில் நிகழ்த்தக் கூடாது.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் குளிக்கலாம்.

இப்படித்தான் இத்தா முறை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.

இஸ்லாம் இதை எங்கும் எப்பொழுதும் சொல்லவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் என்ற இவர்கள், இவர்களுக்குத் தோன்றிய இஸ்லாத்தை, இஸ்லாத்தின் முதுகில் ஏற்றி ஊர்வலம் விடுகிறார்கள்.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் மனைவி, தேவி கோப்பெரும் பெண்டு கைம்பெண் வாழ்க்கையைவிட கனலில் எரிந்து சாவது மேலென்று சொன்னாளே அந்தப் புறநானூற்றுக் கால வேதனை, வெதும்பல் பெருமூச்சு இன்றும் இங்கே ஒலிக்கிறதே என்ற வேதனையை எண்ணும் பொழுது நமது ரத்த நாளங்களிலும் கனல் சூடு பரவத்தான் செய்கிறது.

தாலி பெறுவது திருமணத் தொடக்கச் சடங்கு. தாலி அறுப்பது திருமண முறிவுச் சடங்கு. இப்படி உள்ள வாழ்க்கை, தமிழகத்துச் சமூக வாழ்க்கைதானா? இல்லையென்பது, வரலாற்றுத் தெளிவு. முடிவு.

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்! பத்தாயிரம் காலத்து மரம்! என்ற தகவல்களுக்குப் பின்னால் பதுங்கி இருக்கக்கூடிய சமூகப் பயங்கரம் பற்றிக்கூட நாம் விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டும்.

தாலியைக் கழுத்துக்குத் தருவதும் அதை அறுத்தெடுத்து எறிவதும் எங்கிருந்து வந்தது?

இந்த வந்துசேர்ந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வேதனைகளை நம் பெண் சமூகத்திற்குத் தர்மக் கொடை போல வழங்கி இருக்கிறது. இந்த அநாச்சாரச் சடங்குகள், தேவி கோப்பெரும் பெண்டுவின் முடிவைப் போலவே நம் காலத்துப் பெண்களையும் முடிவெடுக்கச் செய்யலாம். அல்லது உங்கள் திணிப்புகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அவைகளைக் காறித் துப்பிச் சமூக முகத்தின் மீது தூக்கி எறிந்தும் விடலாம்.

ஒரு அமைதி வாழ்க்கை வேண்டும். அழிவு வாழ்க்கை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே அல்ல. அத்துமீறும் வாழ்க்கை கவலையோடு கண்காணிக்கப்பட வேண்டிய வாழ்வாக மாறி விடுகிறது.


அமைதி வாழ்க்கைதான் அனுமதிக்கப்பட வேண்டிய பூரணமான வாழ்க்கை.

No comments:

Post a Comment