எட்டையபுரத்து அற்புதம் மகாகவி பாரதி. பாரதி போற்றப்பட்ட அளவுக்கு
பாரதி காலத்து எந்தக் கவிஞரும் தமிழர்களால் நேசிக்கப் பட்டவர்கள் அல்லர்.
பாரதியின் சிந்தனையின் பரப்பளவு இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
அதையும் தாண்டி உலகப் பரப்பளவிலும் பாரதியின் பார்வையின் வீச்சு விரிந்து
இருந்தது.
பாரதி வாழ்காலத்தில் அவரால் சந்திக்க முடியாத சுதந்திர இந்தியா,
சுதந்திர காலத்தில் எப்படி எல்லாம் இருக்கும் என்ற கற்பனையை
உறுதியோடும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டுக் கொள்கை எப்படி எல்லாம்
அமைந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையையும் பாரதி முன்வைத்திருக்கிறார்.
“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.”
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.”
என அண்டை அயல் நாட்டோடு நட்புறவுகளை எப்படியெல்லாம் விரிவு படுத்திக்
கொள்ள வேண்டும் எனக் கனாக் கண்டுள்ளார்.
இந்தியத்திற்குள்ளும் மொழி, இன,
மாநில பிரிவினைகளை உச்சப் படுத்தி மோதிக் கொண்டால், அது
இந்தியத்தினுடைய வீழ்ச்சியாக மாறிவிடக் கூடும் என்ற பக்குவத்தையும் அவர் கனாச்
செய்தி வெளிப்படுத்துகிறது.
இந்தியத்திற்குள்ளே எப்படியெல்லாம் பரிவர்த்தனைச் செய்து கொள்வோம்
என்ற பண்புகளையும் முன்வைக்கிறார்.
தென்கடலிலே முத்துக் குளிப்போம். மேற்கு கரையிலே அதற்குள்ள சந்தை
அமைப்போம். தங்கம் குடைந்தெடுப்போம். எட்டுத் திசைக்கும் அதை ஏற்றுமதி பண்ணுவோம்.
கங்கை நதிப்புரத்துக் கோதுமையை காவிரிக்கரை வெற்றிலைக்கு பரிமாறிக்
கொள்வோம்.
மராட்டியரின் கவிதைக்கு, மலையாளத்து யானைத் தந்தங்களைத் தருவோம்.
காசி நகரிலே நடைபெறும் புலவர் விவாதங்களைக், காஞ்சி
நகரத்திலிருந்து கேட்பதற்கு வானொலி நிலையங்களைச் சமைத்து வைப்போம்.
ராஜ புத்திர வீர்ர்களுக்குக் கன்னடத்து தங்கம் தருவோம். இப்படி
எல்லாம் கூறி இந்திய மாநிலங்களுக்கு இடையிலே ஐக்கியத்தை ஏற்படுத்தினார் மகாகவி
பாரதி.
பாரதியின் கனவு மகத்தானது ஆனால் இன்றைய நடப்பு அவமானகரமானது.
காவிரி நீர் கேட்டு தமிழகம், உச்சநீதி
மன்றத்தையும் பிற நீதிமன்றங்களையும் நாட வேண்டி இருக்கிறது. பெரியார் நீர்
தேக்கத்திற்குக் கேரளத்து அரசு கெட்ட செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.
மகாகவியின் கனவு இந்தியா, நடைமுறை நனவில் கிழிபட்டுக் கொண்டிருக்கும்
மண் பரிமாணமாக மாறிக் கொண்டிருக்கிறது.
சுதேசிப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியப் பட்டியலையும் கனவு
இந்தியாவில் மகாகவி கண்டறிந்திருந்தார்.
பட்டினில் ஆடை செய்வோம். பருத்திப் பஞ்சிலும் உடைகள் உண்டாக்குவோம்.
அவைகளை உலக வணிகச் சந்தையில் கொண்டு விற்போம்.
ஆயுதங்களும் செய்வோம். அவற்றை முறையாகப் பயன்படுத்த தேவைப்படும்
நூற்களுக்கு தேவையான காகிதமும் செய்வோம்.
ஆலைகளை உருவாக்குவோம். கல்வி சாலைகளைப் படைப்போம்.
ஓயுதலும் தலை சாயுதலும் செய்யோம். வாகனங்கள் செய்வோம். கடலில் உந்திச்
செல்லும் கப்பல்களும் செய்வோம். வான் மண்டலத்தை பயன்படுத்துவோம். கடலின் கீழுள்ள
செல்வங்களை அளந்து வைப்போம்.
சந்திர மண்டலம் போன்ற கிரகங்களைக் கண்டு தெளிவோம். காவியம் செய்வோம்.
காடுகள் வளர்ப்போம். கலை வளர்ப்போம். கொல்லர் உலை வளர்ப்போம். ஓவியம் செய்வோம்.
ஊசிகள் கூட செய்வோம்.
உலகத்துத் தொழில் அனைத்தும் நாமே உவந்து செய்வோம் என்று உற்பத்திப்
பட்டியலைப் பாரதியின் கனவு விரிக்கிறது.
இந்தப் பட்டியலில் ஒரு அற்புதமான தகவலை பாரதி பதிவு செய்கிறார்.
தூய்மையான இந்தியாவை நாம் கண்டெடுப்போம். தூய்மைப் படுத்தும் தொழிலையோ
தொழிலாளர்களையோ ஏளனப்படுத்தி விட முடியாது. தூய்மைப் படுத்தும் தொழிலை விஞ்ஞானப்
படுத்துவோம். தூய்மைப் படுத்துவதற்கென்று ஒரு சாதியை உருவாக்காமல் தூய்மைப்
படுத்தலை விஞ்ஞானப் பெருமைப் படுத்துவோம். தூய்மைத் தொழிலாளர்கள் விஞ்ஞானிகளாகக்
கருதப்பட வேண்டியவர்கள்.
இப்படி ஒரு உரையாடலை பாரதியின் கனவு இந்தியா நமக்கு காட்டுகிறது.
சந்திகளையும் தெருக்களையும் தூய்மைப் படுத்தும் அந்தத் தொழிலைக்
குறிக்க, பாரதி ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார். அதுதான் “தெருப்
பெருக்கும் சாத்திரம்” என்பது.
வான்வெளியை அறிவது வான சாத்திரம். கடல் வழியை அளப்பது ஆழி சாத்திரம்.
ஞானங்களைப் புரிந்து கொள்ள வேத சாத்திரம் என்கின்ற சொற் பிரயோகத்தைப் போல்
சாத்திரம் என்ற சொல்லாடலை விஞ்ஞானப் பூர்வமானது என்ற பொருளில் வேத சாத்திரம் என்ற
தோரணையில் தெருப் பெருக்கும் சாத்திரம் என்ற மொழியாடலாகப் பயன்படுத்துகிறார்.
“சந்தித்தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.”
தெருப் பெருக்குவது என்பது நவீனப் படுத்தப்பட வேண்டிய விஞ்ஞானப்
பூர்வமான கல்வியாகும் என்ற கருத்தை முதன்முதலில் தமிழ் மொழி வரலாற்றில் முண்டாசுக்
கவிஞர் பாரதிதான் முன்வைக்கிறார்.
தூய்மை இந்தியா என்கின்ற இன்றைய கோஷம் வெறும் துடைப்பத்தோடு தெருக்
கூட்டுவதோடு நின்று விடாமல் சாத்திரம் என்கிற அளவுக்குக் கண்ணியப்படுத்தப்
பட்டால்தான் தூய்மை என்ற சொல் பொருள் கொண்டதாக இருக்கும்.
மோடியின் மேக் இந்தியா. தூய்மை இந்தியா பாரதி கண்ட கனவு பட்டியல்
இந்தியா அல்ல. மோடி காணும் இந்தியா தன் ஆன்மாவை அழித்துக் கொள்ளக் கூடிய கோணத்தை
நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பாரதி இந்தியா, ஒரு கோட்பாட்டுப் பிரகாச இந்தியா. மோடி இந்தியா, மதத்
துவேஷ, ஒற்றைச் சார்புடைய, சேனம் மாட்டியக் குருட்டு இந்தியா.
No comments:
Post a Comment