மாணவனேயாக முடியாத நானும்!
மதிப்புமிக்க என் ஆசிரியர் பெருமக்களும்!.
யாருக்காவது இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்குமா?...
கிடைத்து இருக்காது..
கிடைத்து இருக்கக் கூடாது என்பதே என் எதிர்ப்பார்ப்பு!
எங்கள் வீட்டில் யாருக்கும் இல்லை. எங்கள் குடும்பத்திலும் யாருக்கும்
இல்லை. எங்கள் தெருவிலும் யாருக்கும் இல்லை. நான் படித்த ஆரம்பப் பள்ளிக்
கூடத்திலும் யாருக்கும் இல்லை.
ஆனால் எனக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
எங்கள் சொந்தக் கிராமம் வாவா நகரம். பொதிகை மலை அடிவாரக் கிராமம்.
இந்தக் கிராமத்தில் இரண்டு ஆரம்பப் பாட சாலைகள் உண்டு. ஒன்று முஸ்லிம் ஆரம்பப்
பள்ளிக் கூடம். சற்றுப் பக்கத்தில் இந்து ஆரம்பப் பள்ளிக் கூடம். இரண்டுக்கும்
நடுவில் எங்கள் வீடு. கொட்டாரம். அந்த கிராமத்தில் கொட்டாரம்தான் அன்றைக்கு வலுத்த
பெரிய பங்களா.
எனக்கு ஐந்தாவது வயது. என்னிலும் வயது குறைந்தவர் என் மாமி மகன்
மாப்பிள்ளை அப்துல்லா. எங்கள் இருவரையும் ஒண்ணாவது வகுப்பில் சேர்க்கப்
போகிறார்கள். எங்கள் வீட்டில் உள்ள அத்தனைப் பிள்ளைகளையும் இந்து ஆரம்பப்
பாடசாலையில்தான் எங்கள் தாதா சேர்த்தார்கள்.
என்னையும் மாப்பிள்ளை அப்துல்லாவையும் எங்கள் ஊர் பள்ளிக்கூட
வழக்கப்படி சரஸ்வதி பூஜை அன்றுதான் சேர்த்தார்கள். நானும் மாப்பிள்ளை
அப்துல்லாவும் புத்தாடை அணிந்து இருந்தோம். அந்த இந்து ஆரம்பப் பாடசாலையில் 5
ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். அவர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்
பட்டன.
பழங்களும், இனிப்புகளும் தட்டுகளில் பரப்பப்பட்டுத் தூக்கி வந்தனர். நாங்களும்
அழைத்து வரப் பட்டோம். பள்ளியில் சேர்க்கப் பட்டோம். பள்ளியின் அத்தனை
ஆசிரியர்களுக்கும் குருதட்சிணைப் பணம் வழங்கப் பட்டது. மதிய உணவு எங்கள்
கொட்டாரத்தில் பரிமாறப் பட்டது. இப்படித் தடபுடலோடு என்னுடைய ஆரம்பப் பள்ளி சேர்க்கை
ஆரம்பம் ஆனது.
மாப்பிள்ளை அப்துல்லா, அந்தப் பள்ளிக் கூடத்தில் அந்த ஆண்டு
தொடர்ந்து படித்தார். நான் மட்டும் ஆறாவது மாதத்தோடு நிறுத்தப் பட்டேன். என் தாய்,
தந்தையருடன் சென்னைக்குக் குடி பெயர்ந்துவிட்டேன். அந்த ஆண்டு ஆரம்பப்
பாடம் அவ்வளவுதான்.
சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் குடியேறினோம். அடுத்த ஆண்டு
தம்புச் செட்டித் தெருவில் உள்ள எலமென்ட்ரி ஸ்கூலில் ஒண்ணாவது வகுப்பில் திரும்பச்
சேர்ந்தேன். அந்த ஆண்டும் ஒண்ணாவது வகுப்பு முற்றுப் பெறவில்லை. பாதியில் நின்றது.
மீண்டும் தென்காசிக்குக் குடி வந்தோம்.
அடுத்த ஆண்டு தென்காசியில் எங்கள் மேனேஜ்மென்டில் நடந்து கொண்டு
இருக்கும் காட்டுபாவா ஆரம்பப் பாடசாலையில் மீண்டும் ஒண்ணாவது வகுப்பில் என்
படிப்பு ஆரம்பம் ஆனது.
எனக்கு மட்டும்தான். இந்த ஒண்ணாவது வகுப்பு இழுபறியாக இழுத்துக்
கொண்டு இருந்தது.
காட்டுபாவா பள்ளிக்கூடத்தில் அங்கம்மா டீச்சர் எனக்கு ஆசிரியை. வயது
ஐம்பதைத் தொட்டுக் கொண்டு இருக்கலாம். கொஞ்சம் கனத்த சரீரம். அதற்குத் தகுந்த
உயரம். வெள்ளை நிறம். என்னுடைய ஒண்ணாவது வகுப்பு ஆசிரியர்களில் இந்த டீச்சர்தான்
இப்பொழுதும் நினைவில் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட கிரவுண்டில் ஒண்ணாவது வகுப்பு மாணவ, மாணவியர்
பொடிப் பொடிக் கற்களைப் பொருக்கி எடுத்துக் கொண்டு வகுப்புக்கு வருவோம். அந்தப்
பொடிக் கற்களை தரையில் வரிசையாக அடுக்கி ‘அ’னா,
ஆவன்னா எழுத்துக்களை அங்கம்மா டீச்சர் கற்றுத் தருவார்கள். கொஞ்சம்
மணலையும் தரையில் பரப்பி வலது கை ஆட்காட்டி விரலை மணலில் அழுத்தி அனா எழுதக்
கற்றுத் தருவார்கள். அன்றைய சிலேட் தரைதான். பல்பம் வலதுகை ஆள் காட்டி விரல்தான்.
எழுத்தறிவு எனக்கு இப்படித்தான் ஆரம்பம் ஆனது. எழுத்தறிவு தரப்பட்டு 5ஆம்
வகுப்பு வரை 5 ஆண்டுகள் அந்தப் பள்ளியில்தான் கல்வி தொடர்ந்தது.
ஐந்து ஆண்டுகளும் நான் பாஸ் பண்ணேன். ஆனாலும் எழுத்தறிவு பற்றி
ஏறுக்குமாறான நிலைதான் என்னிடம் இருந்தது.
ஆண்டுகள் 5 கடந்தன. படித்தேன் என்று நானும் சொல்லிக் கொண்டேன். பள்ளிக்கூடமும்
ரெகார்ட் ஷீட் தந்தது.
அந்தப் பள்ளிக் கூடம் என்னைப் பொருத்தவரை, வாத்தியார்கள்
வந்தமரும் பர்ணசாலை என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.
அங்கம்மா டீச்சர், குட்ட டீச்சர், பாத்துமா டீச்சர், வல்லத்து சார்வாள், சங்கரலிங்கம் சார்வாள், கண்ணாடி அசரத்து இவர்கள்தான் என்
நினைவுகளில் இன்றும் நிற்கிறார்கள்.
அங்குக் கற்றக் கல்வி அந்த மைதானத்தில் எங்கோ சிதறி விழுந்து காணாமல்
போய் விட்டது.
6-வது வகுப்பு தென்காசி ஐ.சி.ஐ.ஈஸ்வரன் பிள்ளை உயர் நிலைப் பள்ளியில்
தொடங்கியது. இங்கும் விதி விட வில்லை. 6 மாதம்தான்
6 வது வகுப்பு. மீண்டும் சென்னைக்குக் குடியேற்றம்.
இப்போது சைதாபேட்டை ஆலந்தூர் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் எங்கள்
வாழ்க்கைத் தொடர்ந்தது.
அந்த ஆண்டு படிப்பு இல்லை. அடுத்த ஆண்டு சென்னை மண்ணடி தம்புச்
செட்டித் தெருவில் இருக்கும் முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் பழையபடி 6ஆம்
வகுப்புச் சேர்ந்தேன். அந்த ஆண்டு 6வது வகுப்பு ஃபெயில். கல்விக் கூடத்தில்
நான் அடைந்த ஒரே ஃபெயில் இதுதான்.
மீண்டும் ஆறாம் வகுப்பு. அந்த ஆண்டு பாஸ் ஆகிவிட்டேன். 7வது
வகுப்பு அதே பள்ளியில். முழு ஆண்டுத் தேர்வு எழுதவில்லை. ஆனால் பாஸ் ஆகிவிட்டேன். 8வது
வகுப்பு அதே பள்ளியில் பாதியோடு நின்றது.
என் பள்ளிப் பயணம் முடிவு பெற்றது.
முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளி என்றால் எனக்கு
புலவர்.கந்தசாமி ஐயா மட்டுமே நினைவிற்கு வருவார். என்னமோ தெரியவில்லை அவர்தான்
எனக்கு முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியாக இருந்தார்.
பள்ளிக்கூடங்களில் நான் மாணவனாக இருந்ததே இல்லை. ஆனால் அற்புதமான
ஆசிரியர்கள் இருந்து இருக்கிறார்கள்.
படிப்பு நின்று விட்டது. எங்கள் வீட்டில் எனக்கு மட்டும்தான் இந்த
வாய்ப்புக் கிடைத்தது.
பள்ளிக்கு வெளியேதான் எனக்குப் பாடங்கள் கிடைத்தன. அதற்கான
ஆசிரியர்களும் என்னைப் பள்ளிக்கு வெளியேதான் கண்டெடுத்தார்கள்.
பள்ளிக்கூடத்துக்குள் மாணவனாக இல்லாதே போய்விட்ட நான், பள்ளிக்கு
வெளியே மாணவனாகிக் கற்கத் தொடங்கினேன்.
என்னுடைய முதல் ஆசிரியர் கவிஞர்.தா.காசிம். இவர்தான் என்னை தமிழிடம்
கொண்டு வந்து சேர்த்தவர். எனக்கும் இவருக்கும் அடிப்படை ஒற்றுமை ஒன்று உண்டு. இவரும்
பள்ளிக் கூடம் சென்று படிக்காதவர். எனக்கு ஆசிரியர்.
அப்போது 18,19 வயதிற்கு உரியவனாகி விட்டேன். பள்ளிக்கூடத்தில் சென்று படிக்க ஆசை
வந்தது.
சென்னை முத்தியாலுப் பேட்டை மேல் நிலைப் பள்ளியில் என் பழைய டி.ஸி. யை
வாங்கிக் கொண்டு எங்கள் சொந்த கிராமம் வாவா நகரத்திற்கு வந்து விட்டேன். எங்கள்
குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி பக்கத்தில் உள்ள பண்பொழில் கிராமத்தில்
உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புச் சேர்ந்தேன்.
கவிஞர். தா.காசிம் தயாரிப்பில் இளம் கவிஞனாக வளர்ந்து இருந்தேன்.
முறுக்கிவிடப்பட்ட மீசை. முழுக்கை சட்டை. எட்டு முழ வேட்டி. தோளிலே
ஒரு சிறிய டவல். இந்தக் கோலத்தில் அந்தக் கிராமத்து 8வது
வகுப்பிற்குள் நுழைந்தேன். நான் மாணவனாகத்தான் நுழைந்தேன். வகுப்பறையில் இருந்த
பொடிப்பொடி மாணவர்கள் தரையில் அமர்ந்து இருந்தனர். நான் வகுப்பறைக்குள்
நுழைந்ததும், எழுந்து நின்று புது வாத்தியார் என்று வணக்கம் சொன்னார்கள்.
பிறகென்னப் படிப்பு?.. 8ஆம் வகுப்பு கல்வி முறிந்துவிட்டது.
நெல்லை பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்ற ஆ.ஜெபரத்தினம் ஐயா அவர்களோடு தொடர்பு கொண்டு ஒரு நல்ல
மாணவனாகவே அவர்களுக்கு இருக்க முயற்சித்தேன்.
ஜெபரத்தினம் ஐயாதான் என்னைப் பதப்படுத்தியவர். அவருக்கு சிகரெட்
பிடிப்பது சுத்தமாக ஆகாது. சிகரெட் பிடிப்பவரைக் கண்டால் அவர் கண் பார்வையில் கூட
நிற்க அனுமதிக்க மாட்டார். அவரின் மகன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து விட்டு
கடைசிவரைத் தன் மகனை வீட்டிற்குள் அனுமதித்ததே இல்லை. அவ்வளவு கடுமையானவர்.
நான், ஐயாவோடு பழகுவதற்கு 6,7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புகைப்
பிடிக்கும் பழக்கம் உள்ளவன். இந்தப் பழக்கத்தை அவரோடு இருக்கும் பொழுதும் நான்
கைவிட்டதில்லை. ஒரு போதும் அவர் இதைத் தெரிந்து கொண்டு இருக்கவும் இல்லை. அவ்வளவு
கள்ளத்தனமானவனாக இருந்தேன்.
அவர் உயரிய ஆசிரியப் பெருந்தகையார். நான் அவரையும் ஏமாற்றிய அரைகுறை
மாணவன்.
ஒரு கட்டத்தில் ஜெபரத்தினம் ஐயா என்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
புலவர் வகுப்பில் சேர்க்க ஏற்பாடு செய்தார். எந்த முறையிலும் மாணவனாக இருக்க
வாய்ப்பற்று இருந்த நான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை மாணவனாகச் சேர்ந்தேன்.
அண்ணாமலைக்கு வந்த உடன் நான் ஒரு விநோதத்தைக் கண்டு கொண்டேன். அன்றைய
தினமே தமிழ் முதுகலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதச் சொல்லி இருந்தால் அனைத்துத்
தேர்வும் எழுதி இருப்பேன். எண்பது சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து
வெற்றியும் பெற்று இருப்பேன். விதிமுறைப்படி இது நடவாத காரியம். அந்த அளவிற்கு
ஜெபரத்தினம் ஐயா என்னைத் தயார்ப் படுத்தி இருந்தார்.
புலவர் வகுப்பில் நான்கு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சியில் ஓராண்டு,
ஆகமொத்தம் 5 ஆண்டுகள் அண்ணாமலையில் மாணவனாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அங்கேயும் வகுப்பறைகளில் அதிகமாக நான் இருப்பதில்லை. என்னவோ
தெரியவில்லை மாணவச் சட்ட திட்டங்களுக்குள் நான் உட்படாமலேயே வந்து இருக்கிறேன்.
ஆனால் என் ஆசிரியப் பெருமக்களை நினைவு கூரும் பொழுது என் அங்கமெல்லாம்
புல்லரித்து இன்று கூட சிலிர்க்கிறது.
தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.வ.சுப.மாணிக்கனார். இவரின் பாசத்தை அதிகம்
பெற்ற செல்லைப் பிள்ளை நான்.
உளுந்தூர் பேட்டைப் சு.சண்முகம் ஐயா. இவர் எனக்குத் தந்தையாக, ஆசிரியராக,
சக தோழராக, இன்னும் தாண்டி தமிழ் வார்த்தைகளில் சரியாக சொல்லிக் காட்ட முடியாத
பண்பாளராக நிறைந்து இருக்கிறார்.
பேராசிரியர் டாக்டர். சோ.ந. கந்தசாமி ஐயா. உயர்ந்த தமிழ் அறிஞர். என்
மீது ஆழமான உள் அன்பு கொண்டவர்.
பேராசிரியர் டாக்டர்.வைத்தியலிங்கம் ஐயா. நுண்கலை ஞானம் மிக்கவர். என்
மீது அதிகம் பாசம் காட்டியவர்.
பேராசிரியர். சிந்தாமணியார், பேராசிரியர்.
டாக்டர்.மு.அண்ணாமலையார், பேராசிரியர். புலவர். ச.தண்டபாணி தேசிகனார், பேராசிரியர்
வெள்ளைவாரனார், போன்ற பெருமைக்குரிய தமிழறிஞர்கள் அனைவருக்கும் பிடித்தமான
அன்புக்குரியவனாக நான் இருந்து இருக்கிறேன்.
என்னுடைய ஆசிரியர் பெருமக்கள் எல்லாம் மதிப்பும், மரியாதையும்
மிக்க மேன்மைக்குரியவர்கள்.
அவர்கள் அனைவரும் நம்பி இருந்த படி, இன்றுவரை
மாணவனாக இருக்கும் முழுத்தகுதியும் இல்லாதவனாகத்தான் நான் இருந்து வருகிறேன்.
எப்படியாவது ஒரு நல்ல மாணவனாக ஆகிவிட இன்று கூட ஆசைப் படுகிறேன்.
என்னுடைய ஆரம்பப் பள்ளியிலிருந்து இன்று வரை அந்த வாய்ப்பு நழுவிக் கொண்டே
போகிறது.
பள்ளிக்கூடம் எனக்கு எப்போதும் ஒத்துவரவில்லை. பரந்த வெளிக்கு மிகப்
பொருத்தமாக பறந்து திரியும் சின்னச் சிட்டாகத்தான் இருந்து வருகிறேன். இந்தப்
படைப்பு ரகசியம்தான் எப்போதும் எனக்குள் பதிவாகி இருக்கிறது போலும்.