1962 ஆம் ஆண்டு தமிழகம் தேர்தலைச் சந்திக்கும் வேளையில் ஒரு புதிய கூட்டணியை முதன்முதலாகக் கண்டது.
இந்தியத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜ கோபாலச்சாரியார் சென்னை காங்கிரசின் முதல்வராகவும், காங்கிரசின் மேற்கு வங்க கவர்னராகவும் பணிபுரிந்தவர். அந்தக் காங்கிரஸை விட்டு விலகி சுதந்திரா என்ற கட்சியை ஆரம்பித்து இருந்தார்.
அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவராக தானே இருந்தார். சிறந்த அரசியல் நிபுணரான ரங்கா அதன் செயலாளராக இருந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் மகத்தான தலைவராக இருந்தார்.
திராவிட இயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகமாக முளைத்தெழுந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா இருந்தார்.
இந்த முப்பெரும் தலைவர்களும் ஒன்றுகூடி தமிழகத்தில் முதற் கூட்டணியை உருவாக்கினார்கள்.
தமிழகத்தில் கொலுவிருந்த காங்கிரஸ் பேரியக்கம் இந்தக் கூட்டணியின் முன் கரையத் தொடங்கியது.
1967 இல் காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தை விட்டு பெருவாரி மக்களால் தூக்கியெறியப்பட்டது. இன்றுவரை காங்கிரஸ், தமிழக அமைச்சரவைக் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. இந்தக் கூட்டணியில் பொதுவுடைமை இயக்கமும் இணைந்துக் கொண்டது. கூட்டணி முழு பலத்தோடு மக்களைச் சந்தித்தது.
ஒரு வலுவான கூட்டணி!
தி.மு.க ஆட்சி பீடத்தில் கொலுவேறியது. ஒரு உண்மை. அண்ணாவுக்கே இது அதிசயமாக இருந்தது. ஆனாலும் நடந்தது.
திராவிடக் கழகத்தின் தலைவர் தந்தை பெரியாரிடம், அண்ணாதுரையும், ராஜாஜியும் எப்படி கூட்டணிக்குள் இணைந்திருக்க முடிந்தது? எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கோட்பாட்டுக்குரியவர்களாயிற்றே இந்த இருவரும்? ராஜாஜியின் சாணக்கிய அரசியலின் முன்னால் அண்ணாதுரையின் அரசியல் அடையாளம் கரையத் தொடங்கிவிடாதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பட்டன.
தந்தை பெரியார் நல்லதொரு பதிலைச் சொன்னார்.
“என்னுடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியார் பற்றியும் எனக்கு நன்கு தெரியும். என்னிடமிருந்து பிரிந்து போன அண்ணாதுரையைப் பற்றியும் எனக்கு நன்குத் தெரியும்.
இவர்கள் கூட்டணியில் அண்ணாவைப் பற்றி நான் கவலைப் படவில்லை. என் நண்பர் ராஜாஜியைப் பற்றித்தான் நான் கவலைப் படுகிறேன். என் நண்பருக்கு அண்ணாதுரையை பற்றி அவ்வளவாகத் தெரியாது.
அண்ணாதுரை ‘கழுவிய மீனில் நழுவிய மீன்’ அதனால் ராஜாஜிதான் காணாமல் போவார். கவனமாக இருக்க வேண்டும்.” என்று ஈரோட்டு பெரியார் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தந்திருந்தார்.
பெரியார் சொன்னதுதான் நடந்தது. மூதறிஞர் ராஜாஜி அரசியலில் காணாமல்தான் போனார். பேரறிஞர் அண்ணா காலூன்றிக் கொண்டார்.
ஆனால் இந்தக் கூட்டணியினுடைய நோக்கம் காங்கிரசைக் காணாமல் ஆக்குவதுதான். அது நடந்தது.
பொதுவுடைமை இயக்கமும் தன்னை இந்தக் கூட்டணியிலிருந்து பின்னர் விடுவித்துக் கொண்டது. எஞ்சியிருந்த அண்ணாதுரையின் தி.மு.க வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஒட்டுறவோடுத் தொடர்ந்தது.
முஸ்லிம் லீக், தி.மு.க உறவைப் பற்றிப் பிடித்துக் கொண்டது.
“முஸ்லிம்களின் மீது தாக்க வருபவர்கள் என் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தாக்க முடியும்” என்ற நாடக வசனம் கருணாநிதி பேச ஆரம்பித்தார்.
இது ஒரு நல்ல வசனம் என்ற நிலை மாறி, இது ஒரு வாஸ்தவம் என்ற அந்தஸ்துக்கு நாளாவட்டத்தில் வந்துவிட்டது.
நடுவிலே கருணாநிதி ஆட்சிக் காலத்திலே உரசல் ஏற்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்திருந்தார். ஒரு புதிய தமிழகம் தலையெடுத்தது.
எம்.ஜி.ஆரிடம் முரண்பட்டு பின்னர் கலைஞர் தி.மு.க விடம் முஸ்லிம் லீக் வந்து சேர்ந்த்து.
“முஸ்லிம் லீகோடுக் கொண்டிருக்கும் உறவு எங்கள் இதய நாளங்களோடு கலந்துக் கொண்ட உறவு, நடுவிலே கொஞ்சம் பிரிந்தோம். ஆனால் உடையவில்லை. எங்கள் உறவு தங்கத் தாம்பாளத்தில் விழுந்த கீறல். மீண்டும் பற்ற வைத்து பிரிதல் தெரியாத அளவு ஒற்றிக் கொண்டோம்.”
கருணாநிதி இந்த வசனங்களை மேடையில் பயன்படுத்தினார். இதுவும் ரசிக்கப் பட்டது. நேசிக்கப் பட்டது.
மீண்டும் ஒரு கசப்பு. முஸ்லிம் லீக் எம்.ஜி.ஆர் அதிமுக விடம் வந்தது. அங்கேயும் அடுத்தொரு எரிச்சல். முஸ்லிம் லீக் கருணாநிதி திமுக விடம் திரும்பியது.
இப்படி ஒரு நாத்தனார் சண்டை நடந்துக் கொண்டே இருந்தது.
முஸ்லிம் லீக் மேடைகளில் திமுகதான் நமக்குப் பாதுகாப்பு. இல்லாது போனால் நம் எதிரிகளால் பலகீனமாகத் தாக்கப்பட்டு விடுவோம் என்ற வாதம் முன்வைக்கப் பட்டது.
அதேபோல் திமுக மேடைகளில் மீலாது நபிக்கு விடுமுறை வாங்கித் தந்தது நாங்கள். வெள்ளையர் காலத்தில் பிரித்து வைக்கப் பட்டிருந்த பட்டாணிகள் லெப்பைகள் என்ற பிரிவினைகளை நீக்கி உயரத்திலிருந்த பட்டாணிகளை லெப்பைகள் கோட்டாவில் ஒன்றாக்கி முஸ்லிம்களுக்கு ஒரே கோட்டா முறையைத் தந்தவர்கள் நாங்கள்.
முஸ்லிம்களுக்கு பாதுகாவல் அரணாகத் திமுக விளங்குகிறது. காயிதே மில்லத் மரணத் தருவாயில் கருணாநிதி கையைப் பிடித்து ,
“சமுதாயத்திற்கு நீங்கள் செய்திருக்கும் உதவிகளுக்கு நன்றி” என்று சொன்ன வாசகத்தை மீண்டும் மீண்டும் கருணாநிதி உச்சரித்து முஸ்லிம் லீகும் முஸ்லிம்களும் திமுகவிற்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பவர்கள்தாம் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.
அ.தி.மு.க வோடு யூனியன் முஸ்லிம் லீக் உறவு வைத்திருக்கும் பொழுதும் முஸ்லிம் லீகின் புறத்திலிருந்து திமுகவைச் சாடி வந்த அறிக்கைகள் உண்டு.
ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து ஜனசங்கத்துக்குள் நடமாடி, ஜனதா தளத்தில் அமைச்சராகிப் பின்னர் பாரதிய ஜனதாவைக் கண்டெடுத்த வாஜ்பேயி எந்தக் காலகட்டத்திலும் தன் அடிப்படையைக் கை கழுவாத உறுதி மிக்கவர்.
இந்த வாஜ்பேயி அமைச்சரவையில் ஆர்வம் காட்டிய முரசொலி மாறன் பாரதிய ஜனதா தீண்டத்தகாத கட்சியல்ல என்று அறிவித்தார்.
இந்த முரசொலி மாறனைத்தான் கருணாநிதி தன்னுடைய மனசாட்சி என்று பிரகடனப் படுத்தி இருந்தார். அதாவது முரசொலி மாறன் சொன்னது கருணாநிதி சொன்னது என்பதுதான் இதன் பொருள்.
பின்னர் அரசியல் களம் மாறியது. ஜெயலலிதா அண்ணா திமுகவின் தலைவியாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் வலம் வந்தார்.
முஸ்லிம் லீக் அவரோடும் அரசியல் உறவு வைத்தது.
“நமது அருமைச் சகோதரி” இதற்குரிய அத்துணை தகுதியும் பெற்றவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர் முகத்தில் ஒரு நூரானியத்து (ஒளி) தெரிகிறது.
நமது சமுதாயத்திடம் அவர் கொண்டிருக்கும் பாசம் அதில் வெளிப்படுகிறது” என்று தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் பொதுக் கூட்டத்தில் முழங்கினார்.
பாபரி மஸ்ஜித் தகர்க்கப் படுகிறது. திமுக இதுபற்றி பட்டும் படாமலும் தனது எதிர்ப்பைச் சொல்லிக் கொண்டது.
பின்னர் பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்ட கரசேவை தொடங்குகிறது. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
முஸ்லிம்களுக்கு அமைப்பு இருக்கும்பொழுது, இந்துக்களுக்கு ஏன் இருக்கக் கூடாது? என்று எதிர்க் கேள்விக் கேட்டார்.
மீண்டும் முட்டல் மோதல். கலைஞர் திமுகவிற்குள் முஸ்லிம் லீக் உள் நுழைந்துக் கொண்டது.
கோயம்புத்தூர் நிகழ்வு முஸ்லிம்களுக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அந்தப் பாதிப்புகளைச் சென்று பார்க்கக்கூட இல்லை.
அது மட்டுமல்ல. காவல்துறையினர் கட்டுமீறி முஸ்லிம்கள் வாழும் தெருக்களிலும் இல்லங்களிலும் கேவலமான தேடல்களில் ஈடுபட்டனர்.
கோஷா அணிந்த முஸ்லிம் பெண்களைத் தடுத்து, “கோஷா துணிகளை அகற்றுங்கள். குண்டுகளை மறைத்து வைத்திருக்கிறீர்களா என்று நாங்கள் பரிசோதிக்க வேண்டும்” என இரட்டை அர்த்தப் படும் கொச்சை மொழிகளைப் பயன்படுத்தினார்கள்.
அப்பொழுது காவல்துறை, முதலமைச்சர் கருணாநிதி கைவசம்தான் இருந்தது. அவர் கண்டு கொள்ளவில்லை.
அடுத்து ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறார். முஸ்லிம்கள் தெருக்களிலும் இல்லங்களிலும் நடந்த அருவறுப்பான தேடல் முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துகிறார்.
முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரிய நிம்மதி ஏற்பட்டது.
இப்படி ஒரு அரசியல் சடுகுடுத்தனம் திமுகவிற்கும் முஸ்லிம் லீகிற்கும் அதிமுகவிற்கும் இடையில் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.
தமிழக முஸ்லிம்களுடைய சிந்தனை இந்த இரு இயக்கங்களில் யாரோடு இணைந்திருக்கிறதோ அப்போது அவரவர்களுக்கு ஆதரவான காரணங்களை மேடையில் முன்வைத்து நியாயப் படுத்திக் கொள்கிறது.
“குஜராத் கலவரம், இந்தியத்தினுடைய கேவலத்திற்கு மோடி ஒரு முன்மாதிரி என்னும் முகத்தை வெளிக்காட்டியது. குஜராத்தில் நடந்தது இனப் படுகொலை. மோடியின் கரங்கள் மட்டுமல்ல அத்தனை உறுப்புகளுமே சிறுபான்மை முஸ்லிம் இனத்தின் ரத்த குளியலில் ஊடாடி இருக்கிறது. இந்தியாவின் நிரந்தர அவமானம் மோடி”
என முதலில் அறிவித்த ஒரு இயக்கம் இந்தியாவில் இருக்கிறது. அந்த இயக்கம் குஜராத்திற்கு தமிழ் மாநிலத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி குஜராத்தில் நடந்து முடிந்திருப்பதின் பின்னணிகளைக் கண்டறிந்து உலகத்திற்கு வெளிப்படுத்துங்கள் என்று அறிவித்து பிரதிநிதிகளை குஜராத்துக்கு அனுப்பியது.
குஜராத் சென்று வந்த அந்த இயக்கத்தின் பிரதிநிதிகள், குஜராத்தின் கோர முகத்தை ஃபோட்டோக்களாகவும் புத்தகங்களாகவும் சுற்றறிக்கைகளாகவும் லட்சக் கணக்கில் வெளியிட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்பின் போது அங்கு நடந்த கொடூரத்தையும் தூண்டுதலையும் அறிக்கைகளாக நமக்கு அறிவித்தன.
பாபரி மஸ்ஜித் இடிப்பின் போது கூட அந்த நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திய இயக்கம் அந்த இயக்கம்.
மும்பைக் கலவரைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி அதை உலகிற்கு அறிவித்த இயக்கம் அது.
திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் மேலே குறிப்பிட்ட அத்தனை சிறூபான்மை இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட நிர்கதிகளைப் பற்றி, பட்டும் படாமலும் இன்று வரை பேசி வருகின்றன.
பெரியார் அண்ணாவுக்குச் சொன்ன அடைமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. “கழுவிய மீனில் நழுவிய மீன்”. ஆம் இந்த இரு இயக்கங்களும் சிறுபான்மைச் சமூகத்தைப் பொருத்தளவில் கழுவிய மீன்களில் நழுவிய மீன்கள்தாம்.
நமது சிறுபான்மை இனத்திற்கு நிகழ்ந்த கொடூரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய இயக்கங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்கள்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை எந்த இயக்கங்களாக இருந்தாலும் சரி பூரணமாக ஒப்புக்கொண்டதில்லை. பொதுவுடைமை இயக்கங்களுக்கும் இது பொருந்தும்.
இந்தப் பொதுவுடைமை இயக்கத்தோடு 1967 தேர்தல்களில் முஸ்லிம் லீக் கூட்டணி வைத்திருந்தது. காங்கிரஸ் முற்றிலுமாகக் காணாமல் போனது.
அதன்பின் பொதுவுடைமை இயக்கங்களை நாம் புறம் ஒதுக்கி விட்டோம். திராவிட இயக்கங்களை தோளில் சுமக்க தலைப்பட்டோம்.
கொஞ்சம் நீண்டு சொல்ல வேண்டுமானால் உலகில் நடக்கும் இஸ்லாமிய இன அழிப்பு பற்றிய எதிர்ப்பை இந்தியத்தில் பேசும் இயக்கம் பொதுடைமை இயக்கம்.
ஈராக்கில் நடந்த அமெரிக்க ஏகாதிபத்திய இன அழிப்புப் பற்றி இந்தியாவிற்கு ஒரு நல்ல புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கிய இயக்கங்களில் பொதுடைமை இயக்கமும் ஒன்று.
இவைகளைப் பற்றியெல்லாம் திமுகவோ அதிமுகவோ எப்பொழுதுமே கவலைப்பட்டதில்லை.
காயிதே மில்லத் காலத்தில், தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தோடு முஸ்லிம் லீக் ஒரு கரிசனையோடு நடக்கத் தொடங்கியது. நாள்பட நாள்பட கண்டு கொள்ளாத நிலை உருவாகியது.
என்ன காரணத்தினால் பொதுவுடைமை இயக்கத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.?
திமுகவை விடவும் அதிமுகவை விடவும் பொதுவுடைமை இயக்கம் நம்மை அதிகம் பாதித்து விட்டதா?
அல்லது மத்தியில் ஆட்சி, மாநிலத்தில் ஆட்சி, யார் கைவசமோ அவர்களோடு ஒட்டுறவு கொள்வதுதான் சமுதாயத்திற்கு நலமான பலம் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளோமா?
இப்பொழுது நடக்கும் தேர்தலில் கூட கருணாநிதி,
“மதச் சார்பற்ற இயக்கத்தை மத்தியில் நாங்கள் எதிர் காலத்தில் ஆதரிப்போம்” என்றுதான் சொல்லுகிறார்.
பாஜக மத வெறிக் கட்சி எனவே ஆதரிக்க மாட்டோம். காங்கிரஸ் மத சார்பற்ற கொள்கையை எதிர் காலத்தில் கடைப்பிடித்தால் மன்னிப்போம். கரம் பிடிப்போம் என்ற பாணியில்தான் பேசுகிறார்.
அதாவது இன்றைய நிலையில் காங்கிரசும் மதசார்பற்ற நிலையை ஏற்றிருக்கவில்லை என கூறுகிறார். அப்படியானால் கருணாநிதி சொல்லும் மத சார்பற்ற கட்சி எது?
அதிமுக தேர்தலுக்குப் பின் பாஜகவின் தோள் மீது கைப் போட்டுக் கொள்ளும். இந்தப் பீதியை எழுப்பி அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். தனக்கு வாக்களியுங்கள் என்று கருணாநிதி யாசிக்கிறார்.
மோடியை நண்பர் என்கிறார். பாஜக மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதம் என்கிறார்.
இது அவர் ஏற்கனவே வாஜ்பாயைப் பற்றிச் சொன்ன வரவேற்பு மொழிப் போன்றதுதான்.
“வாஜ்பேயி உயர்ந்த மனிதர். நல்லவர். சேரக் கூடாத இடத்தில் சேர்ந்திருக்கிறார்”. இது கருணாநிதி சொன்னது,
இந்த வாசகத்திற்கும், மோடி நண்பர், பாஜக மத சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்ற வாசகத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
“மோடி என் சகோதரர்”, இது ஜெயலலிதா மோடியைப் பற்றித் தரும் தகவல். மோடியும் பதவி ஏற்பின் போது சகோதரிக்கு அழைப்பு அனுப்புவார். சகோதரியும் பதவி ஏற்பின் போது சகோதரருக்கு அழைப்புத் தருவார். இது அதிமுக நிலை.
மோடி ஏன் வெறுக்கப் படுகிறார்? பாஜகவின் முதல்வர் என்பதினாலா? அல்லது அவர் ஒரு இந்து என்பதாலா?. இப்படிக் கருதி எதிர்த்தால் அது குற்றமானது.
மோடி ஒரு இனப் படுகொலையாளர். மனிதகுல விரோதி என்ற அடிப்படையில் இந்தியா அவரைப் புறந்தள்ள வேண்டும் என்ற உறுதியான நிலையில் திமுகவோ அதிமுகவோ இன்றுவரைக் கூட பிரச்சாரம் பண்ணவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்னால் சேலத்தில் ஒரே மேடையில் விஜயகாந்தும் மோடியும் பிரச்சாரம் செய்கிறார்கள். விஜயகாந்தின் மாப்பிள்ளை சுதீஷ் களத்தில் நிற்கும் தொகுதி அது.
விஜயகாந்த் பேசுகிறார், “பாக்கிஸ்தானுடைய கிரிக்கெட்டு அணியில் ஒரு இந்துவைக் கூட சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நாம் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் கேப்டனாக கூட பதவி தந்திருக்கிறோம்”.
விஜயகாந்தின் இந்த மொழிதான் மதவாதத்தின் உச்சகட்ட பதிவு. விளையாட்டு வீரர்களை, விளையாட்டு வீரர்களாகக் கருதாமல் அவர்கள் சார்ந்திக்கும் மதம் அல்லது மார்க்கத்தின் பிரதிநிதிகளாகப் பார்ப்பது ஒரு கேவலம்.
மதத்தின் பிரதிநிதிகள் அல்ல அவர்கள். அவர்கள் விளையாட்டு வீரர்கள். இதனை கொச்சையாக்கி மோடியின் மேடையில் விஜயகாந்த் பேசுகிறார்.
மதவாதம் என்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது. முஸ்லிம்களுக்கு அமைப்பு இருப்பது மதவாதமல்ல. அதேபோல் இந்துக்களுக்கு என்று ஒரு அமைப்பு இருப்பதும் மதவாதம் அல்ல.
சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்ஸிகள் போன்றோர்களுக்கு ஒரு அமைப்பு இருப்பதும் மதவாதம் அல்ல.
ஒரு மதம் தன்னுடைய கொள்கைகளை, கோட்பாடுகளை பிரச்சாரப் படுத்துவது எந்த வகையிலும் குற்றமாகாது. ஆனால் இன்னொரு மதத்திற்குள் தலை நுழைத்து நீங்கள் இங்கு வாழ வேண்டுமானால் இன்ன இன்ன உங்கள் கொள்கைகளை விட்டுவிடுங்கள். நீங்கள் விட மறுத்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்து சட்டமியற்றி அதைத் தடுப்போம் என்ற அச்சுறுத்தல்தான் மதவாதத்தினுடைய தீங்கின் அடையாளம்.
முஸ்லிம்களினுடைய ஷரியத் சட்டத்தை மறுபரிசீலனைச் செய்வோம் என்பதுதான் மதவெறியின் கொண்டாட்டம் ஆகும்.
அதே நேரத்தில் நம் இந்திய அரசியல் அமைப்பு ஷரியத் சிவில் சட்டத்தை முஸ்லிம்களுக்கு அனுமதிக்கிறது. அது கூடாது என்று கூறும் மதப் பெயர் கொண்ட ஒரு வெறிக் கூட்டம்தான் மதவெறிக் கூட்டம்.
எங்களுக்கு ஷரியத் சிவில் சட்டத்தை அனுமதித்து இருக்கும் எங்கள் அரசியலைப்புச் சட்டம், எங்களைப் பொருத்தளவில் ஷரியத் கிரிமினல் சட்டத்தையும் எங்களுக்கு அமுல்படுத்த யோசனை செய்ய வேண்டும் என்று கேட்பது கூட நியாயமானதாக இருக்கும்.
இப்படிக் கேட்க முஸ்லிம் சமூகத்திற்கு உடன்பாடா இல்லையா என்பது அடுத்த கட்ட பிரச்சனை.
இப்படி ஒரு ஆழமான சிந்தனையில் அரசியல் ஆராயப் படும்பொழுது, ஏன் தமிழக முஸ்லிம்கள் கண்ணாமூச்சி ஆடும் இரு கழகங்களையும் கழட்டி விட்டு, பொதுவுடைமை இயக்கங்களைப் பற்றிய ஆதரவுச் சிந்தனைகளை மேற்கொள்ளக் கூடாது?
No comments:
Post a Comment