Saturday, April 5, 2014

கொஞ்ச நேரம் அசைபோடுகிறேன்...!




மார்ச் 21 ஆம் தேதி அன்று நான் நாகூர் இஜட்.ஜஃபருல்லா வீட்டில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தர்மபுரி மேலப்புலியூரில் இருந்து என் இனிய நண்பர் பாவாணன் (கிருஷ்ணன்) அலைபேசியில் அழைத்தார்.

அந்த அலைப்பேசி ஒரு வேதனையான தகவலைத் தந்தது. தர்மபுரி மேலப்புலியூர் நாகு.நக்கீரன் திடீரென்று அவர் இடது பக்க செயல்பாட்டுக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல்தான் அது. என் மனதை இந்தச் செய்தி சற்று அழுத்தமாகப் பாதித்தது.

புலவர் நாகு.நக்கீரன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். எனக்கும் முன்னால் நான்கு ஆண்டுகளுக்கு முந்தி புலவர் பிரிவில் படித்திருந்தார். அண்ணன் நக்கீரனின் தம்பிதான் பாவாணன். இவரும் எனக்கு இரண்டு ஆண்டுகள் மூத்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் மாணவர்.

பாவாணன் மேலப்புலியூரில் தி.மு.க சார்பில் நகரப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர். தற்போது தி.மு.க வின் தர்மபுரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்.

அண்ணன் நக்கீரனின் உடல்நலப் பாதிப்பு என்னை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலக் கட்டத்திற்குக் கடத்திச் சென்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் பட்டாளம் என நான் அடிக்கடி சொல்லக் கூடிய எங்களின் நட்பு வட்டாரம் ஒரு அலாதியான அமைப்புக் கொண்டது.

இந்த நட்பு வட்டாரம் எனக்கும் முன்னால் பத்தாண்டுகளுக்கு முன்னுள்ள மூத்தவர்களையும் என்னோடு இணைத்து இருந்தது. இந்த நட்பு வட்டாரத்தின் கடைசிப் புள்ளி என் அண்ணாமலை வகுப்பறைத் தோழர்களான மாப்பிள்ளை கலைமணி, தம்பி ராமனுஜம், அழகு பாண்டியன் ஆகிய எங்களோடு முற்றுப் பெற்று விட்டது.

இன்றைய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பாலகிருஷ்ணன் எங்கள் காலத்தவர். ஒருமுறை திராவிட இயக்கத்தினரும், சில ஜாதீய அமைப்பினரும் பல்கலைக் கழகத்துக்குள்ளேயே அவரை அடித்து உதைத்துத் துவைத்து துவம்சம் செய்து போட்டுவிட்டனர்.

மாப்பிள்ளை கலைமணி அவரைத் தோளில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க துணை புரிந்தான்.

இந்த நட்பு வட்டாரத்தின் தொடக்கம் எனக்கு முன்னால் பத்தாண்டுகளுக்கு முந்தைய தூத்துக்குடி பேரசிரியர் ஆ,சிவசுப்ரமணியம், பேராசிரியர் கவிஞர் செல்வ கணபதி, இவர்களையடுத்து தோழர் வே.மு. பொதியவெற்பன், பேராசிரியர் டாக்டர். ஆல்பென்ஸ் நதானியல், தக்கலை மார்க்சிய தோழர் புலவர் அரங்கசாமி, புலவர் அம்மையப்பன், அரணமுறுவல், புலவர் கோ.தட்சிணாமூர்த்தி, புலவர். கு.சங்கரன், இன்ஜினியர். செல்வகுமார், ஓவியப் புலவர் நாகலிங்கம், புலவர் காமராஜ் போன்ற எங்கள் நட்பு வட்டாரம் பல பத்தாண்டுகளாக இடைவெளியிட்ட நிலையிலும் ஒன்று கூடக் கூடிய களமாக கலைமாமணி உளூந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா இல்லம் திகழ்ந்தது.

இந்த நட்பின் இணைப்பு மையப்புள்ளி அவர்தான்.

இந்த நட்புக்குள் எத்தனையோ கருத்து முரண்கள் , கோட்பாட்டு முரண்கள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இவர்களின் மார்க்சிய சிந்தனையுள்ளவர்கள் உண்டு. நக்சல் மனப்பான்மைக் கொண்டவர்கள் உண்டு. திராவிட இயக்க கோட்பாடுக் கொண்டவர்கள் உண்டு.

தீவிர தி.மு.க வினர் உண்டு. ஆழமான பக்தி சிகாமணிகளுமுண்டு. ஆனாலும் இந்த நட்பு வட்டாரம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அணுவும் பிசகாமல் நட்பு நிலையிலேயே நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

நாகு.நக்கீரன் அண்ணாமலையில் மாணவராக இருந்த கால கட்டத்தில்தான் தி.மு.க மாணவரணியில் தீவிரமாக செயல்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதே போல் நக்சல் மூவ்மண்ட்டில் தீவிரமாகப் பணியாற்றியவர் இன்ஜினியர் மாணிக்கம். இவர் பல்லடம் குண்டு தயாரிப்பில் தவறுதலாக குண்டு வெடித்து உயிரிழந்ததாக அன்றைய காவல்துறை அறிவித்தது.

இந்தக் காலகட்டத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் தீவிரப் பங்காற்றிய நாகு. நக்கீரன், மு.ஆல்பென்ஸ் நதானியல், அரங்கசாமி போன்றவர்களை அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகம் இடை நீக்கம் செய்து இருந்தது.

போராட்டம் மீண்டும் வெடித்தது. அந்த இடை நீக்கத்தைப் பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றது.

இந்தப் போராட்டத்தில் கடும் பணியாற்றியவர் நாகு. நக்கீரன்.
நாகு.நக்கீரன் அழுத்தமானவர். உறுதி குலையாதவர். நேர்மையான பிடிமானம் மிக்கவர். வள்ளுவத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். உயரத்தில் மட்டும் குட்டையானவர்.

நாங்களெல்லாம் அண்ணாமலையை விட்டு வெளியேறி நாற்பத்து ஐந்து, ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் எங்கள் தொடர்பு இன்றும் நன்றாகவே இருக்கிறது.

எங்களுக்கு இடையிலே காலம் இடைவெளியைத் தந்திருக்கலாம். ஆனாலும் எங்கள் கலந்துறவாடல்களில் தொய்வு இருக்கவில்லை. தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மார்ச் 21 இல் நாகு. நக்கீரன் உடல் நலக் குறைவுற்றார் என்ற செய்தி வந்தவுடன் என் நினைவோட்டம் இப்படி பின்னோக்கி ஓடிவிட்டது.

மார்ச் 21 இல் எனக்கு தகவல் வந்த சிறிது நேரத்திலேயே எங்கள் எல்லோருக்கும் தகவல் சென்று சேர்ந்து இருக்கிறது. சற்று நேரத்திற்குள் நாங்கள் அனைவரும் தொடர்புக் கொண்டோம். மார்ச் 24 ஆம் தேதி திங்கட் கிழமை காலையில் நான், தட்சிணாமூர்த்தி, செல்வகுமார், கலைமணி, சங்கரன் சிதம்பரத்தில் கூடினோம்.

ஒரு ஏ.சி. வேன் பிடித்துக் கொண்டு தர்மபுரிக்கு அதிகாலையிலே புறப்பட்டோம். நாங்கள் சென்றது ஏ.சி வண்டிதான். ஆனால் அந்த ஏ.சி குளிரை உணரவே முடியாத அளவு வெயில் தகித்துக் கொண்டிருந்தது,

மதியம் இரண்டு மணியளவில் தர்மபுரி நாகு. நக்கீரன் இல்லத்திற்குச் சென்றடைந்தோம். ஆனால் வேதனையோடு சென்ற எங்களுக்கு ஒரு ஆறுதல் இருந்தது. நாகு.நக்கீரன் எழுந்து வந்து எங்களை வாசலில் வரவேற்றார்.

இடதுபுறம் பாதிக்கப் பட்டு இருந்த அவருக்கு உடனடியாக ஆந்திரா பார்டரில் உள்ள ஒரு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சை முறை முழு பலன் கொடுத்து அவரை எழுந்து மீண்டும் நடமாட துணை புரிந்து கொண்டிருக்கிறது

அண்ணாமலையில் போராட்ட களத்தில் துள்ளித் திரிந்து நடைப் போட்டுக் கொண்டிருந்த நாகு. நக்கீரனை அதுமாதிரி பார்க்க முடியாது போனாலும் , நடமாட்டத்தோடு பார்த்த எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

அன்று இரவு நண்பர் புலவர் பாவாணன் பண்ணை இல்லத்தில் உணவு பறிமாறப் பட்டது. இது தேர்தல் நேரம். தி.மு.க தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தச் செயல்பாட்டைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மாவட்டத்தினுடைய இலக்கிய அணிச் செயலாலர் பாவாணன் எங்களோடு நட்புப் பாராட்டிக் கொண்டிருந்தார்.

மறுநாள் நக்கீரன் இல்லத்தில் காலை உணவு. நக்கீரன் இல்லத்தாரோடு சேர்ந்து எங்களுக்கு உணவு பரிமாறினார். வேதனையோடு புறப்பட்ட எங்கள் பயணம் நிம்மதியோடு தில்லை திரும்பியது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எங்களுக்கும் பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாணவர் பட்டாளம் இருந்தது. அதில்தான் தோழர் பாலதண்டாயுதம், தி.மு.க மூத்த தலைவர் மதியழகன், அன்பழகன் தம்பி அறிவழகன் , புலவர் கலியபெருமாள் போன்ற ஒரு களப் போராளி மாணவக் கூட்டம் இருந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தளவில் ராஜா அண்ணாலைச் செட்டியாருக்குரியதாக இருக்கிறது என்ற உணர்வு இன்றுவரை கூட எங்களுக்குக் கிடையாது. அது எங்கள் பல்கலைக் கழகம் என்ற சொத்துரிமைத்தனமான உள்ளுணர்வு இன்றும் எங்களுக்கு இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு எடுத்துக் கொள்வதாக நாளேடுகளில் செய்தி வந்தது. அப்படி எடுத்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது என்ற கொள்கை ரீதி நம்பிக்கை எங்களுக்கு இருந்த போதும் அரசின் இந்த நடவடிக்கையை எங்கள் அடிமனம் ஏனோ ஒப்புக் கொள்ளவில்லை. வேதனையால் அழுது ரணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எங்கள் சொத்தை அரசு பறிப்பதா? என்ற ஏக்கம் எங்களிடம் இருந்தது.

இந்தச் செய்தி படித்த இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. மனம் முழுக்க கனத்து இருந்தது. காலையில் விடிந்ததும் விடியாததுமாக ஆல்பென்ஸ் நதானியலிடமிருந்து அலைபேசி அழைத்தது.

நமது பல்கலைக் கழகத்தை அரசு எடுக்கிறதாமைய்யாஎனக் குரல் தழும்ப என்னிடம் சொன்னார். கொஞ்ச நேரத்தில் இன்னும் என் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. எல்லாம் இதே செய்தியைப் பறிமாறின.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எங்களுக்குத் தந்த வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அங்கே நாங்கள் நடத்திய போராட்டங்களும் சாதாரணமானவையல்ல. ஆனாலுமென்ன அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எங்கள் ரத்த நாளங்களில் நாடி நரம்புகளில் கலந்து உறைந்திருக்கும் சொந்தம் என்பதை எப்பொழுதும் நாங்கள் இழந்து விட முடியாது.

No comments:

Post a Comment