Saturday, April 19, 2014

இரு எதிர்முனைகள்; பொருள் ஒன்றுதான்..!


நான் ஆணையிடுகிறேன்!”, “நான் அறிவித்தேன்!” “என் ஆட்சி!”, “என் அரசு”, “என்னுடைய உத்தரவு!இப்படியெல்லாம் ஒருவர் தன்னை முன்னிலைப் படுத்தி பேசுகிறார் என்றால் இதுவொரு ஆணவத்தின் வெறி அடையாளம் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படிப் புரிந்து கொள்வது ஒரு சரியான கணிப்புத்தானா? என்று ஒரு கேள்வியை நாமே நமக்குள் எழுப்பிப் பார்த்தோமானால் நமக்குள்ளே ஒரு குழப்பம் லேசாகத் தலையைத் தூக்கத்தான் செய்கிறது.

ஆப்ரஹாம் தீர்க்கதரிசி, அதாவது இப்ராஹீம் நபி காலத்தில் நம்ரூத் என்ற மன்னன் இருந்தான். இப்ராஹீம் நபிக்கு சகலவிதமான சத்ரு அவன். அந்த நம்ரூத்தின் இஸம்தான் ஆணவத்தின் அடையாளம். (மோஸஸ் தீர்க்கதரிசி அதாவது மூசா நபியின் எதிரி ஃபிர்அவ்ன் இரண்டாவது ஆணவக்காரன்.)

அதுவரை மக்கள் நம்பி வந்த அவன் காலத்துக் கடவுள்களை எல்லாம் மறுத்துவிட்டு அவன் தன்னைக் கடவுளென பிரகடனப்படுத்தினான். இதுதான் ஆணவம். ஆணவம் அறியாமையின் ஊட்டச் சத்து மிக்க கொழுத்தப் பிள்ளை.

நான், என்என்றெல்லாம் பிதற்றுகின்ற வாதம் ஆணவத்தின் அடையாளம் அல்ல. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் அம்மையார் நம்ரூத் அளவு சக்தி பெற்ற ஒரு படைப்புமல்ல.

ஆணவத்தை, அதாவது அறியாமையைச் சுமப்பதற்குக் கூட ஒரு ஆற்றல் கொண்ட திடகாத்திரம் வேண்டும்.
இந்த அம்மையாரைப் பொறுத்தளவில் பலகீனத்தின் ஆகக் கடைசி சிறு துளிர் என்பதை மறந்து விடக் கூடாது.

அப்படியானால் நான், என் என்ற திமிர் வார்த்தைகளுக்கு என்னதான் பொருள்?

தாழ்வு மனப்பான்மையின் பூரணமான வெளிப்பாட்டுச் சின்னம் இந்த அம்மையார்.

தாழ்வு மனப்பான்மை வெளிப்படும் விதம் இப்படித்தான் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்ளும். அது ஆணவம் போல தோற்றம் தரும். ஆனால் அது பயத்தின் மறுபக்கக் காட்சி என்பதை நாம் உற்றுப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும்.

அறியாமை ஆணவத்தைப் பிறப்பிப்பது போல, ஆழ்மனப் பயம் அறிவில்லா ஆணவம் போல ஒரு பிம்பத்தை உருவாக்கும்.

மனோதத்துவ வல்லுநர்கள் இதையும் ஒரு ஆழ்மனத் தாழ்வு மனத் தகவலாகவே குறிக்கிறார்கள்.

இந்த அம்மையாருக்கு, தான் சார்ந்திருந்த கலைத்துறையில் தனக்கிருந்த ஸ்தானங்களைப் பற்றிய வருத்தங்கள், மற்றும் பெண்பாலினத்தவர்கள் மீது ஆண் சமூகத்தினர் கொண்டிருந்தக் கொடிய அடக்குமுறைகள் போன்ற நேரடியாக அனுபவித்த வேதனைகள் காரணமாக ஏற்பட்ட பயம் ஆழ்மனத்தில் வேரூன்றி இருக்கிறது.

தனக்கொரு உயரிய இடம் கிடைத்தவுடன் அந்த மனப்பயம் வேலை செய்ய ஆரம்பித்தது. தன்னை ஒரு சுப்பீரியார்டித் தனமாக வெளிப்படுத்திக் காட்டி எதிர்ப் பாலினரை அடக்கி ஒடுக்க அது முனைகிறது.

இந்த பயன்பாட்டின் வெளிவடிவம்தான் அவர் இயக்கத்தில் உள்ளவர்களை எல்லாம் தன் பாதம் பணிய வைக்கிறது. குறிப்பாக ஆண்களை அடிபணிந்து சாஷ்டாங்க வணக்கத்திற்கு மறைமுகத் தூண்டலாகிறது.

இந்த அம்மையாரைப் பொறுத்தளவில் அவர் பாதம் பணியும் பக்த கோடிகளை எண்ணிக்கையிட்டால் ஆண்களின் எண்ணிக்கையே கணிசமாக இருக்கும். அவருடைய ஆழ்மன தாழ்வு மனப்பான்மையின் பயம்தான் இந்தப் பணிய வைக்கும் பழி தீர்த்தலில் சுகம் பெறுகிறது.

நான், என்என்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஆணவத்தின் அடையாளம் அல்ல. பழிதீர்த்துக் கொண்ட பாவனையின் மொழியாடல்கள்தாம்.

சுருக்கமாக ஒரு மன நோயின் வெளிப்பாடு இது. இப்படிப் புரிந்து கொண்டால் - அல்லது பழிதீர்த்துக் கொள்ளும் பாவனை இது என்று அடையாளப் படுத்திக் கொண்டால். ஜெயலலிதா என்ற அம்மணியை நாம் சரியாக அளவிட்டு இருக்கிறோம் எனத் தெளிவு படலாம்.
*************************************************************************************

எம்.ஜி.ஆர் மலையாளி!”, “பெரியார் பெயரை உச்சரித்துக் கொண்டு ஏமாற்றும் மூகாம்பிகை அடிப்பொடி”, “ஒரு சினிமாக்காரன்”, “யாரோ எழுதிய பாடலுக்கு யாரோ பாடிய பாடலுக்கு வாயசைத்த ஒரு நடிகன்
தாய் மொழி தமிழிருக்க வேசை மொழி இந்தி எதற்கு?”
ஒரு பெண்ணுக்கு வக்கற்றவர். ஆனால் அவருக்குப் பெயரென்னவோ காமராசர்
குரங்கு முக பக்தவத்சலம்
தட்டுவானி முத்து, சத்தியவானி முத்துஇந்த வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி கண்டெடுத்து அப்போதைக்கப்போது வெளியிட்ட அற்புதமான வாசகங்கள்.

கொள்கையால் எதிர்ப்பட்டவர்களை எதிர்க்க ஆழமான எதிர்க் கொள்கைகளை வைக்காமல் அவர்களை அசிங்கமாகத் தாழ்மைப் படுத்தித் தன்னை உயர்வாக ஆக்கிக் கொள்ளும் மனப்பான்மை, அதே தாழ்வு மனப்பானமையின் வேறு ஒரு முனையின் புறப்பாடுதான்.

தன்னை உரக்கச் சொல்வதும் எதிரியை நையாண்டித் தனம் செய்து தன்னை மேலாக்கிக் கொள்வதும் தாழ்வு மனப்பானமையின் இரண்டு எதிர்முனைகள்.

ஒவ்வொருவருக்கும் தம் தாய்மொழி உயர்வானது. அவரவர் தங்கள் தாய்மொழியினை மேம்படுத்தி ரசிப்பது எல்லோருக்கும் சம்மதமானது, ஒருவரின் தாய்மொழியை மற்றவர்களின் தலையில் நிர்பந்திப்பது அடக்குமுறையின் கொடூரமானது.

இந்தக் கொடூரத்தை எதிர்க்க முயலும் போது, தன்தாய்மொழியின் வலிமையை உரக்க உச்சரிப்பது சரியான முறைதான். அடக்க வந்த மொழித் திணிப்பின் கொடூரத்தைத் துடைத்தெறிய திட்டம் காண்பது நல்ல எதிர்வினைதான்.

இதற்குப் பதிலாக எதிர்மொழியைக் கொச்சைப் படுத்துவதும் நம் தாய்மொழியை உயர்த்துவதும் ஒரு வழிமுறை என்று கருதும் மனப்பான்மைக்குள்தான் தாழ்வு மனப்பான்மையின் தடம் பதிந்து இருக்கிறது.

எதிரியை அசிங்கப் படுத்தினால் தன்னை மேம்படுத்தி விட்டதாகக் கருதிக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை எப்போதைக்கும் ஆபத்தானது.

இந்தித் திணிப்பை எதிர்த்தது கூட தவறல்ல. அதற்குரிய காரணத்தைச் சரியாக முன்வைக்காமல் நம் தாய்மொழியை தாயாக்கியும் இந்தி மொழியை வேசையாக்கியும் காட்டிய கொடுமை அவமானகரமானது.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் தன்னுடைய பேரப்பிள்ளை, “என்னுடைய மனசாட்சி மாறன்என்று சொன்ன மாறனின் தவப்பிள்ளை தொகுதியில் கருணாநிதி பேரனுக்கு வாக்குக் கேட்க மேடையேறி அமருகிறார்.

நான்கு வரி இந்திப் பாடல்களைப் பாடுகிறார். அதனை விளக்கி வாக்குக் கேட்கிறார். இந்தியிலே போஸ்டர் அடித்து பேரனுக்கு வாக்குக் கேட்கும் உத்தியும் நடைமுறைப் படுத்தப் படுகிறது.

தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் இயக்கமும் கூட இந்தியில் போஸ்டர் அடித்து வாக்குக் கேட்க முனைந்ததில்லை.

இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முழங்கினார்கள். மாணவர் போராட்டம் பொங்கி எழுந்தது. இந்தித் திணிப்பு இல்லாது போனது. ஆனால் தமிழகத்தின் பல லட்சம் மாணவர்களுக்கு இன்று தமிழ்த் தெரியவில்லை.

இந்தி இல்லையே ஏன் தமிழ் அழிந்தது? தமிழை யார் அழித்தது? எது அழித்தது? ஒருக்கால் இந்தி வந்திருந்தால் தமிழ் அழிந்த்திருக்காதோ?..

மன நோய் இப்படித்தான் ஒரு நாள் தன் முகத்தை வெளிக்காட்டும்.

செல்வி ஜெயலலிதா மனநோயின் ஒரு முனை, கருணாநிதி அதே மன நோயின் எதிர் முனை. இதில் யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை.

இரண்டு எதிர்முனைகள் ஒரே பொருளின் உருவம். இந்த அடையாளத்தை நாம் புரிந்துக் கொள்வது நல்லதொரு தமிழக அரசியலின் துவக்கமாக ஆகலாம்.

இந்த அளவுகோலை ஜெயலலிதா கருணாநிதியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் பொருத்திப் பாருங்கள். பல உண்மைகள் வெளிப்படும்.

தன்னை உயர்த்திக் கொள்வது போல் காட்டிக் கொள்வது பயத்தின் அடையாளம். எதிரியைத் தாழ்த்துக் காட்டுவது பலகீனத்தின் அடையாளம். ஆக மொத்தம் நோயாளிக் கூட்டம்.

No comments:

Post a Comment