Monday, April 7, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–35

ஒரு நிகழ்வு! ஏராள நினைவுகள்!


இன்று (06/04/2014) ஞாயிற்றுக் கிழமை காலை பதினொரு மணியளவில் ராயபுரம் பார்சி மஹாலில் ஒரு திருமணம் நிகழ்ந்தேறியது. நான் அதில் கலந்து கொண்டேன். A.S.K இல்லத் திருமணம்.

A.S.K என்ற ஒரு சொல்லடைவு என் மனதுக்குள் எப்பொழுதுமே நிறைவையும் கனிவையும் நீங்குதல் அறியா கனவையும் நிரப்பி வைக்கும்.

A.S.K என்றால் ஆப்பனூர் காசிம் அண்ணன் அவர்களின் மூத்த சகோதரர் ஹாஜியார் காஜா அண்ணன் அவர்களை முன்னிலைப் படுத்தும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது முன்னிலைப் படுத்துவது A.S.K குடும்பத்தின் கடைசித் தம்பி A.S.காசிம் அண்ணன்தான் என்ற ஒரு தெளிவான முடிவு இருக்கிறது.

காசிம் அண்ணனின் கடைசி மகன் அஃப்ஸர் ஹுசைனுக்குத்தான் திருமணம் நிகழ்ந்தேறியது. இந்த அஃப்ஸர் பிறந்தவுடன் காசிம் அண்ணன் என்னிடம்,

அண்ணேன், பையனுக்கு ஒரு நல்ல பெயர் வையுங்கள்என்றார். நான், “அண்ணேன், நாகூர் இறைஞானி அப்துல் வஹாப் பாகவி ஹஸரத் அவர்களிடம் சென்று பையனுக்குப் பேர் கேப்போம்என்றேன்.
மறுநாளே நாகூர் புறப்பட்டோம். நாகூர் ஹஸரத் வைத்த பெயர்தான் இன்றைய மணமகன் பெயர்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் இடைவெளியிட்டு ஆப்பனூர் திருமணத்தில் மீண்டும் கலந்து கொண்டேன்.

காசிம் அண்ணனின் மூத்த மகள், என் இனிய மருமகள் ஆபிதா திருமண நிகழ்விலும் கலந்திருந்தேன். அந்த என் மருமகள் ஆபிதா இன்று பேரப்பிள்ளைகளோடு இருக்கிறாள். அவள் திருமணத்தில் நான் பேசினேன்.
முஸ்லிம் லீகின் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், அன்று பொதுச் செயலாளராக இருந்த எம்.ஏ.லத்தீஃப் சாஹிப், காஜா மொஹைதீன் எம்.பி, வந்தவாசி வஹாப் சாஹிப், இன்றைய முஸ்லிம் லீகின் தலைவராக உள்ள காதர் மைதீன் சாஹிப் போன்ற பெருமைக்குரியவர்களும் கலந்துக் கொண்டார்கள்.

அந்தத் திருமண விழாவில் அப்துஸ் ஸமது சாஹிப் இறுதியாகப் பேசினார். அவருக்கு முன்னர் நான் பேசினேன்.

ஸமது சாஹிபினுடையப் பேச்சில் மணமக்களை வாழ்த்தியது கொஞ்சம். என்னை ஏசியது டண் கணக்கில். இவ்வளவுக்கும் ஆபிதா திருமணத்திற்கு ஒரே காரில்தான் நானும் ஸமது சாஹிபும் வந்து இறங்கினோம். எங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆனாலும் என் வாழ்த்துரைக்குப் பின்னால், ஸமது சாஹிப் அவர்கள் என்னை சொற்களால் புரட்டி எடுத்தது திருமண அவையையே அசர வைத்தது. எனக்கும் இது அதிர்ச்சிதான்.

வீட்டுக்கு அடங்காத கருங்காலி, பெற்றோரை மதியாத பித்தலாட்டக்காரன். தன்னிலை உணராத தறுதலைஇந்த அடைமொழிகள் எல்லாம் என்னைக் குறித்து ஸமது சாஹிப் அவர்கள் பயன்படுத்தியவை.
ஏன் இப்படி நிகழ்ந்தது? என்று எனக்கு அப்போது விளங்கவில்லை.
மணமக்களை நான் வாழ்த்திய வாழ்த்தில் ஒரு தகவல் தலைவர் ஸமது சாஹிபை கீறிவிட்டது எனப் பின்னர் தெரிந்து கொண்டேன்.
என் வாழ்த்தில் மணமக்களுக்கு நான் ஒரு சின்ன அறிவுரைச் சொன்னேன்.

மணமக்களே! நீங்கள் வாரி வழங்குவதில் உங்கள் தந்தையாரையே முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். சமுதாயப் பணியாற்றலில் அவரையே சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள். வாரி வழங்கும் பொழுது பல நேரங்களில் சம்பவிக்கும் சோகங்களைக் கண்டு சோர்ந்து விடாதீர்கள். உங்கள் தந்தையார் ஒருபோதும் சோர்ந்ததில்லை.நீங்களும் அவரையே பின்பற்றுங்கள்.

ஆனால் சில விஷயங்களில் உங்கள் தந்தையாரைப் பின்பற்றாதீர்கள். அள்ளித் தருவதில் கொடைத்தன்மை இருக்கட்டும். கொடுத்து மகிழ்வதில் ஏமாளித்தனம் கூடாது. இந்த ஏமாளித்தனத்தை உங்கள் தந்தையிடத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

உங்கள் தந்தையிடமிருந்து இதைப் பாடமாகப் படித்து இதைத் தவிர்த்திடுங்கள்.

இதுதான் என் வாழ்த்தின் சாராம்சம்.

தலைவர் ஸமது சாஹிப் அவர்கள் இதற்குத்தான் நான் மேலே குறிப்பிட்டு இருந்த என் பற்றிய அடைமொழிகளை சனதாக(பட்டம்) அள்ளித் தெறித்திருந்தார்.

மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்திலிருந்து ஆபிதா கல்யாணத்திற்கு மகிழ்ச்சியோடு தலைவர் ஸமது சாஹிபோடு அவர் காரில் வந்து இறங்கிய நான், திருமணம் முடிந்து செல்லும்பொழுது மனக் கனத்துடன் காசிம் அண்ணன் காரில் என் இல்லம் வந்து இறங்கினேன்.

அன்றிலிருந்து எனக்கும் முஸ்லிம் லீகின் இயக்கத்திற்கும் இணைப்புப் பாலமாக இருந்த உழைப்புத் தொடர் அறுபட்டுவிட்டது. அது ஏனோ தெரியவில்லை இன்றுவரை செப்பனிடப்படாமலேயே சிதைந்துக் கிடக்கிறது.

காசிம் அண்ணன் வீட்டின் முதல் திருமணத்தில் இது நடந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் காசிம் அண்ணன் இல்ல கடைசி மகன் திருமணத்தில் இன்று கலந்திருக்கிறேன்.

காசிம் அண்ணன் இல்லத்தாரும், ஆப்பனூர் பீர் அண்ணனும்(காசிம் அண்ணனின் மைத்துனர்) என்னை மேடையில் வாழ்த்தச் சொல்லி இன்றும் கட்டளையிட்டனர்.

மறுப்பில்லாமல் பேசினேன். நான் மட்டுமே பேசினேன். வேறு யாரும் பேசவில்லை.

இந்த நிகழ்வு என்னைக் கடந்த காலத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
இன்று காசிம் அண்ணன் நம்மிடையே இல்லை. இறைவன் அவனளவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் பொருந்திக் கொண்டான். (அவர் பிழைகளை மன்னித்து இறைவன் அவன் கருணைகளை வாரி வழங்கி அவர் மண்ணறை வாழ்க்கையை விசாலமாக்கவும் மறுமையில் அண்ணலார் விழிப்பார்வையின் கனிவு கனியும் இருப்பிடத்தில் அவருக்கும் ஒரு இடத்தைத் தந்து அருளவும் பிரார்த்திக்கிறேன்.)

என்னுடைய திருமணத்தை முஸ்லிம் லீகின் மாநிலத் தலைமையகத்தில் அவர்தான் நடத்தி வைத்தார். என் திருமண வாழ்க்கை, முதல் நாள் தொடங்கி ஒராண்டுகளுக்கு மேல் அவர் இல்லத்திலேயே குடியிருப்பாக மலர்ந்தது. திருமண வாழ்வின் முதல் நாளில் நான் நிய்யத் (உறுதி) செய்து கொண்டேன்.

எங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்குக் காசிம் அண்ணன் பெயரை வைப்பதென்று. ஆனால் எங்களுக்குப் பிறந்த முதல் குழந்தை, பெண் குழந்தை. ஆனாலும் காசிம் அண்ணன் பெயரை விலக்கிக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அதனால் காசிம் சித்திக்கா என்று பெயர் வைத்தேன். அவளும் இன்று அல்லாஹ் கிருபையால் பொறியியல் பட்டதாரியாகி ஐ.டி. துறையில் பணிபுரிகிறாள்.(அல்ஹம்து லில்லாஹ்)

இறைவன் அருளால் எங்களுக்கு அடுத்தொரு மகள் பிறந்தாள். திருமறையில் உச்சரிக்கப்படும் பெண் பெயரும் அதிகம் உச்சரிக்கப்படும் அந்தஸ்த்து பெற்ற பெயருமான மர்யத்தின் பெயரை வைக்க ஆசைப் பட்டேன். எனக்கு இயல்பிலேயே பிடித்த அரபிப் பெயரான சித்திக்கா என்ற பெயரையும் இணைத்து மர்யம் சித்திக்கா என்று பெயர் வைத்தோம். அவள் கூட்டுறவு தணிக்கை துறையில் இளநிலை தணிக்கையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

காசிம் அண்ணனைப் பொருத்தளவில் அவர் நினைவை நான் எப்பொழுதும் தனிமனித நினைவாகக் கருதுவதில்லை.

அவருடைய செயல்பாடுகளில் ஆப்பனூர் ஜமாத்தின் ஐக்கியம் இருக்கும். சமுதாயப் பணியின் அறநோக்கம் மிளிரும்.

முஸ்லிம் லீகின் அரசியல் அனுபவம் அவரிடம் தங்கி இருக்கும். இப்படி அவர் சமூகப் பணியோடு கலந்த மனிதராகவே எப்போதும் காட்சிப் படுகிறார்.

சென்னை வங்கக் கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் மணல் வெளியில் மாலை ஆறு மணிக்கு ஒரு சங்கப் பலகைக் கூடும்.
அந்தக் கூட்டத்தில் காசிம் அண்ணன் கண்டிப்பாக இருப்பார். ஆப்பனூர் பீர் அண்ணன் அருகில் அமர்ந்து இருப்பார். நானும் கலந்திருப்பேன். புலவர் அலாவுதீன், எங்கள் நண்பர் மர்ஹூம். கவிஞர் சலாஹுதீன், அஜீஸ் அஹமதும் நிச்சயம் இருப்போம்.

சில வேளைகளில் தலைவர் ஸமது சாஹிபின் மகனார்கள் அப்துல் ஹமீது பாக்கவி, அப்துல் ஹக்கீம், அப்துல் வஹ்ஹாப் ஆகியோரும் பங்கு பெற்று இருப்பர்.

இந்த சங்கப் பலகைக் கூட்டத்தில் எல்லாமே பேச்சுப் பொருளாக இருக்கும். இந்தப் பேச்சுக்குத் தலைப்போடு காசிம் அண்ணன்தான் வந்து அமர்ந்திருப்பார்.

ஒருநாள் அரசியல் விமர்சனம் நடக்கும். இன்னொரு நாள் மதங்களைப் பற்றிய பார்வைகளும் விமர்சனங்களும் தீப்பிடிக்கும். மற்றொரு நாள் இலக்கியம் கம்பீரமாக தலை நிமிர்ந்து இருக்கும்.

கிட்டத்தட்ட எல்லாப் பொருளுமே அந்த மணல்வெளியில் எங்களுக்குப் பேச்சுப் பொருளாக இருக்கும். அனேகமாக மணிக்கணக்கில் என்னைப் பேச வைத்து காசிம் அண்ணன் அழகு பார்த்துக் கொண்டிருப்பார்.
இந்தக் கடற்கரைக் கூட்டத்தில்தான் மணிச்சுடர் நாளிதழ் பிறப்பெடுத்தது. காசிம் அண்ணன் குடும்பத்தினர் முழுப் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். ஆப்பனூர் ஜமாத் பூரண ஒத்துழைப்புத் தந்தது. நாளிதழுக்குத் தேவைப்படும் முதல் தொகையாக ஒரு லட்சம் ரூபாயைக் காசிம் அண்ணனின் மச்சானும், பீர் அண்ணனின் மூத்த சகோதரருமான மர்ஹூம் ஆப்பனூர் ஹனீஃபா அண்ணன் முன்வைத்து துவங்கி வைத்தார்.

இதே கடற்கரை மணல்வெளியில்தான் மெட்ராஸ் மீடியா என்ற கம்பெனி துவங்கப் பெற்று அதில் பி.வி.சி பைப் தயாரிக்கும் தொழிற்சாலை உதயமானது. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பக்கத்து மாநிலங்களிலும்கூட பி.வி.சி. பைப் தொழிற்சாலை பெரிய அளவில் உதயமாகவில்லை.

காசிம் அண்ணனுடைய தொழில் பற்றிய ஆழிய சிந்தனை இதனைத் துவக்கி வைத்தது. தலைவர் ஸமது சாஹிபின் மகனார்களை இணைத்துக் கொண்டு இது துவங்கப் பட்டது.

ஆனாலும் இறைவன் நாட்டம் வேறுவிதமாகிவிட்டது.
மணிச்சுடர் நாளிதழும் அந்தக் குடும்பத்தாரிடம் இன்று இல்லை. மெட்ராஸ் மீடியாவும் இல்லாது போயிற்று.

மெட்ராஸ் மீடியா இன்று செயல் பட்டு இருந்தால் ஆயிரம் கோடிகளுக்கு அது அதிபதியாகி இருந்திருக்கும்.

இதற்கான காரணங்களை இங்கே நான் விவரிக்கப் போவதில்லை.
ஒரு நாள் கடற்கரைக் கூட்டத்தில் வழக்கம்போல் காசிம் அண்ணன் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு இலக்கியச் சர்ச்சை.

ஹிலால் அண்ணே! எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில ஒரே காலத்தில் சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டதாகவும் , கரிகால் சோழன் சோழ நாட்டை ஆண்டதாகவும், தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டை ஆண்டதாகவும் சொல்கிறார்களே. இது சரியான வரலாற்றுத் தகவல்தானா?” என்று கேட்டு வைத்தார்.

நான் பேசத் தொடங்கினேன்.

அண்ணே! இது அனைத்தும் முழுஉண்மை கொண்டதல்ல. செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டான். அந்தக் காலகட்டம் சிலப்பதிகார காலகட்டம் என்றானால் சிலப்பதிகாரம் சங்கக் கால இலக்கியமாக ஆகிவிடும். ஆனால் சிலப்பதிகாரம் சங்கக் கால இலக்கியம் அல்ல.செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் சோழ நாடும், பாண்டிய நாடும் பலம் பெற்ற மன்னர்களால் ஆளப் படவில்லை.

சேரன் செங்குட்டுவனுக்குக் கட்டுப்பட்ட மன்னர்களாகச் சோழ பாண்டியர்கள் இருந்தார்கள் என்ற தகவல் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

கரிகாலன் காலத்தில் சோழப் பேரரசே மிகப் பெரும் பேரரசு. பாண்டிய நாடும் சேர நாடும் சோழப் பேரரசை அண்டி வாழும் நாடாக இருந்ததற்குச் சங்க இலக்கியத்தில் சான்று இருக்கிறது.

அதேபோல தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் ஆட்சிக் காலத்தில் பாண்டியப் பேரரசுதான் மகத்தான பேரரசு. சோழர்களும் சேரர்களும் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்டு இருந்தனர் என்பதற்கும் சங்க இலக்கியம் சாட்சி சொல்கிறது.

முப்பேரரசுகளின் மகத்தான பேரரசர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இது பிழையான தகவல். இளங்கோவடிகள் சொல்லாத தகவல். உரையாசிரியர்கள் கருதிக் கொண்ட கருத்துப் பிழை
என்று நான் பேச ஆரம்பித்து இன்னும் பல ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்து விட்டேன்.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்கள் எப்பொழுதும் மாலையில் கடற்கரை மணலில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சில நூறு அடிகள் தாண்டி இரவு எட்டு மணிக்கு ஒரு கூட்டம் கூடும்.
நாற்காலிகளில் சிலர் அமர்ந்திருப்பார்கள். சிலர் மணலில் அமர்ந்திருப்பார்கள். ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாற்காலியில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருப்பார். சுற்றிலும் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ரஹ்மான்கான், ஆயிரம் விளக்கு ஹுசைன் இன்னும் சிலர் அமர்ந்திருப்பார்கள்.

இந்த இலக்கியப் பேச்சு நிகழ்ந்த அன்று எங்களுடைய பேச்சு கொஞ்சம் உச்சஸ்தாயிக்குப் போய் விட்டது போலும், பக்கத்தில் நடந்த கூட்டத்தினருக்கு இடைஞ்சல் செய்ததோ என்னவோ தெரியாது.

காவல்துறையின் இரு ஊழியர்கள் எங்களிடம் வந்து,

நீங்கள் தினம் இங்கு வந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?, பக்கத்தில் முதல்வரும், அமைச்சரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகப் பேசுங்கள். இல்லையென்றால் எழுந்து செல்லுங்கள்என்று கூறினார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் இப்படி இந்தக் கடற்கரையில் இருந்து எங்களைப் போல் பேசியவர்தான் இன்று முதல்வராய் இருக்கிறார். இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் எங்களில் யாராவது முதல்வர் ஆனாலும் ஆகிவிடுவோம் சார்என்று சிரித்துக் கொண்டே காசிம் அண்ணன் பதில் சொன்னார்.

வந்த காவலர்களும் மெதுவாக பேசுங்கள் சார்என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

இதே மணல்வெளியில்தான் ஒரு திட்டம் தீட்டப் பெற்றது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க வை விட்டு தன்னுடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டும். தி.மு.க கொஞ்சம் தான்தோன்றித்தனமாகச் செயல்பட முடிவு செய்துவிட்டது. அதற்கொரு பாடம் சமுதாயம் புகட்டி ஆக வேண்டும். என்ற விமர்சனத்தை நாங்கள் செய்யத் தொடங்கினோம்.

காசிம் அண்ணன் மறு நாளே செயல்படத் தொடங்கினார். தலைநகர் டெல்லிக்குக் காசிம் அண்ணன்பீர் அண்ணன், மயூரா ஹோட்டல் அதிபர் (பெயர் நினைவில் வரவில்லை), நான் ஆகிய நால்வரும் விமானத்தில் சென்றோம். அப்பொழுது உள்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம்.

எங்கள் திட்டங்களை விளக்கிப் பேசினோம். தி.மு.க விற்குத் தமிழகத்தில் ஒரு பாடம் தந்துதான் ஆக வேண்டும் தி.மு.க திசை தப்பத் துவங்கி விட்டது என்று விமர்சித்தோம்.

அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகள் என்று சிலரைச் சுட்டுத் தள்ளியது. இதற்குப் பின்னால் பஞ்சாபில் தேர்தல் வந்தது.

அந்தத் தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருந்தது. இந்திரா காங்கிரஸ் தோல்வி முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. இது நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்தான் டெல்லியில் ப.சிதம்பரத்தை அவர் இல்லத்தில் சந்தித்து இரவு பத்து மணியளவில் பேசிக் கொண்டிருந்தோம்.
சிதம்பரம் எங்களிடம் சொன்னார், “நண்பர்களே, நாளை நீங்கள் சென்னை செல்லுங்கள். உங்களுடைய மாநிலத் தலைவர் நாளைமறுநாள் மணிச்சுடர் நாளிதழில் தி.மு.க வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் விமர்சித்து தலையங்கம் எழுதுவார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க முஸ்லிம் லீக் கூட்டணி தமிழகத்தில் தலை நிமிர்ந்து நடக்கும்என்று சொன்னார்.

அவர் சொன்னது நடந்தது. ஏன் நடந்தது? என்பதை நான் ஒருபோதும் இங்கு சொல்லப் போவதில்லை. இந்த நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்த காசிம் அண்ணனைத் தவிர மற்றவர்கள் இன்றும் இருக்கிறோம். அவர்களின் மனதுக்குள்ளே இது மறைந்தே கிடக்கட்டும்.

அன்று நாங்கள் நல்லதுக்குத்தான் இதைச் செய்தோம். இன்றும் நாங்கள் சத்தியம் செய்வோம். இதில் மாற்றுக் கருத்து இன்றுகூட எங்களுக்கு இல்லை. இந்த நிகழ்வுகளுக்கு முன்னர்தான் முரசொலி மாறன் டில்லியில் வாஜ்பாயோடு அரசியல் அந்தரங்க நட்புக் கொண்டிருந்தார்.

இப்படி காசிம் அண்ணன் என்ற தனி நபரை நினைவு கூரும் பொழுது தமிழகத்தின் பல வரலாற்று நிகழ்வுகளும் இணைந்து வரும் என்ற உண்மையை இன்று கூட நான் சொல்லாமல் போனால் ஏதோ ஒருவகையில் நன்றி கெட்டவனாகிவிடுவேன் என்ற காரணத்தால் இதை இங்கே முன்வைக்கிறேன்.

யாரையும் விமர்சிக்கவோ தாக்கவோ நிச்சயமாக எனக்கு விருப்பம் இல்லை. சில தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற அளவிலேயே என் பதிவுக்கு மதிப்பு தாருங்கள்!

No comments:

Post a Comment