நான் அண்மையில் திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தங்கியிருக்கும்பொழுது, அங்கே ஒரு தம்பதியினர் தங்களுடைய பெண் குழந்தைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
அந்தப் பெண்பிள்ளைக்கு ஒன்பது வயது இருக்கலாம். தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறு குச்சி அந்தப் பெண் குழந்தையின் கண்ணில் குத்தி விட்டது.
அதற்கான சிகிச்சைக்கு அந்தப் பெற்றோர்கள் மகளை அழைத்து வந்திருந்தனர். சாதரணமாக அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். அந்தப் பெற்றோர்கள் இயல்பாக என்னிடம் ஒரு பதில் சொன்னார்கள். அந்தப் பதில் என்னை அதுபற்றியே இரண்டு நாள் சிந்திக்க வைத்துவிட்டது.
அந்தப் பெற்றோர்கள் சொன்ன பதில் இதுதான்.
“பொம்புள புள்ள கண்ணு, ஏதாச்சும் ஆயிடிச்சுன்னா என்ன பண்றது, பதறிப் போய் உடனே கூட்டிட்டு வந்துட்டோம். ஆம்பிளப் பிள்ளையாய் இருந்தாலும் பரவாயில்ல. பொம்புள புள்ளயாச்சே, என்ன செய்றது?”
என ரொம்பவும் அங்கலாய்த்துச் சொன்னார்கள்.
ஒரு குழந்தையின் கண், அவள் கண்ணைப் பற்றி பால் அடிப்படையில் பிரித்து யோசிக்க முடிகிறதே! ஆண் கண், பெண் கண் என்று கண்ணை பால் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது, கொஞ்சம் வினோதமாகத் தெரிந்தது.
“ஆண் கண்ணாயிருந்தா பரவாயில்லை., பெண் கண்ணாச்சே” என்ற பரிதவிப்பை எப்படிப் புரிந்து கொள்வது?
பெண் கண்ணின் மீது அதிகப்படியான அக்கறை என்று எடுத்துக் கொள்வதா அல்லது விற்பனைக்குரிய பொருளில் தரக்குறைவை மறைக்கிற வணிக சாதுர்யம் என்று எடுத்துக் கொள்வதா?
கண் போன்ற உறுப்புகளிலேயே பால் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொள்கிற சமூகக் குணம் காலகாலமாக நம் தலை மீது அழுத்திக் கொண்டிருக்கும் சுமைதானே.
பெண் குழந்தைக்கு ஒரு சின்ன ஊனம் ஏற்பட்டால், திருமணச் சந்தையில் ஊனத்திற்குத் தகுந்த விலையபராதத்தையும் சேர்த்தல்லவோ கொடுக்க வேண்டும் என்கிற பெற்றோர்களின் அவஸ்தை, அந்தத் தம்பதியர்களின் மொழி வடிவில் என்னை வந்துக் குத்திக் கொண்டிருந்தது.
சமூகம் என்னதான் இருபத்தியோராம் நூற்றாண்டில் செம்மாந்து நடந்துக் கொண்டிருந்தாலும் இதுமாதிரி சின்னத்தனங்களும் நம் மீது சமூகக் குப்பைகளாகக் கொட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகளை நம் தமிழ்ச் சமுதாயம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஏந்திச் சுமந்து வந்திருக்கிறது என்ற உண்மை ஒரு பாராங்கல்லைப் போல நம்மை அழுத்தத்தான் செய்கிறது.
ஆண், பெண் பிரிவினையை எல்லா பொருள்களோடும் இணைத்துப் பார்க்கிற மரபு, ஒரு கலாச்சாரப் பண்பாக இருக்கிறது.
மனித உறுப்புகளில் ஆண், பெண் ஏற்ற இறக்கங்கள் போல நமது தமிழ் எழுத்துக்களிலும் இந்தப் பாகுபாட்டைக் காண முடிகிறது.
“எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இருவாய் முப்பஃது என்ப..”
என தொல்காப்பியத்தின் முதல் நூற்பா சொல்லும்.
அதாவது தமிழ் எழுத்து முப்பது.
‘அ’ வரிசையில் பன்னிரெண்டு எழுத்துக்கள்.
‘க’ முதல் ‘ன’ வரை கீழ் வரிசையாக பதினெட்டு எழுத்துக்கள்.
பன்னிரெண்டு + பதினெட்டு= முப்பது. கணக்கு சரிதான்.
பன்னிரெண்டு உயிர் எழுத்து, பதினெட்டு மெய் எழுத்து. இப்படி வரிசைப்படுத்தி தொல்காப்பியம் நமக்குச் சொல்லிவிட்டது.
மெய்யெழுத்து பதினெட்டும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிவினைப்படும். ஒவ்வொரு பிரிவின் கீழும் ஆறு எழுத்துக்கள். மூவாறு பதினெட்டு இந்தக் கணக்கும் சரிதான்.
ஆண் பெண் பிரிவினைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று தமிழ் வாத்தி போல இலக்கணம் நடத்துகிறார் என்று நினைக்காதீர்கள். இங்கேயும் அந்தப் பிரிவினை வருகிறது. சற்றுப் பொறுங்கள் தெரியும்.
வல்லினம் - க ச ட த ப ற
மெல்லினம் - ங ஞ ண ந ம ன
இடையினம் - ய ர ல வ ழ ள
வல்லினம் ஆணெழுத்துக்கள். மெல்லினம் பெண்ணெழுத்துக்கள். இடையினம் அலியெழுத்துக்கள் (மூன்றாம் பாலினம்). இப்படி எழுத்துக்கள் குறிக்கப் படுகின்றன.
வல்லினத்தில் முதல் எழுத்து ‘க’ , மெல்லினத்தின் முதல் எழுத்து ‘ங’, வல்லினத்தின் இரண்டாம் எழுத்து ‘ச’, மெல்லினத்தின் இரண்டாம் எழுத்து ‘ஞ’. வல்லினத்தின் மூன்றாம் எழுத்து ‘ட’, மெல்லினத்தின் மூன்றாம் எழுத்து ‘ண’. வல்லினத்தின் நான்காம் எழுத்து ‘த’ , மெல்லினத்தின் நான்காம் எழுத்து ‘ந’. வல்லினத்தின் ஐந்தாம் எழுத்து ‘ப’ , மெல்லினத்தின் ஐந்தாம் எழுத்து ‘ம’.
அதையடுத்து, இடையினம் எழுத்துக்கள் ஆறும் , அதற்குப் பின்னால் வல்லின ஆறாவது எழுத்தான ‘ற’, மெல்லின ஆறாவது எழுத்தான ‘ன’. இப்படி “க,ங,ச,ஞ,ட,ண....” பதினெட்டுப் பதினெட்டு எழுத்துகள் வரிசை படுத்தப் படுகின்றன.
ஒரு ஆண் எழுத்து, ஒரு பெண் எழுத்து என்ற வரிசையில் கடைசி ஆணெழுத்தும் (ற), கடைசிப் பெண் எழுத்தும் (ன) வரிசையிலிருந்து நீக்கப் பட்டுவிட்டன.
அதற்குப் பதிலாக அலியெழுத்துக்கள் ஆறும் வரிசையாகி விட்டன. விலக்கி வைக்கப் பட்ட ஆணெழுத்து ‘ற’ வும் , பெண் எழுத்து ‘ன’ வும் சேர்க்கப் பட்டு, பதினெட்டு எழுத்தும் முடிவானது.
எழுத்துக்களை வரிசைப் படுத்தும் பொழுது இப்படி ஏன் மாற்றம் செய்யப் பெற்றது? என்று கேள்வி எழுப்பினால், சரியான விடை இதுதான் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அடுக்கு முறையில் மாற்றம் நிழந்திருப்பது என்பது உண்மை.
இறுதியாக இருக்கும் பெண்ணெழுத்து ‘ன’ கடைசியில் வந்ததுதான் வில்லங்கமான செய்தி.
இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். எழுத்துக்களில் ஆணெழுத்து, பெண்ணெழுத்து, அலியெழுத்துக்கு ஒசைதான் காரணம். வல்லோசை உடைய வல்லெழுத்து ஆணெழுத்து என்றும், மெல்லோசையுடைய எழுத்து பெண்ணெழுத்து என்றும், இரண்டும் கலந்த ஒரு இடையோசை அலியெழுத்து என்றும் கருதப்பட்டது.
வல்லெழுத்து, மெல்லெழுத்து என்று அடுக்கி வந்த வரிசை , “ற”, “ன” இந்த எழுத்துக்களை அந்த அடுக்கு முறையிலேயே சேர்த்து இடையெழுத்து ஆறையும் இறுதியாகச் சொல்லி முடித்திருந்தால், அடுக்குமுறை ஒழுங்கு இருந்திருக்கும்.
ஆனால் அந்த மெய்யெழுத்தின் கடைசி எழுத்து ‘ன’ வாக இருக்காது. ‘ள’ வாக இருக்கும். இங்குதான் சமூகத்தின் எண்ண ஓட்டம் கலக்கிறது.
‘அ’ தெய்வத்தன்மையுள்ள முதல் எழுத்து. மெய்யெழுத்துக்களில் “க” அத்தன்மைக் கொண்ட முதல் எழுத்து.
மெய்யெழுத்துக்களில் கடைசியாக வரும் ‘ள’ பெண் ஈற்றெழுத்து கொண்டது. அவள் என்ற ளகரம் பெண்பாலைக் குறிக்கும். எழுத்தின் இறுதி, பெண்ணைக் குறித்த எழுத்தாக இருப்பது, எழுத்தின் அவமானம்.
‘ன’ ஆண் ஈற்று எழுத்து (அவன்). ஆண் இறுதி எழுத்தான னகரத்தில் முடிவதுதான் சிறப்பாக இருக்கும் எனக் கருதி மாற்றி அமைத்தனர்.
எழுத்துக்களைக் கூட ஆணெழுத்துப் பெண்ணெழுத்து எனப் பிரிவினைப் படுத்தி பெண் ஒடுங்கிக் கிடக்க வேண்டியவள்தான் என்ற அடிப்படையில் எழுத்தை உள்ளமைத்து, ஆணை உணர்த்தும் னகரத்தை கடையாக வைத்து எழுத்துக்கள் அமைக்கப்பட்டன என உரையாசிரியர்கள் விளக்கம் தர ஆரம்பித்தனர்.
இந்த விளக்கத்தை நாம் மறுத்துவிட முடியாது.
வரிசையாக அடுக்கப்பட்டு வந்த எழுத்துக்களில் இரண்டு எழுத்துக்களை மட்டும் தனியே எடுத்து வரிசையை மீறி இறுதியில் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
எழுத்துக்களில் கூட ஆணாதிக்கம் பெண்ணடிமைச் சூழ்நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.
தொல்காப்பியரும் அந்த அடிப்படையில்தான், “அகரம் முதல் னகரம் இறுவாய்” என்று சொன்னார்.
ஆண் மனிதனாகப் பார்க்கப் பட்டான். பெண் வர்த்தகப் பொருளாகத்தான் கருதப்பட்டாள்.
வள்ளுவர்கூட பெண்ணைக் குறிப்பிடும்பொழுது
“பிறன் பொருளால்..” என்று ஒருவனுடைய பொருள் என்றுதான் சொல்லுகிறார்.
மகளாக இருக்கும்பொழுது பெற்றோர்களின் பொருள் அவள். மனைவியாக இருக்கும்பொழுது கணவனின் பொருள் அவள். தாயாக இருக்கும் பொழுது பிள்ளைகளின் பொருள் அவள்.
எல்லா நிலைகளிலும் அவள் வஸ்துவாகத்தான் கருதப்படுகிறாள். இந்த மனோபாவத்திற்கு நமக்கு இரண்டாயிரத்திற்கும் மேலான ஆண்டுகள் கொண்ட கலாச்சார பெருமை இருக்கிறது.
கண் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு உரையாடல், என்னை தொல்காப்பியத்தின் எல்லைவரை இழுத்துச் சென்றுவிட்டது.
இந்த நிலை தமிழ்ப் பண்பாடு என்ற பென்னம்பெருமைக்குள் நிலைத்து இருக்க இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment