சோழ மண்டலப் பேரரசன் ஒருவனை நோக்கிக் கம்பர் பாடியதாக ஒரு பாடல் உண்டு.
இந்தப் பாடலைக் கம்பராமாயணத்தில் போய்த் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. தனிப்பாடல் திரட்டில் அது இருக்கிறது.
“மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதுவோ?
உன்னையறிந் தோதமிழை ஓதினேன்? – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?”
ஒரு மன்னனை நோக்கி அந்த நாட்டுப் பிரஜை கேள்வி கேட்கிறான். நீ ஒரு ஆட்சியாளனா? உனக்கொரு நாடு தேவைதானா? உன்னை அறியாமல் உனக்கு செய்தி சொல்லி விட்டேனே! என்னைப் புரிய உன்னால் முடியாது! நீ ஒரு மரம். நானோ தாவிப் பாய்ந்து செல்லும் குரங்கு. நீ நின்று கொண்டிருக்கும் மண்தான் உனக்குப் பிடிமானம். என்னைப் பொறுத்தவரை நான் செல்லும் இடமெல்லாம் எனக்குச் சொந்தமாகும்.
இந்தப் பாடலை கம்பன் பாடியதாக சொல்லுவதற்கு வலுவான ஆதாரம் கிடையாது. கம்பன் பாடினால் என்ன, வேறு ஒரு கொம்பன் பாடினால் என்ன? முக்கியத்துவம் அதில் இல்லை. சொல்லுகிற செய்தியில் தான் அது இருக்கிறது.
இப்படி ஒரு பிரஜை, ஆட்சியாளனை வழி மறித்து சொல்லிய செய்திதான் இங்கே முக்கியம்.
இப்படி ஒரு காட்சி நிகழ்ந்து இருக்குமா? அது நமக்குத் தெரியாது. ஆனால் சுயமரியாதைக்கு இந்த நிகழ்வுதான் ஆதார முத்திரை.
இப்படி ஒரு பாரம்பரியத்தில் வந்ததாக பீற்றிக் கொள்ளும் ஒரு கும்பலின் கடந்த கால உண்மை வரலாறு நம்மைக் கொடூரமாக அலைக்கழிக்கிறது.
வெள்ளையன் நம்மை ஆண்டான். அவனுக்குப் பாத பூஜை செய்ய நாம் காத்துக் கிடந்தோம்.
வெள்ளையனுக்கு முன்னால் பார்சியன், முகலாயன், துருக்கியன் என ஒரு பட்டியல் கொண்ட அந்நியர் ஆண்டனர். அவர்களுக்கும் நாம் லாலி பாடினோம். இவைகள் எல்லாம் தன்மானத்தின் அவக்கேடுகள்.
முகலாய ஆட்சிக் காலத்தில் “ஸலாம்” என்ற, ஒரு பொருள் நிறைந்த அரபுச் சொல் அதன் தன்மையில் குறைந்து, ஒரு மானசீகக் காட்சியையும் உண்டாக்கி இருந்தது.
ஸலாம் என்பதின் பொருள் சாந்தி. இந்த ஸலாத்துக்கு நம்மை அறியாமல் நம் மனதுக்குள் ஒரு உருவம் தோன்றியிருக்கிறது. தலை குனிந்து வலது கையை மேல் நோக்கி நெற்றி நுனிக்கு கொண்டு வந்து, பணிந்து நிற்கும் ஒரு பிம்பம் இயல்பாகவே எழுந்து விட்டது.
முகலாயர்களின் பழக்க வழக்கங்களின் காரணமாக ஆண்டான் முன் அடிமை நிற்கும் தோற்றத்தின் வரைக்கோட்டு சித்திரமாக “ஸலாம்” தோற்றம் தந்தது.
மனிதமானம், மரியாதை மிக்கது. அது எவருக்கும் தேவையற்று பணிந்துக் குலையாது. எவர் முன்னும் தன் கருத்தை முன்வைக்கத் தயங்காது. எவராக இருந்தாலும் கண் முடித்தனமாக ஏற்க இயலாது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஒரு பென்னம்பெரிய ஆட்சியே முன்வந்தாலும் அது கண்டு அஞ்சாது. இவைகள்தாம் சுயமரியாதை என்பதின் விஸ்வரூபம் என அறிவித்துக் கொண்டு ஒரு தன்மான இயக்கம் தமிழகத்தில் தலை தூக்கியது.
ஒரு உயரிய, ஒப்பற்ற கோட்பாடு தமிழகத்தில் இருந்து கடந்த நூற்றாண்டின் மத்திய காலத்தையொட்டி பிரம்மாண்டமாகப் புறப்பட்டது, நமக்கெல்லாம் ஒரு பெருமிதமாக இருந்தது.
ஏற்கனவே இவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பக்தி இலக்கியமும் இந்த மாதிரியான கோஷத்தை தமிழகத்தில் முன்வைத்த வரலாறு நமக்குரியது.
“நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம். விடலை யல்லோம்...”
இவைப் போன்ற மொழியாக்கங்கள் பரவிக் கிடந்த மண்தான் தமிழக மண்.
சுயமரியாதைக்காரர்கள் முன்வைத்த முழக்கங்களிலோ, கொண்டிருந்த கோட்பாடுகளிலோ நாம் அனாவசியமாக முரண் கருத்தை வைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களின் நடைமுறை வரலாறு மகத்தான அருவருப்புக் காட்சிகளாக இன்றும் நம் விழிகளுக்கு முன்னால் வினோதமாகத் தெரிகின்றன.
மனிதனை மனிதன் அடக்கியாள்வதோ, அடிமைப் படுத்துவதோ எல்லாக் காலத்திலும் வரலாற்று அசிங்கம்தான்.
நல்லதொரு நன்மையை நோக்கி அச்சம் இருக்குமானால், அதற்கு கொஞ்சம் அனுமதி தரலாம். நக்கிப் பிழைக்கும் நாய்த்தனத்திற்குப் போஷாக்காக அச்சம் இருந்தால், அதைப் புசித்துக் கொண்டு வாலாட்டிக் கொண்டு இருப்பது மனிதத்தின் மகத்துவத்தின் மீது நடத்தப்படும் சாணியடிப்புத்தான்.
குறைந்தபட்சமாக ஓமந்தூர் ரெட்டியார் காலத்தில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்குள் நடந்துவந்த காட்சிகளை கவனிக்கும் பொழுது தமிழராகிய நமக்கு ஒரு மதிப்பு இருந்தது.
இந்தத் தொடர்ச்சி , பக்தவத்சலம் முடிவு காலம் வரை நீடித்து இருந்தது.
இந்தக் காலகட்டங்களில் சட்டமன்றத்தில் பதவி ஏற்கும் உறுப்பினர்களோ , அமைச்சர்களோ சட்டமன்றத்திற்குள் பதவி ஏற்பு நிகழ்வின் போது தங்கள் தலைவர்களின் காலைத் தொட்டு வணங்கி விசுவாச வெளிப்பாட்டைக் காட்டவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் தலைத் தாழ்த்தி வணங்கி வழிபடுவது தர்மமாகும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தவர்கள்.
அந்தத் தலை வணக்கம் அகிலங்களின் ஆண்டவனுக்கு முன்தான் என கருத்துறுதி உயர்ந்து இருந்தது. வணக்க வழிபாட்டை மனித வடிவத்திற்குமுன் செலுத்தி பிச்சை பாத்திரம் ஏந்தும் பிழைப்புத்தனம் அவர்கள் கைவசம் இல்லை.
சுயமரியாதை பேசிய கொள்கைக்காரர்களுக்குத் தமிழகம் ஆதரவு தந்து தமிழகச் சட்ட மன்றத்திற்குள் ஆட்சி அதிகாரம் செலுத்த அனுமதி தந்தது.
இதற்குப் பின்னால் தமிழகச் சட்டமன்றத்திற்குள் நிகழ்ந்து வரும் காட்சிகள் வேதனையும் வெதும்பல்களும் குவிந்துக் கிடக்கும் கோரமாக இருக்கிறது.
சுயமரியாதைத் தலைவர்களுக்கு நாற்சந்திகளில் சிலை அமைத்தார்கள். மாலை அணிவித்தார்கள். வணங்கினார்கள். வழிபட்டார்கள். அந்தச் சிலைகளுக்குமுன் நின்று உறுதிமொழி சபதம் எடுத்துக் கொண்டார்கள். இந்த நடைமுறைகளையெல்லாம் பழைய பக்தி மதத்தவர்கள் தூக்கிப் பிடித்த கேடுபாடுகள் என விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த சுயமரியாதைக்காரர்கள் அதனையே இன்னொரு வடிவத்தில் தழுவிக் கொண்டார்கள்.
சட்டமன்றத்திற்குள் பதவி ஏற்கும்பொழுது முதல்வரின், தலைவரின் பாதம் தொட்டு வணங்கி வழிபட்டு பதவி ஏற்கத் தலைப்பட்டார்கள்.
முந்தைய காங்கிரஸ்காரர்கள் பக்தி மார்க்கத்தில் பிடிப்புள்ளவர்கள். பதவி ஏற்கும் பொழுது பாதம் தொட்டு பணிகின்ற பாரம்பரியத்தை அவர்கள் தொடங்கி வைக்கவில்லை.
“இந்தப் பெருமை” திராவிட இயக்கத் தன்மானச் சிங்கங்களுக்குத்தான் சொந்தமானது.
இந்த அடிப்பொடி தொழுது வழிபடும் வழக்கம் கருணாநிதியிடம் தொடங்கி , நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். இவரும் இந்தத் தன்மானத் திராவிட இயக்கத் தொண்டர்களால் தலைவரானவர்தானே. சட்டமன்றத்திற்குள் வணக்க வழிபாடு திவ்ய தரிசனமானது.
கருணாநிதி தலைமையில் இருந்த மிச்சமிருந்த தன்மான திராவிடத் தொண்டர்கள் எதிர்க் கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தாலும் கூட அவர் அடி பணிந்து பதவியேற்ற அரிய காட்சியும் அரங்கேறியது.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் , கடையநல்லூர் தொகுதியில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற வேட்பாளராக தமிழ் மாநில முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளரும் கவிஞருமான பொதிகைக் கவிஞர், அ. ஷாஹுல் ஹமீது சாஹிப் (என் சிறிய தந்தையார்) தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அப்பொழுது இவர் ஒருவர் மட்டுமே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க – முஸ்லிம் லீக் கூட்டணி.
புதிய சட்டமன்றம் தொடங்கப் போகிறது. ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கும் சட்டமன்ற பதவி இப்பொழுதுதான் முதன்முறையாக வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில், மரபுப்படி ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தொடங்கி வைக்கும் துவக்க உரை நிகழ வேண்டும். அப்படி துவக்க உரை நிகழ்த்த ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கும் சந்தர்ப்பம் தரப் பட்டது.
ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு சட்டமன்றத்தில் இதுதான் கன்னிப் பேச்சு. இந்தப் பேச்சு நிகழ்த்துவதற்கு முன்னால் அவர் தங்கி இருந்த சட்டமன்ற விடுதிக்கு என்னை அழைத்தார். நான் சென்று இருந்தேன்.
தன்னுடைய சட்டமன்ற கன்னிப் பேச்சை எப்படி அமைக்கலாம் என்று என்னிடமும் கருத்துக் கேட்டார். என்னுடன் நாகூர் கவிஞர் இஜட். ஜபருல்லா, கவிஞர் தா.காசிம் , எம்.ஏ. அக்பர் அண்ணன் இருந்தார்கள்.
நான் என் கருத்தைச் சொன்னேன்.
“வாப்பா, உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாகவும் அரசியல் பூர்வமாகவும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். சட்டமன்றத்தில் பதவி ஏற்கும் பொழுது அ.இ.அ.தி.மு.க காரர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரை வணங்கிப் பதிவு ஏற்பார்கள்.
அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல், தி.மு.க காரர்களில் பெரும்பாலரும் கருணாநிதி காலை வணங்கிப் பதவி ஏற்பார்கள். இதுதான் சமீப கால சட்டமன்ற திருக்காட்சிகளாக இருக்கின்றன.
இதை உங்கள் கன்னிப் பேச்சு கண்ணியமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
சட்டமன்றம் என்பது , கட்சிகளின் பொதுக் குழுவோ செயற்குழுவோ அல்ல. அங்கே அந்தந்த கட்சிக்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம், வழிபட்டுக் கொள்ளலாம். அது அவர்கள் உரிமை.
ஆனால் சட்டமன்றம் என்பது, சட்டங்கள் இயற்றும் உரிமைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அரசமைப்பு. இங்கே ஒரு உறுப்பினர் வெளிப்படுத்தும் நடவடிக்கை அவரைத் தேர்ந்தெடுத்த மக்களின் நடவடிக்கையாகக் கருதப் படும்.
சட்டமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் யார் காலைத் தொட்டு வணங்கினாலும், அந்தத் தொகுதி மக்களே அவரின் காலைத் தொட்டு வணங்கியதற்குச் சமம்.
அந்தத் தொகுதி மக்கள் பலதரப்பட்ட கோட்பாட்டுகளுக்கு சொந்தமானவர்கள். மனிதர்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களும் அவர்களில் இருப்பார்கள். இறைவனைத் தவிர எவனையும் வணங்க மாட்டோம் என்ற கொள்கையுடைவர்களும் அங்கு இருப்பார்கள். இறைவனும் இல்லை. வணக்க வழிபாடும் இல்லை என்ற தத்துவம் கொண்டவர்களும் இருப்பார்கள்.
இவர்கள் அனைவரின் பிரதிநிதியாகவும் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய சுய லாபத்திற்காக சட்டமன்றத்திற்குள் பாதம் பணியும் வழக்கத்தை மேற்கொள்ளுவது மக்களுக்கு அவமானத்தை இழைப்பதாகத்தான் கருத முடியும்.
இதுவே என்னுடைய கன்னிப் பேச்சாக பதிவு செய்கிறேன்”
என்று பேசுங்கள் என்று ஷாஹுல் ஹமீது சாஹிபிடம் நான் கூறினேன்.
“இதற்கு இருபக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வரலாம். அதுபற்றி கவலைப் படாதீர்கள். அத்தனை மீடியாக்களும் இந்தப் பேச்சைத்தான் நாளை வெளியிடும். மக்கள் மன்றத்திலும் இந்தக் கருத்துக்கு மரியாதை இருக்கும்” என மேலும் சொன்னேன்.
ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்கள் அதை ஆமோதித்தார்கள். ஆனால் அவர் கன்னிப் பேச்சு அப்படி அமையவில்லை. வழக்கமான பேச்சாக வழவழத்து விட்டது.
எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அரசு அரியணை ஜெயலலிதாவிற்குக் கிடைத்தது. முதலில் அல்லிராணியாக ஆட்டம் போட்டார். கொஞ்சம் பரிணாம வளர்ச்சி பெற்றபின் தெய்வ வடிவமாகவே போற்றப்பட வேண்டும் என, தானே கருத்தைக் கட்சிக்காரர்கள் மத்தியில் பதிய வைத்தார்.
இன்றைய ஜெயலலிதா அமருமிடம் கிட்டத்தட்ட கோயில் கருவூலம் போல ஆகிவிட்டது. கட்சிக்காரர்கள் எல்லாம் தொண்டு செய்யும் ஆழ்வார்களாகவும், சைவக் குரவர்களாகவும் தங்களைத் தாங்களே கூனிக் குருகி ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.
எம்.ஜி.ஆர் மரணித்தவுடன், ஜெயலலிதா தன் ஆதரவாளர்களைத் திரட்டி கட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டினார்.
இன்றைய காங்கிரஸ்காரராக இருக்கும், பல கட்சிகளுக்குள்ளும் புகுந்து வெளிவந்த திருநாவுக்கரசு, இன்றைய தி.மு.க காரராக கம்பீரமான மீசை முறுக்கத்தில் தோற்றம் தரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இவ்விருவரும் ஜெயலலிதாவின் இரு கரங்களாக செயல் பட்டனர்.
கட்சி வலுப்பெற்ற பின்னர் அந்த இருவரும் ஜெயலலிதாவால் கழட்டி விடப்பட்டனர்.
திருநாவுக்கரசு அதன்பின் பலப்பல முகாம்களுக்குள் புகுந்து வந்துக் கொண்டிருக்கிறார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், அண்ணா புரட்சித் தலைவர் முன்னேற்ற கழகத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தார். மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தார்.
இது எப்படி நடந்தது தெரியுமா? கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், தன் மனைவியுடன் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் வந்தார். தவறு தவறு, ஜெயலலிதா திருக்கோயிலுக்கு வந்தார். தம்பதி சமயதராக எண் ஜான் உடம்பும் நிலத்தில் பதிய ஜெயலலிதா காலில் விழுந்து அ.தி.மு.க வில் சேர்ந்துக் கொண்டார்.
பின்னர் ஜெயலலிதா தோற்றார். அதன்பின் கருணாநிதிக்கு அரியணைக் கிடைத்தது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீண்டும் அங்கே சென்றார். கருணாநிதிக்கு நமஸ்காரம் செய்தார். தி.மு.க வில் அமைச்சர் ஆனார்.
இதுதான் தன்மானப் பாதநாமா வழிவரலாறு.
ஜெயலலிதா இந்தத் தோற்றத்தோடு டில்லியை நோக்கி இப்படிப் புறப்படுகிறார். அங்கும் இதே கலாச்சாரத்தை உருவாக்க முற்பட்டால் சரித்திரம் ஜெயலலிதா என்கின்ற பெண்மணியை காணாமல் ஆக்கிவிடும் என்றுதான் கருதத் தோன்றுகிறது.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இன்னொரு விளக்கமும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் தொடர்ந்து வந்திருந்த திரைத் துறை அவருக்கு பல அனுபவங்களைத் தந்திருந்தது.
சில அனுபவங்கள் அவர் ஆழ் மனதை கீறிச் சிதைத்து ரணப் படுத்தி இருந்தன. அந்த ரணம் அவரே அறிந்து கொள்ள முடியாத ஒரு மன நோயாகவும் அவரிடம் படிந்து இருக்கலாம்.
சினிமாவில் நடிகை என்ற முறையில் ரசிகர்களின் பாராட்டும், ரசனையும் மிகவும் உயரமாக அவருக்கு இருந்தது. ஆனாலும் அவர் சார்ந்திருந்த திரைத் துறையில் ஆணாதிக்கம் கொத்திக் கிழித்த ரணமும் அவரிடம் பதிந்து இருந்தது.
அந்தப் பதிவு வெளிவரும் விதம் இப்படித்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கணக்கிலும் ஜெயலலிதா நினைவுக் கூரப்பட வேண்டியவர்.
No comments:
Post a Comment