தாயில்லத்தில் கண்டெடுத்த அரிய தகவல்கள்!!!
சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெரு (அன்றைய எண் 35) இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகம் தமிழக முஸ்லிம் லீகினருக்கு எப்பொழுதுமே ஒரு தாய்வீடுதான்.
காயிதே மில்லத் காலத்தில் இந்தத் தாய்வீடு காயிதே மில்லத்தின் தம்பியும், தமிழ் ராஜ்ய முஸ்லிம் லீகின் மாநில செயலாளருமான மர்ஹூம் கே.டி.எம் அஹமது இப்ராஹிம் சாஹிப் அவர்களின் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.
இந்தத் தாய்வீட்டில் எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களும், ருசிக்கத் தக்க ரசனையான நிகழ்வுகளும் நிகழ்ந்தேறி இருக்கின்றன.
இந்தத் தாய்வீட்டில் தமிழகத்தின், இந்தியத்தின் மரியாதை மிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களில் பலரும் வந்து சென்ற வரலாறு இருக்கிறது.
சகோதர நண்பர் ஐயா ஆதி பிரம்ம பிரபுராம் அவர்கள் முகநூலில் உள்ள, அண்ணா காயிதே மில்லத்திற்கு பொன்னாடை போர்த்துகிற படம் இந்த தாய் இல்லத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட நிழற்படம்தான்.
சென்னையில் காயிதே மில்லத் தங்கியிருக்கும் காலமெல்லாம் ஒவ்வொரு நாளும் மாலையில் இந்தத் தாய்வீட்டிற்கு வந்து விடுவார்கள். சென்னை கடற்கரை மின்சார ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் கடைசி வண்டி இரவு பதினொன்று ஐம்பதுக்குப் புறப்பட்டுச் செல்லும். அந்த வண்டியில்தான் காயிதே மில்லத் ஏறி குரோம்பேட்டையில் இருக்கும் அவர் வீட்டிற்குத் தனியாகச் செல்லுவது வழக்கம்.
இந்தத் தாய் இல்லத்தில் நடந்த ஒன்றிரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகள் என் நினைவுக்கு இப்போது வருகிறது. அதை உங்களொடு பகிர்ந்துக் கொள்கிறேன்.
நெல்லிக்குப்பம் தலைவர் செய்யது சாஹிப்!!!!
தென் ஆற்காடு மாவட்ட( தற்போது கடலூர்) நெல்லிக்குப்பத்தில் வாழ்ந்து வந்தவர் செய்யது சாஹிப். இவர் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
சென்னைக்கு பல பணிகளின் பொருட்டு வருகிற பழக்கம் உள்ளவர். தாய் இல்லத்தில்தான் வந்து தங்குவார். முதல் மாடியில் ஒரு நீண்ட ஹால் இருக்கும்.
அந்த ஹாலில் நுழைவு கதவிற்கு உள்ளே பின்பக்கம் சுவரை ஒட்டி இருக்கும் அந்த மூலைக்கு செய்யது சாஹிப் மூலை என்றே பெயர். செய்யது சாஹிப் கொண்டுவரும் பெட்டி, படுக்கை எல்லாம் அந்த மூலையில்தான் இருக்கும்.
மெலிந்த உருவம். முகத்தில் எப்பொழுதுமே ஒரு வேதனை ரேகை ஓடிக் கொண்டிருக்கும்.
பகலெல்லாம் பணியின் நிமித்தம் வெளியே சென்றுவிடுவார். இரவில் செய்யது சாஹிப் மூலையில் அவர் படுக்கையை விரிப்பார்.
வெளிறிய பச்சை நிற கொசுவலையை அங்கே கட்டிக் கொள்வார். அதற்குள் புகுந்து தஞ்சம் அடைந்து விடுவார்.
அவரைச் சுற்றி அந்தத் தாயில்லத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். அவற்றில் எதிலும் அவர் ஈடுபட மாட்டார். ஒரு தவசி போல கொசுவலைக்குள் அடைக்கலமாகி இருப்பார்.
ஆனால் இந்த மனிதர் , அவரின் இளமையிலும் , மத்திய தர வயதிலும் தென் ஆற்காடு மாவட்டம் முழுதும் தாய்ச் சபைப் பணிக்காக சதா காலமும் உழைத்துத் தேயும் ஒரு தேனீயாக இருந்தார்.
முதுமையில் உழைப்பில் தேக வேகம் குறைந்திருந்தாலும் முஸ்லிம் லீகின் வீரியத்தை நெஞ்சில் நிலைத்திருந்தவர்.
தாய்ச்சபையில் பணியாற்றி இருந்த பலர், அந்தக் காலத்தில் வறுமையைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
செய்யது சாஹிபின் மகள்களுக்கு வயது ஏறி இருந்தது. ஆனால் திருமணம் வாய்க்கவில்லை. இந்தக் கவலை செய்யது சாஹிபை அதிகம் வருத்தியது. அந்த வேதனையை அவர் மனதுக்குள் எவ்வளவு அடக்கி இருந்தாலும் முகம் வெளிப்படுத்தத்தான் செய்தது.
அவரின் சமூகப் பணியையும் இறைவன் ஏற்றுக் கொண்டான் போலும். அவரின் மூத்த மகளாரை திருமணம் செய்ய்ய ஒருவர் முன்வந்தார்.
சென்னையில் அவரைச் சுற்றி இருந்த எங்களுக்குக்கூட இவைகள் தெரியாது. திடீரென்று ஒரு நாள் நெல்லிக்குப்பம் சென்று செய்யது சாஹிபை சந்தித்து திருமணம் பேசி, அவர் மகளாரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
அவர் தான் அப்துல் சமது சாஹிபின் மணிவிளக்கு மாத இதழில் ஆன்மீகக் கட்டுரை எழுதி வந்த, குறிப்பாகக் “கௌதுகள் நாயகம்” வாழ்க்கைத் தொடர் எழுதிய ஹைதரலி அவர்கள்.
உயர்ந்த கவி உள்ளம் கொண்டவர். இன்று மதிப்புமிக்க ஒரு தரிக்காவின் செய்யதாகத் திகழ்ந்து கொண்டு இருக்கும் மேன்மைக்கு உரியவர். ஆன்மீகப் பாதையில் மேலான அன்பர்களை தயார் செய்து கொண்டு இருக்கும் தகைசால் பெருந்தகையார்.
அடியக்க மங்களம் நாலடியார்.!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அடியக்க மங்களத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர்களில் ஒருவர் ரசாக் ஷா காதிரி சாஹிப் அவர்கள்.
அனேகமாக சரியாக நாலடி உயரத்தில் இருப்பார் என்று தான் தோன்றும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும் பகுதிக்கும் நடந்தே சென்று தாய்ச் சபை தொன்றாட்டிய பெருமைக்கு உரியவர்.
நடந்தே சென்று தாய்ச் சபை பணியாற்றியதால் அப்பகுதி மக்கள் நாலடி கால் நடை ரசாக் ஷா காதிரி என நகைச்சுவை செல்லப் பெயர் சூட்டி இருந்தார்கள்.
மாதத்தில் சுமார் ஏழு நாட்கள் சென்னையில் இருப்பார். இவருக்கும் சென்னையில் உள்ள தாய்ச் சபையான தாய் இல்லம் ஏகபோக உரிமை கொண்டது.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் அன்பை வாரிச் சுமந்தவர்களில் இவரும் ஒருவர். சென்னை தாய்ச்சபை தாய் இல்லத்தில் இவர் தங்கி இருக்கும் பொழுதெல்லாம் நெல்லிக் குப்பத்தைச் சார்ந்த தாய்ச் சபையின் தீவிரத் தொண்டர் நெல்லிக் குப்பம் அப்துல்லாவும் அனேகமாகத் தங்கி இருப்பார்.
நெல்லிக்குப்பம் அப்துல்லா ஒரு தினுசான மனிதர். அவர் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்களும் ஏற்கனவே காலமாகிவிட்டிருந்தனர். இவர் தனிக்கட்டை கொஞ்சம் நல்லாவே சொத்தும் இருந்தது.
இவரும் மாதத்தில் பாதி நாட்கள் தாய்ச் சபை இல்லவாசிதான். நெல்லிக் குப்பத்தில் ஒரு சின்ன தொழிற்பட்டரைத் தொடங்கும் பணிக்காக சென்னைக்கு அடிக்கடி வரும் வழக்கம் உடையவர். வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. திருமணம் நடக்கவில்லை.
காயிதே மில்லத் இதற்காக கொஞ்சம் வருத்தப்பட்டார்கள். நெல்லிக் குப்பம் அப்துல்லாவை அழைத்து திருமணம் செய்ய வற்புறுத்தினார்கள். தலைவர் சொல்லை ஏற்று சம்மதித்துக் கொண்டார். பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
நெல்லிக்குப்பம் அப்துல்லாவிற்கு பெண் பார்க்க வேண்டிய பொறுப்பை ரசாக் ஷா காதிரியிடம் காயிதே மில்லத்தே ஒப்படைத்தார்கள். ரசாக் ஷா காதிரிக்கு அப்போது 55 அல்லது 60 வயது இருக்கலாம். தலைவர் கட்டளையை ஏற்று ரசாக் ஷா காதிரி, நெல்லிக்குப்பம் அப்துல்லாவிற்கு பெண் பார்கத் தொடங்கினார்.
நான்கு, ஐந்து மாதங்கள் கடந்து விட்டன சென்னை பக்கம் ரசாக் ஷா காதிரி வரவே இல்லை. நெல்லிக்குப்பம் அப்துல்லா அடிக்கடி சென்னைக்கு வந்து அவருக்காகக் காத்துக் கிடந்தார்.
ஒருநாள் ரசாக் ஷா காதிரி சென்னை வந்து காயிதே மில்லத்தைச் சந்தித்தார். “தலைவர் அவர்களே, நெல்லிக் குப்பம் அப்துல்லாவிற்குப் பெண் பார்க்கப் போயிருந்தேன். பெண் வீட்டார் அவருக்குத் தர சம்மதிக்கவில்லை. எனக்கு வேண்டுமானால் தருவதாகச் சொன்னார்கள். நானும் ஏற்றுக் கொண்டு என் இரண்டாவது மனைவியாக அந்தப் பெண்னை திருமணம் செய்து கொண்டேன்” என அமைதியான நிதானத்தில் ரசாக் ஷா காதிரி கூறினார்.
அதன் பின் நெல்லிக்குப்பம் அப்துல்லா கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
1972க்குப் பின்னால் சென்னையில் நடந்த முஸ்லிம் லீக் மாநில மாநாட்டின் மேடையில் தலைவர் சுலைமான் சேட், பொதுச் செயலாளர் பனாத் வாலா, தமிழ் மாநிலத் தலைவர் ஜானி பாய், பொதுச் செயலாளர் அ.க.ரிபாயி போன்றோர் அமர்ந்து இருந்தனர்.
மாநாட்டு மேடையின் முன் வரிசை ஓரத்தில் கேரளத்துச் சிங்கம் கோயா சாப் அமர்ந்து இருந்தார். அவருக்கும் பக்கத்தில் சேர்வானி அணிந்து ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்.
மாநாட்டு மேடைக்கு தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவருடன் எம்.ஏ. அக்பர் அண்ணன் வந்து கொண்டு இருந்தார்கள். ஸமது சாஹிப் அக்பரண்ணனிடம் கேட்டார். மேடையில் கோயாசாப் பக்கத்தில் இருக்கும் சேர்வானிக்காரர் யார்?
அக்பரண்ணன் சற்றும் தயங்காமல் “அவர் தான் டெல்லிக் குப்பம் அப்துல்லா என்றார்”.
நெல்லிக்குப்பம் அப்துல்லா மணமகன் அப்துல்லாவாக மாறவில்லை. அதனால் என்ன? அந்தஸ்து உயர்ந்து டெல்லிக் குப்பம் அப்துல்லாவாக மாறி இருந்தார்.
No comments:
Post a Comment