Thursday, January 16, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது - 33

பாரதி பாய்..!!!


எம்.ஜி.ஆர். தமிழகத்தின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து தமிழகத்தை அரசாண்ட 1986-87 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் கீழே பதிவு செய்கிறேன்.

தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபிடம் , திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நடைபெற இருக்கக் கூடிய திருப்பத்தூர் தி.க மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புத் தந்தார். இந்தச் சம்பவம் நடந்தது தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைமையகமான மரைக்காயர் லெப்பைத் தெரு அலுவலகத்தில்தான்.

கீ.வீரமணி நட்புடன் அழைத்த அழைப்பை ஸமது சாஹிப் மனமகிழ ஏற்றுக் கொண்டார்.

பெரியார் இயக்கத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் மானசீகமான அன்புறவு ஊடாடிக் கிடப்பதாக முழுவதுமாக நம்பப்பட்ட காலமது.

வட ஆற்காட்டு திருப்பத்தூரில் தி.க மாநாடு இரண்டு தினங்கள் நடக்கவிருந்தது. முதல் நாள் காலைப் பத்து மணிக்கு மேல் நிகழ்வில் அப்துஸ் ஸமது சாஹிப் பேச அழைக்கப் பட்டிருந்தார்.



கீ.வீரமணி, ஸமது சாஹிபிற்கு தொலைபேசியில் அழைப்புத் தந்த நேரத்தில் தலைவர் ஸமது சாஹிபுடன் தலைமை நிலையச் செயலாளர் காஜா முஹைதீன் எம்.பி, அமைப்புச் செயலாளர் வந்தவாசி வஹாப், வலங்கைமான் அப்துல்லா, நாகூர் கவிஞர் ஜபருல்லா மற்றும் நான் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் உடனிருந்தோம்.

தலைவர் ஸமது சாஹிப் தன்னுடன் இந்த ஐவரும் மாநாட்டிற்கு வர பணித்தார். அப்படியே முடிவானது.

இந்த அழைப்பு வந்த இரு தினங்களுக்கு பின்னர், பாண்டிச்சேரியில் இருந்து முதல்வர் பாரூக் மரைக்காயரின் அழைப்பு ,தலைவர் ஸமது சாஹிப் இல்லத்திற்கு வந்தது.

பாண்டிச்சேரியில் ஆண்டுதோறும், பாண்டிச்சேரி அரசு நடத்தும் பாரதி விழாவில் தலைவர் ஸமது சாஹிப் கலந்து கொள்ள, ஃபாரூக் மரைக்காயர் கேட்டு இருந்திருக்கிறார்.

கி.வீரமணி திருப்பத்தூர் மாநாட்டிற்கு தலைவர் ஸமது சாஹிபை அழைத்த அதே தேதியில் ஃபாரூக் மரைக்காயர் பாரதி விழாவிற்கு அழைப்புத் தந்திருந்தார்.

திருப்பத்தூரின் தி.க மாநாடு நிகழ்ச்சி காலையில்.பாண்டிச்சேரி பாரதிவிழா நிகழ்ச்சி மாலையில். அதனால் தலைவர் ஸமது சாஹிப் இரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள ஒப்புதல் தந்தார்.

திருப்பத்தூர் செல்வதற்கு இருதினங்களுக்கு முன்னால் மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள அவருடைய சொந்த அலுவலகத்தில் (லீக் அலுவலகம் அல்ல) அமர்ந்திருந்தார். அப்போதும் ஸமது சாஹிப் , காஜா மொஹைதீன் எம்.பி., வந்தவாசி வஹாப் , வலங்கைமான் அப்துல்லா, ஜஃபருல்லா, எம்.ஏ.அக்பர் அண்ணன், கவிஞர் தா.காசிம், நான் ஆகியோர் அமர்ந்திருந்தோம்.

அந்த நேரத்தில், சென்னை காவல்துறை ஐ.ஜி அலுவலகத்திலிருந்து சி.ஐ.டி ஆபிசர் ஒருவர் அங்கே வந்தார்.

ஸமது சாஹிபிடம், “நீங்கள் நாளை மறுநாள் நடைபெறவுள்ள தி.க மாநாட்டில் தயவு செய்து கலந்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு திருப்பத்தூர் செல்கிற வழியில் சில சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது.

சில தீவிரவாத இந்து அமைப்பினர் வெறித்தனமான தாக்குலில் இறங்கக்கூடும் என்ற கவலை காவல்துறைக்கு இப்பொழுது இருக்கிறது. தயவு செய்து அந்த நிகழ்வுக்குப் போவதை ரத்து செய்துவிடுங்கள்.

காவல்துறை போதியப் பாதுகாப்பை ஏற்பாடு செய்திருக்கிறது என்றாலும், நிலைமை கவலை அளிப்பதாக இருப்பதால் காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

எங்கள் மேலதிகாரி அனுமதியோடு இந்தத் தகவலை உங்களுக்குச் சொல்லுகிறேன்என அந்த சி.ஐ.டி அதிகாரி கூறினார்.

தலைவர் ஸமது சாஹிப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ் நாடு காவல்துறையின் மீது எனக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. உங்கள் பணியை நீங்கள் நிச்சயம் சரியாகத்தான் செய்வீர்கள். எங்களைப் போன்றவர்கள் அரசியல் வாழ்வில் வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பணிந்து போய்விட முடியாது.

எல்லாவற்றையும் மீறி நானோ அல்லது நாங்களோ தாக்கப்பட்டாலோ உயிரிழக்க நேரிட்டாலோ அதை யாராலும் தடுக்க முடியாது.

எங்களுக்கு இறை நம்பிக்கை உண்டு. அவன் அப்படி நாடியிருந்தால் அது நடந்துதான் தீரும்.
என உறுதியுடன் தலைவர் ஸமது சாஹிப் பதில் சொல்லிவிட்டார்.

மறுநாள் ஏதோ ஃபுட் பாய்ஸன் காரணமாக காஜா மொஹைதீன் எம்.பி க்கு வயிற்றுப் போக்கு வந்தததாக ஸமது சாஹிபிடம் காஜா மொஹைதீன் தகவல் தெரிவித்து வருத்தம் தெரிவித்தார்.

வந்தவாசி வஹாப் சாஹிபிற்கு , வந்தவாசியிலிருந்து தீடீரென்று அவசர அழைப்பு வந்ததாகக் கூறி தவிர்க்க முடியாத காரணத்தால் வந்தவாசி சென்றுவிட்டார்.

வலங்கைமான் அப்துல்லாவிற்கு ஊரில் அவரின் மகளார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வந்து அவரும் வலங்கைமான் சென்றுவிட்டார்.

மதியம் பன்னிரெண்டு மணியளவில் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு அப்துஸ் ஸமது சாஹிப் வந்தார்கள். அங்கு நானும், ஜஃபருல்லாவும் , கவிஞர் தா. காசிமும், தலைமை நிலையத் தலைமை அலுவலர் மீரா சாஹிபும் இருந்தோம்.

தலைவர் வந்து அவர் ஆசனத்தில் அமர்ந்தார். என்னிடமும் ஜஃபருல்லாவிடமும்,

தம்பி உங்களுக்கு உடல்நிலை சரியாக இருக்கிறதா? உங்களில் யாருக்கும் வயிற்றுப் போக்கு இல்லையே, உங்கள் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசர வேலை ஏதும் இருக்கிறதா?” என்று தலைவர் ஸமது சாஹிப் எங்களிடம் கேட்டார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஏன் பாய் இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் குறித்த எதுவும் எங்களுக்கு நிகழவில்லைஎன்றேன்.

இல்லை. நாளை திருப்பத்தூருக்கு நீங்கள் என்னோடு வரலாம் அல்லவா? அவர்கள் மூவருக்கும் இந்த மாதிரி இடைஞ்சல்கள் வந்துவிட்டன. அதனால்தான் கேட்டேன். என்று சொன்னார்.

நாங்கள் சிரித்து விட்டோம். நாங்கள் நிச்சயம் வருகிறோம் என்றோம்.

மறுநாள் தலைவர் ஸமது சாஹிபின் அடையாறு இல்லத்திலிருந்து திருப்பத்தூருக்கு ஸமது சாஹிப், ஜஃபருல்லா, நான் மூவரும் புறப்பட்டோம்.

சொல்லவும் வேண்டும், மறைக்கவும் வேண்டும். ஆனாலும் உண்மைப் பதிவாக வேண்டுமென சொல்லி வைக்கிறேன். வழியில் எங்களின் தற்காப்புக்காக என் இடுப்பிலும், ஜஃபருல்லா இடுப்பிலும் ஒரு சைக்கிள் செயினை மறைத்து சுற்றிக் கட்டியிருந்தோம்.

சைக்கிள் செயின் சுற்றுவது ஒருவகையான யுத்தக் கலை. சுற்றத் தெரியாதவர்கள் சுற்றினால் சுற்றியவர்களின் சதையையே குதறிக் கிழித்து விடும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் சில தற்காப்புத் தேவைகளுக்காக இந்தக் கலையை நான் கற்று இருந்தேன்.

நாங்கள் அடையாறில் இருந்து அதிகாலையிலே புறப்பட்டோம். சூரியன் உதிக்குமுன் எங்கள் பயணம் தொடங்கி இருந்தது.

காலை பதினொன்று மணியளவில் திருப்பத்தூர் எல்லையைத் தொட்டுவிட்டோம். வழியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அப்துஸ் ஸமதே திரும்பப் போ , இந்து விரோதியே திரும்பப் போ, முஸ்லிம் வெறியனே திரும்பப் போஎன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. சுவரொட்டியின் கீழ் நகர இந்துக் கூட்டமைப்பு என்று போடப் பட்டிருந்தது.

திருப்பத்தூர் எல்லையில் சாலை ஓரங்களில் சில தோழர்கள் நின்றுக் கொண்டிருந்து நாங்கள் வந்த காருக்கு முன்னால் கருப்புக் கொடி காட்டினார்கள். இவ்வளவுதான் நடந்தது. அஞ்சியவை எவையும் நடக்கவில்லை.

மாநாட்டு மேடைக்கு சென்றுவிட்டோம். வீரமணி தலைமைத் தாங்கி அமர்ந்திருந்தார். மாநாட்டு மேடை பெரிய அளவில் இருந்தது. கூட்டமும் நல்ல கூட்டம். மாநாடு மேடையில் நாங்கள் சென்று அமர்ந்தோம்.

யாரோ ஒரு தோழர் பேசிக் கொண்டிருந்தார். பதினைந்து நிமிடங்களில் மாநாட்டு மேடையில் ஒரு பரபரப்பு. சரியாக இருபத்தியொரு தம்பதியினர் மேடையில் வந்து நின்றார்கள். ஆண்கள் கையில் கத்திரிக்கோல் இருந்தது.

ஒவ்வொரு ஜோடியும் மேடைக்கு முன்வந்து கி.வீரமணிக்கு முன்னால் தன் துணைவியர் கழுத்தில் மஞ்சளோடு கட்டியிருந்த மஞ்சள் கயிற்றுத் தாலியை வெட்டினார்கள்.

இதற்கு வீரமணி தாலியறுப்பு நிகழ்ச்சி என்று மேடையில் அறிவித்தார்.

இப்படி ஒரு நிகழ்வு, தலைவர் ஸமது சாஹிப் இருக்கும் பொழுது நடைபெற இருப்பதாக , இது நடக்கும்வரை ஸமது சாஹிபிடம் தெரிவிக்கவில்லை.

எங்களைப் பொறுத்தவரை இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒருமாதிரியான கொடூரமானக் காட்சியாகத்தான் எங்களுக்குப் பட்டது.

தாலி செண்டிமண்ட் முஸ்லிம்களுக்குக் கிடையாது. ஆனால் அதை ஒப்புக் கொண்டு ஏற்று இருக்கக்கூடிய சகோதர இந்து சமுதாயத்தவர்களின் மனங்களை குத்திக் கிளரக் கூடிய இந்தக் கொடூரச் சம்பவத்தை எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனொ தெரியவில்லை? இந்த நிகழ்வை கி.வீரமணி, தலைவர் ஸமது சாஹிப் மேடையில் இருக்கும் பொழுது நிகழ்த்தி விட்டார்.

தலைவர் ஸமது சாஹிப் பேசும் பொழுது இதைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

பெரியாரோடும் , அவரால் வளர்க்கப்பட்ட அண்ணா, கி.வீரமணி இவர்களோடும் மிகுந்த நட்புறவும் மரியாதையும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் பெரியாருடைய எல்லாக் கோட்பாடுகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று பொருளல்ல.

பெரியாரோடு சரியாகக் கருத்துமுரணும் எங்களுக்கு உண்டு. அந்த கருத்து முரண்களில் ஒன்றுதான் இப்பொழுது இந்த மேடையில் நிகழ்ந்து இருக்கிறது.

இப்படி ஒன்று நடப்பதை நண்பர் வீரமணி முதலிலேயே தெரிவித்து இருந்தால், நான் இந்த மேடைக்கு வந்திருக்க மாட்டேன்.

நான் புறப்படுவதற்கு முன்னால் சென்னைக் காவல்துறையினர் என்னை செல்ல வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர்கள் அச்சமான சூழ்நிலை இருப்பதகாச் சொல்லித் தடுத்தார்கள். அதை ஏற்றுக் கொள்ளாமல் நான் இங்கு அவர்கள் வேண்டுகோளை மீறி இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். உள்ளபடியே வேதனைப் படுகிறேன்என்று தலைவர் ஸமது சாஹிப் தெளிவாகப் பேசினார்.

மேலும், “வருகிற வழியில் எனக்கு சில சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க கருப்புக் கொடிக் காட்டினார்கள். அதே நேரத்தில் தி.க இயக்கத்தினர் என்னை வரவேற்று கருப்புக் கொடி கட்டி இருக்கிறார்கள். இந்த மாநாட்டைப் பொறுத்தவரை கருப்புக் கொடி வரவேற்பதாகவும் , மங்களகரமானதாகவும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

எதிர்ப்பைக் காட்டியத் தோழர்கள் வெள்ளைக் கொடியையோ பச்சைக் கொடியையோ காட்டி இருந்தால் எதிர்ப்பாகத் தெரிந்திருக்கும்என நகைச்சுவையோடு தன் பேச்சை முடித்தார்.

மேடைக்குப் பின்னால் ஒரு வேடிக்கை நிகழ்ந்துக் கொண்டிருந்தது. மேடையின் மேலே மஞ்சள் தாலியை அறுத்துக் கொண்டவர்கள் அனைவரும் மேடையின் மறைவிடத்தில் தங்கத்தாலியை தன் கணவர்கள் கைகளால் கட்டிக் கொண்டார்கள்.

திருப்பத்தூரை விட்டு பாண்டிச்சேரி பாரதி விழாவிற்குப் புறப்பட்டோம். இரவு ஏழு மணியளவில் பாரதி விழா மேடைக்கு வந்து சேர்ந்தோம்.

காரை விட்டு இறங்கும் பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி. தலைவர் ஸமது சாஹிப் எப்பொழுதும் அணிந்திருக்கும் தொப்பியைக் காரின் பின்புறத்தில் வைத்திருந்தார். வருகிற வழியில் காருக்குள் வீசியக் காற்று தொப்பியை எங்கோ கடத்தி சென்று இருக்கிறது. எங்களுக்கு அது தெரியாது.

காரை விட்டு இறங்கிய தலைவர் ஸமது சாஹிப், பாரதி விழா மேடைக்கு ஏற வேண்டும். தொப்பியில்லாமல் அவர் எந்த மேடையிலும் தோன்றுவதே இல்லை. இப்பொழுது தொப்பி இல்லை. மேடை அழைக்கிறது.

மாற்றுத் தொப்பிக்கு மார்க்கம் இல்லை.

உடனே காரில் அவரின் மேற்துண்டை கையிலெடுத்தார் ஒரு பாரதி தலைப்பாகைக் கட்டினார். மேடைக்கு ஏறிவிட்டார். இந்தக் கோலத்தில் ஒரு ஸமது சாஹிபை மேடையில் அதுவரை யாருமே பார்த்திருக்க முடியாது. அதன் பின்னாலும் அவர் வாழ்நாள் முழுவதும் இதைப் பார்த்து இருக்க முடியாது.

மேடையில் ஏறிக் கொண்டிருந்த ஸமது சாஹிபை விழாவிற்குத் தலைமைத் தாங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஃபாரூக் மரைக்காயர் ஆச்சர்யத்தோடு பார்த்து ஓடி வந்து அணைத்து முன்வரிசையில் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

ஸமது சாஹிபிற்கு அருகாமையில், பேராசிரியர் க. அன்பழகன் ஏற்கனவே அமர்ந்து இருந்தார். அவர் ஸமது சாஹிபைப் பார்த்து,
பாரதி பாய் வாருங்கள்!என்று அழைத்து கைக் கொடுத்து மகிழ்ந்தார்.

அந்த பாரதி விழாவில் தலைவர் ஸமது சாஹிப் பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று. காலையில் திருப்பத்தூரில் நடந்த சம்பவத்திற்குரிய காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு பாரதியின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் தோரணையில் அந்த பேச்சு முழுவதும் அமைந்திருந்தது.

அந்தப் பேச்சின் விபரத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு நிகழ்வோடு இணைத்து பின்னர் பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment