14.1.2014 அன்று நான் பதிவு செய்து இருந்த “பாரதி பாய்” என்றப் பதிவை “அப்துல் ஜப்பார் ஐயூஎம்எல்” என்னும் நண்பர் மறு பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில் “ரைட் நம்பர்” என்கிற பதிவு ஒரு வினா எழுப்பி இருந்தது.
அந்தப் பதிவின் வினா இது தான். “எனக்கு ஒரு சந்தேகம்.... ஏன் எப்போதும் ஐயூஎம்எல் தலைவர்களாக சாஹிப்கள் மட்டுமே வருகின்றனர்.... ஐயூஎம்எல் கூட ஒரு பிரிவின் கையில் இருப்பதாகத் தோன்றுகிறது....”
இந்த வினாவை எப்படிப் புரிந்து கொள்வது என்ற சந்தேகம் எல்லோரைப் போலவும் எனக்குள்ளும் எழுந்தது.
நான் அதைப் புரிந்து கொண்ட விதத்தில் அதற்குரிய பதிலைத் தேடிக் கண்டறிந்தேன்.
ஐயூஎம்எல் – இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். இந்தியன் யூனியனில் உள்ள முஸ்லிம்களின் அமைப்பு. இது அரசியல் கட்சி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அரசியல் அமைப்பு விதிகளுக்கு முழுவதும் உட்பட்டு நடத்தப் படும் ஓர் அரசியல் இயக்கம்.
இந்தியாவில் உள்ள சிறுபான்மைப் பிரிவினரான முஸ்லிம்களின் நலங்களையும் உரிமைகளையும் அவர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் இந்திய அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பெற்றுக் கொள்வதற்காக நடத்தப் படும் பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கம் இது.
இந்தியாவில் எந்த ஒரு இனமும், மதமும், வர்க்கமும், அமைப்பும் தங்களின் உரிமைகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முன்னெடுத்துச் சென்று கோரிக்கைகளாக வைத்தும் பெறலாம், போராடியும் பெறலாம்.
ஆனால் வேறு ஒரு அமைப்பின் உரிமையை பறித்துக் கொள்வதற்காக யாரும் போராடுவது குற்றத்துக்கு உரிய தண்டனையாகும்.
இந்த விதி முறைகளைப் புரிந்து கொண்டு மேலே நாம் இன்னும் விவாதிக்கலாம்.
முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு முஸ்லிம் அமைப்புக்கு ஒரு முஸ்லிம்தான் தலைவராக வருவது ஒரு வகையான இயற்கை நியதி. வேறு ஒருவர் வரக் கூடாது என்று தடுக்க அனுமதி கிடையாது. ஆனால் அமைப்பின் வாக்கெடுப்பு அடிப்படையில் மற்றொருவர் தலைவராக வரமுடியாது.
இந்திய விடுதலைக்கு முன் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீகிற்கு விடுதலை காலகட்டம் வரை முஹம்மது அலி ஜின்னா சாஹிப் தலைவராக இருந்தார். அவர் குஜராதி. அதாவது ஒரு இந்திய முஸ்லிம் தலைவராக இருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. முஹம்மது அலி ஜின்னா சாஹிப் பாகிஸ்தானிய முஸ்லிம் லீகிற்குத் தலைமை தாங்கினார். அதுவரை அவர் வாழ்ந்து வந்த மும்பையை விட்டு வெளியேறினார். அன்றிலிருந்து அவரை இந்தியராக ஒப்புக் கொள்ள முடியாது. இந்திய முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அருகதையை ஜின்னா சாஹிப் இழந்தார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உதயமானது. இது இந்திய முஸ்லிம்களின் உரிமை கோரும் அரசியல் இயக்கமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இந்தியன் யூனியம் முஸ்லிம் லீகிற்கு (ஐயூஎம்எல்) தலைவராக தமிழகத்தைச் சார்ந்த நெல்லை மாவட்டத்து பேட்டை நகரத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான எம்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தலைவரானார்.
இவருக்குப் பின்னால் ஒரு சில தினங்கள் நெல்லை மாவட்டம் தென்காசியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப் தலைவரானார். இவரைத் தொடர்ந்து கேரளத்தைச் சார்ந்த மலையாளியான அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள் சாஹிப் சில வாரங்கள் இந்தியன் யூனியன் தலைவராக இருந்தார். அவரை அடுத்து கர்னாடகத்தைச் சார்ந்த இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப் பல ஆண்டுகள் இந்தியன் யூனியன் தலைவரானார். அவருக்குப் பின்னால் மராட்டிய மாநிலம் பம்பாயைக் சார்ந்த குலாம் முஹம்மது பனாத்வாலா சாஹிப் இந்தியன் யூனியன் தலைவரானார். இன்று கேரள மாநிலத்தைச் சார்ந்த மலையாளி இ.அகமது சாஹிப் இந்தியன் யூனியன் தலைமையேற்று நடத்திவருகிறார்.
எல்லா காலகட்டங்களிலும் இந்தியர்கள்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
கேள்வி கேட்ட நண்பர் இப்பொழுது ஓரளவிற்கு முஸ்லிம் லீகின் வரலாற்றுத் தலைவர்களைப் புரிந்திருப்பார் எனக் கருதுகிறேன்.
இப்போது “சாஹிப்” தான் தலைவராகிரார். இது ஒரு பிரிவிற்குள் அடங்குவதாகத் தெரிகிறதே எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
“சாஹிப்” என்பது ஜாதியோ, மதமோ, இனப்பிரிவோ, குழுப் பிரிவோ அல்ல.
“சாஹிப்” என்றால் “தோழர்” என்று பொருள்.
முஹம்மது நபிகளாருடன் வாழ்ந்தவர்களை சஹாபிகள் என்பார்கள். சஹாபிகள் என்றால் தோழர்கள் என்று பொருள்.
முஹம்மது நபிக்கு முன்னர் தோன்றிய தீர்க்கத்தரிசிகளை பின்பற்றியவர்களை சீடர்கள் என்றார்கள். ஆனால் முஹம்மது நபியோ தன்னைப் பின்பற்றியவர்களை தோழர்கள் என்றார்கள். தோழரைக் குறிக்கும் அரபுச் சொல் சஹாபின் மூலத்தில் இருந்து பிறந்ததுதான் சாஹிப் என்ற சொல்.
முஸ்லிகள் தங்களைத் தோழர்கள் (சாஹிப்) என்று குறித்துக் கொள்கிறார்கள். மார்க்ஸியவாதிகளும் தங்களைத் தோழர்கள் (காம்ரேட்) என்று குறித்துக் கொள்கிறார்கள்.
பாபா சாஹிப் அம்பேத்கர் என்கிறோம், தாதா சாஹிம் நவ்ரோஜி என்கிறோம். இந்த சாஹிப் என்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தப் பெரிய மனிதர்களை எல்லாம் முஸ்லிம்களாக மதம் மாற்றி விடாதீர்கள்.
பொதுவாகவே முஸ்லிம் பெயர்களைக் கேட்ட உடனேயே இன்று கூட பலரும் சில சொற்களைக் கூறி அவர்களை அழைக்கிறார்கள்.
என் பெயரைப் படித்துவிட்டு என்னை அநேகமாக “பாய்” என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். நான் குறிப்பிடுவது தமிழகத்தில் மட்டும் தான்.
“பாய்” என்ற சொல்லுக்கு முஸ்லிம் என்று யாரோ தப்பாக அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய பெயரே என்னை முஸ்லிமாக அடையாளம் காட்டுகிறது. அதை ஏற்றுக் கொள்ளாமல் “பாய்”தான் முஸ்லிம் அடையாளச் சொல் என்று எப்படி ஏற்பட்டதென்றே தெரியவில்லை.
என்னுடைய நண்பர்களில் விநாயக மூர்த்தியை செட்டியார் என்று நான் அழைத்ததில்லை. சண்முக சுந்தரத்தை பிள்ளைவாள் என்று கூப்பிட்டதில்லை. சுந்தரேசனை ஐயர் என்று அழைக்கவில்லை. ஏனென்றால் இந்த ஜாதிப் பெயர்கள் அவர்களின் அடையாளம் என்று நான் கருதவில்லை.
என்னைச் சார்ந்தவர்களுக்கு நான், நானாகத்தான் தெரிய வேண்டும். அதைத் தாண்டி எந்த ஜாதியாகவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல் ஃபாதிமா என்ற ஒரு பெண்ணை அழைக்கும் பொழுது பீவி என்றோ, பேகம் என்றோ, பாய் அம்மா என்றோ, பூவா என்றோ அழைக்கிறார்கள். இவைகள் எல்லாம் முஸ்லிமை அடையாளப்படுத்தும் பெயர் என்று கருதுகிறார்கள்.
உண்மை அப்படி அல்ல. உருது, ஹிந்தி மொழிகளில் இந்தச் சொற்கள் சகோதரன், சகோதரி என்ற பொருளைக் குறிக்கின்றன.
“ரைட் நம்பர்” என்றப் பதிவில் வினா எழுப்பிய சகோதரருக்கு அவர் வினாவைப் புரிந்து கொண்ட நான் தந்திருக்கும் விளக்கங்களே மேலே உள்ளவை.