Sunday, July 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்...! -2



1947-ஆண்டு ஆகஸ்ட் 1 4-ஆம் தேதி ஆங்கில ஏகாதிபத்தியம் தன் ஆட்சி அதிகாரத்துக்குக் கீழ் இருந்த இந்தியத்தை இரண்டு கூறு போட்டு பாக்கிஸ்தானைத் தனி நாடாகப் பிரகடனப் படுத்தியது.

அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15 - ல் மீத முள்ள பிரதேசத்தை இந்தியா எனத் தனி நாடாக அங்கீகரித்துக் கொண்டது.

பிரதேசங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும் அவசியத்தால், ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எல்லைகளை வகுக்க ஒப்பந்தம் செய்தது.
இந்திய சுதந்திரத்தைத் தலைமை யேற்று நடத்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் அன்றையத் தலைவர் மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் காங்கிரஸ் சார்பாக அதில் கையொப்பம் இட்டார்.

பாக்கிஸ்தான் சார்பாக முஸ்லிம் லீக் தலைவர் காயிதே ஆஸம் முஹமதலி ஜின்னா கையெழுத்திட்டார்.

மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணி சார்பாக மவுண்ட் பேட்டன் பிரபு
கையொப்பம் இட்டார்.

சட்ட ரீதியாக இரண்டு நாடுகள் உதயமாகி விட்டன.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு வரை, இந்திய முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாகத் தன்னைக் காட்டி வந்த காயிதே ஆஸம் முஹமதலி ஜின்னா 1947-ஆகஸ்ட் 1 4-ஆம் தேதிக்குப் பின் பாக்கிஸ்தான்
முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக மாறி இந்தியத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்தியத் தலைவர் புதிய அண்டை நாட்டுத் தலைவராக மாறிப் போனார்.
இந்தியாவின் அண்டைப் பிரதேசம் அன்றுமுதல் அந்நியப் பிரதேசமாகி விட்டது.

இது அரசியல் வரலாறு. ஆனால் மக்கள் வரலாறு வேறு விதமாகப் பதிவானது.

இந்து--முஸ்லிம் என மதப் போராட்டங்களாக உரு மாற்றப் பட்டன. மண், மற்றும் மனிதப் பிரிவினைகள் மதப் போராடங்களாக. விரோதக் களங்களாக மோசமாக வடிவமைக்கப் பட்டன.

இந்துக்கள்-முஸ்லிம்கள் எனும் சகோதரர்கள் மத்தியில் குரோதங்கள் விதைக்கப் பட்டன. அதன் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் இரு பிரிவினர்களிலும் கொல்லப் பட்டனர்.

5,00,000 பேர்களுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டனர்.

முதல் நாள் வரை இந்தியர்கள் என அரசியல் சட்டத்தால் குறிக்கப் பட்ட மக்கள், அடுத்த நாள் தொடங்கி மத மக்களாக மாறி மனிதத் தன்மையை
முழுவதுமாகக் குழி தோண்டிப் புதைக்கத் தலைப் பட்டனர்.

இந்தியத்திலிருந்து ஜின்னா சாஹிப் தூக்கிச் சென்ற முஸ்லிம் லீக் , பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டது.
காயிதே ஆஸத்திற்கு இந்திய மக்களைத் தெரிந்திருந்த அளவு, பாக்கிஸ்தான் மக்களை முழுமையாகத் தெரிந்திருக்குமா? என்ற கேள்விக்கு இன்று வரை பதில் என்பது தேடப்படக் கூடிய ஒன்றாகத் இருக்கிறது.

இந்தியத்துக்குள் இந்தியப் பூர்வீக மக்களாய் வாழ்ந்து கொண்டு , மார்க்கத்தால் இஸ்லாமியர்களாகத் திகழும் மக்கள் அனைவரையும்,
சில மத வன்முறையார்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். அப்படி அவர்களைச் சிலர் மாற்றி இருந்தனர்.

"இந்திய முஸ்லிம்களைப் பாக்கிஸ்தானுக்குத் துறத்தி விடுவோம். " எனக் கோஷங்கள் போட்டு, ஆயுதம் தாங்கி மிகச் சிலர் வெறியாட்டம் போட்டனர்.
பாக்கிஸ்தானில் மட்டும்தான் முஸ்லிம்கள் வாழ்வது போல ஒரு மட்டரகமான பிரேமை ஏற்படுத்தப் பட்டது.

வரலாற்றில் இதற்கும் முன்னமே சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னே இஸ்லாம் மக்கா நகரின் வாழ்வு முறையாக அறிமுகமாகி இருந்தது.
அந்த இஸ்லாம் பாரசீகத்தில் பரவியது. கிரேக்கத்துக்குச் சென்றது.
ஈரான்,ஈராக், எகிப்து,ஏமன் எத்திரோபியா (அபு ஷினியா) தாய்பு, பிரதேசங்களில் நடமாடியது. துருக்கி, ரஷ்யா பகுதிகளில் பவனி வந்தது.
ஆப்கான், இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,ஆப்ரிக்க நாடுகள்
இங்கேயும் எழுச்சி பெற்றிருந்தது.
 
லண்டன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஐரோப்பிய நாடுகள், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர். புருனே, இலங்கை இன்னும் இன்னும் அநேக நாடுகளைச் சென்றடைந்து இருந்தது.

இந்த அத்தனைத் தேசத்தின் மக்களில் பலரும் இஸ்லாமியக் கோட்பாட்டை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் இஸ்லாமியர்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் தம்தம் தேசத்துப் பூர்வீகக் குடிமக்கள்தாம்.

இந்த வரலாற்று உண்மை மறைக்கப் பட்டுப் பாக்கிஸ்தான் இஸ்லாத்தின்
பூர்வீகம் என்பது போல R.S.S. போன்ற அமைப்புகள் பகிரங்கப் பொய்ப் பிரச்சாரத்தைப் படுவேகமாகவும் மோசமாகவும் கிளப்பியது.

"இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடி விடுங்கள்"
என்று இன்று வரைத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது.

பாக்கிஸ்தானுக்கு இஸ்லாம் கடந்த சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான்
வந்து சேர்ந்தது. இந்த உண்மை கூட முழுமையாக மூடி மறைக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியர்களாகிய இஸ்லாமியர்களுக்கு அடிப்படை உரிமை, நியாயம் கோரி அரசியல் அமைப்பு இயக்கம் தேவைப்பட்டது.
 
அது ஒதுக்கப் பட்டோரின், புறக்கணிக்கப் பட்டோரின் பாதிப்பின் கால நிர்பந்தம்.

காயிதெ மில்லத் முஹமது இஸ்மாயில் சாஹிப் தலைமையில் இன்னும் பல இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி ஆலோசித்தனர்.
இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவ உரிமை கோரி வெளிப்படையான, பகிரங்கமான, ஒளிவு மறைவு அற்ற ஒரு அரசியல் இயக்கத்தை முன்னெடுத்தனர். அதுதான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.
இந்தியத்தின் வடக்கு-மேற்கு-கிழக்கு மாநிலங்கள் முழுமையாக இதற்கு உடன்படவில்லை. சிறிய அளவு ஆதரவே வழங்கின. தென்னிந்திய மாநிலங்களாக கர்நாடகம், ஆந்திரம் ஓரளவு சம்மதம் காட்டின.
 
தமிழகம், கேரளம் சற்றுக் கூடுதலாக முன்வந்தன. கேரளம் குறிப்பிடத்தக்க
அளவில் தீவிரம் காட்டியது.

சென்னை மவுண்ட் ரோட்டில்(அண்ணா சாலை) உள்ள அரசுக்கு உரிமையான அன்றைய ராஜாஜி ஹாலில் அரசு அனுமதி பெற்று ஒன்று கூடி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தை அறிவித்தார்கள்.

ராஜாஜி ஹாலில்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பிரசவமானது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இஸ்லாமிய மத, மார்க்க, ஆன்மீகப் பிரச்சார இயக்கமல்ல. இஸ்லாமியரின் அரசியல் உரிமை இயக்கம். இஸ்லாமியர்களின் உரிமைகளையும், பாது காப்புகளையும், இந்திய அரசியல் அடிப்படைச் சட்டம் வழங்கி யுள்ள விதிகளின் அடிப்படையில்
முன்னெடுத்துப் போராடும் முழுமையான அரசியல் இயக்கம்.

No comments:

Post a Comment