Sunday, May 8, 2016

பழம் நினைவு...! பலமான செய்தி...!

26/03/2016--அன்று மாலை சென்னை AVM கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்த " இசை முரசு நினைவலைகள்" நிகழ்ச்சியில் தமிழக அரசியல் இயக்கத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் K.M. காதர் முஹையதீன், .மு.மு. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தி.மு..வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஹ்மான் கான், முஸ்லிம் லீக் மூத்த தலைவர்களில் ஒருவரான S.M.கனி சிஷ்தி, முஸ்லிம் லீகின் சென்னை மாவட்டத் தலைவர் தம்பி ஜெய்னுலாபிதீன், .மு.மு..வின் தமிழகச் செயலாளர்களில் ஒருவரான பேராசிரியர் காஜா கனி, தளபதி திருப்பூர் மைதீன் மகனார்சகோதரர் அல்தாப், தமிழ்நாடு தொண்டு இயக்கத் தலைவர் பேராசிரியர் சேமுமு. முஹமதலி, இந்தியன் யூனியன் காயிதெ மில்லத் லீக் மாநிலத் தலைவர் காயிதெ மில்லத் பேரர் தம்பி தாவூத் மியான்கான் இத்தியாதி இத்தியாதிப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் தம்பி தாவூத் மியான்கான் மேடையில் நிகழ்வைப் பாராட்டிப் பேசினார்.

எனக்கு என்னமோ ஒரு குறுக்குத் தனமான சிந்தனை, ஒரு பழம் நினைவு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. நான் அதனைத் தவிர்த்துப் பார்த்தேன். முடியவில்லை. என் கட்டுப்பாட்டையும் மீறி வந்து கொண்டே இருந்தது.

அதை நான் இங்குப் பதிவு செய்து விடுகிறேன். இதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை. வாசகர்களும் கற்பித்துக் கொள்ள வேண்டாம். இதுதான் இந்த எழுத்தாளன் வேண்டுகோள். மீறி உள் நோக்கம் கற்பித்துக் கொண்டால் அது அவர்களின் உள் நோக்கமாகவே இருக்கக் கடவதாக.

சுமார் 35 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாலை வேளையில் நடந்த சம்பவம். என்னில் வந்து விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது.

சென்னை, மரைக்காயர் லெப்பைத் தெரு, முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதமான நிகழ்வு.

அந்த நிகழ்ச்சிக்குத் தமிழ் மாநிலத் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப்
தலைமை தாங்கினார். கவிஞர் தா.காசிம் வரவேற்புரை நிகழ்த்தினார். நான் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து கலந்து கொண்டேன். தென் சென்னை மாவட்டச் செயலாளர் தாஜ்.எம்.எம். ஷரீப், சென்னை மாவட்ட லீக் தலைவர் S.A.காஜா முஹைதீன் M.P.யும் S.M.கனி சிஷ்தியும் உரையாற்றினர்.

இந்த நிகழ்வு தமிழக முஸ்லிம் லீகின் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வுதான்.

தமிழகத்தின் முதுபெரும் கவிஞர் கவி.கா.மு. ஷரீப் அவர்கள் அன்றுதான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலச் சென்னைக் கிளையில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார்.

அதே நிகழ்ச்சியில், சென்னை அஞ்சல் துறையில் உயர் பதவி வகித்து வந்தவரும், பிறை மாதயிதழ் ஆசிரியரும், ஜான் டிரஸ்ட் வெளியிட்ட திருக் குர்ஆன் தர்ஜுமா உரையாசியருமான அப்துல் வஹாப்.M. A., P.th., அவர்களும் தாய்ச் சபை லீகில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள்தான் அப்துல் வஹாப் சாஹிப் அஞ்சல் துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த முதுபெரும் அறிஞர்களும் முஸ்லிம் லீகில் வந்திணைந்த நாள்தான் அந்த நாள்.

கவி. கா.மு.ஷரீப் தமிழகத்தின் மிகப் பெரும் கவிஞர்களில், தலைசிறந்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.

அடிப்படையில் காங்கிரஸ் பேரியத்திலும் இந்திய சுதந்திர வேள்வியிலும் திளைத்த தியாகி. பின்னர் தமிழக எல்லைப் போர்க் களத்தில் .பொ.சியுடன் இணைந்து செயலாற்றியவர். .பொ.சி. தமிழரசுக் கழகத் தலைவர். கவிஞர். கவி.கா. மு.ஷரீப் அதன் மாநிலச் செயலாளர்.
தி.மு.. தலைவர் கருணாநிதி திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திரையுலகக் கவிஞராக் கவி.கா.மு.ஷரீப் திகழ்ந்தவர். கருணாநிதி ஒருமுறை குறிப்பிட்டார், "கவி. கா.மு. ஷரீப் அண்ணனின் தீவிர ரசிகன் நான்" என்று.

கண்ணதாசன் ஒரு மேடையில் கூறினார், "அய்யா கவி கா . மு.ஷரீப் அவர்கள் முதல் கவிதைத் தொகுப்பு போடுகிற போது நான் தத்துப்பித்து எனக் கவிதை எழுதப் பழகிக் கொண்டிருந்தேன்."என்று. இந்த மேடையில் அப்போது கருணாநிதியும் இருந்தார்.

தயாரிப்பாளரும் திரைக் கதாசிரியரும் இயக்குநருமான A. P.நாகராஜனும் .பொ.சி.யின். தமிழரசுக் கழகத்தின் உறுப்பினர்தான். அவரும் கவி.கா.மு.ஷரீப் ரசிகர்தான்.

"ஏரிக்கரை மேலே போறவளே", பணம் பந்தியிலே குணம் குப்பையிலே", "பாட்டும் நானே பாவமும் நானே" போன்ற பலப்பல ஹிட் பாடல்களை அன்று வழங்கியவர், கவி.கா.மு.ஷரீப்.

பாட்டும் நானே பாவமும் நானே" இந்தப் பாடல் பின்னாளில் கண்ணதாசன் எழுதியதாக வெளியில் வந்தது. அதுவும் A.P.நாகராஜன் பக்திப் படத்திலேயே வந்தது.

கவி. கா.மு.ஷரீப் சாஹிபிடமே சிலர் கேட்டார்கள், "இது என்ன கொடுமை? இதை A.P.நாகராஜனும் மறுக்கவில்லை, கண்ணதாசனும் வருத்தம் தெரிவிக்க வில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது"என்று.

"இந்தப் பாட்டு தங்கள் பாட்டு எனச் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. விட்டுத் தள்ளுங்கள்" என மிக அமைதியாகச் சொல்லி விட்டு அப்படியே அதை மறந்தும் விட்டார், கவி.கா.மு.ஷரீப்.

கவி. கா.மு.ஷரீபின் நண்பர் ஒருவர். அவர் பிராமணச் சமுதாயத்தவர். அந்த நண்பரின் மகள், திருமணத்திற்கு முன்பு கருத்தறித்து விட்டார். நண்பர் துடித்துப் போனார். இந்தச் செயலை மறைத்தே ஆக வேண்டும்.

கருவையும் கலைக்கக் கூடாது. இந்த நிலையில் கவி.கா.மு.ஷரீப்தான் அந்த பிராமண நண்பருக்கு உதவிக் கரம் நீட்டினார்.
நண்பரின் மகளை தன் ஊரான நாகப்பட்டினத்துக்குக் கவி.கா.மு. ஷரீப் அழைத்துச் சென்று விட்டார்.

அங்கேயே அப்பெண்ணிற்குப் பேறுகாலமும் நடந்தது. சில மாதங்கள் சென்ற பின்னர் அப்பெண்ணை அவளின் தந்தையார் இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார். அந்த ரகசியம் அப்படியே பாதுகாக்கப்பட்டது.

அந்தப் பெண்ணிற்கு வேறு திருமணமும் நிகழ்ந்தது.

அப்பெண் பெற்றெடுத்த பிள்ளை, ஒரு பெண்பிள்ளை. கவிஞருக்கு ஏராளமான பிள்ளைகள். அந்த ஏராளமான பிள்ளைகளுடன் பிராமணப் பிள்ளையும் வளர்ந்து வந்தது.

பிராமணப் பெண்பிள்ளை, ஒரு ஐதீகம் பிராமணப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தாள். இஸ்லாத்தை கவிஞர் அப்பிள்ளையிடம் திணிக்க இல்லை. கவிஞரின் பிள்ளைகள் இஸ்லாத்தைப் பேணி நடக்க, ஒருபிள்ளை மட்டும் பிராமண ஐதீகத்தில் வளர்ந்தாள். அவள் பருவம் அடைந்த பின்னர் அப்பெண்ணை நண்பரிடம் கவி.கா.மு.ஷரீப்
ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வை வெளியுலகத்திற்குச் சொல்லிக் காட்டியவர் கவி.கா.மு.ஷரீப் அல்லர். கடைசிவரை ரகசியத்தைக் காப்பாற்றினார்.

கவிஞரின் பிராமண நண்பர்தான் இந்த ரகசியத்தைத் தானே முன்வந்து வெளிப்படுத்தினார்.

இத்துணைப் பெருமைக்குரிய கவிஞர் பெருமகனார், அரசியல் வாழ்விலும், சமூக வாழ்விலும் பல் வேறு தளங்களில் பணியாற்றி விட்டு முதுமையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கவி.கா.மு.ஷரீப் இறுதியில் உரை நிகழ்த்தினார்.

" நான் இளமையில் எங்கெங்கோ பணியாற்றி இருக்கிறேன். ஆற்றிய பணிகளில் எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் பணி புரிந்திருக்கிறேன். கபடமற்ற நிலையிலும், வெளிப்படையான வகையிலும் என் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.

ஆண்டுகள் கடந்து கொண்டே இருந்தன.என்னைச் சுற்றிலும் உள்ள என் உலகம் கரைந்து கொண்டே வந்தன.

ஒருநாள் என்னை உற்று நோக்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதுமை என்னைச் சரியாகவும் பலமாகவும் பிடித்துக் கொண்டிருப்பதை என் விழிகளிலேயே பார்த்தேன்.
 
அப்போதுதான் நான் தனித்திருக்கிறேன் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.

நான் அதுவரை கண்டறியாத ஒரு திடுக்கம் எனக்குள் வந்தது. நான் அந்திமத்துக்கு அருகாமையில் வந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.

என்னுடைய இயக்கம் நின்று போன பின்னர் மற்றொரு பயணத்திற்குப் புறப்பட எனக்கு நான்கு தோள்கள் வேண்டுமே? அவற்றை எங்கே தேட? என்று நினைத்தேன்.

அந்த நடுக்கந்தான் எனக்குத் தெளிவைத் தந்தது. என் இந்தச் சமூகத்தில்தான் அந்த நான்கு தோள்கள் நிச்சயம் மறைந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டன்.

இந்தியன் யூனியன் முஸ்லிம லீகின் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் இட்டுவிட்டேன்" என கவி.கா.மு.ஷரீப் உருக்கமாக உரை நிகழ்த்தினார்.

மீண்டும் மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன், AVM கல்யாண மண்டபத்தில் சமுதாயத்தின் தனித்தனி இயக்கத்தின் தலைவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கவி.கா.மு.ஷரீப் அவர்களின் இந்த உரைதான் என் நிலைவில் நிலைத்து நிற்கிறது.

இந்தச் சமூகத்தின் அத்தனை தோள்களும் யாரைச் சுமக்கத் தயாராகின்றன.? இந்தத் தனித்தனித் தலைமைகள் எந்தக் கூடாரத்துக்குக் கீழே தோரணம் கட்டுகின்றன?

இதுதான் ஐக்கியம் என்பதின் வெளியடையாளமோ?

இப்படி ஒரே மேடையில் தனித் தனித் தலைவர்களின் கூட்டத்தைப் பார்த்த பின்னும் ஏன் இப்படி எண்ணத் தோன்றுகிறது.?

No comments:

Post a Comment