Sunday, May 29, 2016

ஓர் அற்புத நினைவோட்டம்...!



தேர்தல் ஒரு வழியாக நிறைவேறி விட்டது. அத்தனை நடைமுறைகளும் நடந்தேறி விட்டன. இத்தேர்தல் பற்றிக் கொஞ்சம் நீளமான அலசல் அவசியப்படுகிறது .

சற்றுப் பின்னர் எழுத இருக்கிறேன். இன்று ஒரு கடந்த கால எண்ணத்தை மீண்டும் என் மனம் அசைபோடுகிறது. அந்த மனக் கனத்தை இங்கே இறக்கி வைக்கிறேன்.

கடைய நல்லூர் தொகுதி தென்காசித் தொகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தொகுதி. பின்னர் தனியான தொகுதியாகப் பரிமாணமானது. அதன் முதல்
சட்டமன்ற உறுப்பினர், . ஆர். சுப்பையா முதலியார். இவர் தி. மு. வின்
எம். எல். .வாகத் தேர்வானார்.

இந்தத் தேர்தலுக்கு முந்திய தேர்தலில் தென்காசித் தொகுதியில் போட்டி போட்டு வென்றார்.இத் தேர்தலில் கடைய நல்லூர் தென்காசித் தொகுதியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டி போட்டார். இவரை எதிர்த்து, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை நிறுத்தியது. அவர்தான் .கே. ரிபாய் சாஹிப். இது நடந்தது 1962-ஆம் ஆண்டு. முஸ்லிம் லீக் தோற்றது.

பின்னர் 80-ம் ஆண்டு கடைய நல்லூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளரை நிறுத்தியது. அவர் .கே. ரிபாய் சாஹிபின் தம்பி சாகுல் ஹமீது சாஹிப். இவர் "விட்டோம் பிழைத்தோம்" என்ற கதிவேகத்தில் 3000-க்கு உட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அண்ணன் தம்பி இருவருமே தி.மு.. கூட்டணியில்தான் நின்றார்கள்.
அண்ணன் தோற்றார். தம்பி வென்றார்.

அதன் பின் மாவட்ட முஸ்லிம் லீக், தென்காசி மற்றும் கடைய நல்லூரை,
தேர்தலில் தன் தொகுதியாகக் கணக்கில் வைப்பதேயில்லை.

இப்போது மீண்டும் முஸ்லிம் லீக் கடைய நல்லூரில் போட்டி போட்டு பழைய நிலையிலேயே "விட்டாப் போதும். பிழைத்துக்கிறேன்" என்று வென்றுள்ளது. பாராட்டுகள். என் அருமைத் தம்பி மாநிலப் பொதுச் செயலாளர் அபூ பக்கர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இப்போதும் சொல்கிறேன் இந்த இரு தொகுதிகளும் லீக்கின் தொகுதிகளே
அல்ல. இது பற்றி ஒரு விரிவான அலசலை அடுத்துப் பதிவிடுகிறேன்.

சாகுல் வாப்பா M.L.A. ஆகி விட்டார்கள். சட்ட மன்றத்தில் முதல் பேச்சு.
கன்னிப் பேச்சுப் பேசப் போகிறார்கள்.

நான் அப்போது வட சென்னை மாவட்டச் செயலாளர். என்னிடம் "கன்னிப் பேச்சை எப்படி அமைக்கலாம். உன் கருத்தைச் சொல்லுடா" எனச் சாகுல் வாப்பா கேட்டார்கள்.

நான் சொன்ன பதில்

வாப்பா! உங்கள் பேச்சு சட்ட மன்றத்துச் சரித்திரத்தில் என்றும் ஒரு மைல் கல்லாக இருக் வேண்டும். "சட்ட மன்ற அவைக்குள்ளே உறுப்பினர்கள் தங்கள் தங்கள் தலைவர்களின் காலில் விழுந்து வணங்கிப் பதவி ஏற்கிற முறை அண்மைக் காலங்களில் ஒரு சம்பிரதாயமாக மாறி வருகிறது.
இது தவறான பாதையாகப் படுகிறது.

நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதைச் சொல்ல வில்லை. ஒரு சட்ட மன்ற உறுப்பினனாகச் சொல்கிறேன்.

இந்த அவைக்குள்ளே நான் என் தொகுதி மக்களின் பிரதிநிதியாகத்தான்
செயல்பட முடியும்.

நான் என் தலைவன் காலில் பணிந்தால் என் தொகுதி மக்களே பணிவதாகத்தான் பொருள். என் தொகுதி மக்களை எவர் காலிலும் விழ வைக்க எனக்கு என் உரிமை இருக்கிறது?. இது ஒரு பகீரங்கமான அத்துமீறல்.

இது சட்ட மன்றம். இதை நான் பள்ளி வாசலாகக் கருதக் கூடாது. ஒரு கிறித்துவர் இதைச் சர்ச்சாகப் பாவிக்கக் கூடாது. ஒரு இந்து இதை கோயிலாகக் கொள்ளக் கூடாது.

வணங்க வேறு இடங்கள். சட்டம் சமைக்கச் சட்டம் மன்றங்கள்.
இதையே என் கன்னிப் பேச்சாகப் பதிவு செய்கிறேன்" என்று பேசுங்கள் வாப்பா எனக் கூறினேன்.

மனநிறைவாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மறுநாள் சட்டம் மன்றத்தில் பேசவில்லை.

மறுநாள் நான், சின்ன வாப்பாவிடம் இது பற்றிக் கேட்டே விட்டேன்.

சின்ன வாப்பாவும் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"இப்படிப் பேசக் கூடாது. கலைஞருக்கு மனம் வருத்தம் தரும். தம்பி ஹிலால் சுலபமாக உங்களை மாட்டி விடுகிறார்" என அப்துல் லத்தீப் சாஹிப் கூறித் தடுத்துவட்டாராம்.

இந்த நிகழ்வு இப்போது என் நினைவோட்டத்தில் திடீரென்று வந்து குந்திக் கொண்டது.

No comments:

Post a Comment