Saturday, March 28, 2015

முள்ளிவாய்க்கால் முழுமை பெறவில்லை...!!





சில தினங்களுக்கு முன்னர் நான் தஞ்சை சென்றிருந்தேன்.தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூடத்திற்குச் சென்றிருந்தேன். கவிஞர். தேன்தமிழ், அவர் மகன் மஞ்சுநாதன் என்னுடன் வந்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு கூடம் ஒரு கோயிலுக்குரிய தகுதியில் புனிதமான தரத்தில் பேணப்பட்டு வருகிறது. காலணி அணிந்து உள்ளே பிரவேசிக்கும் அனுமதி இல்லை. ஒரு போர் நினைவுப் பகுதியில் இருக்கிறோம் என்கிற உணர்வு வரத் தாமதமாகிறது.

தீரமிக்க உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தற்குப் பதிலாக பக்திப் பகுதியின் அடக்க உணர்வு வந்து அமர்ந்து விடுகிறது.

இது, என்போன்றோருக்கு உடன்பாடான ஒன்றல்ல. அது ரத்தம் சிந்திய வீரப் பகுதியின் தீயாகச் சின்னம்.அங்கே பக்தர்கள் கூடும் கோயிலுக்குரிய குணாம்சம் அவசியமில்லை. ஓர் உன்னத இனம் அத்துமீறி அழிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்திருக் கிறது.அதுபற்றிய வீரிய வேதனை எழுவதற்குப் பதிலாகப் பக்திப் பரவசம் எழுப்பும் பாணியில் என்னால் பங்கு வகிக்க இயலவில்லை.

கூடத்திற்கு உள்ளே, உயிர்த் தியாகம் புரிந்த தீரர்கள் படங்கள் அணிவகுத்தன.

அதில் ஓர் புல்லரிப்புக்கு உள்ளானேன். அதனைத் தொடர்ந்து மகத்தான தமிழ்ப்பேறிஞர்களின் படங்கள் நிறைந்திருந்தன. அதைக்கண்ட போது பெருமிதம் தழும்பியது.

ஈழத்துத் தமிழ் மேதையர் அலங்கரித்தனர்.தமிழகத்து மகத்துவர்கள் திகழ்ந்தனர்.

இந்த வரிசையில் மதப்பாகுபாடு இல்லை. நாத்திக, ஆத்திக வேறுபாடில்லை.
 
இந்த வரிசைப்பாடு மனநிறைவை நிரப்பியது.

ஆனால் என்மனதை ஓர் ஒற்றை நீள அம்பு குத்திக் கிளறியது.

கவிஞர் வைரமுத்து படம் கூட மறக்கப்படாமல் காட்சிப்பட்டது. நிம்மதி தந்தது.

வைரமுத்து சில காலம் ஒரு பெரும் கவிஞருக்குக் கீழ் பணிபுரிந்துள்ளார்.
அந்தக் கவிஞர் மறைந்த போது, அவரின் உடல் முன் வந்துநின்று, வைரமுத்து, "ஐயோ தமிழ் மரணத்து விட்டதே" எனக்கூறி வேதனைப்பட்டார்.

அந்தத் தமிழ்மேதை கலைமாமணி, கவிஞர் உழுந்தூர்ப்பேட்டை சு.சண்முகம் ஐயா தான்.

நாங்களெல்லாம்" பேட்டையார்" எனப் பாசப்பூணிப்பால் பெருமிதமாகக் குறிப்பிடும் உழுந்தூர்ப்பேட்டையார், நம்காலத்ததில் தமிழுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆவார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எங்களின் தமிழாசான். இவரிடம் கற்றவர்கள் தமிழகம் எங்கும் பரவிக்கிடக்கிறோம். இவர் மாணவர்கள் பட்டியலே விநோதமானது, பச்சை நாத்திகர்கள், பழுத்த ஆத்திகர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேல்ஜாதிக்காரர்கள், நடுச்சாதிக்காரர்கள், கடைச்சாதிக்காரர்கள். இப்படிப் பலதரப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவருமே ஐயா, வீட்டின் அத்தனை பகுதிக்குள்ளும் பூரண உரிமையுடன் நடமாடும் தகுதி பெற்றவர்கள்.

பேட்டையார், தந்தை பெரியாரால் ஆரம்பத்தில் ஈர்க்கப்பட்டார். தி.க வின் பெரியார் தொடங்கிய, இன்றிருக்கும் வீரமணிவரை இவரின் இல்லத் தோழர்கள். பின்னர், அண்ணாவின் ஆரம்ப கால அன்பராகி தி.மு.க வில் பணிபுரிந்தார். கலைவாணரின் கெழுதகை நண்பராவார்.

அடுத்த காலகட்டம், பேட்டையார் வாழ்வு திசைமாறுகிறது. முற்றுமாக மாறுகிறார்.

பக்திப் பாதையில் பயணம் தொடர்ந்தது.இறுதிவரை இப்படியே சென்றது.

கிட்டத்தட்ட 5000-க்கும் அதிகமான பக்திப் பாடல்கள் எழுதியுள்ளார். அத்தனையுமே ஒலிநாடா வாக வடிவம் பெற்றுள்ளன.

இன்றைய தினம் கோயில்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்திப் பாடல்களில் 98% பாடல்கள் பேட்டையார் பாடல்கள்தான்.

அத்தனையும் முழுக்க முழுக்கத் தனித் தமிழிசைப் பாடல்கள். பேட்டையார் தான் 5000-க்கும் அதிகமாத் தமிழிசைப் பாடல்கள் இயற்றியுள்ள பெருமைக்குரியவர்.

எங்களில் பலரும் பேட்டையாரின் கருத்துகளோடு நிச்சயமாக முரண்பட்டவர்கள்தாம்.

ஆனாலும் பேட்டையாரின் தமிழுக்குப் பூரணமான ரசிகர்கள்தான். 40 ஆண்டுகளுக்கு முன்பு "பாதமலர்கள்" என்ற பக்திப் பாடல்கள் தொகுதி வெளியிட்டார். அந்தத் தொகுதி முன்னுரையில் எனக்கு நன்றி சொல்லி
இருந்தார். எனக்கும் அவரின் பக்திக்கும் உடன்பாடு கிடையாது. அவரின்
கவித்துவம் என்றென்றும் என் உடன்பாட்டுக்குச் சொந்தமானது.

"நீயல்லால் தெய்வமில்லை"

"விநாயகனே வினைதீர்ப்பவனே"

"முன்னே முழுமுதலே"

"காலை இளங்கதிரில் காட்சி தெரியுது"

"சின்னஞ்சிறு பெண்போலே"

இப்படிப் பலப்பல பாடல்கள் பேட்டையாரின் உரிமையானது.

முள்ளிவாய்க்கால் நினைவு கூடம், தமிழுக்கு மரியாதை செய்திருப்பதில்
உள்ளபடியே பேரானந்தம் அடைகிறேன்.

ஆனால் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டபடி தமிழாகத் திகழ்ந்த பேட்டையாரை முள்ளிவாய்க்கால் மறந்து போனது சகிக்க முடியாது வேதனைக்குரியதுதான்.

சீர்காழியார் இசைஞானம் மதிப்பு மிக்க மேன்மையானது. அதற்கு இணையானது பேட்டையார் கவித்தமிழ். என்போன்றோருக்கு பேட்டையார் தமிழை அடுத்தே சீர்காழியார் இசைஞானம்.

முள்ளிவாய்க்கால் தன் மறதியை உடனடியாக நீக்கிக் கொள்ளவோண்டும்.
தாய்த்தமிழுக்கு தரம் தந்தாக வோண்டும்.

பேட்டையார்க்கு உரிய தகுதியைத் தருவதுதான் தமிழை மதிப்பதாகும்.

நான், உருவப்படம் வைத்து வழிபாடு செய்வதில் துளியும் நம்பிக்கை இல்லாதவன்.

ஆனால் தமிழக மரபு நம்பும் போது, அதன்படி பேட்டையாருக்கு அதனை வழங்க மறதியோ அல்லது வேறு எதுவோ காரணமாகக் கூடாது என்பதுதான் என் கோரிக்கை.

படத்தை நினைவூட்டலாகத்தான் கருதுகிறேன். வழிபாடாக அல்ல.

முதல் படம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பேட்டையார்.
இரண்டாம் படம்- தமிழக அரசு, தமிழ்ப்பண்பாட்டுத் துறை இயக்குநர் பேட்டையார்.

No comments:

Post a Comment