குடும்பத்தின் சரித்திரம்...!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிர்ப்புரம்
கென்னத் லேன் உள்ளிட்ட சென்னை போலீஸ் ஆஃபீஸ்
ரோடுவரை ஒரு காலத்தில் ஜமாலியா குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தது.
தற்போது இருக்கின்ற ஹோட்டல் இம்பீரியல் பகுதி முழுவதும், கென்னத்
லேனில் இப்போதுள்ள லஷ்மி மோகன் லாட்ஜும் ஜமாலியா குடும்பத்தின் பங்களாக்களாக இருந்தன மீதி இடங்கள் வெற்று
நிலமாக இருந்தன.
ஹோட்டல் இம்பீரியல் பகுதியில் முன்பிருந்த பங்களாவில் ஓடியாடி விளையாடிய சிறுபிள்ளை ஜமால் மைதீன் பாப்பா சாஹிப்.
கென்னத் லேன் லட்சுமி மோகன் லாட்ஜில் முன்னர் இருந்த பங்களாதான் எங்கள் தாதா
மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப், தாதி ஜமால் ஃபாத்திமா பீவி தம்பதியராகி
முதல் குடித்தனம் இருந்த இடம்.
இதே பங்களாதான் ஜமாலியா குடும்பத்தை விட்டுக் கைமாறி பின்னர் லட்சுமி மோகன் லாட்ஜ் ஆனது.
பின் காலத்தில் எங்கள் தாதா சென்னை வரும்போதெல்லாம் இதே லாட்ஜில்தான் வாடகைக்குத் தங்குவார்கள் அவர்களின்
இறுதி மூச்சும் இந்த லாட்ஜில் தங்கியிருக்கும்
போதுதான் தஹஜத் தொழுகைக்கு ஒழுச் செய்யும் வேளையில் பிரிந்தது.
மணமகனாகக் குடியிருந்த இடத்திலிருந்தே பல ஆண்டுகள் கழித்து மறுவுலக
வாழ்விற்கும் பயணமானார்கள்.
சென்னைப் போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு எதிரில் உள்ள பல கட்டிடங்கள்
ஜமாலியா அறக்கட்டளைக்கு உரியதாக இன்றும் இருக்கின்றன.
சென்னை கோபாலபுரத்திலும் ஜமாலியா அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டிடங்களும் இருக்கின்றன.
சென்னைத் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,ஜாம்பஜார்
பகுதிகளிலும்
ஜமாலியா அறக்கட்டளைக்குரிய கட்டிடங்கள் இருக்கின்றன.
ஜமாலியா அறக்கட்டளைக்குரிய கட்டிடங்கள் இருக்கின்றன.
பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரி, அதைச் சுற்றியுள்ள
பெரும் நிலப்பரப்பு ஜமாலியா குடும்பத்துக்குச் சொந்தமாக
இருந்தன.
பெரம்பூர் ஜமாலியா மேனிலைப் பள்ளி ஜமால் குடும்பத்துப் பங்களாதான்
அங்குதான் மவ்லானா முஹமதலி சென்னை வந்தபோது தங்கினார்.
தஞ்சை மாவட்ட ஆடுதுறையிலும் வளப்பமான
நஞ்சை நிலங்கள் அந்தக் குடும்பத்துக்கு ஏராளமாக இருந்தன.
செல்வ வளத்திலாகட்டும் இந்திய அரசியல் பின்புலத்தில் ஆகட்டும் வியாபித்திருந்த குடும்பம் ஜமால் முஹமது சாஹிப் குடும்பம்.
இக் குடும்பத்தின் வாரிசுதான் ஜமால் மைதீன் பாப்பா சாஹிப்.
ஜமால் மைதீன் பாப்பா சாஹிப் திடகாத்திரமான தோற்றக்காரர் இளகிய மனதுக்காரர். எளிமையின் அடையாளக்காரர். தஞ்சை
மாவட்ட யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத்
திகழ்ந்தவர். மாநில முஸ்லிம் லீகின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக 1972 முதல் ஏழு ஆண்டுகள் பொருப்பு வகித்தார் இந்தத் தலைவர் பதவியை அவருக்கு அப்பகுதி மக்கள் போட்டி இல்லாத் தலைவராகத் தேர்ந்தெடுத்து வழங்கினார்கள்.
பாரம்பரியமிக்கச் செல்வ வளமும், செல்வாக்கும்,
அரசியல் பின்புலமும் கொண்ட மூன்று குடும்பங்கள் தஞ்சை மாவட்டத்தில்
இருந்தன.
ஒன்று, தலைவர் மூப்பனாரின் குடும்பம் மற்றொன்று வாண்டையார் குடும்பம் பிரிதொன்று ஜமால் முகம்மது சாஹிப் குடும்பம்.
மூப்பனார் தலைமுறையினருக்கும் வாண்டையார் வம்சத்தினருக்கும் கருத்து முரண்பாடுகள் எப்போதும் இருந்தன. ஆனால் மூப்பனார் குடும்பத்தினரும் வாண்டையார்
வகையினரும் ஜமால் முகம்மது சாஹிப்
பரம்பரையினருடன் நெருக்கமான உறவுக்காரர்களாக
இருந்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பல நேரங்களில் வேளாண்துறை மாணவர்கள் பயிற்சிக்காக ஆடுதுறைக்கு வருவார்கள். அவர்களுக்குப் பாப்பா நன்னா வீட்டில் விருந்தும் நடக்கும். அவர்களுக்குப் பாப்பா நன்னா வகுப்பும் நடத்துவார்கள்.
பாப்பா நன்னா எந்தப் பட்டப் படிப்பும் படித்தவரில்லை. ஆனால் விவசாயத்தில் அவர் ஒரு பல்கலைக் கழகம்.
தமிழகத்தின் அரசு உயர் அதிகாரிகள் பாப்பா நன்னாவிடம் அன்னியோன்னியமாக இருந்தார்கள். பொது வாழ்வில் சொந்தச் செல்வ வளத்தை மிகப் பெருமளவில் செலவழித்துக் கரைத்தவர் பாப்பா நன்னா.
அப்பழுக்கற்ற அரசியல்வாதி.
தன் முழு வாழ்வையும் யூனியன் முஸ்லிம் லீகின் இயக்கப் பணிக்கே
ஒப்படைத்துக் கொண்டவர்.
எந்த நேரத்திலும் யாவரும் எவரும் பாப்பா நன்னாவை அணுகலாம்.
அப்படி உதவி கேட்டு வந்தவர்களுக்காகத் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு, தன் செலவில் பெட்ரோல் நிரப்பி அவர்களுக்கு உணவும் வழங்கி வந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர் பாப்பா நன்னா. இது மாதிரி வேளைகளில் உதவியாளராகக் கிளியனூர் கவிஞர் அஜீஸ் உடன் வருவார்.
அப்படி உதவி கேட்டு வந்தவர்களுக்காகத் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு, தன் செலவில் பெட்ரோல் நிரப்பி அவர்களுக்கு உணவும் வழங்கி வந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர் பாப்பா நன்னா. இது மாதிரி வேளைகளில் உதவியாளராகக் கிளியனூர் கவிஞர் அஜீஸ் உடன் வருவார்.
தஞ்சை விளார் பகுதியில் பாப்பா பண்ணை அமைத்து விவசாயத்தை நவீனப்
படுத்தினார்.
தாய்ச்சபையின் மாவட்ட இயக்கப் பணியில்
இவருக்குத் தோள் கொடுத்து நின்றவர்கள் பலப்பலர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மாவட்ட இரு செயலாளர்களான முஹமது சாலிஹ் சாஹிப், அப்துல் ஹாதி சாஹிப் ஆவர். மாவட்டப் பொருளாளர் பாப்பா நன்னாவின் தம்பி
ஆடிட்டர் அப்துல் கனீ சாஹிபின் பணியும் சிறப்புக்குரியது.
பாப்பா நன்னாவின் வேளாண் ஞானம் பிரமிப்பூட்டத் தக்கது. ஒரு இடத்தின் மண்ணின் வகையறிந்து
இந்த மண்ணில் என்ன பயிரிடலாம் எனத் தீர்மானிக்கும் அறிவு
அபாரமானது.
இந்த வகை மண் எந்தெந்த பகுதிகளில் இருக்கிறது என்பதையும் இணைத்துக் கூறுவார்.
தலைவர் மூப்பனார் அடிக்கடிச் சொல்லுவார்
"எங்கள் பாப்பா எங்கள் காங்கிரஸ் இயக்கத்தில்
இருந்திருந்தால் அவர்தான் எங்கள் நிரந்தர வேளாண்துறை
அமைச்சராக இருந்திருப்பார்" என்று.
"தஞ்சை மாவட்டம் காவிரி நதியால்தான் கெட்டது" என்ற ஒரு தியரியை
இவர் பேசாத நாளே இருக்காது.
"காவிரி, தஞ்சையின் நிலவுடைமையாளர்களைப் பெரும் சோம்பேறிகளாகவும்
சுகவாசிகளாகவும் மாற்றி விட்டது. இது சமூக ஆபத்து."
"நெற்பயிரை மட்டும் விளையச்செய்து காவிரி விவசாயத்தில் ஒரு தேக்கத்தைத் தஞ்சைப் பகுதியில் உருவாக்கி
விட்டது"
"நிலத்தடி நீரைத் தேவைக்கு வெளிக் கொணரவில்லை. இதனால் பணப்பயிர்களைத் தஞ்சைப்
பகுதிச் சந்திக்க முடியாமலாகி விட்டது. நிலத்தடி நீரும் பூமிக்குக் கீழ்
கடலின் நீரோட்டத்தை உள்வாங்கி உப்பு நீராக மாறிக் கொண்டிருக்கிறது. இது எதிர் காலத்தின்
ஆபத்து அறிவிப்பு. எதிர்
காலத் தஞ்சைப் பகுதிக்கு இதுதான் பெரும்
சோதனை" என்பது பாப்பா நன்னாவின் தீர்க்கமான முடிவு.
சென்னை மேடவாக்கம் காயிதெ மில்லத் கல்லூரி உதித்தெழக் காரணமாக இருந்த
மூத்த முஸ்லிம் லீக் தலைவர்கள் அப்துல் வஹாப் ஜானி
சாஹிப், ஏ.கே.ரிபாய் சாஹிப், எம்.மியான்கான் சாஹிப், போன்ற தலைவர்களுடன் முழு மூச்சாக ஈடுபட்டுப் பணியாற்றியவர் ஜமால் மைதீன் பாப்பா.
பின்னர் இக்கல்லூரி நிர்வாகம் திசைத் தப்பிப் போய்விட்டது. அதை மீட்டெடுக்கப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று.
உடல்நலம் பாதிப்படைந்த நிலையிலும் பாப்பா நன்னா முழுமையாகத் தலையிட்டு, நெல்லை ஜமால் முஹமது சாஹிப் (என் சிறிய தந்தையார்) இன்னும் முக்கியமானவர்களுடன் ஒன்றிணைந்துப் போராடி மீட்டெடுத்தார்.
இறுதிக் காலக் கட்டத்தில் இக் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராகப்
பாப்பா நன்னா செயல்பட்டார்.
இங்கே கீழே இடம் பெறும் செய்தி சற்றே கசப்பாக இருந்தாலும். அதிலும் பாப்பா நன்னாவின் பெருந்தன்மை கண்ணியம் காட்டுகிறது.
பாப்பா நன்னாவால் தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீகில் உயர் பதவி வகித்து ஒத்துழைத்துச் செயல்பட்ட ஒருவர், பாப்பா நன்னாவுடன் முரண்பட்டார். இது வேதனைக்கு உரியதுதான். ஆனால், அந்த நபர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதே அல்ல.
மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபிற்கு, அந்தத் தஞ்சை மாவட்டத்துக்காரர்
ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்
குறிப்பிட்டிருந்த செய்திகளைக் கீழே
தருகிறேன்.
"தலைவர் அவர்கள் (அப்துஸ் ஸமது
சாஹிப்) கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டமிது.
லீகிற்குள் ஒரு சதிநடக்கிறது. அது தலைவர்க்கு எதிரான சதி. மாநிலப்
பொதுச் செயலாளர் A.K. ரிபாய் சாஹிப், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் மியான்கான் சாஹிப், நெல்லை மவட்டத் தலைவர் சாகுல் ஹமீது சாஹிப், செயலாளர் கோதர்மைதீன் சாஹிப், தஞ்சை
மாவட்டத் தலைவர் ஜமால் மைதீன் பாப்பா சாஹிப், பொருளாளர் ஆடிட்டர் அப்துல் கனீ சாஹிப், திண்டுக்கல் மாவட்டப் பொருளாளர்
ரஹ்மத்துல்லாஹ் சாஹிப் உங்கள் பக்கத்திலேயே இருக்கும் தம்பி அ.ஹிலால் முஸ்தபா இப்படி ஒரே குடும்பத்தவர்கள் உங்களைச் சுற்றிச்
சூழ்ந்து விட்டார்கள்.
அதாவது லீகைக் கபளீகரம் செய்யப் போகிறார்கள். லீகின் அடிப்படைத் தொண்டன் என்ற
அடிப்படையில் இதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்தத் தஞ்சை
மாவட்டத்துக்காரர் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு நாள் இரவு அடையாரில்
தலைவர் ஸமது சாஹிப் இல்லத்து முற்றப்புல் வெளியில் பாப்பா
நன்னா, ரிபாய்
சாஹிப் ஹிலால் முஸ்தபா, வந்தவாசி வஹாப் சாஹிப், நாகூர்
ஜபருல்லாஹ் போன்றோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தலைவர் இந்தக் கடிதத்தைப் பகிரங்கமாக வாசித்துக் காட்டினார்.
பாப்பா நன்னா உரக்கச்சிரித்தார் "தலைவர் அவர்களே இதில்
குறிப்பிட்டுள்ள எங்களைக் கட்சிப்
பொறுப்பில் இருந்து நீக்கி விடுங்கள். நாங்கள்
எங்கள் மூச்சுள்ளவரை இயக்கத் தொண்டர்களாகவே இருக்கிறோம்" என்றார்கள் பாப்பா நன்னா.
அதன் பின்னர் யாரிடமும் இதைச் சொல்லவும் இல்லை. இக் கடிதம் எழுதியிருந்தவரிடமும் வெறுப்புக் காட்டவில்லை. தலைவர் ஸமது சாஹிப் இக் கடிதத்தைப் படித்துக் காட்டியது இன்றுவரை
அவருக்குத் தெரிந்திருக்கவும்
இல்லை.
இது பாப்பா நன்னாவின் கண்ணியத்தின் வெளிப்பாடு.
No comments:
Post a Comment