Thursday, April 2, 2015

மனித உயிர் மயிரளவு விலங்குயிர் மதமளவு...!




மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 29-03–2015 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பேசிய பேச்சை, 31-03-2015 தேதியிட்ட தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

"நாடு முழுவதும் பசுவதைத் தடையை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனினும் பசுவதைத் தடையை நாடு முழுவதும் அமல் படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" - இது ராஜ்நாத் சிங்கின் வெளிப்படையான அறிவிப்பு.

பா ஜ க ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமல் படுதப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், ஹரியானா இங்கு எல்லாம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

பசுவதைத் தடையென்பது ஜீவகாருண்யத்தின் அடிப்படையில் சொல்லப்படும் தத்துவக்கோட்பாடு அல்ல.

பிற ஜந்துக்கள் கொல்லப்படுவதில் அவ்வளவு அக்கறை காட்டாத பா ஜ க,
பசுக்கள் மீது மட்டும் பிரத்தியேக அக்கறை எடுத்துக் கொள்வதற்கு மதம் சார்ந்த காரணம் முன் வைக்கப் படுகிறது.

பசு, இந்து மதத்தின் தெய்வத்தன்மை கொண்டது எனக் குறிப்பிட்டு, பசுவதையைத் தடுக்க, பா ஜ க ஒரு செயல்பாட்டை தூண்டிவிடுகிறது.

பசுவதை என்ற சொல்லுக்குப் பசுக்கொலை என்றுதான் பொருளா?

பசுவின், பால் உற்பத்தியை அதிகரிப்பதும், அந்தப் பாலை இயந்திரங்கள் வழிக் கறப்பதும் பசுவை வதைப்படுத்துவ தாகாதா?

பால் கறப்பு, பசுவில் நின்றுவிட்டபின், அந்தப் பசுவிற்குக் கொடுக்கப்படும்.
ஊட்டச்சத்து நிறுத்தப்படுவது பசுவதை ஆகாதா?

தோல் உற்பத்திப்பொருட்களுக்கு தேவைப்படும், தோல்களில் பசுத்தோல் நீக்கப்படுமா?

சற்று உயர்ந்தரக ஆடைகளில் பொறுத்தப்படும் பட்டன்கள் மாட்டுக் கொம்புகளில் தயாரிக்கப்படுகின்றன. இக்கொம்புகளில் பசுக்கொம்புகள் தவிர்க்கப்படுமா?

தலைவாரும் சீப்புகள் மாட்டுக் கொம்புகளில் உள்ளன. இச்சீப்புகள் நீக்கப்படுமா?

இவ்விதமெல்லாம் கேள்வி கேட்கப்படும் பொழுது பதில் தருவதற்கு வாய்ப்பற்று பா ஜ க வும், ராஜ்நாத்சிங்கும் கொல்லைப்புறம் வழியே நழுவிச்சென்று விடுகிறார்கள்.

மாட்டின் மாமிசம் இந்திய சமூகத்தில் சராசரி வருவாய்க்குக் கீழுள்ள எளிய மக்களின் சீரான சத்துணவாக இருக்கிறது.

எளிய மக்களுக்கு மட்டும் அல்ல, மேட்டுக்குடி மக்களுக்கும் மாட்டின் மாமிசம் (பசு உட்பட) விருப்பம் நிறைந்த உணவாக இருக்கிறது.

அண்மையில் கூட ஒரு பேட்டியில் அகில இந்திய காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் ஈ வி கே இளங்கோவன் "நான் மாட்டிறைச்சியை சுவையாக ரசித்துப் புசிக்கக்கூடியவன். இது என் உணவு சுதந்திரம். இதைத் தடுக்க தனிநபருக்கோ அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை." என வெளிப்படையாக அறிவித்தார்.

ஈ வி கே இளங்கோவன் நிச்சயமாக முஸ்லிம் இல்லை. உறுதியாக கிருத்துவர் இல்லை. பூரணநம்பிக்கை கொண்ட இந்துதான்.

ராஜ்நாத்சிங்கிற்கும், மோடிக்கும் உள்ள இந்து மத உரிமையை இளங்கோவனுக்கு இல்லை என எவரும் மறுத்துவிட முடியாது.

மோடி அணியும்கோட்டுப் பட்டன்களில் பசுச்சத்தம் கேட்கவில்லையா? அவர் அணிந்திருக்கும் காலணி களில், பெல்டுகளில் பசுத்தோல் வாடை வரவில்லையா?

மாட்டிறைச்சி அருந்தும் லட்சக்கணக்கான மக்களின், வாக்குகளைப் பெற்று வந்து, நாடாளுமன்றத்திலும், மாநில அரசுகளிலும் ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு, அந்த மக்களின் உணவு ஆதாரத்தை பிடுங்க நினைக்கும் எதேச்சதிகார கலாச்சாரம் அருவருக்கத்தக்க ஒன்றாகப் படவில்லையா?

எதையும் மத விதிகளுக்குள் கொண்டு வந்து பொறுத்திக் கொள்ளும் போது, அந்தந்த மதத்தவர்களை, உணர்ச்சிப் பிழம்பாக்கி,வெறித்தனத்தை உற்பத்தி செய்வது கேவலமான, சின்னத்தனமான அரசியல்தானே?

முன்னொரு காலத்தில், பட்டாள வீரர்கள் மத்தியில், "பசுக்கொழுப்பில் தயாரிக்கப் பட்டதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்" எனக்கூறி, இந்துக்களை மோதவிட்டார்கள். "பன்றிக்கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்" எனக்கூறி, முஸ்லிம்களை சீறவிட்டார்கள்.

இந்த மத குணாம்சங்கள்தாம் பசுவதையிலும் இருக்கிறது.

இத் தீமைக்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன் அமைச்சுப்பொறுப்பின் தார்மீகத் தன்மையை கேலிக்குள்ளாக்குகிறார்.

மேலே சொன்ன இந்தச் செய்தி பிரசரமாகி இருக்கும் தி இந்து நாளிதழில் இச் செய்திக்கு அடுத்து கீழே நான்கு காலச் செய்தியாக மற்றொரு செய்தியும் பிரசுரமாகி இருக்கிறது.

இந்தச் செய்திக்கு மத்திய உள்துறை அமைச்சர், அரசியல்வாதியாக இருந்தால், வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆன்மீகவாதியாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழவேண்டும். மதவாதியாக இருந்தால், பகீரங்க மன்னிப்புக் கேட்டுப் பரிகாரம் கண்டாக வேண்டும்.

ஆனால் இவைகளில் யாருமாகவும் இல்லாத குழப்பவாதியான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெட்கமற்று இருக்கிறார்.

இந்த ஆண்டின் ஜனவரி தொடங்கிய மார்ச் முடிய மூன்று மாதங்களில்
இந்தியத் தலைநகர் டெல்லியில் மட்டும் 1120 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட தினமும் 20 குழந்தைகள் மாயமாகி விட்டனர்.

தலைநகரில் சராசரி 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தினம்தினம் தொலைத்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் அதாவது 621 பேர் தொலைத்து போய் உள்ளனர்.

சென்ற ஆண்டில் (12 மாதங்களில் ) 7572 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். அவர்களிலும் 4166 பேர் பெண் குழந்தைகள். 8 வயதிற்கும் குறைவான குழந்தைகள்தான் அதிகம் பேர்கள்.

பள்ளிக்கூடத்தின் பக்கத்தில், வீட்டிற்கு அருகாமையில், விளையாட்டு மைதானங்களில் இவர்கள் காணாமல் போகிறார்கள்.

இவர்களில், ஆண் குழந்தைகள் பலரை சம்பல் கொள்ளைக்காரர்களிடம் சில குழுவினர் விற்று இருக்கிறார்கள்.

அந்தக் கொள்ளைக்காரர்கள் வசதி படைத்த குழந்தைகளை அவர்கள் பெற்றவர்களிடம் பேரம் பேசி திரும்ப விற்று இருக்கிறார்கள். பலரைத் தங்கள் கொள்ளைக் கூட்டத்தோடே சேர்த்து கொண்டார்கள்.

சம்பல் கொள்ளைக் கூட்டத் தலைவன் தத்துவா. இவன் உ.பியின் வீரப்பன் என அழைக்கப்பட்டவன். இவன் இன்று உயிரோடு இல்லை.

டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரின் மகனை 20 ஆண்டுகளுக்கு முன் கடத்தி வந்து தன் வாரிசாக வளர்த்தான். அந்தக் கூட்டத்திற்கு அவனை தலைவன் ஆக்கினான். அவன் தானே வந்து சரணடைந்து இன்று உ.பி சிறையில் இருக்கிறான்.

இப்படி காணாமல் போகும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் விபச்சாரத் தொழிலிற்குத் தயாராக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி முதல் அத்தனை அமைச்சர்களும் தலைநகர் டெல்லியில்தான் நடமாடுகிறார்கள். அத்தனை அதிகாரிகளும் அங்குதான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியப் பாராளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்படும் அத்தனை உறுப்பினர்களும் அங்குதான் கலந்துறவாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தான் மேலே சொன்ன விபரீதங்கள் தினம் தினம் நடந்து கொண்டு இருக்கின்றன.

பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கிற்கும் இதைப்பற்றி துளியும் அக்கறை இல்லை.

மோடி தன்னை அலங்கரித்து கொண்டு உலகம் பூராவும் சுற்றிக் கொண்டு இருக்கிறார். சாவு கேட்டுப் போன இடத்தில் கூட ஒரு நாளைக்கு மூன்று வகை ஆடைகளை அணிந்து திரிகிறார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவிற்குள் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார். மாட்டுத் தொழுவங்களுக்குள் புகுந்து புகுந்து வருகிறார். மத வெறிகளை அள்ளி அள்ளி வீசுகிறார்.

மனிதர்கள் தொலைந்தால் என்ன ? பசுக்களைப் பாதுகாப்போம் என சட்டம் சமைத்து கொண்டு இருக்கிறார்.

இந்தியா நல்லாத்தான் வளர்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment