Monday, August 4, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–41

நண்பர்கள் தினம்..!


நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் நான்காம் ஆண்டு நிறைவு செய்யப் போகிறோம். எங்கள் வகுப்பில் அறுபத்து மூன்று பேர் படித்ததாக நன்றாக நினைவு இருக்கிறது. ஒருநாள் மாலை நான்கு மணிக்கு மேல் பல்கலைக் கழகத்தை விட்டுப்பிரிகிற, பிரிவு உபச்சார விழா நடக்கிறது.

இந்த அனுபவம் மாணவர்களுக்கு எத்தனை எத்தனையோ மன உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்கிற நிகழ்வாகும்.
எங்கள் நான்காம் ஆண்டு மாணவர்கள், பிரிவு உபச்சார நிகழ்வில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

புலவர் இரண்டாம் ஆண்டு தேர்வில் தவறிப் போனவர்கள் மூன்றாம் ஆண்டு தொடர முடியாது. அந்தத் தேர்வைப் பூர்த்தி செய்துவிட்டுதான் அடுத்த ஆண்டு தொடர முடியும்.

அதே போல் எங்களுக்கு முந்தைய ஆண்டில் இதே நிலை அடைந்த மாணவர்கள் எங்களோடு மூன்றாமாண்டில் தொடருவார்கள். இந்தக் கூட்டல் கழித்தல் கணக்கில் அதிகமான வித்தியாசம் இருக்காது.

முதாலாமாண்டு முதல், எங்களோடு படித்த மாணவ மாணவியர் மூன்று நான்கு பேர்தான் இரண்டாம் ஆண்டு தவிர்க்கப்பட்ட நிலைக்கு உள்ளானார்கள்.

மூன்றாமாண்டில் எங்கள் பழைய மாணவர்களுக்குப் பதிலாக, எங்களுக்கு முந்தைய மாணவர்கள் நான்கு பேர் வந்து எங்களோடு இணைந்து கொண்டார்கள். இந்த நாங்கள்தான் பிரிவு உபச்சார விழாவில் அன்று மாலை மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

எங்கள் பேராசிரியர் தமிழ்ப் பெருங்கடல் வ.சுப. மாணிக்கனார் அமர்ந்திருக்க, எங்கள் பேராசிரியர்கள் அண்மையில் அமர்ந்திருக்க எங்கள் மாணவ மாணவியர்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றிருக்க, புகைப் படம் எடுக்கப்பட்டது.

எனக்கு அந்தக் காலகட்டங்களில் சில வித்தியாசமான, கொடூரமான தீர்மானங்கள் உண்டு. அவற்றில் ஒன்று குரூப் போட்டோ (குழு புகைப்படம்) எடுப்பதில் உடன்பாடு கிடையாது. அதனால் இந்தப் புகைப்படத்தைத் தவிர்த்துக் கொண்டேன்.

எங்கள் பேராசிரியர் வ.சுப.மா இதைக் கவனித்துவிட்டார்.
இதற்குப் பின்னால், விருந்து உபச்சார நிகழ்வு தமிழ்த்துறை வகுப்பறையில் நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். மாணவ மாணவியர்கள் பாடினார்கள். ஆடினார்கள். பேசினார்கள். கடைசியாக வ.சுப. மாணிக்கனார் பேச எழுந்தார்.

சற்று ஓரத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “ஏய் தமிழ்த் துரோகி, இலால் முசுதபா வாஎன்றார்.

எங்கள் பேராசிரியர் என்னை அப்படித்தான் அழைப்பார். எனக்கு அன்றிருந்த தனித் தமிழ் இயக்கத்தில் எள் நுனி அளவு கூட உடன்பாடு கிடையாது.

எங்கள் பேராசிரியர் அதில் தீவிரமான பிடிப்பு உள்ளவர். இதனால்தான் அவர் என்னைத் தமிழ்த் துரோகி என்று செல்லமாக அழைப்பார். நான் அவருக்குச் செல்லமான மாணவன்.

நான் அவர் அருகில் சென்றேன். அவர் பக்கத்தில் என்னை அழைத்து என் கழுத்தில் அவர் கரத்தைப் போட்டு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். ஓரத்தில் இருந்த புகைப்படக்காரரை வேகமாக அழைத்து, “இப்படியே படம் எடு, இப்படியே படம் எடுஎன்று சத்தமாகச் சொன்னார். புகைப்படம் எடுக்கப் பட்டது.

சிதம்பரத்தில் உள்ள கெம்பு ஸ்டூடியோகாரர்கள்தாம் இந்தப் படங்களை எடுத்தார்கள்.

இவனுக்குக் கூட்டமாய் இருந்தால் பிடிக்காது. அது அவன் தத்துவம். எனக்கு இவனோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளணும். இது எனது ஆர்வம்.என எங்கள் பேராசிரியர் அந்தக் கூட்டத்தில் பேசினார்.
என் கண்கள் சற்று கலங்கின. டாக்டர் வ.சுப.மா அவர்கள், அவர் வாழ்வில் இப்படி நடந்திருப்பார்களா? என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் கெம்பு ஸ்டூடியோவில் என் உறுதிபாட்டின்படி அந்தப் புகைப் படத்தை நான் கடைசிவரை வாங்கவே இல்லை. (அந்த வேதனை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் என்னை உறுத்துகிறது).

பின்னர் 63 மாணவர்களுக்கும் குரூப் போட்டோ தரப் பட்டது. சிதம்பரத்தில் என் அறையிலேயே அதைப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மாப்பிள்ளை கலைமணி இல்லத்தில் அந்த குரூப் போட்டோவைப் புத்தகக் குப்பைகளுக்கு நடுவே கண்டெடுத்தோம். அந்தப் புகைப்படத்தில் நான் இல்லை. முதலாமாண்டு எங்களோடு படித்த இன்னும் இருவரும் அந்தப் படத்தில் இல்லை. அந்த இருவரையும் இன்றைக்கும் நினைக்கும் பொழுது ஒரு வேதனையாக வந்துவந்து போகிறார்கள்.

அந்த இருவரும் எங்கள் இரண்டாமாண்டிலேயே எங்களை விட்டுப் போய் விட்டார்கள். போய் விட்டார்கள் என்றால் தேர்வில் தோற்றுப் போய்விட்டார்கள் என்பது அல்ல. வாழ்வைத் தொலைத்துப் போய்விட்டார்கள்.

அண்ணாமலைத் தெற்கு இருப்பில் வாழ்ந்தவன் சோமு. எங்கள் புலவர் வகுப்பிலேயே அவன்தான் சின்னப் பயல். என் மீது , கலைமணி, பாண்டியன், ராமானுஜம் மீதெல்லாம் ஆழமான நேசம் வைத்தவன். அவன் மீது எங்களுக்கும் அழுத்தமான அன்பு உண்டு.

அவனுக்குத் தந்தை உண்டு. தாய் இல்லை. அவன் அண்ணனுக்குக் கடந்த இரண்டாண்டுக்கு முன்னால்தான் திருமணம் நடந்தது. அண்ணிதான் அவர்கள் வீட்டுத் தலைமைப் பெண்மணி. ஆனால் அந்த இளம் வயது அண்ணிக்கு அந்தக் குடும்பத்தில் சோமுவையும் அவன் அப்பாவையும் அதாவது கொழுந்தனையும், மாமானாரையும் பிடிப்பதில்லை.

மாமாவை வெளிப்படையாக வருத்த முடியாது. கொழுந்தனைச் சித்திரவதைப் படுத்தலாம். நமது சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கிறது.
சோமுவைத் தினம் தினம், எச்சில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், துணிமணிகளைத் துவைப்பதற்கும், இல்லத்தைக் கூட்டிப் பெருக்குவதற்கும், முற்றத்தில் கோலமிடுவதற்கும் அந்த இளம் அண்ணி கட்டளைப் பிறப்பித்து இருந்தார்.

இந்தத் தொழில்களில் ஏதும் அவமானமில்லை. இதை நீதான் செய்ய வேண்டும்என்று சொல்வதுதான் கேவலமானது.

சோமுவின் தந்தையால் அந்த வயோதிகத்தில் இதைத் தடுக்க முடியவில்லை. அவன் அண்ணன், மனைவியை மீற வாய்ப்பில்லை. சோமுவுக்கு வேதனையும் நெருக்கடிகளும் அதிகமாகிக் கொண்டே வந்தன.

சோமு அதிகப்படியான வேதனைப் படும்பொழுதெல்லாம் சிதம்பரம் வெல்லப் பிறந்தான் தெருவில் இருந்த என் அறைக்கு ஓடி வந்துவிடுவான். நான் அவனுக்கு ஆறுதல் கூறி ஏதாவது ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்று அவனைச் சற்று மாற்றி அவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்.

இரண்டாமாண்டு படிக்கும் பொழுது ஒரு நாள் மதியம், கலைமணி, பாண்டியன், நான் வடுகநாதன் தியேட்டரில் சினிமாப் பார்க்கச் சென்று விட்டோம்.

நண்பன் சோமு, தாங்கிக் கொள்ள முடியாத வேதனையால் துடிபட்டு வழக்கம் போல என் அறைக்கு ஓடி வந்திருக்கிறான். எங்களில் எவரும் அங்கு இல்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை? அவன் இல்லத்திற்கு திரும்பச் சென்று இருக்கிறான்.

அங்கே அவன் அண்ணன், அவன் மனைவியின் சொல்லைக் கேட்டு அவனை அடித்து துவம்சம் பண்ணி இருக்கிறார். சோமுவும், கொடுமை தாங்காது நான் ஹிலால் அறைக்குத்தான் போனேன் போனேன்என்று கூறி அழுது இருக்கிறான்.

அதன்பின், சற்று நேரம் வீட்டு திண்ணை ஓரம் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறான். பக்கத்தில் எங்கோ சென்று அரளிச் செடியில் இருந்து கொத்தாக அரளி விதையைப் பிடுங்கி வந்து அரைத்துக் குடித்து விட்டான். திண்ணையின் ஒரு ஓரத்தில் அப்படியே படுத்துவிட்டான்.

எப்பொழுது இறந்தான் என்று அவன் வீட்டாருக்கும் தெரியவில்லை. மாலையில் கடைக்குச் செல்ல அவனை எழுப்பும் பொழுதுதான் அவன் இறந்து கிடப்பது தெரிந்திருக்கிறது.

நாங்கள் வடுகநாதன் தியேட்டரில் சினிமாப் பார்த்துவிட்டு உளூர்ந்துப் பேட்டை சண்முகம் ஐயா அவர்கள் இல்லத்திற்கு இலக்கிய விமர்சனங்கள் நிகழ்த்தப் போய் விட்டோம்.

சோமுவைப் பற்றிய எந்தத் தகவலும் திங்கள் கிழமை காலைவரை எங்களுக்குத் தெரியவில்லை.

திங்கள் கிழமை பல்கலைக் கழக்த்திற்குச் சென்றோம். சோமு நேற்றே முடிந்து விட்டான் என்ற தகவல் எங்களை அதிர வைத்தது. அதிலும் நேற்று மதியம் என் அறைக்கு ஓடி வந்து, நாங்கள் இல்லாததால் திரும்பி, அவன் இல்லம் வந்து, பட்ட வேதனையால் அரளி விதைக்கு ஆயுளை இழந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்ட போது எங்கள் பாதங்களுக்குக் கீழிருந்த பூமி நழுவது போன்ற ஒரு தோற்றம். உள்ளபடியே என் தலை சுற்றியது.

பேராசிரியர் அறைக்குச் சென்று இரண்டாமாண்டு புலவர் வகுப்பிற்கு விடுமுறை இன்று விடவேண்டும். நாங்கள் எல்லாம் சோமுவின் வீட்டிற்குச் சென்று அவனைக் கடைசியாக வழியனுப்பிவிட்டு வருகிறோம் என்று கூறினோம்.

வ.சுப.மா அவர்கள் அனுமதி தந்து, விடுமுறையும் தந்து எங்களை அனுப்பிவிட்டார்கள். மாணவ மாணவியர் அனைவரும் சோமுவின் அந்தச் சின்ன இல்லத்திற்குச் சென்றோம்.

அவன் திரும்ப முடியாத பயணத்திற்குப் புறப்பட்டு விட்டான். அவன்கூட கொஞ்ச தூரத்திற்குச் சென்று வழி அனுப்பிவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.

கலைமணி வீட்டில் சமீபத்தில் கண்டெடுத்த குரூப் போட்டோவில், “சோமு, அந்தப் புகைப் படத்தில் நின்று இருந்தால் எந்த இடத்தில் நின்று இருப்பான்?” கலைமணி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான். கலைமணி விழிகள் பனித்தன. சோமு இங்குதான் நின்றிருப்பான் என்று ஒரு வெற்றிடம் என் கண்ணில் பட்டது.

அதே புலவர் இரண்டாம் ஆண்டு. நண்பன் சோமு மரணத்திற்குப் பின்னால் இரண்டு மாதங்கள் கழித்து நடந்திருக்கவே கூடாத ஒரு வேதனை நடந்துதான் முடிந்தது.

சிதம்பரத்தில் மௌனசாமி மடத்திற்கு அண்டையில் உள்ள லால்பேட்டைத் தெருவில் மாணவி அன்னபூரணி குடும்பம் இருந்தது. பேணுதலான பிராமணக் குடும்பம். எங்கள் வகுப்பில் அட்டெண்டென்சில் முதல் பெயர் அன்னபூரணி பெயர்தான்.

அன்னபூரணி என்ற மாணவி புலவர் வகுப்பில் படிக்கிறாள் என்பதே எல்லோருக்கும் ஒரு ரகசிய தகவலாகத்தான் இருக்கும். அப்படி ஒரு அமைதி. ஒரு ஒடுக்கம். ஒரு ஒதுக்கம்.

மூன்று மாணவிகள் ஒன்றாகத்தான் வகுப்பிற்கு வருவார்கள். பத்மாவதி, இந்திரா, அன்னபூரணி. இவர்களுக்கு எங்கள் வகுப்பில் ஆயுத எழுத்து என்று ஒரு பட்ட பெயர் உண்டு. இவர்களில் ஒருவர் வகுப்பிற்கு வரவில்லையென்றாலும் மற்ற இருவரும் வர மாட்டார்கள்.

வெளியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு வரும் மாணவிகள் மதியம் உணவருந்த பெண்கள் விடுதிக்கு பக்கத்தில் மரங்கள் நிறைந்த கிரவுண்டும் கட்டிடமும் உண்டு. அங்குதான் மாணவியர் மதியம் உணவு அருந்துவார்கள்.

எங்கள் வகுப்பு ஆயூத எழுத்துக்கள் எந்த மாணிவிகளோடும் கூட்டாக அமர்ந்து உண்ணாமல் தனியே ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்வார்கள்.

அப்படி தனித்துப் போய் அமர்ந்து உண்பதற்கு அவர்கள் சொல்லிய காரணம் சக மாணவியருக்கு மகா எரிச்சலைத் தந்தது.

இந்த மூவரும் சைவர்களாம். ஆச்சாரம் பேணுபவர்களாம். பிற சாதி மாணவியரோடு கலந்து உண்ண மனம் ஒப்பாதவர்களாம்.

இந்தத் தகவல் எங்கள் வகுப்பில் பரவ ஆரம்பித்தது. எல்லோருக்குமே அந்த ஆயுத எழுத்துகளுக்கு மேல் ஒரு வெறுப்பு இருந்தது.

அதேபோல ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவு 12 மணிக்கு மேல், லால் பேட்டைத் தெருவில் உள்ள தன் வீட்டில் மண்ணெண்ணெய் கேனில் இருந்த மண்ணெண்ணெயை வயிறு முட்டக் குடித்துவிட்டு அன்னபூரணி தன் படுக்கைக்குச் சென்று படுத்து விட்டாள்.

நேரம் கடக்க கடக்க வேதனையில் துடித்து இருக்கிறாள். ஆனாலும் அதை வெளிப்படுத்தாமல் மறைத்து விடிகாலை ஐந்து மணியைத் தொட்டு இருக்கிறாள். அந்த நேரம் அன்னபூரணியின் அன்னை அவளை எழுப்ப, அன்னபூரணி ஏதோ மாதிரி படுத்து இருக்க, இல்லத்தில் கூப்பாடு எழுந்து விட்டது.

அன்னபூரணி பயணப்பட்டு விட்டாள். எங்கள் வகுப்பறையில் அட்டண்டன்சு முதல் பெயர் முற்றுப் பெற்று விட்டது. திங்கள் காலை நாங்கள் பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறோம். எங்கள் வகுப்பு ஆயுத எழுத்துக்களில் இரு எழுத்து வந்து தகவலைச் சொல்லி கதறிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் குடித்தும் மரணிக்கலாம் என்று அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் அறைக்குச் சென்றோம். தகவல் தந்தோம். நாங்கள் ஒட்டு மொத்த வகுப்பும் அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குப் பயணமானோம்.

சிதம்பரம் லால்பேட்டைத் தெருவில் அன்னபூரணி இல்லத்தின் முன் ரோடு முழுக்க நாங்கள்தான் நின்று இருந்தோம்.

அங்கே நாங்கள் தெரிந்த தகவல்கள் எங்களை கசக்கிப் பிழிந்தது. அன்னபூரணியின் அந்தப் பிராமணக் குடும்பம் வறுமையைத் தவிர எதையுமே சந்திக்காத குடும்பம். அவள் இல்லம், பஞ்சம் பசியைத் தவிர காற்றுக்கூட உள்வர முடியாத ஒரு இறுக்கமான இல்லம்.

அன்னபூரணியுடன் உடன்பிறந்த பெண்கள் பலர். அன்னபூரணிதான் படிக்க வந்திருக்கிறாள். எங்கள் வகுப்பு ஆயுதஎழுத்துக்கள் தனியே இருந்து மதிய உணவை சாப்பிட்டதின் ரகசியமும் அன்றுதான் தெரிந்தது.

அன்னபூரணி, பல நாட்கள் வெறும் டிபன் பாக்சை மட்டும்தான் எடுத்து வருவாளாம். மற்ற மாணவிகளுக்கு இது தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தனியே மரத்தடியில் அமர்ந்துக் கொள்வார்களாம்.

அன்னபூரணி, தன் அணுக்கமான இரண்டு தோழிகளிடமும் அவர்கள் கொண்டு வரும் மதிய உணவைச் சாப்பிட மாட்டாளாம். அதற்கு அவள் நாங்கள் பிரமணாள்என்று தட்டிக் கழித்து விடுவாளாம். ஆதாவது அன்னபூரணி சாஸ்திரத்தைப் பேணவில்லை. தனக்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஒரு நிலைப்பாட்டை, தோழிகள் மத்தியிலும் கடைப் பிடித்து இருக்கிறாள்.

வள்ளுவன் சொல்வான்,

ஆவிற்கு நீரென் றிரப்பினும்தன் நாவிற்கு
இரவின் இழிவந்த தில்

தங்கள் வீட்டு பசு மாட்டிற்குப், பக்கத்தில் வீட்டில் கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என்று பிச்சை கேட்பது கூட தன் நாவிற்கு நிகழ்த்தப்படும் இழிவானது என்பது இந்தக் குறளின் கருத்து. இப்படி ஒரு வெற்று கௌரவப் போர்வையை அன்னபூரணி தன் வாழ்வாக்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.

பசியையே சந்தித்துக் கொண்டிருந்த அன்னபூரணி அந்த இரவு வயிறு நிரம்ப மண்ணெண்ணெய் அருந்தி இருக்கிறாள். அன்னபூரணி வயிறு நிரம்பியது. ஆனால் அந்த மண்ணெண்ணெய், அவள் வீட்டில் இருந்த பலருடைய பசியைத் தீர்க்க வாய்ப்பில்லாமல் அன்னபூரணியோடேயே ஆவியாய் கலந்து விட்டது.

பெயரோ அன்னபூரணி.

அவளுக்கோ மண்ணெண்ணெய் நிவாரணி!.

கலைமணி இல்லத்தில் அன்று நாங்கள் கண்டு எடுத்த குரூப் போட்டோவில் அன்னபூரணி இன்று இருந்தால் அவளுக்கு எந்த இடம்? என்று நான் கேட்டேன். ஆயுதஎழுத்தில் இரு எழுத்து அமர்ந்து இருந்தது. அந்த இருவருக்கு மத்தியில் என்று கலைமணி கை காட்டினான். அந்த இடத்தில் எனக்கு நெருக்கடிதான் தெரிந்தது.

சுருக்கமாக அந்தப் புகைபடத்தில் சோமு, அன்னபூரணி இல்லை. அவர்கள் இல்லவே இல்லை. நானும் அந்தப் படத்தில் இல்லை. ஆனால் படத்திற்கு வெளியே இன்றும் இருந்து கொண்டு இருக்கிறேன்.

இல்லாத நண்பர்களுக்கு இந்தத் தினம்..!

No comments:

Post a Comment