மௌனம் பேசுகிறது..!
சிதம்பரம் இரண்டு பெரும் காரணங்களால் தமிழகத்து வரலாற்றில் தனித்து தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஒன்று தில்லைப் பொன்னம்பலத்தில் நடனமாடும் நடராசப் பெருமான் திருக்கோயில். இது இந்து தர்ம பக்தித் தலத்தில் சிறப்பானது.
மற்றொன்று தில்லைக்குத் தென்னெல்லையில் எழுந்து நிற்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
இது கல்வி ஞானத்தின் கலங்கரை விளக்கமாகப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது ஒரு காலம்.
“தில்லைப் பதிவுடையான் சிற்றம் பலத்தில்
அல்லும் பகலும்நின் றாடுகின்றான்! – எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து”.
நடராஜப் பெருமான் கோயிலையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இப்படிப் பதிவு செய்து இருக்கிறார்.
தில்லையில் நடராசர் குதித்தாடும் நடனத்திற்கு உரிய ஆனந்தக் களிப்பு என்ன தெரியுமா? ஊர் எல்லையிலே அண்ணாமலையரசர் அமைத்து இருக்கும் பல்கலைக் கழகத்தைக் கண்டுதான் என்று கவிமணி பதிவு செய்து இருக்கிறார். இது ஒரு கவிதையின் அற்புதக் கற்பனை.
இந்த நடராசப் பெருமான் கோயிலின் தெற்குச் சன்னதிக்கு நேர் எதிரே ஒரு நீண்ட தெரு வளைந்து நெளிந்து செல்லும். அது சபாநாயகர் தெரு. அந்தத் தெருவில் வள்ளல் பச்சையப்பர் மேல்நிலைப் பள்ளி இருக்கும். அதையும் தாண்டினால் மௌனசாமிகள் மடம். அதை ஒட்டி நந்தனார் மேல்நிலைப் பள்ளி. அதுவரை அந்தத் தெருவுக்குச் சபாநாயகர் தெரு என்று பெயர்.
அதைத் தாண்டினால் அதே தெருவுக்குச் சீர்காழி ரோடு என்று பெயராகிவிடும். அம்மாபேட்டை, வல்லம்படுகை, கொள்ளிடம் அப்படியே சீர்காழிக்கு அந்த ரோடு சென்று விடும்.
சபாநாயகர் தெருவில் இருக்கும் மௌனசாமிகள் மடம் எனக்கும் என் தில்லை நண்பர்களுக்கும் பல நேரங்களில் ரசனையான வாசஸ்தலமாக இருந்திருக்கிறது.
ஆம். மௌனசாமி மடத்தில்தான் சுந்தரமூர்த்தி தங்கி இருந்தான்.
நாகர்கோயில் பேராசிரியர் ஆல்பென்ஸ் நதானியல், புலவர் சங்கரன், இன்ஞ்சினியர் செல்வ குமார், புலவர் தட்சிணாமூர்த்தி, புலவர் தில்லைக் கலைமணி, ஹிலால் முஸ்தபா, புலவர் நாகலிங்கம், எழிலன், தகடூர் பாவாணன் இப்படி ஒரு நண்பர் பட்டாளம் மௌனசாமி மடத்தில் நடமாடிக் கொண்டு இருந்த காலம்.
மௌனசாமி மடத்தின் மடாதிபதி, மகான் அவர்களின் தம்பி மகன்தான் எங்களின் சுந்தர மூர்த்தி. அந்த மடத்தில்தான் அவன் தங்கி இருப்பான். அவனோடு நாங்களும் கிடப்போம். மடாதிபதி அவர்களுக்கு நாங்கள் செல்லப் பிள்ளைகள்.
நாங்கள் எல்லோருமே தங்கி விவாதித்து மகிழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய ஆலமரம் உளுந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா இல்லம்தான்.
மாலையில் பல்கலைக் கழகம் முடிந்து எங்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததின் பின், எங்கள் சங்கப் பலகையாகக் கனகசபை நகரில் இருந்த சண்முகம் ஐயா வீட்டு மாடி மாறி விடும். இந்தச் சங்கப் பலகை ஒவ்வொரு நாளும் நிறைவு பெற இரவு 12 அல்லது 1 ஆகும். இரவு உணவு ஐயா வீட்டில் தான் அனைவருக்கும். ஐயா மகளார் பள்ளிக்கூட மாணவி தேன்தமிழ்தான் உணவு பரிமாறுவாள்.
மாலை 6 மணி அளவில் ஒவ்வொரு நாளும் ஒரு அதிசயம் நடக்கும். எங்கள் நண்பன் சுந்தர மூர்த்தி, மௌனசாமி மடத்தில் இருந்து நன்றாகக் குளித்து செக்கச் சிவந்த குங்குமம் வைத்து, பளீரென்ற வெள்ளை சட்டை வேட்டி அணிந்து, மடத்தில் உள்ள மனோரஞ்சித மலரை கையிலேந்தி கனக சபை நகர் வந்து ஐயா வீட்டிற்குள் நுழைவான். சுந்தரமூர்த்தி நெருப்பு வண்ணச் சிவப்பன்.
ஐயாவும் சுந்தர மூர்த்தி வருகைக்கு எதிர்பார்ப்பில் இருப்பார். சுந்தரமூர்த்தி அந்த ஒற்றை மனோரஞ்சிதப் பூவை ஐயா கையில் கொடுப்பான். அந்த இல்லம் எங்கும் மணம் பரவி நிற்கும். இது எல்லா நாளும் நடக்கும். மழை, இடி, மின்னல் எது வந்தால் என்ன?, இந்த நிகழ்வு மட்டும் தடை படுவதில்லை.
இதே போல் ஊரின் எல்லையில் வெல்லப் பிறந்தான் முதலித் தெரு 10 ஆம் எண் இல்லத்தின் முன்புறத்தில் ஒரு மளிகைக் கடை போல கதவு மடித்து மடித்து எப்போதும் திறந்து இருக்கும் அறை, நான் வாடகைக்கு எடுத்து இருந்த அறை. அந்த அறை முழுவதும் புத்தகங்கள்தான் தழும்பித் தழும்பி வழிந்து விழுந்து கொண்டு இருக்கும்.
தமிழ் இலக்கியங்கள், அரசியல் புத்தகங்கள், தத்துவ நூற்கள், வரலாற்று நூற்கள், தினசரி இதழில் தினமணியும் தினத்தந்தியும், தற்கால இலக்கியங்கள், புதுமைப்பித்தன், மௌனி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நகுலன், தஞ்சை பிரகாஷ், இன்னோரன்னோர் எழுத்துகள், வாரப் பத்திரிக்கைகள், ஆனந்தவிகடன், கல்கி, மாத இதழ்கள் தீபம், கண்ணதாசன், கசடதபற இப்படி அந்த அறையில் எங்கு திரும்பினாலும் புத்தகங்களைத்தான் பார்க்க முடியும். இவைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் அமர்ந்து கொண்டு இருப்போம், நடந்து கொண்டும் இருப்போம்.
அந்த அறையில் படுக்க விரிப்பும் கிடையாது. தலைக்குத் தலையனையும் கிடையாது. எல்லாமே எங்களுக்குப் புத்தகங்கள்தான்.
சிதம்பரத்தில் மழைக்காலம் படுமோசமானது. நல்ல கட்டிடங்களே நீரொழிக்கில் நனைந்து கிடக்கும்.
என் அறையோ, யாரோ செய்த சத்தியத்தில் இருக்கும் அதிசயம்.. பெய்கிற மழையெல்லாம் என் அறைக்குள் வந்து அடையாளம் காட்டிவிட்டுதான் வெளியே செல்லும்.
இந்த மாதிரி நேரங்களில் ஆபத்துபாந்தவன் சுந்தரமூர்த்திதான். மடத்தில் இருக்கும் தார்ப் பாய்களை மடித்து சுருட்டி சைக்கிளில் பின்வைத்து எடுத்து வந்து எங்கள் அறையில் போர்த்தி புத்தகங்களைப் பாதுகாக்கும் புண்ணியவான்.
எங்கள் சொந்த ஊரிலிரிந்து எங்களுக்கு மாதமாதம் வரும் பணம், முதல் வாரத்திலேயே தீர்ந்து விடும். எங்கள் அறையில் புத்தகமாக அவைகள் பல்லிளித்துக் கொண்டு கிடக்கும்.
நானும் நண்பர் ஆல்பென்ஸும் பசியோடு அறையில் படுத்து கிடப்போம். எப்படியோ இது சுந்தர மூர்த்திக்குத் தெரிந்து விடும். சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு வருவான்.
அவனைப் பார்த்தவுடன் எனக்கும் ஆல்பென்ஸுக்கும் ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். எழுந்து உட்கார்ந்து படு ஜோராக அவனை வரவேற்போம்.
அந்த மாதிரி நேரங்களில் சுந்தர மூர்த்தி என் அறைக்குள் வரவே மாட்டான். வாசலில் நின்றே சைக்கிளில் அமர்ந்தவாறு,
“ஏண்டா பரதேசி பசங்களா, என்ன விஷயம்?” என்பான்.
ஆன்பென்ஸ் இந்த மாதிரி நேரங்களுக்கு என்றே ஒரு கும்பிடு வைத்திருப்பார்.
“சாமீ, பசிடா” என்று கத்துவார்.
சைக்கிளை விருட்டென்று எடுத்து கொண்டு சுந்தரமூர்த்தி சென்று விடுவான். எங்களுக்குத் தெரியும் எங்களுக்கு ரூபாய் கிடைத்துவிடும் என்று.
சிறிது நேரம் கழித்து சுந்தரமூர்த்தி சைக்கிளில் அமர்ந்து எங்கள் வாசலில் நிற்பான்.
“இந்தத் துலுக்க பயலும், இந்தக் கிருத்துவ பயலும் உருப்பட மாட்டானுவோ” என்று கூறிக் கொண்டே அறைக்குள் வராமலேயே ஐம்பது ரூபாய் நோட்டை தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவான்.
எப்பொழுதெல்லாம் எங்களுக்குப் பசிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கும்.
யாரும் பசித்திருப்பதை சுந்தரமூர்த்தியால் தாங்கிக் கொள்ள முடியாது.
எங்கள் சுந்தரமூர்த்தி சாப்பிடுவதே ஒரு இலக்கியம் போல சுவையானது. தரையில் அமர்ந்து பெரிய வாழை இலையை விரித்து நீர் தெளித்து, அந்த நீர் முத்துமுத்தாக இலையில் உருண்டு கிடக்க, சாதத்தை இலையில் கொட்டி, இலை ஓரத்தில் பச்சடி, பொரியல், அவியல், வடை, ஊறுகாய் கொலுவிருக்க, சாதத்தின் நடுவே குழி பறித்து சாம்பாரை ஊற்றி பிசைந்து அதை உருண்டையாக்கி அவன் கை, அவன் வாய்க்கு அனுப்புவதே ஒரு தனி அழகு.
மறுமுறையும் அதே அளவு சாதத்தை இலையில் போட்டு நடுவில் குழி பறித்து, ரசம் ஊற்றி பிசைந்து சாத உருண்டையை ஒரு சடுகுடு கணக்கில் தூக்கி வாய்க்குள் தள்ளுவான். மீண்டும் இலையில் சாதம். நடுவே குழி பறிப்பு. கட்டித் தயிர். கொஞ்சம் கெட்டியான மோர் கலந்து பிசைந்து உப்புத் தூவி உருண்டை செய்து ஊறுகாய் தடவி அந்த உருண்டைகளை அவன் அனுப்புவது ஒரு தனிக் கலை.
இதற்குப் பின் அந்த இலையில் எதுவுமே இருக்காது. கழுவி விட்ட சுத்தமாக காட்சி தரும். அதற்குப் பின் இருக்கையில் இருந்து எழுவான். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுவது என்பது அவனுக்கு என்றைக்கும் ஆகாதது. இருந்த நிலையில் இருந்து கையை ஊன்றாமல் ஒரு மாதிரி ஜம்ப் பண்ணுவான். எழுந்து விடுவான். இதைச் சுந்தரமூர்த்தியால் மட்டும்தான் செய்ய முடியும்.
அவனைச் சார்ந்திருப்பவர்களும் இப்படி உணவு அருந்த வேண்டும் என்று மனப்பூர்வமாக எண்ணக் கூடியவன் சுந்தரமூர்த்தி.
படிப்பு முடிந்தது. சென்னைக்குப் பணிபுரிய சுந்தரமூர்த்தி வந்துவிட்டான்.
மண்ணடியில் உள்ள தம்புச் செட்டி தெருவில் இருக்கும் முத்தையால் பேட்டை மேல் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக வேலையில் சேர்ந்துவிட்டான்.
இந்தப் பள்ளியில்தான் நான் ஆறாவது வகுப்பு படித்தேன். இந்தப் பள்ளியின் தலைமைத் தமிழாசிரியர் சுந்தரமூர்த்திக்கு பெரியப்பா. இதெல்லாம் நான் படித்தபொழுது தெரியாது. சுந்தரமூர்த்தியையே தெரியாது. என்னுடைய இரண்டாவது அண்ணன் அப்துர் ரஹ்மான் ஃபாரூக் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். அவனுக்கும் தமிழாசிரியர் அவர்தான்.
அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் பன். பன் வாத்தியார் என்றால்தான் தெரியும். இந்த பன் வாத்தியார் மகன் சேகர் அவன் ஆறாவது வகுப்பில் என்னோடு படித்தான். இந்த உறவுமுறைகள் எல்லாம் எப்படியோ எனக்கு ஏற்கனவே நிகழ்ந்து இருக்கிறது.
சுந்தரமூர்த்தியின் பெரியப்பா ரிடயர்ட் ஆகிறார். அந்த இடத்தில் இவன் வந்து பணியில் அமருகிறான.
ஒரு மாலை வேளை. என் நண்பன் சுந்தரமூர்த்தியைப் பார்க்க முத்தையால் பேட்டை பள்ளிக்கு வந்தேன். பள்ளி முடிந்துவிட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறி கொண்டிருந்தனர்.
பள்ளி வாட்ச்மேனிடம், புதுத் தமிழாசிரியர் சுந்தரமூர்த்தியைப் பற்றி கேட்டேன்.
“அவர் போய் பத்து நிமிஷம் ஆச்சு சார்” – என்றார் வாட்ச் மேன்.
“அட்ரஸ் தெரியுமா?” என்றேன்.
“வீடு தெரியாது, ஆனால் தெரு தெரியும். புது தெருவில்தான் அவர் இருக்கிறார். நம்ம ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பையன்கள் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரிடமாவது கேட்டால் காட்டுவார்கள்” – இது வாட்ச்மேன் பதில்.
நான் மண்ணடியில் புகுந்து புது தெருவிற்குள் நுழைந்தேன். யூனிஃபார்ம் மாணவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பையனிடம்,
“புதுத் தமிழாசிரியர் வீடு எங்கே?” என்று கேட்டேன்.
அந்த பையன் , “எனக்கு தெரியும்” என்று அழைத்துச் சென்றான். அந்த பையன் வகுப்பிற்கு சுந்தரமூர்த்திதான் பாடம் எடுக்கிறானாம். ஒரு பத்தடி நானும் மாணவர்களும் சென்று இருப்போம். எனக்கு வழி காட்டி வந்த மாணவன் என் கையைப் பிடித்து நிறுத்தி , “டேய் நீ ஹிலால்தானே!” என்றான்.
“டேய் என்னைத் தெரியலயா? ஆறாம் வகுப்பு நீயும் நானும் ஒன்னாப் படித்தோமே” என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆறாவதுக்குப் பிறகு பள்ளியில் நான் படிக்கவே இல்லை. இந்த எட்டு ஆண்டுகளாக அவன் படித்துக் கொண்டே வருகிறான். எப்படியோ தட்டுதடுமாறி பத்தாம் வகுப்பு படிக்கிறானாம்.
சுந்தரமூர்த்தியின் வீடு வந்துவிட்டது. நான் சத்தம் கொடுத்தேன். என்னைப் பார்த்துவிட்டு சுந்தரமூர்த்தி ஓடி வந்தான். என்னுடைய பழைய பள்ளி தோழன் மெதுவாக நழுவினான். அவனைப் பிடித்து நிறுத்தி,
“டேய் சுந்தரமூர்த்தி, இவன் உன் மாணவன். ஆனால் எனக்கு இவன் வகுப்புத் தோழன்” என்றேன்.
அன்று நாங்கள் மூவரும் சிரித்த சிரிப்பு , இன்றைய தினத்தில்கூட ஒரு ஆனந்த எக்களிப்புதான்.
இதுவரை நண்பன் சுந்தரமூர்த்தியை நாங்கள், ‘அவன்’ என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. “டேய்” என்றும் அழைக்கலாம். அந்த உரிமை எங்களுக்கு உண்டு.
ஆனால் இனிமேல் அந்த உரிமையை நாங்கள் எப்பொழுதும் மேற்கொள்ள கூடாது.
ஆமாம். சென்னையில் இரண்டாண்டுகள் பணிபுரிந்து விட்டு சிதம்பரத்திற்கு வந்து மௌனசாமி மடத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்று விட்டார் சுந்தரமூர்த்தி.
இந்த மடாதிபதியை நாங்கள் இன்று வரை எங்கள் தோழராக அல்ல. எங்களின் மரியாதைக்குரியவராக மதித்து வருகிறோம்.
எங்களுக்கெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்திய தமிழ்ப் பேரறிஞர் க.வெள்ளைவாரணார், சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் ஆசிரியர். அது மட்டுமல்ல. அவருக்குச் சிறிய தந்தையார் உறவுமுறை.
ஆனால் மௌன சாமி மடத்தின் அதிபதியாகப் பொறுப்பேற்ற பின், ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் பாதம் தொட்டுப் பேராசிரியர் க.வெள்ளைவாரணார் வணங்கினார்.
ஒரு மடாதிபதியாருக்கு, அந்த நிலைக்கு வந்த பின்னால் உறவுகள் கிடையாது. உரிமைகள் கிடையாது. எல்லாமே சமம்தான்.
சன்னியாசத்தின் அடையாளம் சகலவற்றுக்கும் மேலானது என்கிற இந்து தர்மத்தை நாங்கள் அங்கே கண்டோம்.
அண்ணாமலையில் படிக்கிற காலத்தில் சண்முகம் ஐயா அவர்கள், “சாமி” என்று சுந்தரமூர்த்தியாரை அழைப்பார். நாங்களும் ,”சாமி” என்றே அவரை அழைத்தோம். தமிழ்த் துறை சக மாணவர்கள், மாணவியர்கள் எல்லோருமே அவரை அப்படித்தான் அழைத்தோம்.
விளையாட்டாக அன்று அழைத்த அந்த அழைப்பு அவர் வாழ்வாகவே மாறிவிட்டது.
இன்றைக்கும் சிதம்பரம் செல்லும் பொழுது மௌன சாமி மடத்தில் சுவாமிகளைச் சந்திப்பதும் அவரோடு உரையாடிக் கொண்டிருப்பதும் பழைய நினைவுகளை வடு மாறாமல் பகிர்ந்து கொள்வதும், அங்கே உணவருந்துவதும் எங்கள் நடைமுறையாக நீடித்துக் கொண்டு இருக்கிறது.
எங்களுடைய சக தோழர், ஒரு மடத்தின் தலைவர் என்ற பூரிப்பை நாங்கள் பூரணமாக அங்கீகரித்து ஆனந்திக்க முடிகிறது. எங்களுக்கு மத்தியில் மதங்கள், சாதிகள், சமயப்பிரிவுகள் புல் நுனி அளவில் கூட குறிக்கிட்டதே இல்லை.
கனகசபை நகர், ஐயா வீட்டு மாடி அன்று எப்படி எங்களுக்குள் ஐக்கியத்தைப் பரப்பியதோ, இன்று வரை அது மௌனசாமி மடத்தின் உள்ளும் வேரூன்றி விருட்சமாக வியாபித்து இருக்கிறது.
No comments:
Post a Comment