ஞான விருட்சத்தின் கீழ்
நச்சுக் காளான்கள்!!!
1977-க்கு முன்பு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெறுமனே பாடத்திட்டங்களைக் கூட்டிப் பெருக்கி மாணவ, மாணவியர் மூளைக்குள் திணித்து வைத்த சடங்குக் கூடமாக இருந்ததில்லை.
மேலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு தனிப்பெரும் அந்தஸ்து உண்டு. கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து கல்வி பயின்ற வாய்ப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இருந்ததில்லை. அதிலும் பல்துறைச் சார்ந்த கல்வி பயிலல் இங்கு மட்டும்தான் இருந்தது.
ஒரு பிரம்மாண்டமான ஞான விருட்சத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த விருட்சம் பல நூறு விழுதுகளைப் பூமியில் ஆழப்பதிவு செய்து நிமிர்ந்து நின்ற கோலத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன உண்மையும் சத்தியமானது. அதே நேரம் அந்த உன்னத விருட்சத்தின் கீழ் நச்சுக் காளான்களும் குடை விரித்துக் காட்சி தந்தன என்பதும் சத்தியத்திலும் சத்தியமானது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் கலாச்சாரப் பண்பாட்டுத் தூறல்களும், அண்டை மாநில நடைமுறைகளும், பக்கத்து ஈழதேசத்தின் வாழ்க்கை அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்சிப்படும் இடமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்தான்.
இந்தக் கலைக் கழகம் பல நூறு ஆளுமைகளைத் தமிழகத்திற்குத் தந்து இருக்கிறது. அந்தப் பட்டியலை இங்கு விரித்து வைக்க முடியாது. அந்த அளவுக்கு விசாலமானது.
தோழர் பாலதண்டாயுதத்தின் ஆளுமை ஒரு காலகட்டம். மதியழகன், அன்பழகம் போன்ற ஆளுமைகளின் வெளிப்பாடு ஒரு காலகட்டம். தோழர் புலவர் கலியபெருமாள், தோழர் மாணிக்கம் போன்ற ஆளுமைகள் இன்னொரு காலகட்டம். பண்ருட்டி ராமச்சந்திரன், தோழர் தியாகு, தோழர் ஆ.சிவ சுப்பிரமணியன், தோழர் ரங்கசாமி, வேலூர் கிருஷ்ணன் அண்ணாச்சி, தர்மபுரி புலவர் நாகு நக்கீரன், நாகர்கோயில் டாக்டர்.மு.ஆல்பென்ஸ் நதானியல் போன்ற ஆளுமைகளின் காலகட்டங்கள் ஒரு விதமானப் போராட்டக் காலகட்டம்.
இந்தப் பட்டியலில் பிந்தைய கடைசிக் காலகட்டத்தில் என் போன்றவர்களுக்கும் ஒரு சின்னப் பங்கு இருந்தது.
1969 – ஆம் ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அந்த ஞானம் தந்த பூமியில் நடந்த இழி செயல்களைப் பதிவு செய்ய நான் தயக்கப் படவும் இல்லை. வெட்கப் படவும் இல்லை.
தற்போது தக்கலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட்டு அலுவலகத்தின் முழுப் பொறுப்பைக் கவனித்து வரும் தோழர் ரங்கசாமி, நாகர் கோயில் பயோனியர் குமாரசாமி கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த மு.ஆல்பென்ஸ் நதானியல், வேலூர் கிருஷ்ணன் அண்ணாச்சி போன்றவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியில் நடைமுறைப்பட்டு வந்த சமூக இழிவை எதிர்த்துப் போராடிய சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன.
பல்கலைக் கழக விடுதியில், தலித்து மாணவர்கள் பிற ஜாதிய மாணவர்களோடு அமர்ந்து உணவு உண்ண வாய்ப்பு மறுக்கப் பட்ட ஒரு நிலை இருந்தது.
தென்னார்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த, குறிப்பிட்ட ஜாதி மாணவர்களுக்கு அருகில் தலித்து மாணவர்கள் அமர்ந்து உணவு உண்ண முடியாது.
ஞானம் தந்த கல்விக் கூடத்தில் இந்த ஈனமும் நடைமுறையில் இருந்தது.
சக மாணவர்கள் ஜாதி குறித்து விலக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற உணர்வோடு ரங்கசாமி, ஆல்பென்ஸ் நதானியல், கிருஷ்ணன் அண்ணாச்சி போன்ற ஒரு நண்பர் வட்டாரம் செயலில் இறங்கியது.
ஒரு நாள் மதியம், விடுதி உணவு அறையில் ரங்கசாமி, ஆல்பென்ஸ் மற்றும் தோழர்கள் தங்களுடன் படித்த கருப்பையா, மதுரம் பன்னீர்செல்வம், சண்முகம் போன்ற தலித் சமுதாயத்தவர்களை உடன் அழைத்து வந்து, தங்களுடன் அமர வைத்து உணவைப் பரிமாறச் சொன்னார்கள். அங்கிருந்த சில ஜாதிய மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஒரு சினிமா சண்டைக் காட்சி அங்கே நிகழ்ந்தது.
விடுதி அடுக்களையில் இருந்த நீண்ட கரண்டிகள், அடுப்பெரிக்கப் பயன்படும் விறகுக் கட்டைகள், பாத்திரம் மூடிய தட்டுக்கள் இவைகள் ரங்கசாமி, ஆல்பென்ஸ் தோழர்களின் ஆயுதங்களாக மாறின.
இந்த நிகழ்வுக்குப் பின் தலித் மாணவர்களுக்குச் சில நம்பிக்கை வந்தது. தாங்கள் போராட வேண்டிய துணிச்சலுக்கு வந்துதான் தீர வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுக்கத் தொடங்கினர்.
இதற்குப் பின்னர் இந்த இழிநிலை ஒரு முடிவுக்கு வந்தது.
அடுத்தொரு சூழலும் அண்ணாமலையில் இருந்தது. தி.மு.க. கொஞ்சம் கை ஓங்கி இருந்த காலகட்டம் அது.
காங்கிரஸ் கதி மங்கி இருந்த நேரமும் அது.
மாணவக் காங்கிரஸ் கூட்டம் நடந்தால் தி.மு.க. மாணவர் அணிக்கு தீச்சுட்டது போன்ற வேதனை ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் புகுந்து தி.மு.க. மாணவர்கள் கலாட்டா செய்யத் தொடங்கினர். காங்கிரஸ் மாணவர்கள் கலங்கிப் போயினர்.
இந்த நேரத்தில் கம்யூனிஸ்டு மாணவர்கள் ஒரு முடிவு செய்தனர். காங்கிரஸ் கூட்டங்களில் தி.மு.க.வினர் தகராறு செய்தால் கம்யூனிஸ்டுகள் தலையிட்டு நிலைமையை சீர் செய்வது என முடிவு கட்டினர்.
காங்கிரஸ் மாணவர்களை அணுகி உங்கள் கூட்டங்களுக்கு நாங்கள் பாதுகாவல் தருகிறோம். நீங்கள் தைரியமாகக் கூட்டத்தை நடத்துங்கள். காங்கிரஸின் கோட்பாடுகள் எங்களுக்கு எப்போதும் உடன்பாடானதில்லை, ஆனாலும் உங்கள் கூட்டங்களைத் தடுப்பது அரசியல் அநாகரிகமானது. அதற்காக உங்களுக்கு நாங்கள் ஆதரவுத் தருகிறோம். எங்கள் கூட்டங்களுக்கு நீங்களும் ஆதரவு தாருங்கள் எனக் கூறி, கம்யூனிஸ்டு தோழர்கள் காங்கிரஸ் கூட்டங்களுக்கு ஆதரவுத் தரத் தொடங்கினர்.
தி.மு.க அணியினருக்கு எரிச்சல் ஏற்பட்டது. இது பற்றி கம்யூனிஸ்டு நண்பர்களிடம் விவாதிக்க வந்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக நூலகம் அற்புதமான அரும்பெரும் நூலகம். அதன் முன்னே இருந்த புல்வெளியில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
கம்யூனிஸ்டு இயக்கச் சார்பாக ரங்கசாமி, கிருஷ்ணன் அண்ணாச்சி, ஆல்பென்ஸ் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் தி.மு.க. மாணவர் அணித் தலைவர் பொறியியல் கல்லூரி மாணவர் ராமச்சந்திரன் தலைமையில் தி.மு.க. அணியினர் வந்து இருந்தனர்.
பேச்சு வார்த்தை லேசாகத் தொடங்கிக் காரசாரமாக முன்னேறியது. ஒரு கட்டத்தில் தி.மு.க. அணியினர் தவறான மொழிகளையும் தகாத சொற்களையும் பயன்படுத்தினர்.
கம்யூனிஸ்டு ரங்கசாமி எழுந்தார். கொஞ்சம் ஆவேசப்பட்ட நிலையில் தன்னுடைய கீழாடையை அவிழ்த்துக் காட்டி தி.மு.க.வினர் பாணியிலேயே பதில் சொன்னார். நிலைமை முற்றுப் பெறாமல் முடிவு பெற்றது.
தி.மு.க. சார்பில் வந்த பொறியியல் கல்லூரி மாணவர் ராமச்சந்திரன்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களில் ஒருவர். கம்யூனிஸ்டு ரங்கசாமியும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் குறிப்பிடத்தக்கத் தோழர். இந்த இருவரும் இன்றைக்கு நல்ல நண்பர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் இல்லத்திற்கு எதிர்ப்புறம், அன்றைய காலகட்டத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியாக இருந்தது. குடி நீர்க் குளம் அங்கு இருந்தது. அதைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறம்.
சில சமூக விரோதிகள் தெருவழியே வரும் சில பல்கலைக் கழக மாணவிகளைக் கடத்திச் சென்று தவறான செயல்களில் ஈடுபடத் துணிந்தனர். இதைத் தடுத்து நிறுத்தும் துணிச்சல் எவருக்கும் உடனே வந்து விட வில்லை.
இந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி - நெல்லை மாணவர் கூட்டமைப்பு ஒன்றை நண்பர்கள் கூடி உருவாக்கினர். இதன் தலைவராக மொழியியல் துறைத் தலைவர், அறிஞர் அகஸ்திய லிங்கனாரை (கன்னியாகுமரி மாவட்டம்) ஏற்றுக் கொண்டனர்.
இந்த இரு மாவட்டக் கூட்டமைப்பினர் மாணவியருக்கு நிகழ்ந்த இந்தக் கோரச் செயலைத் தடுத்து நிறுத்தினர். இதற்கான பெரும் பங்கு ரங்கசாமிக்கும் ஆல்பென்ஸுக்கும் உரியதாகும்.
திறந்தவெளி திரை அரங்கம் அப்போது நடைமுறையில் இருந்தது. மாலை வேளையில் திரை அரங்கில் திரைப்படம் காட்டப்பட்டது. சற்று இருட்டியதற்குப் பின் சில சமூக விரோதிகள் மின்சாரக் கம்பிகளில் வாழை மட்டையைத் தூக்கி ஏறிந்து திறந்த வெளி அரங்கத்தை இருட்டாக்கி விடுவர். இதைப் பயன்படுத்தி மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொள்வர்.
இதனைத் தடுத்து நிறுத்த மார்க்சிய மாணவர்கள் முடிவு செய்தனர்.
மார்க்சிய சிந்தனைக் கொண்ட மாணவியரிடம் பாதி பிளேடுகளைக் கொடுத்து இருட்டில் சில்மிஷம் பண்ணுபவர் யாராக இருந்தாலும் பிளேடால் கீறி விட முடிவு செய்தனர். அதை நடைமுறைப் படுத்தினர் அன்றோடு அந்தக் கொடிய பழக்கம் நின்று போனது.
சில மாதங்கள் சென்ற பின் திறந்தவெளி திரையரங்கத் திரைக் காட்சிகளைப் பல்கலைக் கழக நிர்வாகம் நிறுத்தியும் விட்டது.
தலித்தியப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டதற்கும், பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் பதிலடி கொடுக்க, சில அமைப்பினர் சமூக விரோதிகளைத் தயார்ப்படுத்தி, ஆல்பென்ஸ் நதானியல் வகுப்புக்குத் தனித்து வந்த ஒரு நாளைக் கண்டறிந்து ஆல்பென்ஸைச் சுற்றி வளைத்து கோரமாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
உள்காயங்கள், வெளிக் காயங்களோடு ஆல்பென்ஸ் நதானியல் திருவள்ளுவர் விடுதி 6ஆம் எண் அறையில் படுத்துக் கிடந்தார். அதுதான் அவருடைய அறை. எந்த மாணவர்களுக்காக அவர் போராடினாரோ அவர்கள் கூட ஆல்பென்ஸை அறையில் வந்து பார்க்கப் பயந்தனர். தங்களுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினர்.
ஆனால் தமிழ்த் துறைப் பேராசிரியரான உளுந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா, என் மாப்பிள்ளை இன்ஜினியர் செல்வ குமார், நண்பன் புலவர் தட்சிணாமூர்த்தி, மாமா புலவர் சங்கரன், நண்பன் ஓவியன் புலவன் நாகலிங்கம் போன்றவர்கள் மட்டும்தான் 9 திருவள்ளுவர் விடுதி அறைக்குள் துணிச்சலாக வந்து சந்தித்துச் சென்றனர். கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
நான் எப்பொழுதுமே கல்லூரி விடுதியில் தங்கியதில்லை. சிதம்பரத்தில்தான் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி இருந்தேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த எங்களின் செயல் பாட்டிற்கு மிச்ச சொச்ச கணக்கைத் தீர்க்க, நான் தங்கி இருந்த என் அறையில் ஒரு நாள் இரவில் ஒரு கோரக் கொலை நடைபெற இருந்தது ஆனால் அது நடைபெறவில்லை.
11, வெல்லப் பிறந்தான் முதலித் தெரு அறைதான் என் அறை. இந்த அறையின் கதவு எப்பொழுதுமே மூடப்படுவது இல்லை. அறை முழுவதும் புத்தகங்கள் கிடக்கும் அதற்கிடையில் எங்களில் யாராவது சிலர் எப்பொழுதும் இருப்போம்.
அன்று ஒரு நாள் இரவு, நானும் என் மச்சான் ஆல்பென்சும் மட்டும்தான் படுத்து இருந்தோம். இரவு ஒரு மணி அளவில் எங்கள் அறை வாசலில் மூவர் கையில் நீண்ட கொலை ஆயுதங்களுடன் வந்து நின்றனர்.
அது நல்ல பனிக்காலம். எங்களில் எவருக்குமே போர்வை கிடையாது. நாங்கள் எப்பொழுதும், கட்டி இருக்கும் வேட்டியை அவிழ்த்துத்தான் போர்த்தி இருப்போம். அன்றும் இதுதான் நிகழ்ந்தது. என் அறையில் ஒரு ஓரத்தில் தட்டி மறைப்பு இருக்கும். அதற்குள்தான் நாங்கள் சிறுநீர் கழிப்போம்.
ஆல்பென்ஸ் அந்த மறைப்பிற்குள் சிறுநீர் கழிக்கச் சென்று இருக்கிறார். நான் தலைவரையிலும் வேட்டியால் மூடிப் படுத்து இருக்கிறேன். நல்ல தூக்கம். அறைக்குள் இருட்டு. வாசலில் ஆயுதத்துடன் நிற்கும் மூவருக்கும் ஒரு சந்தேகம். அறைக்குள் எத்தனைப் பேர் இருக்கின்றனர்? என்று பார்க்கத் தீக்குச்சியை எரித்து வெளிச்சம் உண்டாக்கினர்.
நான் போர்த்திப் படுத்து இருக்கிறேன். உள்ளே வேறு யாரும் தெரியவில்லை வந்தவர்கள் வாசலில் தயக்கத்தோடு நிற்கின்றனர்.
இதையெல்லாம் தட்டி மறைவிற்கு பின் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆல்பென்ஸ் தட்டிக்கு அந்தப் பக்கம் தயாராக இருக்கிறார்.
வந்தவர்கள் அறைக்குள் வந்தாலோ அல்லது படுத்துக் கிடக்கும் என்னைத் தாக்க முயன்றாலோ தட்டியோடு அவர்கள் மீது சாய்த்து அமுக்கிப் பிடிக்கத் தயாராக இருக்கிறார்.
அந்த நேரம் இரவு சினிமாக் காட்சி முடிந்து எங்கள் தெருவுக்குள் ஒரு கூட்டம் வரத் தொடங்கியது. வாசலில் நின்றவர்கள் சற்றுத் தயங்கி ஒதுங்கினர்.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி ஆல்பென்ஸ் என்னை உசுப்பி விட்டார். நானும் ஆல்பென்ஸும் அவர்களைப் பிடிக்கத் தெருவில் குதித்து
ஓடத்தொடங்கினோம். அவர்கள் அந்த சினிமாக் கூட்டத்தில் கலந்து ஓடி மறைந்து விட்டார்கள்.
அண்ணாமலையில் எங்களுக்கு நடந்த தாக்குதல்களில் கடைசி முயற்சி இதுதான்.
எப்படியோ தப்பிவிட்டோம்.
ஆனால் அண்ணாமலையில் தாக்கப்பட்ட அந்தத் தாக்குதலின் வீரியம், ஆல்பென்சுக்கு இன்றும் அவர் உடலை பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அண்ணாமலை ஞான விருட்சம்தான்.
அன்று அதன் அடிவாரத்தில் சில பல நச்சுக்காளான்களும் குடை விரித்துத்தான் கிடந்தன.