Tuesday, December 17, 2013

ஆழ்ந்திருக்கும் கவியுளம்..!


நான் நேற்று பதிவு செய்திருந்த மானுடக் கடமை என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் படித்துப் பார்த்துவிட்டு நண்பர் ரசூல் HG, பாரதியாரின்

பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்என்ற வரிகள் பல சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கின்றன. இதை எப்படிப் புரிந்துக் கொள்வது? என ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஒரு பாடலை அல்லது ஒரு வார்த்தையை, ஒரு வரியை எப்படிப் புரிந்து கொள்வது? என்ற வினாவிற்கு இதுதான் விடை என்று ஒரு பதிலைச் சொல்லிவிட முடியாது.

எழுதியவர் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களைக் கொண்டும், அந்த ஒரு சொல்லின் பயன்பாட்டின் விரிவுகளைப் புரிந்தும், படிப்பவருடைய கொள்ளும்தன்மையினை இணைத்தும் ஒரு பதிலை உருவாக்கிக் கொள்கிறோம்.

இதுதான் புரிதல் முறை எனச் சாதித்து விடவும் முடியாது. பாரதியே ஒரு பாணியினைச் சொல்லிக் காட்டுகிறார்.

ஆயிரம் நூற்கள் கற்பினும், ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்கிலார்என்று ஒரு விமர்சன முறையைக் கற்றுத் தருகிறார். 

அகல ஆழமான ஆயிரம் நூற்களைக் கற்று இருப்பதனால் ஒரு குறிப்பிட்ட அறிவை, ஞானத்தைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு கவிதையைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்காது.

கவிஞனின் உள்ளம் என்ன என்பதை இன்னும் பல கூறுகளுக்குள் புகுந்து தெரிந்து கொள்ள வேண்டும் எனப் பாரதி தன் கவிதைகளுக்கே ஒரு விமர்சனத்தைத் தருகிறார்.

இப்போது, பள்ளித்தலமனைத்திற்கு வருவோம். இங்கே, “பள்ளிஎன்ற ஒரு சொல் பல விதமான சர்ச்சைகளை உருவாக்கித்தான் இருக்கிறது.

அண்மையில் மறைந்த திரைக் கவிஞர் வாலி, யாரும் சொல்லாத ஒரு விளக்கத்தைச் சொல்லி வைத்தார். 

பாரதியார், சொல்லிய பள்ளி, ஒரு சாதியைச் சார்ந்த சொல்லாடல் எனவும், பள்ளர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் வாழ்கின்ற பகுதி சேரி. சேரி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உறைவிடம்.

அந்தச் சேரியில் வாழும் பெண்பாலருக்கு பள்ளியர் என்று பெயர். அந்தப் பள்ளியர் வாழக்கூடிய தலத்தை, அதாவது சேரியைக் கோயிலாக்கி உயர்த்துவோம் எனப் பாரதி கருதி இருக்கிறார் என்பது கவிஞர் வாலியின் விளக்கமாக வெளி வந்திருக்கிறது.

இன்னும் சிலர் பள்ளி என்பதற்கு மற்றும் ஒரு சொல்லாடலைக் கைக்கொண்டுள்ளனர். RSS, BJP போன்ற மதவெறி வாதங்களை முன்னெடுத்துச் செல்லும் இயக்கங்களின் அஜெண்டாவில் எப்பொழுதும் இருக்கக்கூடிய முஸ்லிம் வணக்கத் தலங்களை மாற்றி இந்துத்துவ வணக்கத்தலங்களாக அமைக்க வேண்டும் என்கின்ற திட்டத்திற்குப் பாரதி, அன்றே கவிமுகமன் செய்து விட்டார் என்ற ஒரு புரிதலை ஒரு பாலார் கொண்டு இருக்கின்றனர்.

பள்ளியைசாதியாக்கிப் பார்த்தார் ஒரு கவிஞர். மற்றொரு பிரிவினர், பள்ளி என்பதை பள்ளிவாசல் என்று எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். பள்ளிவாசல்களைக் கோயிலாக்குவோம் என்ற நேரடி தூண்டல்தான் பாரதியின் நாட்டமாக இருந்தது என்பது போல சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான சர்ச்சைகளில் பாரதியைக் காண முடிவதில்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தை அறியமுடியவில்லை. இந்தச் சர்ச்சைகளுக்குத் தேவையான அளவிற்கு ஆயிரம் விளக்கங்களை முன்வைத்தாலும், அவைகள் அவர்களின் புரிதல் சம்பந்தப் பட்டதே தவிர கவிதை சம்பந்தப்பட்டதுதான் என்று சாதித்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

பாரதியை அல்லது அவரின் மொழிகளை பொருள் கொள்ள, புரிந்து கொள்ள முற்படும் பொழுது பாரதியின் ஆளுமையைக் கூடுமான வரை நாம் கண்டெடுத்தாக வேண்டும். அந்த நிலையில் நமக்கு ஒரு புரிதல் ஏற்படும்.அந்தப் புரிதல் பாரதியோடு சம்பந்தப்பட்ட புரிதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பாரதி வாழ்காலத்தில் இந்தியாவினுடைய மக்கள் தொகையாக முப்பது கோடி பேர் இருந்ததாகக் கணக்கு இருக்கிறது. இதை, “வாழ்வதெனில், முப்பது கோடியும் வாழ்வோம். வீழ்வதெனில் முப்பது கோடியும் வீழ்வோம்என்று கூறுகிறார்.

இங்கே முப்பது கோடியில், இந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் போன்ற இன்னும் பல மதம் சார்ந்தவர்களும் இருந்திருக்கின்றனர். இந்த மக்களின் கூட்டுத் தொகைதான் முப்பது கோடி. அவர்களை இந்தியர் என்று குறிப்பிட்டார் பாரதி. இதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள்என்று இந்தியத்தில் வழங்கப் பட்ட பதினெட்டு மொழிகளையும் இந்திய மொழிகளாக, மொழியினமாக ஏற்றுக் கொண்டவர் பாரதி. இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் 
பரங்கியரை துரை என்ற காலமும் போச்சேஎன்று பாரதியார் சொல்லி வைத்ததை ஈரோட்டு ஈ.வே.ராமசாமி பெரியார் ஒருமுறை தந்திருக்கும் விளக்கம் அவர் புரிதல் சம்பந்தப் பட்டது.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சேஎன்று பாரதி சொல்வது , மகிழ்ச்சியால் அல்ல. போச்சேஎன்று வேதனைப் படுகிறான் பாரதி என்று இந்த போச்சேவிற்கு பெரியார் பாணி புரிதல் இது.

அடுத்த வரியில் வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சேஎன்று சொல்லும் அந்தப் போச்சேவிற்கு பெரியார் பொருளையே எடுத்துக் கொண்டு பார்த்தால், பாரதி வெள்ளைத்துரைமார்களுக்கு லாலி பாடி இருக்கிறார் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்சம் சொற்புரிதல்களை பார்த்து வைப்போம். 

கோட்டாற்று மகாமதி சதாவதானி பாவலர் திருவள்ளுவர் விழாவில் பேசுகையில், ஒரு நேரத்தில் குறிப்பிட்டார். 

திருவள்ளுவர் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், வள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெற்றுள்ள பத்து குறள்களில் ஐந்து குறள்களில் இறைவனைப் பற்றிய சிறப்பு பேசுகிறார். ஐந்து குறள்களில் இறைவனைத் தொழ வேண்டும் என்று சொல்கிறார். 

இது இஸ்லாமியப் பாணி. ஐந்து வேளைத் தொழுகையும் இறைப் புகழ்ச்சியும் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணப்படுவதால், அவர் முஸ்லிமாக இருக்கலாம்என்றார்.

கொல்லான் புலால் மறுத்தானை கைக்கூப்பி 
எல்லா உயிரும் தொழும்

சதாவதானியார், இந்தக் குறளில் உள்ள சொற்களைத் தன் புரிதலில் பிரித்து விளக்கம் தருகிறார்.

கொல் + ஆன் = பசுவைக் கொல். மறுத்தான் = மல் + துத்தான். இரண்டும் சேரும் பொழுது மறுத்தான் என்று வரும். மல் துத்தான் என்றால் அதிகம் உண்டவன். அவனை எல்லா உயிரும் கைக்கூப்பித் தொழும். மல் துத்தான் என்பது, மறுத்தான் என வந்ததற்குக் கம்ப ராமாயண ஒரு சொல்லை மேற்கோள் காட்டி உறுதிப் படுத்துகிறார்.

செல்+தம்பி = செறம்பி என்று வந்தது போல, மல் துத்தான் என்பது மறுத்தான் என வந்தது என விளக்கம் வேறு தந்திருக்கிறார்.

இப்படி நகைச்சுவைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ஒரு சொல்லாடலைப் பிரித்தெடுத்து அவரவர் நோக்கத்திற்குப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சொற்களைப் பயன்படுத்திய கவிஞன் என்ன நினைத்திருப்பான் என்று பார்ப்பது முக்கியம். பாரதி, பள்ளித்தலமனைத்தும் என்ற வரிகளில், பள்ளியர்தலம் என்ற ஒரு சாதியினரையும் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை, பள்ளிவாசல் என்ற ஒரு வணக்கத்தலத்தையும் குறித்திருக்க நியாயம் இல்லை. 

தெருக்கூட்டும் சாஸ்திரம் கற்போம்”. பாரதியின் இந்த வரிகளில் தெருக்கூட்டும் தாழ் நிலை வகுப்பாரின் செயலைச் சாஸ்திரம் என்கிறார். மேல்மட்ட வகுப்பார்கள் கோயில்களில் முணுமுணுக்கும் மந்திரங்களைக் குறிப்பிடும் சாஸ்திரம் என்ற சொல்லாடலை தெருக்கூட்டலுக்கு வழங்கி அதையும் நாம் கற்க வேண்டும் எனச் சிபாரிசு செய்கிறார் பாரதி.

அவர் வடிவமைத்தத் தேசியக் கொடியில், “துருக்கரின் இளம்பிறை ஒர் பால்என்று வடிவமைக்கிறார். இங்குத் துருக்கர் என்ற சொல்லாடல் முஸ்லிம்களைக் குறித்தத் தவறான சொல்லாடல் என்றாலும், முஸ்லிம்களுக்கும் தேசியக் கொடியில் இடம் இருக்க வேண்டும் என்ற அந்த உணர்வு பாரதிக்கு இருந்திருக்கிறது. 

அன்றைய இந்தியத்தில் இப்படி ஒரு தேசிய கொடி வடிவை இந்த நாட்டில் எவரும் சொல்லவில்லை.

பாரதியார், இறுதி காலத்தில் பொட்டல்புதூரில் மீலாது மேடையில் நபிகளாரைப் பற்றிப் பேசிய பேச்சினை நினைவு கூரும்பொழுது பாரதியின் ஆழ்மனம் புரியும்.

அதே மேடையில் பாரதியார் தானே எழுதிய அல்லா, அல்லா..பாடலை அவரே பாடிக் காட்டினார். இந்தப் பின்புலங்களை வைத்தெல்லாம் பார்க்கும் பொழுது பாரதியார் பாடியிருக்கும், “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்என்ற வரிகளைக் கீழ்க் காணும் கருதுகோளில் புரிந்து கொள்வது சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

கற்கின்ற கல்விச்சாலையைக் கோயிலாக்கிப் பார்க்க வேண்டும். அதாவது அது ஒரு வழிபாட்டுத்தலமாக ஆக வேண்டும் எனப் பாரதி கருதுகிறார்.

ஒரு வணிக தலத்தில் அங்கே இருப்பவர்கள் செல்வம் புரளும் இடமான அந்த இடத்திற்கு மரியாதைக் கொடுக்க வேண்டும். அதைப் போற்றி மகிழ வேண்டும் என்பது தமிழக மண்ணின் பழக்கம். செல்வத்தின் குறியீடாக லட்சுமியைக் குறிப்பிடுவர். லட்சுமி வாழுமிடத்தில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கருதுகோளைக் கடைபிடிப்பர்.

அதேபோல கல்விக் கூடம் கல்வியின் குறியீடான சரஸ்வதி வாழுமிடம். அந்த உணர்வோடு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றுமுளோர் கண்ணியப் படுத்த வேண்டும். ஏனென்றால் சரஸ்வதி கடாட்சம் ஏழ்மையையும் தாழ்மையையும் நீக்கும் என்ற கருத்து இருப்பதால், 

பள்ளித்தலமனைத்தையும் கோவில்களாகப் புதுப்பிக்கலாம் எனப் பாரதி கருதி இருக்கலாம்.

இந்தப் புரிதல் என் சார்பான புரிதல்.

No comments:

Post a Comment