பல காணாமல் போன தமிழ்க் கவிஞர்கள் பட்டியலில் கவிஞர் தா.காசிமிற்கும் ஒரு தகுதியான இடமுண்டு.
புதுகோட்டை திருப்பத்தூரில் தியாகி தாவூத் ராவுத்தரின் மகனாகப் பிறந்தவர். தாவூத் ராவுத்தர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
பங்கு கொண்டவர். சிறை சென்றவர். சுதந்திர இந்தியாவில் விடுதலை இயக்கத் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்றவர். தியாகி மானியம் பெற்றவர்.
ஆனால் கவிஞர் தா.காசிமிற்கும் காங்கிரஸ் இயக்கத்திற்கும் ரொம்பவும்தான் ஏழாம் பொருத்தம்.
திருப்பத்தூர் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினராகத் தியாகி தாவூது ராவுத்தர் போட்டியிடுவார். சுவர் விளம்பரத்திற்கு அவர் வைத்திருந்த வண்ணக் கலவைகளைத் திருடி வந்து எதிர்த்து தேர்தலில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருக்கு சுவர் விளம்பரம் எழுதியவர் தா.காசிம்.
குடும்பத்தின் முதல் கலகக்காரர். மூன்றாவது வரைப் பள்ளிப் படிப்பு கவிஞருக்கு உண்டு. அதன்பின் பள்ளிக் கூடத்திற்கும் அவருக்கும் வாழ்நாள் முழுதும் சம்பந்தமே வாய்க்கவில்லை.
கவிஞர் தா.காசிமின் தாய் மாமா பின்னாளில் என்னிடம் கூறியது, "என் அக்கா மகன் மூனாவது படித்து விட்டே சென்னையில் அச்சாபீஸில் காம்பாசிடர் ஆகிவிட்டான். அஞ்சாவது படித்திருந்தால் அமெரிக்காவில் அம்பாசிடராகி இருப்பான்.
கவிஞரின் மாமா இப்படிக் கூறியது அதிகமான கொழுப்புத்தனமானது தான்.
ஆனால் அப்படி ஆகியிருக்க வேண்டிய அறிவுக் கூர்மை அவரிடம் இருந்தது.
தி.க ., தி.மு.க இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு சென்னைக்கு ஓடி வந்த பலரில் இவரும் ஒருவர்.
முதல் வேலை, அச்சு அலுவலகம் ஒன்றில்தான். அச்சுக் கோக்கக் கற்றுக் கொண்டார். தமிழ்க் கற்கத் தொடங்கியது இந்த அழுக்கு நிறைந்த அச்சுக் கூடத்தில்தான்.
பெரியாரின் விடுதலைப் பத்திரிகை அச்சுக் கூடம் கவிஞர் ஆர்வத்திற்குத் தீனி போட்டது. நாத்திக இயக்கத்தில் மிகுந்த பற்றுதல். விடுதலை அச்சகத்தில் எழுத்துக்களை அடுக்கி வரிகளை உருவாக்கினார்.
1962 – ஆம் ஆண்டு தி.மு.க நடத்திய விலைவாசி எதிர்ப்பு கண்டனப் போராட்டத்தில் பங்கு கொண்டு சென்னையில் சிறை சென்றார். சிறையின் காவலர் அடித்த ஒரே அடி, இடி போல் விழுந்தது. காதில் சங்கு ஊதிய பேரிரைச்சல். அதன்பின் எப்போதும் அவர் காதில் சப்தம் அவ்வளவு சுலபமாக கேட்பதே இல்லை.காது சவ்வு பிய்ந்து விட்டது.
'செவிட்டு கவிஞன்' என்று பின்னர் நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
காலம் கடந்தது.....
கவிஞர் வாழ்க்கை சென்னை மண்ணடிப் பகுதிக்குள் ஆரம்பமானது.
அங்கப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஆ .கா . அப்துல் ஹமீது பாகவியாரின் மணி விளக்கு அச்சகத்தில் பணி தொடர்ந்தது. மௌலானாவின் திருக் குரான் தமிழாக்கமான "தர்ஜுமத்துல் குரானை" அச்சுக் கோர்த்தார். அப்போதும் நாத்திகம்தான் மூளையில். கைகளில் குரான் தமிழ் மொழி அச்சுக் கோர்ப்பு.
பின்னாளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாஹிபின் தந்தையார்தான் மௌலானா அப்துல் ஹமீது பாகவி.
இஸ்லாம் இந்த அச்சுக் கூடத்தில்தான் கவிஞருக்கு அறிமுகம். அதுவரை தி.க. நாத்திக வட்டாரத்தில் நடமாடித் திரிந்தவர்.
மெதுவாக மணி விளக்கு மாத இதழில் கவிதை எழுதத் தொடங்கினார் . அப்போது தன் இதழில் வரும் கவிதைகள் காசிமுடையன என்று மௌலானாவுக்கே தெரியாது. பின்னர் இ .யூ .மு .லீ . இயக்கத்தின் சொந்தப் பத்திரிகை “உரிமைக் குரல்” உதயமாகி ஒலிக்கத் துவங்கியது....
தா.காசிம் உரிமைக் குரலில் நிரந்திரக் கவிஞராகவும் காம்பாசிடராகவும் மாற்றம் கண்டு விட்டார்.
உரிமைக் குரலின் நிறுவனர் காயிதே மில்லத். இது வார இதழ். இதன் ஆசிரியர் A.K.ரிபாய். மண்ணடி வெங்கட மேஸ்திரி தெருவில் அலுவலகம் இருந்தது.
அழகான தமிழ் நடையில்.... அற்புதக் கவிஞனைப் பற்றி......இன்னும் எழுதுங்களேன்....பசியோடு காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅன்பன் எல்.கே.எஸ்.மீரான்,மேலப்பாளையம்