தலைவர் அப்துஸ் ஸமது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த காலம். இதே நேரத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இலட்சிய நடிகர் S .S.ராஜேந்திரனும் இருந்தார். இவர்களுக்கு இடையே நல்ல நட்பும் இருந்தது. S .S .R ,"மணிமண்டபம் " படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
நமது கவிஞரின் வறுமை குறித்து அப்துஸ் ஸமது சாஹிபிற்கு ஒரு நெஞ்ச உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. S .S .R இடம் கவிஞருக்காக திரையில் பாடல் எழுத அப்துஸ் ஸமது சாஹிப் வாய்ப்புக் கேட்டார்.
S .S .R , கவிஞருக்கு இரு பாடல் எழுத வாய்ப்புத் தந்தார்.
ஒன்று கதாநாயகி மீது பாடிய காதல் பாடல்.
"ஆயிரம் இரவின் இருளெடுத்து
அஞ்சன விழிக்கு மைகொடுத்து
பாரேனச் சொன்னாள் இருகண்ணால்..." இப்படி தொடங்கியது பாடல் .
மற்றொன்று தத்துவப் பாடல்
"போவதும் எங்கே புரியவில்லை - நான்
புறப்பட்ட இடமும் தெரியவில்லை
ஆவிக்கும் உடலுக்கும் உறவுமில்லை..." இப்படி ஆரம்பமானது அந்தப் பாடல்.
எஸ்.எஸ்.ஆருக்கு பாடல்கள் மிகவும் பிடித்து விட்டன. ரூபாய் 100 முன்பணமாகக் கொடுத்தார். மூன்றாவது பாடலுக்கும் அதே படத்தில் வாய்ப்புத் தந்தார் .
கவிஞர், நாளை வருகிறேன் என்று கூறி வந்து விட்டார்.
அந்தப் பாடல் கவிஞரின் கொள்கைக்கும் , கோட்பாட்டிற்கும் ஏற்றதாக இல்லை. இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. அல்லாடினார். எஸ்.எஸ்.ஆர் தந்த முன்பணம் 100 ரூபாய் எங்கள் வயிற்றில் இரவு உணவாகவும் இதழ்களில் புகைச் சுருளாகவும் மாறி மறைந்து விட்டது.
காலையில் எஸ்.எஸ்.ஆரை சந்தித்து , "மூன்றாவது
பாடலை நான் எழுத மாட்டேன். என் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் அது முரணானது" என்று கவிஞர் கூறினார்.
எஸ்.எஸ்.ஆர் மேற்கொண்டிருந்த கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் கூட அந்தப் பாடல் முரணானதுதான். ஆனாலும் அது திரை உலகம். ஏற்றுக் கொள்ளும். எஸ்.எஸ்.ஆரால் இது முடியும். கவிஞரால் நிச்சயமாக முடியாது.
கொள்கை ஒரு உயிர்மூச்சு . எக்காரணம் கொண்டும் எதற்காகவும் சமரசத்திற்கு இடமே கிடையாது. வறுமை, கொள்கையைச் சாப்பிட்டு விட அனுமதிக்க கவிஞரால் இயலாது.
எஸ்.எஸ்.ஆர், கவிஞரின் அத்தனை பாடல்களையும் கவிஞரிடமே திரும்பத் தந்து விட்டார்.
திரை உலகத்திற்கு வர வேண்டிய ஒரு ஜாம்பவான் கவிஞன் வாய்ப்பு இழந்துவிட்டான். ஆனாலும் சமுதயாத்திற்கு ஆற்றல் மிகுந்த அற்புதக் கவிஞன் நிலைத்து விட்டான் .
எஸ்.எஸ்.ஆரிடம் கவிஞர் பெற்ற முன்பணம் முழுவதும்
தீர்ந்து போய் விட்டதால் கவிஞர்,எஸ்.எஸ்.ஆரிடம் "பணத்தை"
எப்போதாவது திரும்பத் தந்து விடுகிறேன்" என்று கூறி வந்து விட்டார்.கவிஞரின் மரணம்
வரை அந்தக் கடன் அடைபடவே இல்லை.
கவிஞரின் வறுமை நீக்க வழி காண்பதற்கும் அவருக்கு ஒரு சொந்த அச்சகம் அமைத்துக் கொடுப்பதற்கும் அவர் மீது அன்பு கொண்டவர்களால் நிதிக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. நிதிக் குழுவிற்கு A . K . ரிபாய் தலைமை தாங்கினார். அச்சகத்திற்கு தேவையான நிதியும் குவிந்து விட்டது .
சென்னை கலைவாணர் அரங்கில் நாகூர் E .M . ஹனீபா சாஹிப் கச்சேரி நிகழ்த்தி நிதிப் பொற்குவையைக் கவிஞரிடம் வழங்கினார்கள் . இந்த இசைக் கச்சேரியை இசை முரசு ஹனீபா அண்ணனும் அவர் குழுவினரும் இலவசமாக நிகழ்த்தித் தந்தார்கள்.
கவிஞருக்கு வழங்கப் பட்ட பணம் ஒரு பட்டுத் துணியில் பொதிந்து தரப் பட்டது.
கச்சேரிக் களேபரத்தில் கவிஞர் பெற்ற பணத் துணியை மேடையில் இருந்த மேஜையில் வைத்து விட்டு போய் விட்டார். பின்னர் அதனை எடுத்து விழாக் குழுவினர் கொடுத்தார்கள்.
No comments:
Post a Comment