டெல்லியில் அமெரிக்க தூதரகம் உள்ள தெருவில் போடப்பட்டிருந்த தடுப்புகளை இந்திய அரசு புல்டோசாரால் துடைத்து எறிந்துவிட்டது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள், இங்கே படித்துக் கொண்டிருக்கும் அவர்களின் பிள்ளைகள் போன்றோரின் அடையாள அட்டைகளை அரசிடம் காட்ட உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய விமான நிலையங்களுக்குள் அமெரிக்க தூதரக அலுவலகத்தார்கள் துணிச்சலாகச் செல்ல அனுமதிக்கப் பட்ட ‘பாஸ்’ அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அமெரிக்க அரசு தன்னிடம் ஒப்படைக்க இந்திய அரசு கேட்டு இருக்கிறது.
அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் பற்றிய விபரங்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு, அமெரிக்க அரசிடம் தீடீரென்று கேட்டு விட்டது.
இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கக் கூடிய மது மற்றும் பிற பொருள்கள் அனைத்தையும் பிரித்துப் பரிசோதித்தப் பின்னர்தான் அவைகளை வெளியே அனுப்ப முடியும் என இந்திய அரசு சொல்லி விட்டது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னுள்ள பொது மக்களின் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு இதுவரை தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தத் தடைகளைத் தட்டிப் பெயர்த்துவிட்டு பொதுமக்கள் செல்லக் கூடிய பொதுவழியாக்கி இந்திய அரசு, இந்திய மக்களுக்கு நேற்று சுதந்திரம் தந்துவிட்டது.
இப்படி ஏராளப்பட்ட நடவடிக்கைகளை ரொம்பவும் ரோஷத்தோடு இந்தியா எடுத்துவிட்டது.
அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே ஒரு புகாரின் அடிப்படையில், அமெரிக்காவின் தெருவில் கைது செய்யப்பட்டு கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்லப் பட்டார். ஆனால் இப்போது ஜாமீனில் வெளிவந்து விட்டார்.
இந்தச் செயலைக் கண்டு இந்திய அரசாங்கத்துக்கு உள்ளங்காலில் இருந்து உச்சிவரை தீப்பிடித்து விட்ட கொதிப்பு ஏற்பட்டு விட்டது.
இந்திய அதிகாரிக்கு நடந்துவிட்ட அவமதிப்பு இந்தியாவிற்கே தரப்பட்ட அவமதிப்பு என்பதை இந்திய அரசு இன்றைக்குப் புரிந்து கொண்டது.
இந்திய அதிகாரிகளின் மீது இந்திய அரசுக்குள்ள கரிசனை வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டிய ஒன்றாக இன்று காட்சி தருகிறது.
இந்திய மக்களாகிய நாம் அனைவரும், நம் தோள்களை நாமே தட்டிக் கொண்டு , நம் நெஞ்சை நாமே நிமிர்த்திக் கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி நமது இந்தியாவிற்கு வந்தார். நமது பிரதமர் மரியாதையின் பொருட்டு அவரைச் சந்திக்கச் சென்றார். நம் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாவல் பிரிவு சோதனை இட்டது. நம் பிரதமர் தலையில் அணிந்திருந்த அவர் மதச்சின்னமான டர்பனைக் கூட கழட்டிப் பார்த்தது.
நம் பிரதமருக்கு அதில் பேரானந்தம். இந்திய அதிகாரிகளுக்கும் இந்திய மக்களுக்கும் இதில் மகிழ்ச்சி இருந்தது என்று இந்திய அரசு கருதி இருந்தது போலும்.
ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த நிகழ்வு வாஷிங்கடனில் நடக்கவில்லை. நமது தலை நகரம் டெல்லியில் நடந்தது. அன்றைக்கு இந்திய அரசை நிர்வகித்தது அமெரிக்க அரசாக இருந்திருக்கலாமோ என்னவோ?
இன்னொரு நிகழ்வு. எல்லோரையும் கனவு காணச் சொன்னார். விழிப்பில் அந்தக் கனவின் பலனை அடைந்துவிட இந்திய மக்களுக்குச் சிபாரிசு செய்தார். அவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம். அவர் அமெரிக்காவிற்குச் சென்றார். அமெரிக்க விமான நிலையத்தில் சோதிக்கப் பட்டார்.
அணிந்த ஆடை முதல் கழட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டபின் விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுப்பப் பட்டார். இதில் கூட இந்திய அரசுக்கு சம்மதம் இருந்திருக்கிறது போலும். அன்று இந்திய அரசின் மான நரம்புகள் நோய்வாய்ப் பட்டு நொந்து போய் இருந்திருக்கிறது.இன்றுதான் புஷ்டி மருந்து சாப்பிட்டு புத்துயிர் பெற்று இருக்கிறது.
இந்த நிகழ்வுக்கெல்லாம் என்ன காரணம்?
அன்றைக்கு அமெரிக்காவின் சில பல ரொட்டித் துண்டுகளுக்கு இந்திய காங்கிரஸ் பேரியக்கம் வாலாட்டி தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காக இந்த இந்திய அவமானங்களைப் பொறுத்துக் கொண்டது.
இன்று ஏதோவொரு பங்கம் அதில் ஏற்பட்டு விட்டது. அதை உணர்ந்து ஆளும் அரசு கொடூரமாகக் குரைத்துக் காட்டி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் அமெரிக்காவிற்கு வழங்கப் பட்டிருந்த அனைத்து சலுகைகளும் நியாயமற்றது, மனித குல விரோதமானது. அத்துமீறலானது என்ற கண்டுபிடிப்பை இந்திய அரசு இன்று வெளிப்படுத்தி இருக்கிறது.
இவற்றில் முழுமையாக அரசியல் இருக்கிறது. என்னதான் நமது காங்கிரஸ் அரசு வாலாட் டி விசுவாசத்தை அமெரிக்காவிற்குக் காட்டினாலும் அமெரிக்கா தன் எஜமான தோரணையைக் காங்கிரஸை விட்டு நகர்த்த முடிவெடுத்து விட்டது.
பிஜேபியை புது விசுவாசத்திற்குத் தயார் படுத்த துவங்கி விட்டது. மோடியின் இன்றைய கர்ஜனை அமெரிக்காவிற்கு நாளைய வாலாட்டும் நன்றி அறிதலின் தொடக்கம்.
கொஞ்ச காலத்திற்குக் காங்கிரஸை புழக்கடையில் கட்டிப் போட்டுவிட்டு பாஜகவை வாசலில் அவிழ்த்துவிட அமெரிக்கா திட்டம் வகுத்துவிட்டது.
இந்தப் புகைச்சல்தான் அரசின் இன்றைய நடவடிக்கைகள். அரசியல்வாதிகளின் அவமானத்தினாலோ, அதிகாரிகள் மீது நடத்தப் பட்ட அசிங்கமான நடவடிக்கைகளாலோ ஏற்பட்டுவிட்ட கொதிப்பு இது அல்ல.
இன்னொன்றையும் இங்கே இணைத்துப் பாருங்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்துவிட்டார்.
காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது (தன் மகள், மனைவி குடும்பத்தினருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது) என்ற கண்டுபிடிப்பை முன்வைத்து காங்கிரஸை வெறுத்துவிட்டார்.
காங்கிரஸ் அரசு, அமெரிக்கா மீது எடுத்துவிட்ட நடவடிக்கையைப் போலவே கருணாநிதி, காங்கிரஸ் அரசு மீது பாய்ச்சலைத் தொடங்கிவிட்டார்.
அமெரிக்காவை, பிஜேபி அரசு இன்று எதிர்ப்பது போல பாவனைக் காட்டிக் கொள்கிறது.
“அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவர்களின் நட்புக்காக என்று சிலரை அமெரிக்காவிலிரிந்து உடனழைத்து வந்திருக்கிறார்கள். இந்த வருகை அவர்களின் ஓரினச் சேர்க்கைகாகத்தான்” என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கிறார்.
இதை வைத்துக் கொண்டு பாஜகவும் அமெரிக்காவை எதிர்த்து விட்டது என்று கருதக் கூடாது. அமெரிக்கா, இந்தியாவை நிர்பந்தங்களால் சிதைத்து கொண்டிருக்கிற உண்மையை வெளிப்படுத்தாமல் அமெரிக்காவின் கலாச்சார சீரழிவைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் அமெரிக்காவிற்குப் பாஜக பச்சைக் கொடி காட்டுகிறது.
கலைஞர், பாஜகவையும் நாங்கள் நேசிக்க முடியாது என்று சொல்கிறார். வாஜ்பாய் மாமனிதர். அத்வானி அதற்கு அடுத்த மனிதர் என ஒரு சர்ட்டிபிகேட்டையும் வழங்கி இருக்கிறார்.
அமெரிக்காவை பிஜேபி எதிர்ப்பதுபோல காட்டிக் கொள்ளும் எதிர்ப்பும் , கலைஞர் பாஜகவை எதிர்க்கும் எதிர்ப்பும் தராசின் சம தட்டில் கிடக்கும் ஒரே எடையான பொருள்கள்தாம்.
அமெரிக்கத் தூதரகங்கள் இந்தியாவில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் மனித அவமதிப்புகளை வெளிப்படையாக காட்டிக் கொண்டுதான் வந்திருக்கின்றன.
குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் ஜெமினி மேம்பாலத்திற்குக் கீழ் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வெளிப்புறத்தில், வீதியில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு, தரமான ஆடை அணிகளை அணிந்து கோப்புகளைக் கக்கத்திலும் கைகளிலும் சுமந்து கொண்டு ரஜனிகாந்த் புதுப்படம் வெளியாகும் தியேட்டரில் வரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர் கூட்டத்தைப் போல பட்டம் பல பெற்ற பட்டதாரிகள் காத்துக் கிடப்பார்கள்.
இதைப் பார்த்து கொண்டிருப்பவனுக்கும் அவமானம் வருவதில்லை. வரிசையில் நின்று கொண்டிருப்பவனுக்கும் இது கேவலமாகப் படுவதில்லை. ஆனால் இந்திய அரசுக்கு இன்று இது தெரிந்துவிட்டது.
திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி பற்றி எடுத்த முடிவில் உள்காரணங்கள் மட்டுமல்ல வெளியேயும் காரணம் தொங்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தைத் தாண்டியும் காரணம் முகம் காட்டிக் கொண்டிருக்கிறது.
திமுகவிற்கு எப்பொழுதுமே ஒன்றில் ஆசை அதிகம். தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகராக இன்றுகூட ஒரு சிசு பிறக்கவில்லை.
காஞ்சி கரிபால்டி, தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால் இப்படியெல்லாம் அண்ணாவைச் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஆசை அதிகம். திமுக தொண்டர்களுக்கு எத்தணைப் பேருக்கு கரிபால்டியைத் தெரியும், இங்கர்சாலைத் தெரியும், ரூசோவைத் தெரியும் என்பது நமக்குத் தெரியாது.
தமிழகத்து முஜிபுர் ரஹ்மான், இன்றைய ராஜராஜ சோழன், மானங்காத்த கரிகாலன் என்றெல்லாம் கலைஞரைப் புகழ்ந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.
அவர்கள் ஆர்வத்தைக் குறைத்துவிடாமல் நாமும் ஒன்றை சொல்லிவைப்போம். ‘தமிழகத்து ஒபாமா’ கலைஞர். இப்படி நாம் சொல்லி வைப்போம். ஆனால் இதில் பொருள் இருக்கிறது. ஒபாமா அரசு காங்கிரஸை கழட்டி விடுகிறது. கருணாநிதி காங்கிரஸ் நம்பிக்கையை நகர்த்திவிட்டார். இப்படி பொருத்தம் இருக்கிறது இதில்.
இதற்கொரு செய்தியை முன்வைக்கிறேன். இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் நடக்கிறது. கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். தீடீரென்று பிரபாகரனைப் பற்றி ஒரு செய்தி சொன்னார்.
“ஒருக்கால், பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்தால் இலங்கை அரசு, மாவீரர் அலெக்ஸாண்டர், மன்னர் புருஷோத்தமனை நடத்தியது போன்று மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்றார்.
அதையடுத்து உண்ணாவிரத நாடகம் நடந்தது. பின்னர்,
“மத்திய அரசை நம்பினேன். அது பொய் சொல்லி விட்டது” என்றார். ஆனாலும் கூட்டணியில் தொடர்ந்தார். இறுதியில் பிரபாகரனின் பிரேதம் மீடியாக்களில் வெளியானது.
இந்த நிகழ்வு முன்னாடியே கருணாநிதிக்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அலெக்ஸாண்டர் புருஷோத்தமன் கதையைச் சொன்னார். இது அமெரிக்காவிற்கும் முன்னாடியே தெரிந்து இருந்தது. தமிழகத்து ஒபாமாவும் அதை வெளிப்படுத்தி இருந்தார்.
சுருக்கமாக நடப்பவைகளை மேலோட்டமாக விவாதித்துக் கொண்டிருக்காமல் ஆழமாக சிந்திக்கத் தொடங்குவோம்.