Saturday, September 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்..! - 8



அடுத்து பேராசிரியர் கே.எம்.காதர் முஹையதீன் தமிழக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை தாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறந்த கல்வியாளர்களில் ஒருவர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பேச்சாளர். எழுத்தாளர்.

அப்துஸ் ஸமது சாஹிப் காலத்தில் திருச்சி நகர் சட்ட மன்றத்
தொகுதியை, இவருக்காக முஸ்லிம் லீக் கூட்டணியில் வற்புறுத்திக் கேட்டு
வாங்கிப் பெற்று வேட்பாளராக நிறுத்தியது .

தன்னுடைய பேராசிரியர்ப் பணியை ராஜினாமாச் செய்து விட்டுத் திருச்சி சட்ட மன்ற லீக் வேட்பாளராக நின்றார். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் இன்னுமொரு முறைத் திருச்சியில் நின்றார். தோற்றார்.

பேராசிரியர் காதர் முகையதீன் சாஹிப் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். "தாருல் குர்ஆன்" அச்சகம் நிறுவி தாருல் குர்ஆன் மாதயிதழ் தொடங்கி நடத்தி வந்தார்.அதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இவரே இருந்தார்.

அதில் "இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா?" எனற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரைத் தொடர்ந்து எழுதி வந்தார். அது ஒரு அருமையான ஆய்வுக் கட்டுரை. அரிய பல சிந்தனைகளை முன்னெடுத்துத் தந்த ஆய்வுத் தொடர்.

மாணவப் பருவத்தில், காயிதெ மில்லத் காலத்தில் லீகில் இணைந்தவர்.
அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத். தமிழக முஸ்லிம் லீகின் பொதுச்செயலாளர் .கே. ரிபாய் சாஹிப். அப்போது முஸ்லிம் லீக் மாணவர் அணி உதயமானது. மாணவர் அணியின் சட்ட திட்டங்களை. மாநிலப் பொதுச் செயலாளர் .கே.ரிபாய் சாஹிப் வடிவமைத்தார். அந்த மாணவரணியின் முதல் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் முஹையதீன் சாஹிப்.
 
தமிழகத்தில் காயிதெ மில்லத் காலத்தில் முஸ்லிம் லீகில் கருத்து முரண் பட்டு, திருச்சி நாவலர் .எம்.யூசுப் சாஹிப் அணி ஒன்று லீகை விட்டுப் பிரிந்து சென்றது. தமிழ் நாடு முஸ்லிம் லீக் என்றொரு கட்சி ஆரம்பமானது.
பேராசிரியர் காதர் முகையதீன் சாஹிபும் அப் புதுக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், தலைவர்கள் சில கருத்து முரண்கள் பட்டு விலகிக் கொண்டதும், அல்லது விலக்கப் பட்டதும் புதியதான செய்தியே அல்ல.

காயிதெ மில்லத் காலத்திலேயே தமிழகத்திலும், பிற மாநிலங்கள் உள்ளிட்ட மத்தியத்திலும் இந்தச் செயல்பாடு நிகழ்ந்திருக்கத்தான் செய்கின்றன.
முரண் பட்டுச் சென்ற லீகர்கள் லீகின் உணர்வை எந்த நிலையிலும் விட்டு விடவில்லை. தாங்கள் மற்றுமொரு லீகர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள்.
அல்லது ஒதுங்கி இருந்திருக்கிறார்கள். ஒரு சிலர் இதற்கு விதி விலக்காக வும் இருந்திருக்கிறார்கள்.

மூத்த தலைவர் திருச்சி நாவலர் .எம்.யூசுப் சாஹிபின் லீக் செயல்பாட்டை
எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அப்படி மதிப்படுகிறவர்கள், லீகின் ஒரு முக்கியப் பகுதியின் செயல்பாட்டை கவனியாமல் கண்மூடிக் கடந்திருக்கிறார்கள் என்று பொருள்.

காயிதெ மில்லத்தை அடியொற்றித் தமிழத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று தன் பேச்சாற்றலால் லீகை வளர்த்தவர்கள், தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன், திருச்சி நாவலர் .எம் யூசுப் அண்ணன் போன்ற பிரமிக்கத் தக்கத் தலைவர்கள்தாம் என்பதை மறந்துவிட முடியாது.

நாவலர் .எம் யூசுப் அண்ணன் செல்லாத குக்கிராமங்கள் அவர் காலத்தில்
இல்லை. நாவலரின் கணீரென்ற ஒலியும், மிக அழுத்தமான கருத்துப் பதிவும், ஈர்ப்பு சக்தி மிகுந்த பாணியும் முஸ்லிம் லீகை எங்கெங்கும் எடுத்துச் சென்றிருக்கிறது .

நான் நினைக்கிறேன், 1952--லேயே நாவலரின் பத்திரிகையான மறுமலர்ச்சி பிறப்பெடுத்து விட்டது. அதில் முஸ்லிம் லீகின் பிரச்சாரத் தீவிரம் கொடி கட்டிப் பறந்தது.

நாவலரிடம் ஒரு மிகப் பெரும் பண்பாடும் உறுதியும் இருந்தது. எந்தக் காலத்திலும் முஸ்லிம் லீகின் சட்ட மன்றம் மற்றும் மேலவை, இன்னும் பாராளு மன்றம் போன்ற பதவிகளுக்கு மனுச் செய்து வாங்கிய வரலாறே கிடையாது.

நாவலர் லீகில் கருத்து முரண் பட்டுச் சென்ற காலக் கட்டத்தில் சென்னை துணை மேயராக இருந்தவரும் பின்னர் சென்னைத் துறைமுகத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவருமான டாக்டர். ஹபீபுல்லாஹ் பெய்க்,
கவிஞர் சாரண பாஸ்கரனார், லெப்பைக் குடிக்காடு ஜமாலி சாஹிப், சென்னை அச்சக உரிமையாளர் கீழக்கரை "தையன்னா அனா", முழக்கம் பத்திரிகை ஆசிரியர் செய்குத் தம்பி பாவலர் பேரர் செய்குத் தம்பி, கோவை ஜலீல் ஹாஜியார், சேலம் காதர் ஹுஸைன் போன்ற பிரபல்யங்களும் பிரிந்து சென்றனர்.

நாவலர் .எம் யூசுப் சாஹிபின் மறுமலர்ச்சி இதழ் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுக் கலைக் களஞ்சியத்திற்கு நிகராது. வலங்கைமான் அப்துல்லாவின் "நம்மைச் சுற்றி நம்மைப் பற்றி" தொடர் அக் கால இளைஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவற்றில் ஒன்று.

.கே. ரிபாய் சாஹிப் எழுதிய" குற்றவாளிக் கூண்டில் காந்திஜீ" தொடர், ஒரு சாதனைத் தொடர். அதுவும் மறுமலர்ச்சியில்தான் வெளி வந்தது. அதன் சில பகுதிகள் என்னிடம் இல்லை. இருந்தவரை உள்ள மீதிப் பகுதிகளை என் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தோழர் வே.மு. பொதிய வெற்பன் படித்துப் பார்த்தார். காந்திஜீயின் இன்னொரு பக்கம் இந்த அளவு தமிழில் வெளி வரவில்லை எனச் சொல்லி அவரின் தொகுப்பான "பறை" தொகுப்பில் அண்மையில் வெளியிட்டார். பொதிய வெற்பன் பொதுயுடைமைச் சிந்தனை இலக்கிய வாதி. "பறை" அவரின் சிறப்பான தொகுப்பு.
 
சகோதரர் ரஸ்வியிடம் முழு கட்டுரையும் இருந்தால் தந்துதவினால் அதனை நாங்கள் ஒரு நூலாக வெளியிட வாய்ப்பாக இருக்கும்.
 
நாவலர் முஸ்லிம் லீகில் மீண்டும் பிரவேசம் செய்த பின்னர் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
 
கீழக்கரை தொழில் அதிபர், கொடை வள்ளல் B.S. A. --க்கு ஒரு ஆவல் இருந்தது. ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பல்சுவை வாரயிதழ் ஆரம்பிக்க வேண்டும்.அதுவும் அன்றைய குமுதம். ஆனந்த விகடன், கல்கி பாணியின் நேர்த்தியில் இருக்க வேண்டும். விற்பனையிலும் முன்னேற வேண்டும்.  

இந்தத் திட்டத்தை B.S.A.உருவகப்படுத்த நினைத்தார்.

அப்போது ஆனந்த விகடன் வாரயிதழில் ஆசியர் குழுவில் பணி புரிந்த எழுத்தாளர் ஜே.எம். சாலியை ஆசிரியராகக் கொண்டு அந்தப் பத்திரிகையைத் தொடங்க ஆசைப்பட்டார்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவரின் பண்ணை வீட்டில் கூட்டினார். தமிழகத்தில் உள்ள அத்தனை முஸ்லிம் பத்திரிகை யாளர்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.

தமிழக இஸ்லாமியப் பத்திரிகைகள் அனைத்தும் பல நேரங்களிலும் B.S.A.யின் பொருளாதாரப் பின்புலத்தால்தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையில் எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களும் வந்திருந்தனர். நல்லதொரு விருந்தும் நடந்தது. அதனை ஒட்டி ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்தது.
 
மறுமலர்ச்சி சார்பாக நாவலர் .எம் யூசுப் சாஹிப், முஸ்லிம் குரல் சார்பாக
கனி சிஷ்தி, சரவிளக்கு சார்பாக தா.காசிம், முஸ்லிம் முரசு சார்பாக ஆளூர் ஜலால், அப்துல் வஹாப் சாஹிப், மணி விளக்கு சார்பாக ஹிலால் முஸ்தபா, அறமுரசு சார்பாக கவிஞர். ஜபருல்லாஹ். அக்பர் அண்ணன்.,ஜமாத்துல் உலமா சார்பாக மவ்லவி அபுல் ஹஸன் ஷாதலி மகனார் மவ்லவி இப்றாஹிம் பாகவி, இன்னுமுள்ள பலரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் B.S.A. கொஞ்சம் அதிகப்படியாகப் பேசினார்.
 
"ஆயிரம், இரண்டாயிரம் பத்திரிகைகள் விற்கக் கூடிய நீங்கள் தொடர்ந்து சிரமத்தோடுதான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இப்படிக் கிட்டத் தட்ட பத்தொன்பது பத்திரிகைகள் வருகின்றன. இதனால் சமுதாயத்திற்கு என்ன பயன்? அனைவரும் உங்கள் பத்திரிகையை நிறுத்தி விடுங்கள். மாற்று வேலைக்கு நாங்கள் சில ஏற்பாடு செய்திருக்கிறோம். அதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் ஜே.எம்.சாலியை ஆசிரியராகக் கொண்டு ஒரு இஸ்லாமிய வார இதழைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். மிகப் பெரும் பொருளாதார முதலீடு செய்கிறோம். அதற்கு நீங்கள் உதவிகரமாக இருங்கள்" என்று சொன்னார்.

B.S.A. இதைச் சொல்லி முடித்த உடன், தா.காசிம், நான், ஜபருல்லாஹ் மூவரும் பதில் சொல்ல ஒரே நேரத்தில் எழுந்தோம்.
 
மாநிலப் பொதுச் செயலாளர் நாவலர் .எம் யூசுப் சாஹிப், எங்களை நோக்கிக் கையசைத்தார். நாங்கள் அமர்ந்து கொண்டோம். நாவலர் .எம் யூசுப் சாஹிப், பேச ஆரம்பித்தார்.
 
" B.S.A. அவர்களே! பத்திரிகைத் துறையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.? நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய குமுதம், ஆனந்த விகடன், மற்ற தினப் பத்திரிகைகள் எழுதியா ஷாபான் பிரச்சனைக்கு பெரும் திரளைக் கூட்டின

இந்த ஆயிரம், இரண்டாயிரம் எண்ணிக்கை உள்ள பத்திரிகைகள் மட்டும் எழுதியும் இதன் ஆசிரியர்கள் பள்ளி வாசல்தோறும் தெருவெங்கும் பேசியும் சமுதாயத்தை ஒன்று திரட்டினோம்.
 
எங்களுக்கு என்றைக்காவது தொழில் நடத்த ஆசை வந்தால் தொழில் அதிபரான உங்கள் காலடிக்குக் கீழே வந்து அமர்ந்து ஆலோசனைக் கேட்கிறோம். உங்களுக்கு என்றைக்காவது பத்திரிகை நடத்த ஆசை முளைத்தால் எங்கள் காலடிப் பக்கம் அமர்ந்து ஆலோசனைக் கேளுங்கள்
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்." என்று நாவலருக்கே உரிய அழுத்தம் திருத்தமான கணீர் குரலில் கூறினார். அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தது.

நாவலர் இவ்வளவு அழுத்தமானவர், தம் கொள்கைப் பிடிப்பில். நாவலர் லீகில் இணைவதற்கு சற்று முந்திய காலம்.
 
அப்துஸ் ஸமது சாஹிப் தமிழக முஸ்லிம் லீக் தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் வேலூர் பாராளு மன்றத் தொகுதி வேட்பாளராக
நின்றார். அப்போது தண்டபாணி என்ற எதிர் வேட்பாளரால் தோற்கடிக்கப் பட்டார்.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து கே.எம்.காதர் முஹையதீன் சாஹிப், அப்துஸ் ஸமது சாஹிபிற்கு பன்னிரெண்டு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் மிகவும் உருக்கமானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது.

அதைத் தொடர்ந்து நாவலர் .எம் யூசுப் சாஹிப் தலைமையில் பிரிந்து சென்ற அமைப்பினர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் மீண்டும் இணைகிறார்கள். நாவலர் .எம் யூசுப் சாஹிப் மாநில மற்றுமொரு பொதுச் செயலாளராகப் பதவி பெறுகிறார்.

இதற்கிடைப்பட்டக் காலத்தில் காயல் பட்டினத்தில் ஒரு பெரிய மீலாது விழா நடைபெறுகிறது. பல ஆண்டுகள் பிரிந்து சென்ற கே.எம்.காதர் முஹையதீன் சாஹிப் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் அந்த விழா மேடையில் வந்து மீண்டும் பேசுகிறார்.

அந்த மேடையில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், .கே. ரிபாய் சாஹிப்,
மாவட்டத் தலைவர் .சாகுல் ஹமீது சாஹிப், மாவட்டச் செயலாளர் கோதர் மைதீன் சாஹிப், எஸ்..காஜா முஹையதீன் சாஹிப், வந்தவாசி அப்துல் வஹாப் சாஹிப், கவிஞர் தா.காசிம், கவிஞர் ஜபருல்லாஹ், மற்றும் நானும் பேசினோம்.

மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிபின் பிரவேசம் நல்லவிதமாகவே நடந்தேறியது.
அப்துஸ் ஸமது சாஹிப் மறைவுக்குப் பின்னர் தமிழக முஸ்லிம் லீக் தலைமையை ஏற்று இன்றுவரைத் தொடர்ந்து வருகிறார்.

இதன்பின் லீக் வரலாறு ஒரு மாதிரியான திசைவழிப் பயணத்தை மேற் கொள்ளத் தொடங்கியது.

காயிதெ மில்லத் காலத்தில் இருந்த மூத்த தலைவர்களின் மரணம் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்தது. கிட்டத் தட்ட மூத்தத் தலைவர்கள் இன்றைக்கு இல்லாமலேயே ஆகி விட்டார்கள். ரொம்பச் சொற்பம் பேர்
செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் ஆர்வமாக முஸ்லிம் லீகை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு முஸ்லிம் லீகின் வரலாறு
சரியாகச் சொல்லிக் காட்டப்பட வில்லை. அல்லது திரித்துச் சொல்லப் படுகிறது என்ற நிலைமை நிச்சயம் நீடிக்கிறது.

ஒரு முறை B.S.A., சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அவர் இல்லமும் தோட்டமும் அமைந்த பகுதியில், சென்னையில் ஏற்கனவே நடக்க இருந்த தமிழக முஸ்லிம்லீக் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும், மதிய உணவு வழங்குவதற்கும் காயிதே மில்லத்திடம் அனுமதி கேட்டார்.

காயிதே மில்லத் தொடக்கத்திலேயே மறுத்து விட்டார்கள். யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் எவ்வளவுதான் வேண்டியவராக இருந்தாலும் தனி நபர் இடத்தில் கூடாது. கூடவும் கூடாது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் மட்டும்தான் அதில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறி, காயிதெ மில்லத் மறுத்து விட்டார்கள்.

B.S.அப்துர் ரஹ்மான் சாஹிப் எந்தக் காலத்திலும் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினராக இருந்ததில்லை வேறு எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினரும் இல்லை. ஆனால் லீகிற்கு ஏராளமான நிதி உதவி தொடர்ந்து செய்யக் கூடியவர்.

"அப்படியானால் செயற்குழு உறுப்பினர்களுக்கு நான் விருந்து உபசாரம் செய்ய ஆசைப் படுகிறேன்.தலைவர் அவர்களே அனுமதி தாருங்கள்" எனக் காயிதெ மில்லத்திடம் B.S.A. அனுமதி கேட்டார். காயிதெ மில்லத் இதற்கு ஒப்புக் கொண்டார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழுவோ பொதுக்குழுவோ அந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உடையது என்ற ஓர் அற்புதமான
அடையாள முன் மாதிரியைக் காயிதெ மில்லத் நமக்கு வழங்கி
இருந்தார்கள்.
 
இந்த அடையாள முன் மாதிரியைக் கரைத்துக் கழிவுநீர் ஓடையில் ஒரு நாள் கொட்டி விட்டார்கள்.

No comments:

Post a Comment