Tuesday, May 26, 2015

கவிஞர் பொதிகை ஹமீது...!



தென்காசி அமீர் முதலாளி இந்தப் பெயர் 1960-களில் தென்காசி வட்டாரங்களில் நெல்லைப் பகுதிகளில் சற்று அதிகமாகவே அறிமுகமான பெயர்.

இவர் கொடைத்திறன் உள்ளபடியே நினைவு கூரத்தக்கது. அநேகமாக அந்தக் காலக் கட்டத்தில் , இவர் இல்லத்தில் உணவருந்தி கை கழுவாதவர்கள் அந்தப் பகுதில் மிக மிகச் சொற்பமாகத்தான் இருந்திருப்பார்கள். இவர்களில் மத, ஜாதி வித்தியாசங்கள் கிடையாது.

இவரால் அந்தப் பகுதில் பாதிக்கப் பட்டவர்களும் இல்லாமல் இல்லை.
இந்த அமீர் முதலாளியின் மூத்த மகன் முதலியாப் பிள்ளை என்ற முஹமது சாஹிப் ஜெயினுக்கு 1968-ஆம்ஆண்டாக இருக்கலாம் திருமணம் நிகழ்ந்தேறியது.

இந்த ஜெயின் அண்ணன் திருமணத்திற்கு திருமண வாழ்த்துப் பா நான் எழுதிக் கொடுத்திருந்தேன்.

அந்த வாழ்துப் பா இப்படி ஆரம்பம் பெற்றிருந்தது.
"தென்றலுக்கு ரதவீதி
தென்பொதிகை மலைச்சாரல்!
தென்பொதிகைச் சாரலுக்குத்
தென்காசி முன்வாசல்!"

இந்தத் தென்காசிப் பட்டணத்தின் பெருந்தனக்காரக் குடும்பத்தினர்கள்தாம், அமீர் முதலாளியும், கவிஞர் சாகுல் ஹமீது சாஹிபும்.

சாகுல் ஹமீது சாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலப் பொருளாளராகப் பதவி வகித்தவர். நெல்லை மாவட்டத் தலைவர் பதவியிலும் தொடர்ந்தவர். தென்காசி பஞ்சாயத்திலிருந்து நகர் மன்றம் மாற்றம் பெற்றபோது அதன் முதல் சேர்மனாகத் திகழ்ந்தவர். கடைய நல்லூர் சட்டமன்றத்தின் முஸ்லிம் லீகின் உறுப்பினராக இருந்தவர், இவர் குடும்பத்து மூத்த சகோதரர், பெரிய முதலாளி வாப்பா என அழைக்கப்பட்ட முகைதீன் பாட்சா சாஹிப்தான் தென்காசிப் பஞ்சாயத்தின் முதல் தலைவர்.

முஸ்லீம் லீகின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் அடுத்துப் பொருளாளராகவும், லீகின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும்,
பன்னூல் ஆசிரியராகவும், முஸ்லிம் லிகீன் இயக்க இதழான "உரிமைக் குரல்" வார இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்த A.K.ரிபாய் சாஹிபின் உடன் பிறந்த தம்பிதான் சாகுல் ஹமீது சாஹிப்.

சாகுல் ஹமீது சாஹிபின் சிறிய தந்தையாரின் மகன், நெல்லை ஹைகிரவுண்ட் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப்.

சாகுல் ஹமீது சாஹிப், நல்லதொரு கவிஞர். தன் ஊரை நினைவுறுத்த தன் பெயரின் முன் பொதிகையைச் சேர்த்துக் கொண்டார். பொதிகை ஹமீதானார்.

சாகுல் ஹமீது சாஹிப் அளவுக்கு இன்றுகூட முஸ்லிம் லீகின் களப்பணியை முஸ்லிம் லீகில் எவரும் செய்யவில்லை என்ற உண்மையை யாரும் மறுதலித்து விடமுடியாது.

1972-ஆம் ஆண்டில், சென்னையில் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீகின் தொண்டர் படைதான் முதற் பரிசைத் தட்டிச் சென்றது. அப்போது மாவட்டத் தலைவராகச் சாகுல் ஹமீது சாஹிப்தான் பொறுப்பில் இருந்தார். மாவட்டச் செயலாளராக முன்னாள் தமிழகச் சட்ட மன்ற உறுப்பினர் கோதர்மைதீன் சாஹிப் இருந்தார். இந்த இருவர் கூட்டணி, முஸ்லிம் லீகின் சாதனைக்குக் கிடைத்த இறையருள் கொடை என்றே கூற வேண்டும்.

சென்னையில் அன்று நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டின் முதல்நாள்
இறுதியில், தமிழ்க் கவியரங்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
உரூது மொழிக் கவாலியும் நடக்கவிருந்தது.

தமிழ்க் கவியரங்கத்திற்குச் சாகுல் ஹமீது சாஹிப் தலைமை தாங்கினார். இக் கவியரங்கில், தா.காசிம், பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது, கவிஞர் மூஸா, இன்னும் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

நாகூர் கவிஞர் இஜட். ஜபருல்லாஹ், சென்னை சட்டக் கல்லூரில் இரண்டாம் ஆண்டு மாணவர். இவரைக் கவிஞர் தா.காசிம் அழைத்து வந்து இக் கவியரங்கத்தில்தான் கவிஞராக முதன் முதலாக மேடையேற்றினார்.

இக்கவியரங்கத்தில் நடக்கக் கூடாத சம்பவம் நிகழ்ந்தது. கவியரங்க
மேடைக்கு முன் அகில இந்திய தலைவர் சுலைமான் சேட், பொதுச் செயலாளர் பனாத்வாலா, மற்றொரு பொதுச்செயலாளர் முஹமது கோயா. தமிழ் மாநிலத் தலைவர் அப்துல் வஹாப் ஜானி, மாநிலப் பொதுச் செயலாளர் A.K.ரிபாய், நாடாளுமன்ற உறுப்பினர் A.K.A.அப்துஸ் ஸமது, இவ்வாறு V.V.I.P.க்கள் கூட்டம் குழுமி யிருந்தது.

சில உரூது மொழி அதி தீவிரவாதிகள் தமிழ்க் கவியரங்கத்தை விரைந்து முடிக்கச் செய்யும் முயற்சியில் அத்துமீறிச் செயல்பட்டனர். உரூதுக் கவியரங்கத்தை உடனே துவங்கச் செய்ய முயன்றனர்.

மேடையில் தமிழ்க் கவிஞர்கள் கவிதை படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை மேடையை விட்டு அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதைக் கவனித்த சாகுல் ஹமீது சாஹிபிற்கு ஆவேசம் வந்து விட்டது.

நேரே மைக்கின் முன் வந்தார். "இது தமிழ்நாடு. இங்கே தமிழ்தான் கோலோச்சும். நாங்கள் பெருந்தன்மையுடன் வழங்கும் வாய்ப்பை உரூதுக்காரர்கள் நேர்மையுடனும் நாகரீகத்துடனும் ஏற்று நடந்து கொள்ள வேண்டும். அத்துமீறினால் நடப்பது இங்கு வேறுவிதமாக இருக்கும்.
தமிழர்களுக்குக் கவிதையில் பேசவும் தெரியும். இடுப்புக் கச்சையை
(பெல்ட்) உருவி வீசவும் தெரியும்." எனக் கூறிக் கொண்டே கட்டியிருந்த பெல்ட்டை உருவி கையில் எடுத்துக் கொண்டார்.

அவ்வளவுதான் தமிழ்க் கவியரங்கம் கம்பீரமாக நடந்து முடிந்தது.

இன்னொரு சம்பவமும் பதியப்பட வேண்டும்.

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் ஜனதாதள வேட்பாளர் தண்டாயுதபாணி, சமுதாயத் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபை தோற்கடித்து விட்டார். ஜந்தாண்டுக்குப் பின் மீண்டும் தேர்தல் வந்தது.

மீண்டும் இதே ஜோடிதான் மோதியது. ஆனால் முன்பைவிட மோசமான நிலவரம் இப்போது தொகுதியில் நிலவியது.

பேரணாம் பேட்டை கொடுரமான மதக் கலவரம் நடந்து முடிந்திருந்தது.

இந்நிலையில் தேர்தலை எப்படிச் சந்திப்பது?

ஸமது சாஹிப் இம்முறை, தேர்தலைச் சந்திக்க வேண்டுமானால் சாகுல் ஹமீது சாஹிபிடம்தான் பூரணமாக ஒப்படைத்து விடவேண்டும் என முடிவெடுத்து ஒப்படைத்து விட்டார்.

சாகுல் ஹமீது சாஹிப்தான் தேர்தல் வியூகம் அமைத்தார். ஆறு சட்ட மன்றத் தொகுதிக்குள் சாகுல் ஹமீது சாஹிப் கால் படாத மண் பிரதேசமே கிடையாது. வட ஆர்க்காடு மாவட்டத் தலைவர் ஹபிபுல்லாஹ் அரும்பாடுபட்டார். முடிவில் சமூதாயத் தலைவர் ஸமது சாஹிப், தண்டாயுதபாணியைப் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த வேலூர் தொகுதியின் முதல் தோல்வி, ஒருவகையில் சமுதாயத்திற்கு நன்மை செய்தது.

காயிதெ மில்லத் காலத்தில் கருத்து முரண்பட்டு, பிரிந்து சிலர் வெளியேறியிருந்தனர். திருச்சி நாவலர் A.M.யூசுப் சாஹிப் தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் லீக்கென்று தனிக் கட்சி கண்டனர்.

மிகத் திறமைமிக்கவர்கள் அதில் இருந்தார்கள் என்பது உண்மை. சென்னை மேயர் ஹபிபுல்லா பேக், செய்குத் தம்பி பாவலர் பேரர் முழக்கம் செய்குத் தம்பி, தாஸ்பிரஸ் கீழக்கரை தையன்னா ஆனா, கவிஞர் சாரண பாஸ்கரனார், லெப்பைக்குடி காடு ஜமாலி சாஹிப், கோவை ஜலீல் சாஹிப், சேலம் காதர் ஹுஸைன், பேராசிரியர் காதர் முகைதீன் (இன்றையத் தலைவர்) போன்றவர்கள் தனிக்கட்சியில் இருந்தனர். இது சமுதாயத்திற்கு ஒரு பின்னடைவுதான்.

வேலூரில் தலைவர் தோல்வி அடைந்து சில நாட்கள் சென்றபின்,
பேராசிரியர் காதர் முகையதீன், ஸமது சாஹிபிற்கு பருத்த நீண்ட கடிதம் எழுதி அனுப்பினார். அந்த அற்புதக் கடிதம்தான் சமுதாயத்தை மீண்டும் ஒன்றிணைக்கக் காரணமாக அமைந்தது. "தோற்றது அப்துஸ் ஸமது சாஹிப் இல்லை. சமுதாயத் தலைமை தோற்றது. சமுதாயம் தோற்றது." எனப் பேராசிரியர் காதர் முகையதீன் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தேர்தல் பிரிந்திருந்தவர்களை ஒன்றிணைத்தது. அதே வேலூர்த் தேர்தல் சமுதாயத்திற்கு வெற்றி வழங்கியது. அதே வேலூர்  தேர்தல் ஒரு சாதனையாளரையும் சில இயக்க முன்னோடிகளையும்  இயக்கத்தை விட்டு வெளியேற்றியது.

ஆமாம் சாகுல் ஹமீது சாஹிபை தாய்ச் சபை வெளியேற்றியது.
அதன்பின் அரசியலை விட்டுச் சாகுல் ஹமீது சாஹிப் பூரணமாக விலகிவிட்டார்.

என் போன்றவர்களுக்கு சாகுல் ஹமீது சாஹிபின் இந்த முடிவில் இன்றும் கூட உடன்பாடு இல்லை. இன்று அவர் இல்லை.

அவரின் அனைத்துப் பாவங்களையும் இறைவன் மன்னித்து சுவனப்பேற்றைத் தந்தருள்வானாக!

No comments:

Post a Comment