Friday, April 24, 2015

அநாகரிகத்தின் அவலங்கள்...!



நேற்று (22/04/2015) இரவு தந்தி டிவி யில், ஆயுத எழுத்து நிகழ்ச்சியில்
சூடான விவாதம் நிகழ்ந்தது.

பாண்டே நெறியாளராக இருந்தார். பா.ஜ.க வைச் சேர்ந்த நாராயணன்,
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பெண்மணி ஒருவர் (மன்னிக்க வேண்டும்.
பெயர் மறதியாக உள்ளது.) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரதமர்
மோடியை ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது "கொரில்லா" எனக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலும்
அதையே உறுதிப் படுத்தினார்.

இந்தப் பேச்சு நிச்சயம் முறைகெட்ட விமர்சனந்தான். தரக்குறைவான
சொல்லாடல்தான். கடும் கண்டனத்துக்குரியதுதான்.

அரசியல் தலைவர் பயன்படுத்தக் கூடிய தரமுடையதே அல்ல.

ஆனால் இது பற்றிய விவாத அரங்கம், கழிசடைத் தனமாகத் தொடங்கியது
உள்ளபடியே கேவலமாக இருந்தது.

இந்திய அளவில், தலைவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுதல் இதுதான் முதல் முறை எனப் புரிந்து கொள்ளக் கூடாது. அதே நேரம் இதனைச் சாதாரணமான ஒரு சம்பவமாகவும் தவிர்த்து விடவும் முடியாது.

பண்டித நேரு ஒருமுறை, அண்ணாவைக் குறிப்பிடும் போது, "யார் இந்த
அண்ணா? அவர் மூஞ்சியைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார்.

இதற்கு, அண்ணா "என் மூஞ்சியைப் பார்க்க வேண்டியவர்கள் ஏற்கனவே
பார்த்து விட்டார்கள். நடக்க வேண்டிய திருமணமும் நடந்து முடிந்து விட்டது பண்டிதர் அவரின் பணியைப் பார்க்கட்டும் எனக்குப் பெண்பார்க்க வேண்டாம்" எனப் பதிலில் நையாண்டி செய்தார்.

அதே நேரு வேறொரு சந்தர்ப்பத்தில், காயிதெ மில்லத்தைக் குறித்துச் சொன்னார்.

"முஹமது இஸ்மாயீல் சாஹிப் செத்த குதிரையில் பயணம் செய்ய முயற்சிக்கிறார். முஸ்லிம் லீக் ஒரு செத்த குதிரை". எனப் பரிகசித்தார்.
இதில் மிக மோசமான ஏளனம் இருக்கிறது. முஸ்லிம்கள் குதிரை மேய்க்க
வந்தவர்கள்.அவர்களிலும் காயிதெ மில்லத் செத்த குதிரையில் சவாரி செய்யக் கூடியவர் என்கிற தொனி இருந்தது.

காயிதெ மில்லத், மிகச் சுருக்கமாகப் பதில் சொன்னார். "நேரு பெரிய மேதை.

இந்தப் பண்டிதர் பச்சிளம் பிறைக் கொடிக்குக் கீழ் நின்று காங்கிரசுக்கு வாக்குத் தாருங்கள். எங்களுக்கு உயிர் தாருங்கள் எனக் கேட்கக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது." என்று.

இந்த நிலை காங்கிரசுக்கு உடனடியாக வந்தது. கேரளாவில் தோழர் நம்பூதிரி பாடின் அமைச்சரவையைச் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நேரு கவிழ்த்தார். இடைத்தேர்தல் அங்கு வந்தது. காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால் முஸ்லிம் லீக் கட்சியுடன்தான் கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூட்டணி வைத்தார். கேரளாவில், பச்சிளம் பிறைக் கொடிக்குக் கீழ் நின்று வாக்குக் கேட்டார். "செத்த குதிரை"யில் ஏறித்தான் கேரளச் சட்ட மன்றத்தின் ஆட்சியில் நேரு கட்சி அமர முடிந்தது.

"பச்சைத் தமிழன்" எனப் பிற்காலத்தில் தி.மு.க வின் தந்தையான பெரியார்
பாராட்டிய பெருந்தலைவர் காமராஜரை, "கல்வி அறிவில்லாதவர்" என
அறிஞர் கட்சி தி.மு.க. கேவலப்படுத்திய கதை உண்டு.

கண்ணதாசன் திமுக வில் இருந்த காலத்தில் எழுதிய ஒரு பாடல். கருணாநிதி பாராட்டி மகிழ்ந்த பாடல்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - எங்கள்
காமராசர் பிறந்த தமிழ்நாடு!' என்று எழுதி காமராஜரை அசிங்கப் படுத்திய
அநாகரிகத்தைத் "திமுக" நிகழ்த்தியதுண்டு.

முன்னாள் முதல்வர் பக்தவச்சலனாரை,"குரங்கு" எனக் கூறி, ஏகடியம் செய்தது திமுக வுக்கு உரிமையானது. கருணாநிதியின் முரசொலி பத்திரிகையில், குரங்கு முகம் போன்று பகதவச்சலனாரைக் கேலிச்சித்திரம்
போட்ட கதையும் உண்டு.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், மதுரையில் தாக்கப்பட்டார். ஆடைகளில் ரத்தம் கொட்டியது. நெடுமாறன் அம்மையாரை மறைத்துக் காப்பாற்றினார். இந்நிகழ்ச்சியைக் கூடக் கொச்சைப்படுத்தினர். நடமாடும் பல்கலைக்கழகம் நெடுஞ்செழியன் அப்போது திமுக ஆட்சியில் அமைச்சர்.

மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.
"இந்திரா அம்மையார் சேலையில் ரத்தமாம். அதற்குத் திமுக எப்படி பொறுப்பேற்க முடியும்?. பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் ரத்தம்தான் அது. அதைப்போய் பேப்பர்ல போடுறாங்க காங்கிரஸ்காரங்க. பத்தாததுக்கு நெடுமாறன் அம்மையார் மேலபடுத்துக் காப்பாத்துனாருன்னு வேற பேசுறாங்க" இப்படிச் சொன்ன அசிங்கமும் உண்டு.

திமுக வில் இருந்த போது டாக்டர் சத்தியவாணி முத்து. அவரே, அஇஅதிமுக வுக்குச் சென்றபின் தட்டுவாணி முத்து.

தோழர் பாலதண்டாயுதத்தை "ஆயுள் கைதி" என இறுதிவரை அவமானப்படுத்திய ஒற்றைப் பெருமை திமுக வின் சொந்தம்.

திமுக, மிசாவில் அகப்பட்டது, திமுக வினர் கைதாயினர். அதைப் பெருமையாகக் கருதி, தங்கள் பெயருக்கு முன்னால் "மிசா" போட்டுக் கொண்ட திமுக, பாலதண்டாயுதம் போன்ற பெருமிதம் நிறைந்த தலைவர்களை "ஆயுள்கைதி" எனக்கொச்சப்படுத்திய சரித்திரமும் உண்டு.

ஆனாலும் இதுவரை உள்ள அத்தனை அவலங்களையும், அசுத்தங்களையும், அருவருப்புகளையும் சாதரணமாக்கி விட்டது, தந்தியின் நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சி.

,வி.கே.எஸ்.இளங்கோவன், மோடியைக் "கொரில்லா" என வர்ணித்தது நிச்சயம் மகா தவறு.

இந்தியாவின் தென்தமிழகத்தார் குரங்கினத்தார் எனவும் அதற்கும் தெற்கே
வாழும் சமூகத்தார் அரக்க குலத்தார் எனவும் சொல்லும் இதிகாசங்கள்
கூடத்தெய்வ அம்சங்களாக மதிக்கப்படுவதும் உண்டு. அது அவரவர் நம்பிக்கை அதில் தலையிட ஒருபோதும் பிறர் எவருக்கும் உரிமை இல்லை.

இளங்கோவனுக்குப் பதில் சொன்ன நாராயணன் மிகமிகக் கேவலமாக நடந்து கொண்டார். உடனடியாகக் கண்டிக்கப்பட வேண்டிய தரம்கெட்டவராகத் தாழ்ந்து போய்விட்டார்.

"பெரியார், தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். அவர் பேரனுக்குப் புத்தி எப்படி இருக்கும்?" இது பாஜக நாராயணன் கருத்து.

அடுத்துச் சொன்னது இன்னும் கோரமானது. எதிரில் பேசிக்கொண்டிருந்த
அம்மையாரிடம் சொன்னார்.

"ஒப்பனை செய்யும் பெண் ஆண்களை ஈர்க்கும் விபச்சாரிகள். விபச்சாரிகளுக்கு ஒப்பனை தேவை.எங்களுக்குத் தேவையில்லை."
இதுவும் பாஜக நாராயணன் பேசியது.

பெரியார் புத்தி பேரனுக்கு உரியது. அதாவது பரம்பரைப் புத்தி. அதுதானே
நாராயணன், சொல்லும் ஜாதிய புத்தி. சரி. வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம். மோடிக்கு எப்படி ஆட்சிப் புத்தி வரமுடியும்? என்று நாராயணன் கேட்கத் தொடங்கிவிட்டார் என நாம் புரிந்து கொள்ளலாமா?

இளங்கோவன் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய நாராயணன், எதற்காகப் பெரியாரிடம் ஓடி, இதுதான் ஜாதியப்புத்தி என அடம்பிடிக்கிறார்.?

ஒப்பனை செய்யும் பெண்கள் விபச்சாரிகள் என்பது எங்கிருந்து வருகிறது?
இன்று பியூட்டி பார்லர் போகிற அத்தனைப் பெண்களும் விபச்சாரிகள் எனச் சொல்லும் ஆணவம் இவருக்கு எங்கிருந்து வந்தது?

பெண்கள் ஒப்பனைகள் இல்லங்களில் இல்லையா? ஏன் ஆலயங்களில்
இல்லையா.? எல்லா இடத்துப் பெண்களுக்கும் நாராயணன் குறிப்பிடும் அந்தஸ்து இதுதானா?

பாஜக வின் "புனிதக் கோட்பாடு" மீடியாக்கள் வழியே பந்தி வைக்கப்படுகிறது. நாராயணன் இறுதிவரை அவர் கொள்கையில் இருந்து மாறிக் கொள்ளவில்லை.

மிக அருவருக்கத் தக்க அநாகரிகம் அரங்கேறத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ் இளங்கோவன், தரம் தப்பிப் போய்விட்டார். பாஜக நாராயணன், நாசகாரத்துக்கு விதை பாவி, நீரூற்றத் தொடங்கிவிட்டார்.


அநாகரிகத்தின் அவலங்கள் பதாகை விரிக்கின்றன.

Monday, April 6, 2015

விலங்கொடு மக்கள் அனையர்...!"




யோகி ஆதித்திய நாத். பா ஜ க வின் நாடாளு மன்ற உறுப்பினர். இந்தத்
தகுதியோடு இந்துத்துவ தீவர வெறியர். "இந்து யுவ வாஹிணி" என்ற ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவருமாவார்.

தீடீரென்று ஒரு பிரச்சாரத்தை முன் வைத்துச் செயல்படத் துவங்கிவிட்டார்.

"இந்திய நாட்டின் தாயாகப் பசுவை அரசு அறிவிக்க வேண்டும்." இதுதான் யோகி ஆதித்ய நாத், அரசை நோக்கி வற்புத்தும் அறிவுறுத்தல்.

இந்த நாட்டு மக்கள் அரசுக்கு இக் கோரிக்கை யை வலியுறுத்தி, "மிஸ்டு கால்" கொடுக்க வேண்டும் என இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மிஸ்டு கால் கதை ஏற்கனவே பா ஜ க வாலும், அமித்ஷாவாலும், பிரதமர் மோடியாலும் பா ஜ க வுக்கு ஆள் பிடிக்கக் கண்டுபிடிக்கப்பட்ட புத்தம்புது கலாச்சாரம். இந்தக் கலாசாரத்தை நடமாடவிட்டு, 10-க் கோடி உறுப்பினர்களைப் பா ஜ க வில் சேர்த்து விட்டதாக ஒரு ஆகாசப் புளுகை அவிழ்த்து உதறிவிட்டு இருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பா ஜ க தான் அதிகம் உறுப்பினர்கள் உள்ள கட்சி, அதனால் உலகிலேயே பெரிய கட்சி, பா ஜ க தான் எனத் தங்கள் முதுகைத் தாங்களே, மிஸ்டு கால்களால் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இதற்கு இன்னொரு பொருள் இருக்கிறது. சீனா, கம்யூனிஸ பூமியென்றால்
இந்தியாவை இந்துத்துவா பூமி என ஆக்கிக் காட்டுவோம் எங்களுக்குக் கடைக்கண் காட்டுங்கள் என்று அமெரிக்காவிடம் யாசகக் கரம் நீட்டுகிறது
பாஜக.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, கவனியுங்கள், பாஜக, கம்யூனிஸ்ட்களின் மீது பாய்ந்து குதறித் துப்பும் கொடூர நிலை தெரியும்.

இந்த அரியமுறைக் கண்டுபிடிப்பான மிஸ்டு கால் கலாச்சாரத்தை யோகி ஆதித்திய நாத் கைவசம் தூக்கிக்கிட்டு வந்திருக்கிறார்.

ஏற்கனவே பாஜக ஆளும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் மாட்டிறைச்சித் தடைச்சட்டம் அமலில் இருக்கிறது. மாட்டிறைச்சியை விற்பனை செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனச் சட்டம்  நிறைவேற்றப் பட்டுள்ளது.

மற்றொரு மாநிலமான ஹரியானாவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது, இத்தடையை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மேலும் அபராதமும் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தாயை வெட்டினாலும், தாய் மாமிசத்தை புசித்தாலும் சட்டம் இப்படித்தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி, என் நினைவுகளில்
நிழல் விரிக்கிறது.

மறைந்த பெரியவர் சங்கராச்சாரியாரைச், சந்தித்துப் பேட்டி காண, தத்துவப் பேராசிரியராக அப்போது திகழ்ந்த ஓஷோ அனுமதி கேட்டிருந்தார்.


சங்கரமடம், முதலில் தயங்கியது, மறுத்தது. பின்னர் அனுமதி வழங்கியது. ஓஷோ சங்கரமடத்துக்கு வந்தார்.

குறித்த நேரத்தில் சங்கராச்சாரியாரைச், சந்திக்க அவர் இருப்பிடத்திற்குச் சென்றார். சந்திப்பும், பேட்டியும் தொடங்கியது.

சங்கராச்சாரியாருக்கு வணக்கம் தெரிவித்து, பேட்டியை ஓஷோ ஆரம்பித்தார்.

"ஐயா, தங்களைச் சந்திக்க மடத்திற்குள் நுழைந்த உடனே, தங்கள் தாயாரைப் பார்க்க நேர்ந்தது. மகிழ்ச்சியாக இருந்தது." என்றார், ஓஷோ.


சங்கராச்சாரியார் குழம்பி விட்டார்.

"என் தாயார் இப்போது இல்லையே, எப்போதோ தவறி விட்டார்களே அவர்களை இப்போது எப்படி மடத்து வாசலில் பார்க்க இயலும்?" இது சங்கராச்சாரியார் சந்தேகம்.

"இல்லை ஐயா, தங்கள் தாயாரைப் பார்த்தேன். அவர் இளமையோடும், நல்ல திடகாத்திரத்தோடும் இருக்கிறார்களே' என்றார் ஓஷோ.

சங்கராச்சாரியாருக்கு, மேலும் புரிபடவில்லை.

ஓஷோ விளக்கினார். "மடத்துக்குள் நுழைந்த உடனே அங்கே நல்ல இளமையான பசு கட்டப்பட்டு இருந்தது. நான், அதைத்தான் உங்கள் தாயார் எனக்குறிப்பிட்டேன். ஆனால் நீங்கள் அதைத் தாயாரில்லை என மறுத்து விட்டீர்களே? பசு நம் தாய் என்று நீங்கள் எழுதியுள்ளதை நான் வாசித்திருக்கிறேன். அது வெறும் வசனம்தானா? அதை நீங்களே பூரணமாக
நம்பவில்லையா? நீங்களே பூரணமாக நம்பாத ஒன்றை, எப்படி மற்றவர்களை நீங்கள் நம்பச் சொல்லுகிறீர்கள்"? எனக் கேட்டு ஓஷோ தன் பேட்டியைத் தொடர்ந்தார்.

பசுவை, இந்திய மக்கள் தாயாக ஏற்றுக் கொண்டால், காளை மாடுகள் இந்திய மக்களின் தந்தைதானே?

கன்றுக்குட்டிகள், நம் சகோதர,சகோதரிகள் ஆகிவிடுகிறார்கள். இந்த ஜந்து உறவு நன்றாகத்தான் இருக்கிறது.

இவற்றை மனப்பூர்வமாக, ஓஷோ கேட்டது போல இந்தியமக்கள் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

இந்தியாவை மேம்படுத்தப் போகிறோம். ஊழலே இல்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறோம். என்ற வாக்குறுதிகளை, இந்தியா முழுவதும் பாஜகவினர் அள்ளி அள்ளித் தெளித்தார்கள்.

இந்திய மக்களில் பெரும்பான்மையினர் இதை நம்பி வாக்குகளை வழங்கினார்கள்.இதன் அடிப்படையில் பாஜக வின் மோடி அரசு ஆட்சி அமைத்திருக்கிறது.

ஆட்சி பீடத்தில் கொலு அமர்ந்த உடனே மக்கள் அனைவரையும் மக்கள் நிலையில் இருந்து தாழ்த்தி, விலங்குறவாக்கச் சட்டம் சமைக்கிறார்கள்.

மனிதயினம் நிலை மாற்றம் அடைந்து, விலங்கினமாக மாறுவதுதான் மேம்பாடடையும் நிலையோ?

ஒரு பசுவுக்கு நான்கு கன்றுக்குட்டிகள் இருக்க முடியும், ஆனால் ஒவ்வொரு கன்றுக் குட்டிக்கும் ஒரே காளை அப்பா இருக்க முடியாது. தாய் ஒன்று, அவளுக்கு கணவர்கள் நான்கோ, ஐந்தோ.

இந்தத் தத்துவத்தை இந்திய மக்கள் அனைவரும் மனப் பூர்வமாக ஒப்புக்கொள்ளத் தயாரா?

குந்தியிஸமும், பாஞ்சாலியிஸமும் ஓர் உன்னத இஸமாக இருப்பதை சமூகம் ஏற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இங்கே எழுத்தாளர் பெருமாள் முருகன் பட்டபாட்டை அண்மையில்தான் கண்டோமே!

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, தன் ஊரில் இருந்த பல்லக்கு வழக்கு பற்றி நாவல் எழுத ஆசை, ஆனால் பெருமாள் முருகன் பட்டபாட்டைப் பார்த்தபின் பேனா தூக்க யோசிக்கிறேன் என அலறும் ஒலியும் கேட்கத்தானே செய்கிறது..