“மதங்கள் மனிதர்களுக்கு அபின்” என்ற சுலோகத்தைக் கம்யூனிச வரலாறு முன் வைத்திருக்கிறது. இந்த கோஷத்தை மட்டுமே இன்றைய கம்யூனிஸ்டுகள் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றில் பல நேரங்களில் இந்தச் சுலோகம் உண்மையை நிரூபித்து இருக்கிறது என்று ஒப்புக் கொள்ள முடியும். மதங்கள் ஒரு போதையாக வழங்கப்படும் பொழுது மதவாதங்கள் அபினுக்குரிய குணத்தோடுதான் செயல்படும். இந்த நிதர்சனமும் மறுக்கப் படக்கூடியது அல்ல.
கார்ல்மார்க்ஸ் இப்படியும் குறிப்பிடுகிறார்,
“மதக் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்திய முந்தைய வரலாற்றுத் தலைவர்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஏழை எளிய மக்களின் பக்கமிருந்துதான் வந்திருக்கின்றனர். அவர்களின் பிரதிநிதிகளாகத்தான் உலகத்தில் தோன்றி இருக்கின்றனர்.”
என்ற இந்த சுலோகத்தையும் வரலாற்றில் இருந்துதான் கார்ல்மார்க்ஸ் கண்டறிந்து வழங்கி இருக்கிறார்.
இதுவரை அறியப்பட்டிருக்கும் மதத்தின் தொடக்கத் தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அரசு ஒடுக்குமுறைக்கு மாறாகவும் துணிச்சலாக அவர்களுடைய நடவடிக்கையை முன்வைத்துத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்கள்.
இந்த உண்மை மறுப்புக்கு இடம் தராத ஒப்புதலுக்கு ஏற்புடைய சத்திய வரலாறாகும்.
பல்வேறுபட்ட உலக மதங்களும், மார்க்கங்களும் இந்த விதிமுறையின் படியே வெளிப்பட்டு இருக்கின்றன.
புராதன இந்து மதங்கள், அதற்கு இணையான யூத மதம், புத்த மதம், சமண மதம், கிருத்துவ மதம், இஸ்லாமிய மதம் , பாரசீக ஜுருடிசிய மதம், சீன கன்பூசியஸ் மதம் போன்ற தத்துவங்களின் அத்தனைத் துவக்கத் தலைவர்களும் எளிய மக்களின், உழைக்கும் மக்களின், பாமர மக்களின் பிரதிநிதிகளாக வெளிப்பட்டு வந்தவர்கள்தாம்.
பண பலத்தாலும் , படை பலத்தாலும் அதிகார அழிச்சாட்டியத்தாலும் நிற, மொழி, இன, வர்க்க வன்கொடுமையாலும் ஒடுக்கப்பட்ட , நசுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து இவைகளுக்கு எதிரான போராட்டக் களத்தை உருவாக்கியவர்கள்தாம்.
இந்த மதத் தலைவர்கள் முன்வைத்த தத்துவங்கள், வழிமுறைகள், நடைமுறைக் கடைபிடிப்புகள் அனைத்துமே ஒரு விடுதலையை நோக்கியும் , ஒர் மனித உன்னதத்தை உருவாக்கியும் வழங்கப் பட்ட தீர்வுகள்தாம்.
எல்லா நன்மைகளுக்கு எதிராகவும் இயங்கக் கூடிய வன்முறை ஆதிக்கங்கள் சும்மா கை கட்டிக் கொண்டு இருப்பதில்லை. அந்த வன்முறையாளர்களும் எதிர் நடவடிக்கையைத் தன் கைவசம் எடுக்கத்தான் செய்து இருக்கிறார்கள்.
அந்த நடவடிக்கைகள் பல நேரம் வெற்றி பெற்று இருக்கின்றன. சில நேரம் படு தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன. இவைகள் மக்கள் வரலாற்றின் நிரந்தர உண்மைகள்.
சில உதாரணங்களைச் சந்திக்கலாம்!
அதிகார கோட்பாட்டை தன் வசம் நிலைக்க வைக்க அரும்பாடுபடும் ஏகாதிபத்தியர்களும், ஏகாதிபத்திய ஆட்சிகளும் தங்களுக்கு எதிரான மதத் தலைவர்களின் புரட்சிகளை, மக்கள் புரட்சிகளின் வேகங்களைக் கட்டுப் படுத்த கையாண்ட ராஜ தந்திரம் மகா சாதுர்யமானது.
மதத் தலைவர்கள் முன் வைத்த மக்கள் போராட்டங்களை அதிகார வர்க்கத்தினர் அழித்துப் பார்த்தனர். முடியாத போது தங்கள் அதிகாரக் கோட்பாடாக மதத் தலைவர்களின் கோட்பாட்டைத் தத்தெடுத்துக் கொண்டனர். இதுதான் ராஜ தந்திரம்
மக்கள் எழுச்சிப் போராட்டங்கள், ஆட்சிவர்க்கம் கைவசம் ஆனதும், அந்தத் தத்துவத்தினுடைய நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைக்கப் பட்டன. வாழும் முறைக்குப் பதிலாக உணர்ச்சிப் பூர்வமான ஒரு வடிவத்தை மக்களுக்கு வழங்கின. இது மோசமான வர்க்க அரசியல் குணமாகும்.
இந்து மதத்தின் அற்புதமான மக்கள் வளக்கோட்பாடுகளை, மேல்மட்ட வர்க்க அரசியல் வல்லுனர்கள் ஆட்சி அதிகாரத்தில் தங்கள் கோட்பாடாக கைவசம் ஏற்றுக் கொண்ட உடன், பாமர மக்கள் நலக் கோட்பாட்டுத் தர்மம், நடைமுறைத் தத்துவத்தை மறந்து உணர்ச்சிப் பூர்வ நடவடிக்கையாக மாற்றம் பெற்றன.
மக்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுப் பிரிவினைகள் உருவாக்கப்பட்டு இவை தொழில் ரீதியான தர்மம் என நியாயப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தன.
பிறப்பு அடிப்படையிலேயே வர்க்கம் வகுக்கப் படுகிறது என்ற சாதியப் பண்பை இறைத் தர்மமாக வெளிப்படுத்தினர். இந்த இடத்திலிருந்துதான் மக்கள் புரட்சியின் உன்னதங்கள், வெறும் உணர்ச்சி பூர்வமாக்கப்பட்டன. அவர்களிடமிருந்து மதக் கோட்பாடுகள் பறிக்கப்பட்டன.
யூத மதத்திற்கும் இந்தத் தலைவிதி பூரண நிர்ணயமானது. யூத தீர்க்கதரிசிகள் அனைவரும் கொடூர அரசாட்சிக்கு எதிரான மக்கள் நலப்பிரதிநிதிகள் என்பது நூறு சதவிகித உண்மை.
ஆனால் யூத மதம், அரசியல் மதமாக்கப்பட்டவுடன் அதற்கொரு புனிதம் தரப்பட்டது. உணர்ச்சி பூர்வமான உத்வேகம் வழங்கப் பட்டது. நடைமுறையில் திருத்தங்கள் தரப்பட்டன.
ஆனால் யூத தீர்க்கதரிசிகளின் கோட்பாடு மட்டும் அந்த மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு விட்டன.
புத்த மதம் , ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டமாக முன்னெழுந்து பரவியது. ஒரு கட்டத்தில் ஆட்சியாளர்கள் கைவசம் அது போன பொழுது புத்தரின் வாழ்வியல் நடைமுறையில் மாற்றம் தரப் பட்டது.
கோட்பாட்டில் உணர்ச்சி புகுத்தப் பட்டது. புத்த மதம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தத்துவத்தை விட்டு மறக்கடிக்கப்பட்டது.
சமண மதமும் இந்த விதிப்படியே தோன்றி, இரண்டாம் மட்ட தலைமையான வணிக வர்க்க தலைமையின் தலையீட்டால் முதல் கட்ட ஆட்சி வட்டார ஆதரவால் சமண மதம் சுவீகாரம் எடுக்கப் பட்டது.
எல்லா மதத்திற்கும் நடக்கும் நிகழ்வு சமணத்திற்கும் நிகழ்ந்தது.
நசுக்கப்பட்ட மக்களின் , ஏழ்மையால் பீடிக்கப் பட்ட ஏதுமற்றவர்களின், நோய் நொடிகளால் நொந்தழிந்த எளிய மக்களின், ஆண்களின் கொடூர சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஏசு நாதர் வெளிப்பட்டார்.
ஆட்சி அதிகாரத்தினால் ஒடுக்கப்பட்டு நசுக்கப் பட்டார். அவர் வைத்த மக்கள் எழுச்சி தத்துவத்தை ஆட்சி அதிகாரம் கைவசம் எடுத்து கொண்டது. ஏசு நாதரை மட்டும் புறம் ஒதுக்கிவிட்டு ஏசு நாதர் முன்வைத்த கிருத்துவத்தை உருமாற்றம் செய்து ஒரு புதிய கிருத்துவ தத்துவத்தைக் கொண்டு உலகாண்டது.
இந்த கிருத்துவ மதமும் உணர்ச்சிமயமாக்கப் பட்ட கோட்பாடாக நடைமுறையானது.
வாழ வகையற்று வதைப்பட்டு கொண்டிருந்தவர்கள், ஏழ்மையின் பிடியில் சிக்கித் திணறிச் சிதைப் பட்டவர்கள், நிறத்தாலும் , பிறப்பாலும் ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப் பட்டு ஒதுக்கப் பட்டவர்கள், ஆண் பெண் இருபாலரும் சமமானவர்கள் அல்லர். சொத்தும் கல்வியும் ஆண்களுக்கு மட்டுமே என்கிற சட்டதிட்டங்களால் பாதிக்கப்பட்டப் பெண்கள், பெண் பிறப்பே ஆபத்தானது , அருவருப்பானது. அது அதிகம் பெருகுவது எதிர்க்காலத்தில் கேவலத்தை உருவாக்கக் கூடியது எனவே பிறப்பிலேயே பெண் குழந்தைகளை உயிருடன் மண்ணறைக்குள் புதைத்துவிடும் வீணர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் முஹமம்து நபி ஒரு உன்னத கோட்பாட்டோடு இவைகளுக்கு எதிராக வந்த ஒரு தீர்க்கதரிசி.
அவர் கொண்டு வந்த இஸ்லாம் ஒரு நடைமுறையை முன்வைத்தது. இது மதமல்ல. ஒரு மார்க்கம் என்று செய்தி சொன்னது.
இஸ்லாம் ஒரு தத்துவமாக மட்டுமல்ல. ஒரு நடைமுறையாகவும் இருக்க வேண்டும். ஒரு தெளிவான நடைபாதை இந்த தத்துவத்திற்கு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த மார்க்கமும் ஆட்சியாளர்களால் சுவீகரிக்கப் பட்டபொழுது எல்லா மதத்திற்கும் வந்து சேர்ந்த உணர்ச்சி பூர்வமான நடைமுறைகளும் , புதுப்புது தத்துவ வெறிகளும் இஸ்லாமாக்கப் பட்டுவிட்டன.
குறிப்பாக இந்தியத்தை இஸ்லாம் வந்து தொட்டது, இந்தியத்தின் வடபுலத்திலிருந்து அல்ல. இந்தியத்தினுடைய தென்புலத்து அரபிக் கடல் தழுவும் மலபார் பகுதியைத்தான் இஸ்லாம் முதன்முதல் வந்து தொட்டது.
அது ஆட்சி முறையாக அங்கு வரவில்லை. அது நடைமுறையாக, ஞான வழிமுறையாக அங்கு வந்தது.
இந்த நடைமுறை, மலபார் கடல் புறத்திலிருந்த மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தது. அங்கே இஸ்லாம் பரவியது.
இந்தியாவின் வடபுலத்தில் படையெடுப்புகள் மூலம் அரபியரும், பாரசீகர்களும், துருக்கியர்களும், இன்ன பலரும் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
அந்த படையெடுப்பாளர்கள் காலத்தில் இஸ்லாம் அந்த படையெடுப்பாளர்களின் அதிகாரத்தால் பரவவில்லை. அங்கே பல இஸ்லாமிய ஞான நடைமுறை வாழ்க்கைகளை மேற்கொண்ட சூபி ஞானிகளால் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாழ்க்கையாக மாறியது.
இஸ்லாமும் ஆளும் வர்க்கத்தினரால் கைவசம் படுத்தப் பட்ட பின் நடைமுறைகள் திருத்தப்பட்டன, .ஒரு புதிய இஸ்லாமிய நெறிமுறை வழங்கப் பட்டது.
இந்து தர்மம் மக்கள் தத்துவமாக வளர்ந்திருந்த கால கட்டத்தில் இருந்த மகோன்னதம், ஆட்சியாளர்களால் கைவசப் படுத்தப் பட்ட பின்னர் இந்து மதத்திற்குள் உணர்ச்சிமயமான கோட்பாடுகள் புகுத்தப்பட்டன. இதனை முன்வைத்து பிற மதங்களுக்கு எதிரான அணிவகுப்பு நடைமுறைப் பட்டது.
இங்கிருந்த மக்கள் கிருத்துவத்தையோ, இஸ்லாமியத்தையோ ஏற்றுக் கொள்ளும் பொழுது , கொடூர மத மாற்றமாகக் கற்பிக்கப்பட்டு, மதக் கலவரங்களுக்கு வழி செய்யப் பட்டது.
இங்கிருக்கும் மனிதர்கள் ஏன் இஸ்லாத்தையும், கிருத்துவத்தையும் ஏற்க வேண்டும்? என்ற கேள்விக்கு மக்கள் புறத்திலிருந்து வந்த பதிலை மறைத்துவிட்டு, ஆட்சி அதிகார வட்டாரத்திலிருந்து பதில் வெளியானது.
“அவர்கள் அன்னியர்கள். தேசம் பிடிக்க வந்த மிலேச்சர்கள். அவர்கள் மதம் புனிதமே அற்ற போக்கிரித்தனமானது. நம் இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துவிட்டார்கள். இந்து மதத்தை முழுவதுமாக அழிக்கப் பார்க்கிறார்கள்” என்றெல்லாம் மத உணர்ச்சிகளைப் பிரச்சாரப் படுத்தி ஆளும் வர்க்கம் மதக் கலவரத்திற்கு நியாயம் சொன்னது.
மக்கள் கூறினார்கள், “எங்களுடைய பிறப்பு இழிவு படுத்தப் படுகிறது. எங்களுடைய வாழ்க்கை கேவலமாகப் புறக்கணிக்கப் படுகிறது. எங்களுடைய உரிமைகளை யாரோ ஒரு சிலர் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொண்டார்கள். இந்த செயல்பாடுகளை, இந்த வர்ணாசிர வீரியத்தை இந்து தர்மம் என்று எங்கள் மீது திணிக்கிறார்கள். இதை விட்டு வெளியேறத்தான் புதிய வழியில் நடை போடுகிறோம்.” இதுதான் எங்கள் பதில் என்றார்கள்.
இந்தப் பதிலுக்கு நியாயமான தீர்வைக் காணாமல் வந்து சேர்ந்திருக்கும் தத்துவத்திற்கு எதிரான போர்க் கருவிகளாக மக்களைத் தூண்டிவிடுவது. ஆளும் வர்க்கப்புத்தி .
அதேபோல்தான் மக்கள் நடைமுறையாக இருந்த இஸ்லாம், ஆட்சியாளர்களின் அத்தாணி மண்டபத்திற்குள் நுழைந்தபின், தன்னுடைய உண்மை சொரூபத்தை மாற்றி உணர்ச்சிபூர்வமான , போலித்தனமான ஜிஹாதி பண்புகளை கையிலெடுத்து மக்கள் விரோதப் போக்குகளுக்கு, பாமர மக்களை உணர்ச்சிவசப்படுத்தி உத்வேகத்தைத் தருகிறது.
இந்த மதங்களின் தலைவிரிக் கூத்தாட்டுகள், அந்தந்த மதத் தன்மைகளையும், மார்க்கத் தன்மைகளையும் புறந்தள்ளிவிட்டு, ரத்த வெறிக் கோலங்களாகவும் அதுவே மதங்களின் முகங்களாகவும் காட்டப்படுவது, மோசமான, முற்றிலுமான அரசியல் தன்மைக் கொண்டது.
மதங்களின் இளைஞர்கள் உணர்ச்சிப் பகடைகளாக மாற்றப்படுகிறார்கள். இந்தப் பயங்கரம் முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டிய நச்சுத்தன்மைக் கொண்டது. இந்த செயல்பாட்டிற்கு எந்த மதமும் விட்டுப்போய் விடவில்லை. அத்தனை மதங்களும் குற்ற முத்திரைக் குத்தப்பட்டக் குற்றவாளிகள்தாம்.
மக்கள் புரட்சி, நியாயமான அடிப்படையில் தாங்கள் சார்ந்திருக்கும் மதங்களின் நெறிப்பட்ட வாழ்க்கை முறையின் மூலம் நிலை நிறுத்தப் படவேண்டும்.
மதம் ஒரு அபின் – அதிகார வர்க்கத்தால் கைவசப் படுத்தப் பட்ட அத்தனை மதங்களும் அபின்தான். அவை உணர்ச்சிப் போதைகளைத் தூண்டிவிட்டு ருசிப்பார்க்கும் ரத்த காட்டேறிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
மதங்களின் தலைமைகள், பாமர மக்களின் நியாயங்களின் வெளிப்பாடு என்கிற உண்மையான உன்னதம் தலைதூக்கப்பட வேண்டும்.
ஆகஸ்ட் 29 (நேற்று) தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகி இருக்கிறது ஒரு கண்டனம்.. இந்தக் கண்டனத்தை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வெளியிட்டு இருக்கிறார்.
“இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக், சிரியா (ISIS) அமைப்பு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவதியகள், இஸ்லாமிய கொள்கைகளுக்கும் உண்மைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் , பொதுவான மனிதாபிமானத்திற்கும் எதிராகச் செயல் பட்டு வருகின்றனர்.
தண்டனை என்ற பெயரில் பிடிபட்டவர்களைக் கொன்று குவிப்பதையும் பொது மக்களைக் கொலை செய்வதையும் இஸ்லாத்தைப் புரிந்த உலகில் உள்ள எந்த முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அமைதியின் தூதரான நபிகள் காட்டிய பாதைக்கு மாறாக ஐ.எஸ்.ஐ.எஸ் நடந்து வருகிறது. எனவே இவர்களால் ஏற்படும் வன்முறைகளையும் மரணங்களையும் தடுக்க சர்வேத சமூகம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று நஜீப் ரசாக் கூறியுள்ளார்.
இதுதான் உலக முஸ்லிம்களின் ஒருமித்த ஓசையாக இருக்க முடியும்.
அதே நேரம் காசா மீது நிகழ்த்தப்படும் கொடூரத்திற்கு எந்த மனித உணர்வும், நியாயம் கற்பித்து விட முடியாது. மனித குலத்துக்கு எதிரான உச்சமட்ட மிருக வெறித்தனம் அங்குக் கம்பீரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதற்கு எதிர்மறையான நடவடிக்கையாக, பத்திரிகையாளர்கள் தலையைத் துண்டிப்பதும் இது போன்ற மனித குல விரோத செயல்களை செய்வதுமான ஒன்றாக ஒரு போதும் இருக்க முடியாது.
மனித குல இஸ்லாமிய கோட்பாடு, சோதனைக்குட்பட்டதானாலும் நிலைத்திருக்கக் கூடிய தன்மை கொண்டது. ஆட்சி அதிகார வர்க்கத்தின் உணர்ச்சித் தூண்டலான இஸ்லாம் ஆர்ப்பரித்தாலும் அது அழிவைத்தான் சந்திக்க நேரிடும். இந்த விதி இஸ்லாத்திற்கு மட்டுமல்ல. எல்லா மதத்திற்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment