Monday, June 23, 2014

மொழி அரசியல்..!


கடந்த மார்ச் 10 ஆம் தேதியும், மே 27 ஆம் தேதியும் மத்திய உள்துறை அமைச்சகம் இரு உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக், கூகுள் மற்றும் யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் அரசு தொடர்பான தகவல்களை வெளியிடும் பொழுது ஆங்கிலத்துடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தியை முதலிலும் அதற்குக் கீழே ஆங்கில மொழியாக்கத்தையும் வெளியிட வேண்டும்.

இவ்விரண்டையும்தான் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டிஎன்பதுதான் அது.

திமுகவின் தலைவர் , பாஜகவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது

இது ஆண்டிகளின் கட்சிஎன்றார். இந்த ஆண்டிகளின் அரசுதான் இப்போது சங்கூதிப் பார்த்திருக்கிறது.

இந்தியை ஒரு மொழி என்ற அடிப்படையில் எவரும் எதிர்க்க நியாயம் இல்லை. ஆனால் இந்த மொழிதான் செய்தியை உணர்த்தும் மொழியாக இருக்க வேண்டும் என்று யாரோ சிலர் கட்டாயப் படுத்தும் பொழுது, அந்த மொழி மீது எழக்கூடிய பகை இயல்பானது.

ஆங்கிலம் அந்நிய மொழி. நம்மை அடிமைப் படுத்திய ஒரு வர்க்கத்தினரின் தாய்மொழி. அதிகார வர்க்க மொழி. இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் நடைமுறையில் ஆங்கிலத்தை உலகச் செய்திகளை அறியும் சாதன மொழியாக ஆக்கிவிட்டார்கள்.

ஆங்கிலேயர்கள் அப்படி ஆக்குவதற்கு மற்றவர்களை அடிமையாக்கி வைத்திருந்த அடக்குமுறைதான் காரணமாக இருந்தது.

அதே நேரம் ஆங்கிலேயர்கள் தங்கள் தாய்மொழி என்ற புனிதத்தையும் பெருமையையும் அந்த மொழிக்குச் சேர்த்துவிடாமல் உலகத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஆங்கிலத்தில் உள்வாங்கி அதை மக்கள் மத்தியில் உலவ விட்டுவிட்டார்கள். இதுதான் அதிகார மொழியாக ஒரு மொழியை ஆக்குவதற்கான ராஜதந்திர அணுகுமுறை.

இந்த ராஜதந்திரத்திற்குள் நாமும் சிக்கிக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தை உடனடியாக விட்டொழிக்கக் கூடாது. நாம் பின்தங்கி விடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் இதுவே முழு உண்மையும் இல்லை.

ஜப்பான், சீனா, பிரெஞ்சு நாடுகள், ருசியா போன்ற நாடுகள் ஆங்கிலத்தை புறந்தள்ளி உலக ஞான தொடர்புகளை நிறைத்து வைத்து இருக்கின்றன என்பது இந்த நிரூபணத்திற்கு முன்னுதாரணங்கள்.

இந்தியா ஆங்கிலத்தைப் புறந்தள்ளுவதில் ஒரு நேர்மையும் நீதியும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய மொழிகளில் எந்த மொழியாவது உலக ஞானங்களை நிரப்பி வைத்திருக்கின்றனவா? அல்லது அந்த முயற்சியிலாவது ஈடுபட்டு இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விடலாம்.

இந்தியாவில் ஒரு மொழியை, “நாங்கள் ஆங்கிலத்தை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் வைக்கப் போகிறோம். அந்த மொழியை அனைவரும் கற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் சுதேசி நேர்மை. அந்த தகுதி இந்திக்குத் தருகிறோம்என்று சொல்லும் பொழுதுதான் பிரச்சனை எழுகிறது.

இந்தியை அப்படி தேர்வு செய்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பதில் தருகிறார்கள். இந்தியாவில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இந்தி பேசுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்தப் பதில்.

அதாவது எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றை வலியுறுத்துவது. இது சரியான கணக்கு அல்ல.

அண்ணாதுரை இந்த மொழிப் பிரச்சனைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசும் பொழுது நையாண்டித்தனமாகப் பேசினார் . ஆனால் அதிலும் ஒரு வாத நியாயம் இருக்கிறது.

இந்திய தேசிய விலங்கு புலி. ஆனால் இந்தியாவில் புலிகள் அதிகம் இல்லை. எலிகள்தான் அதிகம். அதே போல் இந்திய தேசியப் பறவை மயில். ஆனால் மயில்கள் இந்தியாவில் அதிகம் இல்லை. காக்கைகள்தாம் அதிகம்.

அதிகம் என்ற அளவில் வைத்துப் பார்த்தால் எலிகளைத்தான் தேசிய விலங்காக அறிவித்து இருக்க வேண்டும். காக்கைகளைத்தான் தேசியப் பறவைகளாக அறிவித்து இருக்க வேண்டும்”. இதுதான் பாராளுமன்றத்தில் அண்ணாவின் வாதம்.

மொழியைப் பொருத்தவரை இந்தியா போன்ற பல மொழிகள் உரிமம் பெற்று இருக்கக்கூடிய ஒரு தேசத்தில் மும்மொழித் திட்டம் நியாயமானதும் வெற்றிகரமானதுமாக இருக்கும்.

மறைந்த மத்திய அமைச்சர் மோகன் குமார மங்கலம் பொதுவுடைமை இயக்கத் தொடர்புடையவராக இருந்த காலத்தில் மும்மொழித் திட்டம் பற்றி ஒரு அற்புதமான நூல் எழுதினார்.

அதில் மொழி பற்றிய தன்மைகளையும் நிலைமைகளையும் சரியாக விவாதித்திருந்தார்.

இந்தியாவினுடைய எல்லா மாநிலங்களிலும் ஆட்சி அதிகார மொழியாக அந்தந்த மாநில மொழிகளே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

இந்திய தேசிய அளவில் இந்தியைக் கூட அங்கீகரித்துக் கொள்ளலாம். உலக தொடர்புகளுக்கு ஆங்கில மொழியை அமைத்துக் கொள்ளலாம். பள்ளிக் கூடங்களில் குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு மூன்று மொழிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மொழியறிவு என்பது குழைந்தைகளுக்கு ஒரு பாரம் அல்ல. இது விஞ்ஞான ரீதியான கருத்தும் கூட என்றெல்லாம் மோகன் குமாரமங்கலம் அந்த நூலில் குறிப்பிட்டு இருந்தார்.

மொழி என்பது மனித குலத்தின் ரத்த உணர்வுகளோடு சம்மந்தப்பட்டதுதான். ஆனால் அதுதான் புனிதமானது என்று கற்றுத்தரப்படும் தகவலில்தான் ஆபத்து இருக்கிறது.

தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மிதவைச் சாதனம்தான் மொழி. இதை மறந்துவிடக்கூடாது.

செய்தித் தொடர்புக்கு என்ற அடிப்படையில் மொழியைப் புரிந்து கொண்டால் இந்த மும்மொழித் திட்டம் ஒரு நல்ல தீர்வாகும் வாய்ப்பு இருக்கிறது.

வடபுலத்து இந்தி மொழி வெறியர்கள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த பொழுது அவர்கள் மொழியை ஆட்சி மொழியாக்க திட்டம் போட்டனர். ஆனால் இதில் கூட குற்றம் இல்லை.

பிற மொழிப் பிரதேசங்களும் எங்கள் மொழியால்தான் ஆளப்படும் என்று திணிப்பு நிகழ்த்திய போதுதான் எதிர்வினைத் தொடங்கியது

இந்தியை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை.

இந்தியை தாய்மொழியாகக் கொண்ட வடமாநிலங்களிலும் ஒரே மாதிரி இந்தி மொழி இல்லை. பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்தி பேசுபவர்கள் வேறு வேறு பாணியில் பேசி வருகிறார்கள். ஒரு பகுதியினர் பேசும் இந்தி மற்றொரு இந்தி பேசும் பகுதியினருக்குப் புரிவதே இல்லை.

இந்தியாவில் தேசிய மொழியாக ஒரு மொழியை ஆக்கும் தகுதியை எந்த அடிப்படையில் வரையறுப்பது? அதில் இன்று வரை ஆயிரத்தெட்டு குளறுபடிகள் இருக்கின்றன.

மொழிப் பிரச்சினைப் பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிக்கும் பொழுது காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் இந்தியை விட அதிகம் அறிமுகமான மொழி இந்துஸ்தானிதான். இந்த அடிப்படையில் இந்துஸ்தானியைத் தேசிய மொழியாக்கிவிடலாம்.

அதே நேரம் இந்தியாவின் தொன்மையான மொழி, இலக்கண, இலக்கியங்களால் செழுமையான மொழி, எழுதக்கூடியதாகவும், பேசக்கூடியதாகவும் இருக்கக் கூடிய மொழி ஒன்றுதான் தேசிய மொழியாகும் தகுதி கொண்டது என நியாயமான முடிவுக்கு வருவோமேயானால், இந்தியாவிலேயே அந்தத் தகுதி உள்ள ஒரே மொழி என் தாய்மொழி தமிழ்தான்”, எனக் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார்.

இந்தி மொழிக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்த பொழுது ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது, அரசியல் அடிப்படையிலான ஒரு போலித்தனமான பிரம்மாண்டமாகத்தான் இருந்திருக்கிறது.

வேசி மொழி இந்தி. தாய் மொழி தமிழ். இந்தியைத் தமிழகத்துக்குள் விட மாட்டோம் என்ற உணர்ச்சி வேக சொற்பொழிவுகளால் உந்தப்பட்டு எழுந்த ஒரு போராட்டம்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

மொழி பயன்பாட்டுச் சாதனம் என்ற உண்மையைத்தாண்டி புனிதத்தனமான சமாச்சாரம் என்ற உணர்ச்சிப் பகுதிக்குள் நுழைக்கப் பட்டதால் பெரும் பிழைகள் தமிழகத்தில் நிகழ்ந்து விட்டன.

அதனுடைய இன்றைய வடிவம்தான் எங்களுக்குத் தமிழ், பள்ளிக்கூடங்களில் தேவையில்லை, ஆங்கிலம் இருக்கட்டும். இதை மறுக்கவோ, மாற்றவோ ஆளுகிற அரசுக்கு அதிகாரம் இல்லை. மொழி தனிமனித விருப்பம். அதில் தலையிட அரசுக்குக் கூட உரிமை கிடையாதுஎன நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வாதாடுகிற அளவுக்கு நிலைமை முற்றிப்போய் இருக்கிறது.

மாநிலத்தில், இந்தியத்தில் உலகவரம்பில் வேலைவாய்ப்பை ஆங்கிலம் உருவாக்கித் தருவதால் எங்களுக்கு ஆங்கிலம் போதும் என்ற லாப உணர்வு இன்றையச் சமூகத் தலைமுறையின் நியாயமாக மாறிவிட்டது.

மொழி ஒரு தொடர்பு சாதனம்தான் என்பது மீண்டும் இங்கே உறுதிப்படுகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில் பாண்டிச்சேரி ஒன்றையும் சேர்த்து 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் இந்தியில் போஸ்டர் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது. அந்தத் தொகுதிதான் மத்தியச் சென்னை பாராளுமன்றத் தொகுதி.

அந்தத் தொகுதி வேட்பாளராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிறுத்தப்பட்டவர் தயாநிதி மாறன். இவர் டி.வி. சாதனங்களின் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு இருக்கும் வணிகக் குடுப்பத்து உரிமைக்காரர். வேறொரு வகையில் சொன்னால் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி குடும்பத்துப் பேரர்.

இவர் போட்டியிட்டத் தொகுதியில் மார்வாரிகளும் இந்தி பேசுபவர்களும் கொஞ்சம் கணிசமான வாக்காளர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் வாக்குப் பெற மொழி ஒரு சாதனம் என்று புரிந்து கொண்டு போஸ்டர்களையும் நோட்டீஸ்களையும் இந்தியில் அடித்துப் பயன்படுதினார்.

அந்தத் தொகுதியில் வாக்குச் சேகரிக்கப் பொது மேடையில் கருணாநிதி நான்கு வரி இந்திக் கவிதையினை எழுதிவைத்துப் படிக்காமல், மனனமாகவே உச்சரித்துப் பேசி இருந்தார்.

இவைகள் குற்றமல்ல. மொழி ஒரு தகவல் பரிமாற்றச் சாதனம் என்ற உண்மைக்கு இதுவும் நிரூபணம்.

மொழியை வெறியாக்கி, புனித உணர்வாக்கி, திணிக்க நினைப்பதுதான் மகத்தான குற்றம். திணிக்க நினைக்கும் பொழுது, அதே அளவு எதிர்ப்பைச் சந்தித்துத்தான் தீரவேண்டும்.

நியூட்டனின் மூன்றாவது விதி எவ்ரி ஆக்ஷன் ஹஸ் எ ஈகுவல் அண்டு ஆப்போஸிட் ரியாக்ஷன்”, (ஒரு வினை அதற்குச் சமமான எதிர்வினை கொண்டு இருக்கும்).

இதுதான் அறிவியல் நடப்பு.

தமிழைப் புனிதப்படுத்தி இன்னொரு மொழியை எதிரியாக்குவது அரசியல் தன்மை கொண்டது. இந்த அரசியல் தன்மையில் சிலர் ஆட்சிபீடம் ஏறலாம். ஆனால் தமிழர்கள்தாம் தலைமாறித் தாழ்ந்து விடுவார்கள். அந்த விளைவைத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் வடிவில் காண்கிறோம்.

இதெல்லாம் சரி, இந்திக்கு பா.ஜ.க. ஆட்சி ஏன் ஒரு முக்கியத்துவத்தைத் திடீரென்றுத் தூக்கி முன் வைக்கிறது?. இன்றையப் பிரதமரின் தாய் மொழி குஜராத்தி. ஆனாலும் வெளி நாட்டுத் தூதர்களிடம் கூட இந்தி மொழியைப் பயன்படுத்துகிறார். அது ஏன்?.. இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஒரு சுலோகம், “ இந்துத்துவா, இந்தியா, இந்திஎன்பதுதான் அது.

இந்தியை, அவர்கள் வைத்து இருக்கும் இந்துத்துவாவின் மொழியாகத் தீர்மானித்துக் கொண்டார்கள். இந்துத்துவாவை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் மதம் சார்ந்த அடையாளம் இருக்கிறது என்பதுதான் அவர்களின் கொள்கை.

இந்தியும் தொடர்புசாதனம் என்ற அடிப்படையில் புகுத்தப்படவில்லை. அதற்குரிய எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவும் இல்லை. இந்தி என்பது இந்துத்துவாவின் மொழி என்ற ரகசியத்தைத்தான் மோடி அரசு வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல நுழைத்து இருக்கிறது. இந்தி, சமஸ்கிருதத்தின் குட்டி வடிவம்.

No comments:

Post a Comment