ஒரு மனிதக் கொலை மிகக் கொடூரமான நிலையில் நடந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூரில் அந்த மாவட்டத்தின் இந்து முன்னணி அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுரேஷ் குமார்தான் இந்த படுகொலைக்கு ஆளாகி இருக்கிறார்.
சுரேஷ் குமார், அவரின் அலுவலகத்தின் முன்னால், இரவு 10 மணி அளவில் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்ட சி.டி.எச். சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஜூன் 18ஆம் தேதியும் இந்த நிலைதான் அத்தெருவில் காணப்பட்டது.
சுரேஷ் குமார் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகில்தான் போலீஸ் இணை ஆணையர் அலுவலகம் இருக்கிறது.
கொலை செய்ய வந்த நபர்கள் பைக்கில் வந்து சுரேஷ் குமாரைக் கோரமாக வெட்டி வீழ்த்திவிட்டுத் தப்பி விட்டனர். இந்தக் கொலை எந்த நோக்கத்திற்குச் செய்யப்பட்டு இருந்தாலும், யார் செய்து இருந்தாலும், ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்த எவரும் முன் வரக் கூடாது.
உயிர் பிறப்புக்கு யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ள நியாயம் இல்லை. அதே போல உயிர் பறிப்புக்கும் எந்த நியாயத்தையும் கற்பித்து கொள்ளத் தேவை இல்லை.
சுரேஷ் குமார் கொலை, வெறும் உயிர் பறிப்பு என்ற ஒன்றாக மட்டும் இல்லை. அதைக் கோரக் கொலை என்ற மொழியால்தான் குறிப்பிட வேண்டும்.
செய்தவர் எவரென்று தெரியவில்லை. ஆனால் ஊகங்களும், காரணங்களும் வெளிப்பட்டு இருக்கின்றன. இதில் இரு மதங்கள் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்பது யூகம். காவல் துறைக்கு இந்தக் கொலை பற்றிய முன்னறிவிப்பை இந்து முன்னணி தெரிவித்து இருக்கிறது. அது மட்டுமன்றி காவல் துறையிடம் பாதுகாப்பும் ஏற்கனவே கேட்டு இருக்கிறது என்ற காரணங்களைக் கூறி முஸ்லிமாக இருக்கக் கூடியவர்கள் இந்தக் கொலையை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எந்தக் கொலை வெறியனுக்கும் மதத்தைப் பின்னணியாகக் கொள்ளும் தகுதி நிச்சயம் இல்லை. இருக்கவும் கூடாது.
சுரேஷ் குமார், இந்து முன்னணி என்கின்ற காரணத்தால் ஏதோ ஒரு முஸ்லிம் முன்னணி இதைச் செய்து இருக்கிறது என்று உறுதிப்படுத்துவது போல ஒரு மனித அவமானம் வேறு இருக்க முடியாது.
கொலை என்பதுதான் கோட்பாட்டின் உன்னதம் என்ற கருத்தை எவர் முன்வைத்தாலும் அவர் மனித குல விரோதிதான்.
நாளைய தினம் இந்தக் கொலை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய பெயர் முஸ்லிம் பெயராகவோ, இந்துப் பெயராகவோ, கிறிஸ்துவ பெயராகவோ அல்லது எல்லாம் கலந்தவர்களின் பெயராகவோ இருந்தாலும் கூட அந்தக் கொலையாளிகளை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கோட்பாட்டுக்கு உரிமையாளர்கள்கள் என்று யாரும் தயவு செய்து பதிவு செய்யாதீர்கள்.
இந்தக் கேவலமானவர்களுக்கு எந்த மதங்களும் உரிமை கொண்டாடக் கூடாது. இவர்கள் மனித அவலங்கள். மதிப்பிழந்து போன மனிதக் கேவலங்கள். மனிதத்தை மரணிக்கச் செய்து விட்ட இந்த மனிதவடிவப் பிணங்கள், மற்றொரு மனிதரைக் கொலை செய்து இருக்கிறது என்றுதாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்துவும் முஸ்லிமும் வாளோடு பிறந்து, தாக்கிக் கொள்ளப் பிறந்த குல விரோதிகள் அல்லர். நேயத்தோடும் பாசத்தோடும் பந்தங்களோடும் வாழ்வதற்காக மண்புறத்தில் வந்த அற்புதமான படைப்புகள்தாம் இந்த மனிதப் படைப்புகள்.
ஏதோ ஒரு திண்ணையில் அமர்ந்து பீடி சுற்றிக்கொண்டு இருக்கும் கதீஜா பீவிக்கும், ஏதோ ஒரு வயலில் களை பிடுங்கிக் கொண்டு இருக்கும் பார்வதிக்கும் எந்த ஒரு குரோதங்களோ விரோதங்களோ பிறப்பில் இல்லை.
ஜவுளிக்கடையில் துணி விற்றுக் கொண்டு இருக்கும் அப்துல் காதருக்கும், மளிகைக் கடையில் வணிகம் செய்து கொண்டு இருக்கும் பரமசிவ அண்ணாச்சிக்கும் பிறப்பிலேயே முன்விரோதமோ பின்விரோதமோ இருந்ததில்லை.
தமிழகத்தின் பெருந்தலைவர்களில் ஒருவரான மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆப்பனூர் ஆயிஷா பீவி மடியில் அமர்ந்து தாய்ப்பால் அருந்தி வளர்ந்த சரித்திரம் இங்கே உண்டு.
ஹிலால் முஸ்தபா நிக்காஹ் செய்து, தனிக்குடித்தனம் போகும் வேளையில் அடுக்களைக்குத் தேவையான அத்தனைச் சாமான்களையும் சீதனமாக வாங்கித் தந்தவர்கள் செல்வகுமார், கலைமணி, சங்கரன், ஆல்பென்ஸ் போன்ற அருமை சகோதரச் சமுதாயச் சார்பு கொண்ட தோழர்கள்தாம்.
இப்படியெல்லாம் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுகளிலும் மதங்களும் சமூகங்களும் பின்னிப் பிணைந்து மலர்ந்து திகழ்கின்றன. இங்குதான் எல்லா மதங்களும் வாழ்கின்றன.
இந்து முன்னணிகளும் முஸ்லிம் முன்னணிகளும் மோதிக்கொண்டு கொலைகள் விழுகின்ற இடங்களில் எல்லாம் இந்து தருமமும் வாழவில்லை, இஸ்லாம் மார்க்கமும் முளைத்துவிடப் போவதில்லை. இவர்களுக்கு மதங்களும் மதக் கோட்பாடுகளும் கொலைக் கருவிகளாக மாறிவிடுகின்றன.
மதங்களும் மதக் கோட்பாடுகளும் மானுட வர்க்கத்திற்கு வாழ்வு வழங்க வந்த அருள் வரங்கள். அவைகளை வெறி பிடித்த வீம்பர்கள் கொலைக் கருவிகளாகப் பயன்படுத்தும் போது அந்த வீணர்களை மதத் தன்மையோடு பொருத்திப் பார்க்க வேண்டாம்.
இந்து முன்னணிக்காரர்களைக் கொலைப்படுத்தியவர்களையும் சரி, முஸ்லிம்களையும், பாபரி மஸ்ஜித்தைத் தகர்த்தவர்களையும் சரி, முஸ்லிம்களாகவும் இந்துக்களாகவும் ஒரு போதும் மதத் தன்மையோடு பொருத்திப் பார்த்து புனிதத் தன்மைகளைத் தீயிட்டுப் பொசுக்கி விட வேண்டாம்.
சுரேஷ் குமார் கொலைக்குப் பின்னால் இந்து முன்னணியினர் வழி நெடுக அரசுப் பேருந்துகளையும் கடைகளையும் ஒரு கிறிஸ்தவ சர்ச்சையும் அடித்துத் தாக்கி இருக்கின்றனர். இதைச் செய்த இவர்களை இந்து மதத்தின் பிரதிநிதியாக ஒரு போதும் கருத வேண்டாம். இந்து தர்மம் இதை ஏற்றுக் கொள்ளாது. இவர்கள் மதத்தை வெறியாக்கிச் சமூக விரோதத்தை நிலை நாட்டத் துடிக்கும் சமூக விரோதிகள் ஆவர்.
கொலை என்பது மனிதகுல விரோதச் செயல். சமூக சொத்துக்களைத் தகர்ப்பது சமூக விரோதச் செயல்கள்.
மனித விரோதத்தை செயல் படுத்தினால், சமூக துரோகம் தலைதூக்கும். சமூக விரோதம் தலை தூக்கினால், மனித குல துரோகம் நடைமுறைப் படுத்தப்படும்.
தீங்குகளுக்கு இப்படி ஒரு தகாத உறவு இருப்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.