நண்பர் ரசூலின் (முக நூலில்) கனவுத்
தகவல்கள் பற்றிய பதிவு அருமையான ஒரு விவாதத்திற்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.
கனவின் தகவல்களை மாயை என்ற ஒற்றைச் சொல்லால் ஓரத்திற்கு தள்ளிவிட
முடியாது.
கனவில் மனம் பதிந்து இருக்கிறது. மனதில் கனவு தழும்புகிறது. இந்த மனம்
என்பது தனிமனித மனமாகவும் இருக்கலாம். சமுதாய மனமாக, கூட்டு
மனமாகக் கூட இருக்கலாம். ஆனால் கனவு எங்கிருந்தோ வந்து நமக்குக் கிடைக்கக் கூடிய
ஒரு செய்திதான்.
கனவில் வஹீ (இறைப்புறத்து தகவல்) வெளிப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் கனவை வெறும் மாயை என்று புறந்தள்ளினால் நபிமார்களுக்கு வந்த கனவில்
வந்த இறைப்புறத்து தகவல்கள் அத்தனையும் அந்தஸ்த்தற்ற, ஒப்புக்
கொள்ள முடியாத தகவலாகத்தானே முடியும்?
இப்படி ஹெச்.ஜி.ரஸுலின் கேள்வியில் இருக்கும் நியாயம் செழுமையான
சிந்தனைதான்.
கனவைப் பற்றி இன்னும் சில தகவல்கள் எண்ணிப் பார்க்கப் பட வேண்டிய
ஒன்றாகும்.
ஒருவன் கனவு காணுகிறான். கனவு காண்பவனுக்கு வயது நாற்பது. அவன் கனவில்
தன்னை ஏழு வயது பாலகனாகப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
நாற்பது வயதிலிருந்து தன் ஏழு வயதுக்கு பின்னோக்கிச்
சென்றிருக்கிறான். அதாவது முப்பத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கிய பயணம்
நிகழ்ந்திருக்கிறது. இப்படி நகர்வதற்கு முப்பத்து மூன்று ஆண்டுகள் தேவைப்படுகிறது.
ஆனால் இவன் கனவில் சில மணித்துளிகளில் சென்று இருக்கிறான். ஒரு நீண்ட
காலத்தை ஜெட் வேகத்தில் கடந்து இருக்கிறான்.
இந்த நீண்ட கனவை அவன் எவ்வளவு நேரத்தில் பார்த்திருப்பான் என
நினைக்கிறீர்கள்?
யதார்த்தத்திற்கும் கனவில் கண்ட காட்சிக்கும் எவ்வளவு நீண்ட கால
தொலைவு தூரம் இருந்தாலும் அவன் கனவு கண்ட காலம் சுமார் மூன்று முறை பெருமூச்சு
விட்ட காலம்தான். ஒரு மணித்துளி கூட இல்லை.
இது மனதின் வேகமும் வெளிப்புறத்தில் உள்ள காலச் சுழற்சியின் வேகமும்
நேர்கோட்டில் இருப்பதின் அடையாளம்.
ஞானத்தின் பிரகாசம் இமாம் கஸ்ஸாலி அவர்கள், ஒரு
நீண்ட கனவின் காலம் மூன்று மூச்சு இழுத்தலின் கால அளவே இருக்கும் இந்த கால
இடைவெளியில் பலப்பல பத்தாண்டுகள் கடந்து இருக்கும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
கனவு ஒரு தகவலை நிச்சயம் தரும்.பல நேரங்களில் மனத்தின் ஓரசாரங்களில்
உள்ள அழுத்தங்கள் தூக்கத்தில் கனவு போல காட்சி தரும். ஆனால் இவைகள் கனவுகள் அல்ல.
இந்த வேறுபாட்டைக் கண்டறிவது எப்படி?
கனவு என்பது நிலவு ஒளியில் பார்க்கிற காட்சி போன்று ஒரு தெளிவுடன்
இருக்கும். அந்தக் காட்சி எப்பொழுதும் நம் மறதிக்குள் போகாது.
அந்தக் கனவு எப்பொழுது நினைத்தாலும் அப்படியே நம் நினைவுக்கு
வந்துவிடும். இப்படி காணப்படும் காட்சிகளைக் கனவு என்று குறித்துக் கொள்ள
வேண்டும். சில வேளைகளில் ஒரே காட்சி திரும்பத் திரும்பவும் பல நேரங்களில் கனவாக
வரும். இதுவும் கனவுதான் என்பதற்குச் சாட்சி.
இந்தக் கனவு மனதிற்கு வழங்கப்படும் இறைப்புறத்து தகவல். இது நிச்சயம்
செய்தி அந்தஸ்த்து கொண்டது. நம் வாழ்வோடு தொடர்புடையது. அதிலிருந்து நம்
வாழ்விற்குத் தேவையான சரியான முடிவுகளை வழிகாட்டிப் போல தேர்ந்தெடுத்துக் கொள்ள
வேண்டும்.
மன அழுத்தங்கள் கனவுகளாக வெளியேறும். இது கனவு என்ற மொழியில்
குறிப்பிட்டாலும் கனவு அல்ல,
ஆழ்ந்த தூக்கத்தின் போது உடல் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க உடல்
தூண்டப்படும் பொழுது ஒரு காட்சி வரும். அந்த காட்சி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து
நம்மை எழுப்பிவிடும்.
விழித்தவுடன் நாம் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து,
கழித்து விட்டு வந்து படுத்துவிடுவோம். தூக்கம் மறுபடியும் தொடரும்.
கனவு அதோடு மறந்து விடும்.
இங்கே கண்டது கனவந்தஸ்துள்ள காட்சி. நம் ஆழ்ந்த தூக்கத்தில் உடல்
தேவையை, விழிக்கச் செய்ததன் மூலம் அறிவுறித்திய ஒரு தகவல்தான் இது.
கனவல்லாத இது கூட ஒரு தகவலைத்தான் நமக்கு தந்திருக்கிறது.
அடி விழுவது போல கனவு கண்டு , விழித்து
அலறுவது யதார்த்தத்தில் கனவின் பிரதிபலிப்பு. கனவில் விழுந்த அடி , விழிப்பில்
அவஸ்தையாக ஒலித்திருக்கிறது.
ஒருவன் பசியோடு படுத்திருந்தான். கனவு வருகிறது. அற்புதமான உணவுகளை
அருந்திச் சுவைத்து அந்த ரசனையில் விழித்து விடுகிறான். ஆனால் விழிப்பில் அவன் பசி
அடங்கி இருக்குமா? நிச்சயம் அவன் பசி அடங்கி இருக்காது. வயிறு நிறைந்திருக்காது.
கனவில் அடி விழுந்தது விழிப்பில் வலி தெரிகிறது. கனவில் புசித்த உணவு
விழிப்பில் வயிறு நிறைவைத் தரவில்லை.
இப்படிப்பட்ட பல கனவுகளின் படித்தரங்களை ஆராய்ந்து அறிய வேண்டிய
அவசியம் இருக்கிறது.
இறைத் தூதர்களுக்கு இறைப்புறத்துச் செய்தி வஹியாக
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வஹியை வானவர் கொண்டு வந்து இறைத்தூதருக்கு சேர்த்து
இருக்கிறார்.
இறைத் தூதர்களுக்கு தூக்கத்தில் சில பொழுது வஹி வந்திருக்கிறது. கனவு
அந்த வஹியைச் சுமந்து வந்து தருகிறது. அதாவது கனவு இங்கே வஹிகொண்டு வரும் வானவர்
போன்று செயல் பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment