மறக்கமுடியாது
தொடர்ந்து கொண்டே இருக்கும் பழம் நினைவுகள்...!
முந்தைய
நாள் (28/ 12/ 2015) அன்று மாலையில் திடீரென்று ஒரு நினைவு. சில மணிநேரங்கள் என்னைப் பிடித்து
அழுத்திக் கொண்டே இருந்தது. இரவில் முழுவதுமாக இந்த நினைவு விலகி விட்டது.
மறுநாள்
(28/12/ 2015) அதிகாலை நான் விழித்த போது அதே நினைவு
மீண்டும் என்னோடு விழித்து என்னை அப்பிக் கவ்விக் கொண்டது.
அதனை
விடாப்பிடியாகத் தள்ளித் தூர எறிய முயன்றேன். முடியவில்லை தோற்று விட்டேன். அந்த
நினைவைச் சுமந்துகொண்டு என்னால் இருக்க முடியவில்லை.
என்
முகநூலைத் தோண்டி, அந் நினைவுக்குரிய மனிதரின் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தேன். உடனடியாகத்
தொடர்பு கொண்டேன்.
எதிர்
முனையில் மணி ஒலித்து.பதில் இல்லை.விட்டுவிட்டேன்.
அடுத்த நொடிப்பொழுது என் அலைபேசியில் நான் வைத்திருக்கும்
" அழகுத் திருமுகம் ஆயிரம் நிலவு..." (என்பாடல்தான்)
இசைத்தது.
அந்த நினைவுக்காரர்தான் அழைத்திருந்தார்.
ஆர்வமுடன்
அலைபேசியை "ஆன்" பண்ணினேன். எதிர் முனையில் "செங்கம்
ஜப்பார். நீங்கள் யார்?" இப்படித்தான் தொடங்கினார்.
"நான் ஹிலால் முஸ்தபா"
"அடஅடா கவிஞரே!" ஜப்பார் குரலில் ஆச்சர்யம்.
இன்றைய அதிகாலைத் தொடக்கமே எங்கள் இருவருக்கும் ஆனந்தமாக இருந்தது.
செங்கம்
ஜப்பார் இவர் நினைவுகளில்தான் ஒரு மாலையும் அடுத்த அதிகாலையும் கனத்துக்
கொண்டிருந்தேன்.
இருபது
ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரிய அளவில் தொடர்பே எங்களுக் கிடையில் இல்லை. ஆனாலும்
மறந்து விடவில்லை என்பதை இந்த நினைவூட்டல் அறிவித்திருக்கிறது.
செங்கம்
ஜப்பார். தன் பிள்ளைப் பருவம் கடந்து இளைய பருவம் தழுவும் காலத்தில் இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தவர்.
செங்கத்தில்
வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தலைசிறந்த சொற்பொழிவாளர். முஸ்லிம் லீகின்
இளைஞர் அணி மாநிலச் செயலாளர். இப்படி ஒரு மேம்போக்கான தகவல்கள் மட்டுமே
பலருக்கும் தெரிந்திருக்கலாம். இவைகளையும் தாண்டி, ஜப்பார் ஒரு ஆற்றல் கனிந்த பண்பாளர் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ
எனக்குத் தெரியாது.
காயிதெ
மில்லத் உடல் நலச் சோர்வாக இருந்த ஒருகட்டத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்தார்கள்.
அதிகமான அன்பர்களின் கண்ணிற் படாமல் ஓய்வெடுக்க வேண்டும் என முடிவு செய்தபோது, செங்கம் ஜப்பாரை
அழைத்துச் சொன்னார்கள், "தம்பி! யார் கண்ணிலும் படாமல்
ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும. சாத்தனூர் டேமில் ஏற்பாடு
பண்ணுங்கள்"என்று சொன்னார்கள்.
ஜப்பார்
முனைந்து நின்று ஏற்பாடு செய்தார். காயிதெ மில்லத், பெரும் பாலும் பிறர் யாரிடமும் அப்படி
கேட்கும் பழக்கமே இல்லாதவர்கள்.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஜப்பார் மீதுள்ள
பாசத்தால் இது நிகழ்த்து.
காயிதெ
மில்லத், முஸ்லிம் லீகில் இளைஞர் அணி உருவாக்க முடிவு செய்தார்கள். என் தந்தையாரை (
A.K.ரிபாய் சாஹிப்) அழைத்து இளைஞர் முஸ்லிம் லீக்
"பைலா" தயாரிக்கச் சொன்னார்கள். தலைவர் உத்தரவு பிறந்து விட்டது. உடனே
"பைலா" தயாராகி விட்டது. இளைஞர் லீக்கின் முதல் மாநிலச் செயலாளர்
ஜப்பார். மாநிலப் பொதுச் செயலாளருக்குரிய தகுதி உள்ள பதவி. காயிதெ மில்லத் தந்தது.
"இளைய சமுதாயம்"என்றொரு மாத இதழ், இளைஞர்
லீகிற்காவே ஜப்பார் சொந்தச் செலவில் வெளியிட்டார். செங்கத்தில் ஜப்பாருக்குச்
சொந்தமான அச்சுக் கூடம் இருந்து. அங்கிருந்து முதலில் இளைய சமுதாயம்
வெளியானது. அந்த அச்சுக் கூடத்தில் சில காலம் சமுதாயக் கவிஞர் தா.காசிம் அந்தப்
பத்திரிகையில் பணிபுரிந்தார். குடும்பத்தோடு செங்கத்தில் தங்கியிருந்தார்.
கவிஞர்
தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக் கொண்ட பின்னர் சென்னையை விட்டு வெளி ஊர் சென்று
பணிபுரிவதை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாகவியின் மணிவிளக்கு
அச்சக் கூடத்தில், தர்ஜுமததுல் குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பைக் கம்போஸ் செய்தார். அதன் பின் அறிஞர்
அப்துற்-றஹீமின் யுனிவர்சல்
பப்ளிகேஷனில் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து முஸ்லிம் லீகின்
உரிமைக் குரல் வார இதழில் பணிபுரிந்துள்ளார். சென்னை துணை மேயராக இருந்த முஸ்லிம்
லீகைச் சேர்ந்த சிலார் மியானின் பிறைக் கொடி மாத இதழில் பணிபுரிந்தார்.
இப்பத்திரிகையின் வெளியீட்டாளர்
மர்ஹும் காயல் ஹம்சா. ஜப்பார் மீதுள்ள பாசத்தின் காரணமாகக் கவிஞர்
தா.காசிம் செங்கம் சென்று பணி புரிந்தார்.
இதன்
பின் கசப்பான தகவல்கள் நினைவுக்கு வருகின்றன.
மண்ணடி, மூர் தெரு
சந்திப்பில் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்.செங்கம் ஜப்பார் தலைமையில் நடந்தது.
முஸ்லிம லீகில் காயிதெ மில்லத் திருவாயால் முதன்முதலில் தளபதி என
அழைக்கப்பட்ட மூத்த தலைவர் "தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன்தான் பிரதான
பேச்சளர். பல மூத்த முஸ்லிம் லீகின் தலைவர்களுக்கு இவர்தான் முன்னோடி.
"
நான்தான் தலைவர் காயிதெ மில்லத்தின் அடிச்சுவட்டை ஒட்டித்
தமிழகத்தில் முதல் அடி எடுத்து வைத்தவன்."இப்படித் தளபதியார்
தனது பேச்சைத் தொடங்கினார். ( அவரைப் பற்றியும் அவர் பேச்சாற்றலைப் பற்றியும் இன்னொரு
சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.) இது உணமையாகவும் இருக்கலாம்.
தளபதியார்
பேச்சு திசை தப்பியது.
" ஸமது சாஹிப், அப்துல் வஹாப் ஜானி சாஹிப்,
ஏ.கே. ரிபாய் சாஹிப் போன்றோர்கள் அப்போது அரைக்கால் டவுசர் போட்டுக்
கொண்டிருந்திருக்கலாம். இப்போது எல்லோரும் முதிர்ந்து விட்டோம். உதிர
வேண்டியதுதான்.அடுத்தத்
தலைமறையினருக்கு வழிவிட்டு விலகிக் கொள்வோம். தம்பீ! ஜப்பார்
தலைமை தாங்க வா. நான் உனக்குக் கீழ் பணிபுரிகிறேன்" எனத் தளபதி
முழங்கினார்.
முஸ்லிம்
லீகில் அதிர்வு ஏற்பட்டது. சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு முஸ்லிம் லீக்
தலையகத்தில் மாநில செயற்குழு கூடியது. கூட்டத்தில் தீப் பறந்தது. ஜப்பாரும் அக்
கூட்டத்தில் இருந்தார்.
மண்ணடிக்
கூட்டத்தின் பேச்சுக்களுக்குச் சாட்சியாக,
நானும், நாகூர் ஜபருல்லாஹ்வும்,கா.மு ஆதமும் பேசினோம். ஜப்பார் இதற்குப்
பதில் சொன்னார். அப் பதிலில் துடுக்குத்தனம் தலை காட்டியது.
அமர்நதிருந்த டாக்கர் திருவண்ணாமலை ஷம்சுத்தீன் அமர்ந்திருந்த
சேரை, மடக்கி ஜப்பாரை அடிக்கத் தூக்கி
வந்தார். முடிவு ஜப்பார் முஸ்லிம் லீகிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார்.
தளபதி திருப்பூர்
மைதீன் அண்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இது
துயரச் சம்பவந்தான். ஆனால் சரியான முடிவுதான். இன்றும் என் முடிவு இதுதான்.
ஜப்பார் இதற்கு முரண்படலாம்.
அப்போது
ஒரு வதந்தி வந்தது. பல ஆண்டுகள் முடக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சித் தேர்தல்
நடக்கப் போவதாகவும்,அதைத் தொடர்ந்து முஸ்லிம் ஒருவருக்குதான் மேயர் பதவி என்றும்,அந்த
மேயர் ஜப்பார்தான் என்றும் செய்தி பரவியது. எம்.ஜி. யார் அப்போது
முதல்வராக இருந்தார். இது உண்மையோ பொய்யோ? தெரியாது.
ஆனால் ஜப்பார் அ.இ.தி.மு.க.வில் இணைந்து மாநில பால் வளத்துறைத்
தலைவராகி விட்டார்.
முஸ்லிம்
லீகில் தென்காசி சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக நின்று தோற்ற அனுபவமும்
ஜப்பாருக்கு உண்டு. எப்போதும் ஒரு முஸ்லிம் வெல்ல வாய்ப்பற்ற தொகுதி தெனகாசி. அதை
ஜப்பாருக்கு ஒதுக்கியதிலும் ஒரு உட்கட்சி அரசியலும் உண்டு.
பால்
வளத்துறைத் தலைவராக ஜப்பார் இருந்த காலக் கட்டத்தில், சென்னை
அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு
மிக அருகாமையில் பழைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல் இருந்தது. அங்கே இரண்டாவது
மாடியில் ஜப்பார் குடியிருந்தார். அதற்கு நேர் கீழே தரைப் பகுதியில் சிராஜுல்
மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அறை இருந்தது.
அப்போது
ஸமத் சாஹிப் திருவல்லிக்கேணிச் சட்ட மன்ற உறுப்பினர்.
ஸமது சாஹிப் அறைச் சாவி என்னிடமும் இஜட் ஜபருல்லாஹ்
விடமும்தான் இருக்கும். நாங்கள்தாம் அங்கே குடியிருந்தோம்.
ஸமது சாஹிப் எப்போதாவது சில வேளைகளில் மட்டமே வருவார்.
ஜப்பார், பால் வளத்துறைத்
தலைவராக இருந்த காலத்தில் அவருக்குள்
இருந்த முஸ்லிம் லீகனைக் காணமுடிந்தது.
ஜப்பாருக்கும்
எங்களுக்கும் (எனக்கு,ஜபருல்லாஹ்வுக்கு, இன்னும் சில லீக் தலைவர்களுக்கு) கருத்து
முரண்பாடு உண்டு. ஆனாலும் நட்புக்கு எங்குமே இடைஞ்சல் வந்ததே இல்லை. பால்
வளத்துறைத் தலைவராக இருந்த போது, அடியக்க மங்கலம் ரஜாக் ஷா
காதரி போன்ற மூத்த தலைவர்கள், எம்.ஏ.அக்பர் அண்ணன் போன்ற லீக்
மேதைகள் ஆகியோரைக் காணும் போதெல்லாம் எத்தனையோ உதவிகளை எந்தக் கைமாறும் கருதாமல் செய்திருக்கிறார்.
சட்டமன்ற
உறுப்பினர்கள் ஹாஸ்டலில் தங்கி இருந்த காலத்தில் நானும் ஜபருல்லாஹ்வும் கொலைப் பட்டினியில்
கிடப்போம். மூன்றாவது மாடியில் இருந்து "ஏ! வீணப்போன கவிஞன்களே! பசியா? நான் கீழே வாரேன்.
வயிறு நிறையச் சாப்பிடலாம். அல்லாஹ் படியளந்திட்டான்"எனறெரு சத்தம் வரும்.
அதுதான் ஜப்பார் சத்தம்.
லீக் செயற்குழுவில் எங்கள் சாட்சிகளால் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டவர். எங்கள் பசியாற எத்தனை எத்தனை முறை உதவியிருக்கிறார்.
செயற்குழுவில் சேரத் தூக்கி அடிக்க வந்த
திருவண்ணாமலை ஷம்சுதீனுக்கும் மறைமுகமாக உதவியிருக்கிறார்.
ஒருமுறை
எனக்கு ஒரு இக்கட்டான வேளை. ஜப்பாரிடம் உதவி கேட்டேன். அப்போது அவரிடம் இல்லை.
எனினும் அண்ணாசாலையில் ஒரு கடையில் வாங்கி எனக்குத் தந்தார். இவை எல்லாம் ஸமது
சாஹிபுக்கும் தெரியும்.
ஜப்பாரிடம்
மோதலும் உண்டு. மேலான அரவணைப்பும் உண்டு.
லீகை விட்டு அவர் போன பின்னர் இந்த மணித்துளிகள் வரை நாங்கள்
அரசியல் பேசியதே கிடையாது. ஏனென்றால் எங்களுக்கிடைய பெரிய
முரண்பாடுகள் இருக்கினறன. ஜப்பாரிடம் லீக் ரத்தத்தோடு இருக்கிறது. கருத்து முரண் சிந்தனையில்
இருக்கிறது.
இந்தியில்
ஒரு காலத்தில் சக்கைப்போடு போட்ட மொஹலே ஆஜாம்
அக்பர் திரைப்படத்தைத் தமிழாக்கம் செய்து வருவதாகக் கேள்விப்
பட்டேன். அதுபற்றி ஒன்றும் எனக்கு இதுவரை தெரியாது.
இதை
எழுதிய பின் நினைவுக் கனம் ஒத்தடமாக மாறி விட்டது.