எனக்குக் காலையில் நடைப்பழக்கம் உண்டு.
இது ஒரு தொடர்பு நிகழ்வு எனச் சொல்லிவிட முடியாது. எப்போதோ நடக்கும் நிகழ்ச்சி என்றும் கருதிவிடக் கூடாது.
எத்தனை மனிதர்கள்? எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்?
ஆரோக்கியத்திற்காக நடப்பவர்கள் சிலர். ஆரோக்கியம் பறிபோய்விட்டதால் நடப்பவர்கள் பலர்.
எழுபத்தைந்தைத் தாண்டிய, கொஞ்சம் பருமனானவர், வலது கையைச் சுழற்றிக் கொஞ்சத் தூரம், இடது கரத்தைச் சுழற்றிக் கொண்டு கொஞ்ச நேரம் என நடந்து கொண்டிருப்பார்.
பெங்களூர் கத்திரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்த மாதிரி, நல்ல வெள்ளை நிறத்தில், மத்திய வயதையும் தொலைத்துவிட்ட ஒரு பெண்மணி உருண்டு உருண்டு வருவார்.
ஆயிரத்தெட்டு சுருக்கத்தில் மூஞ்சி சப்பியிருக்கும் ஒரு மேல்ஜாதி நாயின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை வலது கையில் பிடித்துக் கொண்டும், இடது கையில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டும் அரை டவுசர் அணிந்த ஒரு "கிழட்டுச் சிறுவர்' கடந்து செல்வார். அவர் நாய் மூஸ் மூஸ் என இறைத்து வாயில் உமிழ்நீர் சொட்டச் சொட்ட அவரையும் இழுத்துக் கொண்டு நடைப் பயிற்சி செய்யும்.
வாக்கிங் போன மாதிரியும் இருக்கும், அன்றையச் சமையலுக்குக்
காய்கறிகளை வாங்கி வந்த மாதிரியும் இருக்கும் என இரட்டைப் பயன்களைச் சுமந்து கொண்டு இரண்டு மூன்று இல்லத்தரசிகள் சளசள எனப் பேசிக் கொண்டே வருவார்கள்.
நான் எத்தனை மணிக்கு வந்தாலும் அதற்குத் தகுந்தது போலவே
இவர்களும் வருகிற மாதிரியே எனக்குத் தோன்றும்.நான் சீக்கிரம் எழுந்து நடந்து வரும் போதும் இவர்கள் எதிரில் வருவார்கள். சற்றுத் தாமதித்து நான் வந்தாலும் அப்போதும் இவர்கள் என் எதிரில் வருவார்கள். இது என்ன கணக்கு? அதுதான் நடைப்பழக்கக் கணக்கு.
எப்போதும் எனக்கு எதிரில், ஒரு இத்துப்போன இரும்புச் சைக்கிள் குப்பை வண்டியை ஒரு பெண்மணி தள்ளிக் கொண்டு வருவார்.அவர் ஒரு துப்புறவுத் தொழிலாளி.
எப்படியும் 45 வயதைத் தொட்டுக் கொண்டிருக்கலாம்.தள்ளி வருவது குப்பை வண்டியானாலும், மிக நேர்த்தியாகச் சேலை ஜாக்கெட் அணிந்திருப்பார்.
நிறம் கறுப்பு அல்ல. மாந்தளிரைத் தாண்டி எட்டிப் பார்க்கும் வெளிர் நிறம். லட்சண முகம் எனச் சொல்லுவார்களே, அதை வரைய, அந்தப் பெண்மணி முகத்தை ஒரு ஓவியன் மாதிரியாக்கிக் கொள்ளலாம்.
உயரத்திற்குத் தகுந்த பருமன்.பத்து அம்சங்களும் பக்குவமாய் இருக்கும் தேகம். பிம்பங்களுக்கு ஜாதி மத பேதம் ஏது?
இன்னொருவர்,
நான் எப்போது நடைப்பயிற்சிக்கு வரும் போதும் எதிரில்தான் வருவார்.
நல்ல வசதியுள்ளவர். ரிடையரான ஏதோ ஒரு அதிகாரி. அப்படித்தான் அவர் இருந்தாக வேண்டும்.
தோற்றம் கம்பீரமானது. பேண்ட், அரைக் கை ஷர்ட்டில்தான் எப்போதும் வருவார்.விலை உயர்ந்த லெதர் ஷூ சரக் சரக்கெனச் சத்தம் கொடுக்கும்.
ஷர்ட்டின் மேல் இரு பட்டன்கள் போட்டிருக்க மாட்டர். கழுத்தில் பருமனான அகன்ற தங்கத்திலான மைனர்செயின் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
பேண்ட்டில் பெல்ட் சொருகும் முன்பக்கப் பட்டையொன்றில் ஒரு சாவிக் கொத்துத் தொங்கிக் கொண்டிருக்கும்.
வலது கரத்தின் ஆள் காட்டி விரலில் வெள்ளிச் சங்கிலி சுற்றப்பட்டு
ஒரு சாவிக் கொத்தும் தொங்கிக் கொண்டிருக்கும்.
உடலில் இத்தனைச் சாவிக் கொத்துகளை
மாட்டிக் கொண்டு ஒரு நடைப் பழக்கமா?
இவர் வீட்டில் யாருமே இல்லையா? இவர் இல்லத்தில் இவர் தனியனா?
இத்தனைச் சாவிக் கொத்தும் பயன்படும் ஒரு பெரும் பங்களாவில் இப்படி ஒரு தனிமனிதனா?
வெறும் நடைப்பழக்கம் செய்யும் எனக்கு இவரைப் பற்றி ஏன் இத்தனை கற்பனை? ஒருவரின் அந்தரங்கத்துக்குள் நடத்தும் அத்து மீறலல்லவா இது?
அப்படி என்னால் ஒதுங்க முடியாத அவஸ்த்தை, என்னைத் தொடர்ந்து உலுக்கிக் கொண்டே இருக்கிறது.
மீதிக் கடக்க வேண்டிய தொலைவையும், அவர் நினைவிலேயே கடந்து செல்வேன்.இது எனக்கு ஒரு வாடிக்கை.
ஒரு வேளை உலகத்திலேயே கொடூரமான சந்தேகப் பேர்வளியாக இருப்பாரோ? வீட்டிலும் யாரையுமே நம்பாதவராக இருப்பாரோ? வீட்டில் உள்ள பெட்டி சாவி, அலமாரிச் சாவி எல்லாவற்றையும் எவரையும் நம்பாமல் பூட்டித் தானே சுமந்து கொண்டு அலைகிறரோ?
இவர்,
மனைவி என்ற ஒரு பெண்ணோடு முப்பது வருடம் வாழ்ந்திருக்கலாம். மகன்கள்,மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள் சகிதம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் யாரையும் நம்பாமல் தன் சகல சொத்துகளையும் பூட்டி வைத்துத் தானே சுமந்து கொண்டு திரிகிறாரோ.
அவரின் தாய்,தந்தையர் செத்துப்போயிருக்கலாம். உடன்பிறப்புகள்
யாரும் இல்லாது தனிப் பிறப்பாகத்தான் இவர் பிற்திருக்க முடியும்.
இப்படித்தான் இவரைப் பற்றிய விவரங்களை என் மனம் எனக்குச் சொல்லி
என்னை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் சரிதான். இந்தக் கதையெல்லாம் அவரிடம் நடப்பாக இருக்கிறதா? என்னிடம் வெற்றுக் கதையாகச் சாவிக் கொத்துப் போலத் தொங்கிக் கொண்டிருக்கிறதா?