Tuesday, June 23, 2015

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!



ரஹ்மானே அன்பாளா
ரமலானின் அருளாளா
கையேந்திக் கேட்கின்றேன்
கரம்நிறைப்பாய் பொறுப்பாளா!

கண்களில் மழைநீர் வழிகிறது--மனம்
கனத்தால் நொறுங்கிச் சரிகிறது
எண்ணம் நெருப்பாய் எரிகிறது--என்
இதயம் துயராய் வடிகிறது! (ரஹ்மானே...)

மானிடப் பதர்கள் வாசலிலே--கரம்
மலர்த்திக் கேட்பது பழியல்லவா?
தானெனும் ஆணவப் பேர்வழிகள்--தீத்
தணலில் நெளியும் புழுவல்லவா? (ரஹ்மானே...)

எனக்குச் சமமாய் எவனுண்டு--என
எண்ணித் திரிந்த நபரெல்லாம்
கணக்கு முடிந்து மறைகின்றார்--சிறு
கரையான் நக்கக் கரைகின்றார்! (ரஹ்மானே...)

மனிதன் தந்து நிறைவதில்லை--அந்த
மனிதன் மறுத்துக் குறைவதில்லை
பனிநீர் தாகம் தணிப்பதில்லை--சின்னப்
பானையில் பூமி உறைவதில்லை! (ரஹ்மானே...)

எவரையும் பழிக்கும் நோக்கமில்லை--பிறர்
என்னதான் செய்யினும் கவலையில்லை
சுவர்கள் எழுப்பிச் சூரியனை--நாம்
தொட்டு விடவும் முடிவதில்லை! (ரஹ்மானே...)

கேட்பதைத் தருபவன் நீயல்லவோ--என்
கேள்வியும் காற்றில் கரைவதுவோ
ஆட்சியின் அதிபன் சன்னதியில்--துயர்
அறுபடும் என்பது விதியல்லவோ? (ரஹ்மானே...)

இறைவா உன்தன் முன்னிலையில்--என்
எண்சாண் உடம்பால் பணிகின்றேன்
நிறைவாய் அருள்வாய் அருளாளா--உன்
நினைவே கதியெனத் துணிகின்றேன்! (ரஹ்மானே...)

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!



இந்தச் சமுதாயம் யாருக்கும் தாழ்வில்லை
இந்திய வரலாற்றில் எம்பங்கும் குறைவில்லை! (இந்தச்)

சிந்திய ரத்தம் சரித்திரம் சொல்லும்--அந்தச்
சிவந்த வானமும் எம்புகழ் பாடும்!
அந்நியக் காலடி மண்ணில் பதிந்தது--அவர்
ஆதிக்கம் அழிக்கத் தன்னுயிர் தந்தது! (இந்தச்)

திப்புவின் வீரம் மறப்பது துரோகம்--அதைத்
திரித்துப் பேசுதல் தேச விரோதம்
கப்பிய அடிமைத் தளைகளை அறுத்தார்--வெள்ளைக்
காரர்கள் தம்மைச் சிறையிலும் அடைத்தார்! (இந்தச்)

பரங்கியர் தலைக்கு நாளினைக் குறித்தார்--அவர்
பதறக் கதற வாளினை எடுத்தார்
உரிமைப் போரில் ஷகீதாய் முடிந்தார்--திப்பு
உலகுக்கு வீர அதிசயம் ஆனார்! (இந்தச்)

மலபார் பக்கம் மாப்பிள்ளை மார்கள்--தம்
வரலாறு படைக்கப் போர்க்களம் புகுந்தார்
தலை,கால் சிதறித் தம்முயிர் இழந்தார்--இத்
தாய்த்திரு நாட்டின் மானம் காத்தார்! (இந்தச்)

பாக்கிஸ் தான்படை எல்லையில் நின்றது--நம்
பாரதப் படையே முடிவில் வென்றது
தாக்கும் டாங்கியைத் தன்மேல் ஏற்றார்--எம்
ஹவில்தார் ஹமீதே இன்னுயிர் நீத்தார்! (இந்தச்)

மானம் காக்க அனைத்தும் தருவோம்--எம்
மார்க்கம் தழைக்கத் தியாகமும் புரிவோம்
ஈனர் எம்மை இழிவுகள் செய்தால்--இங்கே
இருப்பதோ ஓருயிர் இழக்கவும் தயங்கோம்! (இந்தச்)

தேசம் காக்க ஆயுதம் தூக்குவோம்--எதிரி
தெரிந்தவர் எனினும் அவர்சிரம் நீக்குவோம்
வேசம் புனைபவர் மோசம் கலைப்போம்--எம்மை
வேற்றவர் என்னும் கோஷம் அழிப்போம்! (இந்தச்)