Tuesday, February 4, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது-34

மணிவிளக்கு..!!


மணிவிளக்கு மாத இதழ் இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட நல்லதொரு தரமிக்க மாத இதழ். அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் துவக்கி வைத்த மணிவிளக்கு ஆரம்பத்தில் குர்ஆனியச் சிந்தனைகளும் இஸ்லாமிய தத்துவ விளக்கங்களும் இஸ்லாமிய இலக்கிய பகுதிகளும் கொண்டு வெளிவந்த மாத இதழ்.

முதல் தலைமுறையான மணிவிளக்கு எழுத்தாளர்களில் பலரும் உலமா பெருமக்களாகத் திகழ்ந்தார்கள்.

ஆரம்ப மணிவிளக்கு எந்த அரசியலையும் அடையாளம் காட்டியதில்லை. அது ஆன்மீக இலக்கிய இதழாகத்தான் தன்னை அறிவித்துக் கொண்டது.

தமிழகத்தில் அன்றைய கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆலிம் பெருமக்களில் சிலர் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவ்விதம் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்ட ஆலிம் பெருமக்கள் மணிவிளக்கில் அதிகம் எழுதி வந்தனர்.

ஆனால் அரசியல் வாடை அங்கு வீசுவதே இல்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களும் காங்கிரஸ் அரசியல் ஆதரவுக் கொண்டவராக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் உருவாக்கிய மணிவிளக்கு அரசியலை முன்னெடுக்கவில்லை.

மணிவிளக்கு என்ற பெயர் அண்ணலாரை உருவகப் படுத்திய சொல்லாடல். இந்தச் சொல்லாடலுக்கு இலக்கிய பின்னணி உண்டு.

சீறாவைத் தந்த உமரப்பா அவர்கள் அண்ணலாரைக் குறிக்க உருவகப் படுத்திய அற்புதமான சொல்லாடல், மணிவிளக்கு.

பானுவின் கதிரால் இடருறுங் காலம்
படர்தரு தருநிழல் எனலா
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் திலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபிபிறந் தனரே!

இப்பாடலில் அண்ணலாரை மணிவிளக்கு என்று வருணிக்கிறார். இந்த மணிவிளக்கு சொல்லாடலே மணிவிளக்கு மாத இதழின் பெயராக இலக்கியத் தரத்தோடு தெரிவு செய்து இடப்பட்டிருந்தது.

மணிவிளக்கின் முதல் தலைமுறை இப்படி ஒளி வீசிப் பிறந்தது.

அடுத்து இரண்டாம் தலைமுறை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியின் மகனாரும், முஸ்லிம் லீகின் ஆளுமை செழித்த தலைவருமான சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபை ஆசிரியராகக் கொண்டு முதன்மைப் படுத்தப் பட்டது.

இந்த இரண்டாம் தலைமுறையின் எழுத்தாளர்களைக் குறிக்கும் பொழுது வியப்பு மேலிடும்.

சிறந்த அரசியல் விமர்சகர்கள், ஆழமான ஆன்மீக பார்வைப் பெற்றவர்கள், குர்ஆனிய வளமையான சிந்தனைக் கொண்டவர்கள், இஸ்லாமிய மார்க்க நெறிப் பற்றிய விழுமிய ஆற்றல் மிக்க விமர்சகர்கள், தரம் செழித்த இலக்கிய மேதைகள் போன்றவர்களை உள்ளடக்கிய எழுத்தாளர் பட்டாளமே இரண்டாம் தலைமுறை மணிவிளக்கை நிலை நிறுத்தியது.

முஸ்லிம் லீக் அரசியல் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களால் வெளிப்படையாகவும் வீராவேசமுடனும் மணிவிளக்கை அலங்கரித்தது.

இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய துல்லியமான படப்பிடிப்புகள் உலக இஸ்லாமிய பிரச்சனைகள் என்றெல்லாம் மணிவிளக்கின் பக்கங்கள் ஞானப் புதையல்களாக விரிவடைந்தன.

ஸமது சாஹிபின் எழுத்தாற்றல் செழுமையான பாகம் பெற்றது. ஷிப்லிஎன்ற புனை பெயரில் ஸமது சாஹிப் எழுதி வந்த பல சமூக அரசியல் கட்டுரைகள் அற்புதமான செய்திகளை முன்வைத்தது.

பர்மாவிலிருது திரும்பி இருந்த அபிராமம் நூரண்ணன் எழுதி வந்த அண்ணலெனும் அழகிய முன்மாதிரிஎனும் பெருமானாரின் வாழ்க்கைத் தொடர் ஒரு வித்தியாசமான கோணத்தில் எழுதப் பட்ட முன்மாதிரி வரலாறு.

குர்ஆனில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு மட்டுமே அண்ணலார் வாழ்க்கைச் சம்பவங்களைக் கோவைப் படுத்திய ஒரு நல்ல தொடர்.

இந்தத் தொடரை நூரண்ணன் மணிவிளக்கில் எழுதத் தொடங்கும் பொழுது ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.

குறைந்தது எட்டு பத்து பக்கங்களுக்கு மேல் மாத மாதம் எழுதுவேன். இந்தத் தொடர் வரும் பக்கங்களில் எந்த விளம்பரங்களையுனம் வெளியிடக் கூடாது.இதுதான் நூரண்ணனின் நிபந்தனை.

இந்த நிபந்தனை கடைசிவரை மணிவிளக்கால் கடைப்பிடிக்கப் பட்டது.

வடகரை பக்கரண்ணன், ஆலிம் கவிஞர் சிராஜ் பாக்கவி , நாகூர் புலவர் ஆபிதீன் காக்கா, நாகூர் ஞானமாமேதை எஸ்.அப்துல் வஹாப் பாக்கவி, கவிக்கோ அப்துர் ரஹ்மான் தந்தையார் மதனீ, கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன், அப்துல் வஹாப் எம்.ஏ. பி.டி.ஹெச், அபிராமம் துபாஷ், கவிஞர் தா.காசிம் , வலங்கைமான் அப்துல்லா, நாகப்பட்டினம் கூத்தூர் ஹைதரலி, அக்பர் அண்ணன் இன்னும் மகத்தான ஆலிம் பெருமக்கள் போன்ற ஜாம்பவான்களால் நிரம்பப் பெற்று இருந்த மணிவிளக்கு பத்திரிகை உலகில் தலை நிமிர்ந்து ஆட்சிப் புரிந்து வந்தது.

1957 ஆம் ஆண்டு மணிவிளக்கில் இரண்டாம் தலைமுறை ஆசிரியர் குழுவில் ஸமது சாஹிப் ஆசிரியராகவும், துணை ஆசிரியராக ஏ.கே.ரிபாய் சாஹிபும் பணியாற்றி வந்தனர்.

ஏ.கே.ரிஃபாய் சாஹிப் ஒரு சிறு மன வருத்தத்தால் அவர்களின் தந்தையாரிடமிருந்து முரண்பட்டு சென்னைக்கு தன் குடும்பத்தை அழைத்து வந்து தங்கி மணிவிளக்கு மாத இதழ் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மிகமிக அற்புதமான மொழி பெயர்ப்பு ஆக்கங்களும், அரசியல் சமூக விமர்சனங்களும் ஏ.கே.ரிபாய் சாஹிபால் மணிவிளக்கு ஒரு வகையான அலங்காரம் பெற்றது. ஏ.கே.ரிபாய் சாஹிப் மாதச் சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய பொருளாதாரச் சூழல் அவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஏற்பட வேண்டிய அவசியமற்ற நிலையை இறைவன் அவருக்கு அருளி இருந்தான்.

ஆனாலும் தன் தந்தையாரிடம் முரண்பட்டு சென்னை வந்ததால் தன் குடும்பச் சொத்தின் வருவாயை ஏற்றுக் கொள்ளாமல் மணிவிளக்கு மாத இதழில் மாதச் சம்பளத்திற்குப் பணியாற்றினார்.

ஏ.கே.ரிபாய் சாஹிபிற்குச் சம்பளம் கொடுத்தவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்.

நான் கை நீட்டிச் சம்பளம் வாங்கிய ஒரே முதலாளி ஸமது சாஹிப்தான்என ஏ.கே.ரிபாய் சாஹிப் அடிக்கடிக் கூறுவது உண்டு. இந்த முதலாளி தொழிலாளி உறவு, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு காலம் நீடித்தது.

1978க்கு பின் மூன்றாம் கட்டத் தலைமுறை மணிவிளக்கு மாத இதழுக்குள் குடியேறியது. அப்பொழுது தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் மணிவிளக்கு மாத இதழில் ஒரு தலையங்கம் எழுதினார்.

இப்பொழுது மூன்றாம் கட்டத் தலைமுறைக்கு மணிவிளக்கை இறைவன் அருளால் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம். எங்களுடைய மேற்பார்வையில் இஸ்லாமிய எழுத்துப் பரம்பரையைச் சார்ந்த இரு இளைய தலைமுறையிடம் ஆசிரியர் குழுவை ஒப்படைத்து மணிவிளக்கு பணியைத் தொடர பொறுப்புச் சாட்டுகிறோம். அந்த இருவர் அ. ஹிலால் முஸ்தபா, நாகூர் இஜட். ஜஃபருல்லாஎனத் தலையங்கம் எழுதி பத்திரிகை பொறுப்பை அவர் கண்காணிப்பில் எங்களிடம் ஒப்படைத்தார்.

இந்த மூன்றாம் தலைமுறையும் மணிவிளக்கை இறைவன் தந்த ஆற்றலைக் கொண்டு செம்மைப் படுத்தியது. அதே நேரம் கடுமையான விமர்சனங்களையும் இந்தத் தலைமுறைச் சந்தித்தது.

வந்த விமர்சனங்களை மாத இதழின் கடிதமும், கருத்தும் பகுதியில் அப்படியே வெளியிட்டு தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்என தலைவர் ஸமது சாஹிப் எங்களுக்கு அனுமதி தந்து எங்கள் பணியைத் தொடர ஆக்கம் தந்தார்.

காயம் பட்ட ஆடைகள்”, “காணாமல் போன ஒட்டகம்போன்ற சிறுகதைகளை நான் தொடர்ந்து எழுதி வந்தேன். கவிஞர் ஜபருல்லா கவிதைகள் பலவற்றை எழுதி வந்தார். இவைகள் அனைத்தும் மிகக் கடினமான விமர்சனத்திற்குள்ளாயின.

கம்பம் தேனியிலிருந்து சில ஆலிம்கள் கடுமையான விமர்சனம் எழுதி, விமர்சனத்திற்குக் கீழ் கையெழுத்திட்டு அனுப்பினர். அந்த விமர்சனத்தின் முக்கியமான வரியைக் கீழே பதிவு செய்கிறேன்.

மணிவிளக்கு என்ற மகோன்னதமான மாத இதழில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா எழுத்துக்களைப் பிரசுரித்து அந்த இதழை எங்கள் இடது கையால் கூட தொட முடியாமல் ஆக்கி விட்டீர்களே வேதனையாக இருக்கிறது. தலைவர் அவர்கள் இந்த எழுத்துக்களை எல்லாம் கவனிக்கிறார்களா?” என்று எழுதப் பட்டு நான்கு பக்க விமர்சனக் கடிதம் வந்தது.

அந்த விமர்சனக் கடிதத்தை தலைவர் ஸமது சாஹிபிடம் நானும் ஜபருல்லாவும் கொண்டு போய் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டு

தம்பி, கடிதமும் கருத்தில் இப்படியே இந்த வாசகங்களைப் பிரசுரித்து விட்டு உங்கள் பணியைத் தொடருங்கள்என ஸமது சாஹிப் கூறினார்கள்.

அடுத்து ஒரு கடிதத்தை ஜபருல்லா எடுத்து மாமா, இன்னொரு கடிதம் இருக்கிறதுஎன நீட்டினார்.

அந்தக் கடிதம் அதிராமப் பட்டினத்தில் இருந்து வந்திருந்தது.

அதில், “தங்கத் தாம்பாளத்தில் மணிவிளக்கு விருந்து படைத்தது. அந்த விருந்தின் கடைசி ஓரத்தில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா என்ற இருவரின் எழுத்து என்னும் நஜீஸை (மலம்) வைத்து விட்டீர்களேஎன்று குறிப்பிட்டு இருந்தது.

இதைப் படித்து விட்டு தலைவர் ஸமது சாஹிப் அறை முழுதும் அதிரும் அளவுக்கு வாய்விட்டு சிரித்தார்கள்.

தம்பி, இதையும் கடிதமும், கருத்தில் வெளியிட்டு விடுங்கள், நீங்கள் பணியைத் தொடருங்கள். நிச்சயம் இவர்கள் உங்கள் எழுத்துக்களை ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். தளர வேண்டாம்என தலைவர் எங்களுக்கு அனுமதி தந்தார்.

நாங்கள் தொடர்ந்து மணிவிளக்கின் இறுதிக் காலம் வரைப் பணியாற்றினோம்.

இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரிடமும், தலைவரிடமும் வேறு யாரும் பணி புரிந்து இருக்கிறீர்களா?

Monday, February 3, 2014

தொட்டு வைப்போம்! காத்திருப்போம்!


நேகமாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் என் இனிய தோழர் வே.மு. பொதியவெற்பனின் இலக்கிய பணியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவை திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தார் முன்னின்று நடத்தினர். வம்சி பவா எல்லா ஏற்பாடையும் கவனித்துக் கொண்டார்.

அந்த பாராட்டு விழாவில் பேராசியர் கல்யாணி, மார்க்ஸிய இலக்கியத் தோழர் தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பழமலை, நான் இன்னும் பலர் கலந்துக் கொண்டோம். இந்தக் கூட்டத்தில் கொஞ்சம் தீவிர மார்க்ஸிய சிந்தனைக் கொண்ட தோழர்களும் கலந்துக் கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் மார்க்ஸிய இயக்கத்தில் நேரடித் தொடர்பு கொண்டிராதவனாக நான் மட்டும்தான் இருந்தேன்.

வே.மு.பொதியவெற்பனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நாற்பத்திரண்டு ஆண்டு பழமையுடையது. இன்றும் புதுமையாகவே தொடரக் கூடியது.

அந்தக் கூட்டத்தில் வந்திருந்தவர்களில் என்னளவுக்கு அவருடன் நீண்ட கால தொடர்புடையவர் அப்போதைக்கு யாருமில்லை.

பொதியவெற்பன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தி.க காரராக நடைப் போட்டு வந்த தனித்தமிழ் இயக்கத்துக்காரர்.

அவருக்கும் எனக்கும் அண்ணாமலையில் கால வித்தியாசம் நான்காண்டுகளாகும். அண்ணாமலையில் பி.ஓ.எல்லை முடித்து அவர் துறையை விட்டு வெளியே வந்த ஆண்டு நான் தமிழ்த் துறைக்குள் நுழைந்தவன்.

ஆனாலும் எங்கள் நட்பு அண்ணாமலையில் தொடங்கியது. தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியராக இருந்த பேராசிரியர் கலைமாமணி உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஐயா இல்லம்தான் எங்களின் நட்புக் கூடாரம். அங்கே பத்தாண்டு முன்பு படித்த பேராசியர் ஆ.சிவசுப்ரமணியம் தொடங்கி, தர்மபுரி கீரன், பொதியவெற்பன், பேராசிரியர் டாக்டர் ஆல்பென்ஸ், தி.நகர் ராமகிருஷ்ணா மேல்னிலைப் பள்ளி தலைமையாசிரியாக இருந்த அம்மையப்பன், புலவர் சங்கரன், புலவர் தஷ்ணாமூர்த்தி, மௌன சாமிகள் மடாதிபதி சுந்தரமூர்த்தியார், தில்லைக் கலைமணி, இஞ்சினியர் செல்வக்குமார், புலவர் பாண்டியன், பெங்களுருல் தமிழாசிரியராக பணிபுரிந்த காமராஜர், தகடூர் பாவாணன், நான் என இப்படி ஒரு பட்டியல் நீளும்.

இந்த நீண்ட பட்டியலைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இவர்களில் மூன்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் மார்க்ஸிய இயக்கத்திற்குரியவர்கள். மற்றொரு பிரிவினர் பெரியாரிய (தி.க) கோட்பாடிற்குரியவர்கள். அடுத்த பிரிவினர் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுள்ளவர்கள்.

மார்க்ஸிய, பெரியாரிய தத்துவக் கூறுகளுக்கு அன்றைய காலகட்டத்தில் உடன்பாடு கடுகளவும், முரண்பாடு மலையளவும் உண்டு.

அதைவிட ஒரு பெரிய வேடிக்கை. எங்களுடைய வாக்குவாதங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து மோதிக் கொள்ளும் இல்லமோ உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஐயாவிற்கு உரியது. ஐயாவோ தீவிர பக்த சிரோண்மணி.

கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்திப் பாடல்களை இன்று தமிழகத்தினுடைய சீர்காழியார் குரலிலும், இன்னும் வீரமணி போன்ற பக்தி பாடகர்கள் பாடல்களை எழுதிக் குவித்தவர் ஐயா அவர்கள்.

அவருக்கு நேர் முரண்பட்ட கோட்பாடுகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு உணவு பரிமாறி ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தவர் ஐயா.

வே.மு.பொதியவெற்பன் அன்றைக்கு முரட்டுத்தனமான தி.க காரர். தனித்தமிழை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத கடினமான நடைமுறைக்காரர். இதற்கு நேர் முரண்பாடு கொண்டவர்கள் நானும் என் சில நண்பர்களும். ஆனாலும் பொதியவெற்பன் அவர் கொள்கையிலிருந்து பின்வாங்குவதே இல்லை. நாங்களும் விட்டுவிடுவதாய் இல்லை.

இறுதியில் தனித்தமிழ் இயக்கத்தை விட்டு பொதியவெற்பன் தன் வலக்காலை எடுத்து வெளியே வைத்து வெளியேறத் தொடங்கினார். இந்தச் செயலுக்கு என்னுடைய பங்கு கணிசமாக உண்டு.

பெரியாரிய சிந்தனை மட்டுமே முழுமைப் பெற்ற சிந்தனை என்ற பிடிவாதத்தில் இருந்த பொதியவெற்பனை மார்க்ஸிய ஞானத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தவர்களில் எனக்கும் ஒரு இடம் உண்டு.

இப்பொழுது திருவண்ணாமலைக் கூட்டத்திற்கு வருகிறேன். திருவண்ணாமலையில் நடந்த பாராட்டு விழாவிற்குப் பின்னர், நண்பர்கள் நாங்கள் சிலர் தனித்திருந்து விவாதித்துக் கொண்டிருந்தோம்.

பெரியாரியம் முழுமையாக விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதற்கு மேலும் அதில் சில பிழைகள் இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அப்பிழைகளும் நீக்கப் பட வேண்டிய ஒன்றுதான் என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும். பெரியாரியம் ஒரு புனித நூலைப் போல கருதப் பட வேண்டிய ஒன்றல்ல.

இன்னும் சொல்லப் போனால் பெரியாரியம் சில வேண்டத்தகாத பாரதூர பிரச்சினைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது என்பதையும் மறுக்கத் தேவையில்லை.

சில நண்பர்கள் இது சிந்திக்க வேண்டியது என்றார்கள். சில நண்பர்கள் இது தேவையற்ற முரட்டு விவாதம் என்றனர்.

நான் அன்று முன்வைத்த பெரியாரியம் பற்றிய இந்த விவாதத்தை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. நான் மாற்றி கொள்ள வேண்டியதற்கு தேவையான ஆதாரங்கள் இன்றுவரை கூட என்னிடம் இல்லை.

சுதந்திர போராட்ட கால இறுதிக் கட்ட தமிழகம். இயக்கங்களின் ஒன்றிணைந்த போராட்ட களமாக இருந்தது.

சுதந்திரத்திற்குப் பின் தமிழக சமூக வாழ்க்கை வேறொரு திசையை நோக்கி செலுத்தப் பட்டது.

காங்கிரஸ் இயக்கத்தில் வலுவான தலைவரில் ஒருவராக இருந்த பெரியார் வா.வே.சு ஐயரின் குருகுலத்தில் நடத்தப் பட்ட பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற சாதிப் பிரிவை கண்டித்துப் போர்க்குரல் எழுப்பிய பெரியாருக்கு காங்கிரஸில் ஆதரவு இல்லை.

இதுபற்றி விவாதித்த திரு.வி.க தலைமை தாங்கிய திருவாரூர் கூட்டத்தில் திரு.வி.க முதல் ராஜாஜி வரை இந்தப் பிரச்சனையில் பெரியாரை ஆதரிக்காததினால் பெரியார் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறினார். தன்னை சமுதாயத் தலைவராக முன்னெடுத்துக் கொண்டார்.

இந்தச் செயல்பாடு வரவேற்கத் தக்கது. ஆனால் பெரியார் தொடர்ந்த அந்த இயக்கம் முழுமையான முன்னேற்ற சிந்தனைகளை முன்னெடுத்து போராட்டக் களத்தைத் தொடர்ந்ததா? என்ற வினா எழுப்பப் படுமானால் வருகிற பதில்களில் இல்லை என்றோ, அல்லது மறுத்தோ, மழுப்பலாகவோ வரலாறு பதிலை வைத்திருக்கிறது.

பெரியார் நாத்திக வாதத்தை முன்னெடுத்தார். அது குற்றமல்ல. ஆனால் பெரியார் வைத்த நாத்திக வாதம் பிராமண எதிர்ப்பாகவும், இந்து மத மறுப்பாகவும் மட்டுமே பூதாகரமான தோற்றம் பெற்றது.

பெரியாரின் பெண்ணியம் இன்றுவரை நம்மால் அதிகம் பேசப்படக் கூடிய நல்லதொரு சிந்தனை. ஆனாலும் அதுவும் பெரியார் தொடங்கிவைத்த சிந்தனையோடு தன்னை நிறுத்திக் கொண்டு மேலும் சிந்திக்க மறுத்து சண்டித்தனம் செய்துக் கொண்டிருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் பெரியாரிய கோட்பாட்டுக்கும் , மார்க்ஸிய கோட்பாட்டிற்கும் அடிப்படையிலும் தோற்றத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் நிரம்பவே முரண்பாடுகள் இருந்தன.

மார்க்ஸியம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு சின்ன தடைக்கல்லாக பெரியாரியம் இருந்தது. இது வேதனைக்குரியதாக இருந்தாலும் உண்மையானது.

மார்க்ஸியத்திற்குரிய தடை என்பதால் பெரியாரைப் புறக்கணிக்க முடியாது. ஆனால் பெரியார் முன்வைக்க வந்த மத ஒழிப்பு செயல்பாடு தன்னுடைய செயலில் பின்னடைவுப் பெற்று அதற்குப் பதிலாக சாதி அமைப்புக்கள் வலுப்பெற எதிர்வினை ஆற்றிவிட்டது என்பதை வரலாற்றில் மறைத்துவிடக் கூடாது.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் வளர்ந்து செழித்திருக்க வேண்டிய பெரியாரிய கோட்பாடு இன்றுவரை ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைக் கூட தொடவில்லை.

பெரியாரில் இருந்து ஏதேதோ காரணம் கூறி வெளிவந்த அண்ணாதுரை உருவாக்கிய தி.மு.க இன்று பிடித்திருக்கக் கூடிய இடத்தைக் கூட இன்னும் பெரியார் இயக்கம் பிடிக்கவில்லை.

தி.மு.க விலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.இ.அ.தி.மு.க தொட்டிருக்கும் எல்லையைப் பெரியாரிய தத்துவம் இன்றுகூட எட்டிப் பார்க்கவில்லை.

ஆனால் பெரியாரிய சிந்தனை என்ற பேனர் இயக்கங்கள் முற்றிலுமாக முடிந்து விடவும் இல்லை. இன்று ஏற்பட்டிருக்கும் பல முன்னேற்றங்களுக்கு அதாவது தலித்திய முன்னேற்றம், பெண்ணிய உரிமைப் போராட்டம் இவைகளுக்கு எல்லாம் பெரியாரியம்தான் பாதை அமைத்துக் கொடுத்தது என்ற பேச்சு இன்றும் தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் இதில் முழு உண்மை இல்லை.

இன்னொருபுறம் தமிழகத்தில் இன்று இருக்கக்கூடிய சாதியப் பிரிவுகள் சற்றுக் கைக்கோர்க்கப் பட்டு மதவெறி தத்துவத்தை அவர்களுக்குள் திணித்து வேறொரு களத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லும் எதிரிகளுக்கு தீனிப் போடும் கருத்துக்களை பெரியாரியத்தின் கோட்பாட்டிலிருந்துதான் மறைமுகப் பிரச்சாரம் செய்து உருவாக்கி இருக்கிறார்கள்.

பெரியார் இந்துமத விரோதி. இந்துக்களை மட்டுமே மோத வந்த ஒரு பிற்போக்குவாதி மற்ற மதங்களோடு சமரசம் செய்துக் கொண்ட சாதுர்யவாதி என்றெல்லாம் காட்டப்பட்டு இந்து - முஸ்லிம், இந்து - கிருத்துவ மோதல்களுக்கு தீனியும் பெரியாருடைய பூர்த்திப் பெறாத திட்டக் குடோனிலிருந்துதான் இன்றும் கொண்டுவந்து தரப் படுகிறது.

பெரியாரியம் இன்றும் இருக்கிறது. அழிந்துவிடவில்லை. இது ஒன்றே அது உயிர் வாழ்கிறது என்பதற்கு அடையாளம் என்ற விவாதத்திலும் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.

பெரியார் தத்துவத்தையும் இயக்கத்தையும் மட்டும் விட்டு போகவில்லை. பலப்பல கோடிகளையும் விட்டுப் போயிருக்கிறார்.

இந்தப் பல கோடிச் சொத்துக்கள் இருக்கும்வரை பெரியாரியம் என்ற ஒரு போர்டைத் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு இயக்கம் இருந்துதான் தீரும். இது தத்துவ பலத்தால் அல்ல. பொருளாதார பலத்தால் நிற்கிறது.

தி.மு.க விற்கு பல கோடி சொத்துக்கள் இருக்கின்றன. தி.மு.க விலிருந்து இன்னும் எத்தனைப் பிரிவுகள் பிரிந்து போனாலும், தி.மு.க வினுடைய அரசியல் வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தாலும் தி.மு.க என்ற ஒன்று இருந்துக் கொண்டுதான் இருக்கும். அதற்குக் காரணம் அதற்கு இருக்கும் பல கோடிச் சொத்துக்கள்தான்.

அண்ணா தி.மு,க விற்கும் இதுதான் கதி. எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அ.தி.மு.க விற்கு இருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் இல்லாதிருந்தால் ஜெயலலிதாவால் ஒரு அங்குலம் கூட அ.தி.மு.கவை முன்னெடுத்து வந்திருக்க முடியாது.

இன்று சர்வ வல்லமைப் படைத்ததாக அ.தி.மு.க காரர்கள் அவர்கள் தலையில் தூக்கி வைத்திருக்கும் தெய்வத்திரு அம்மாவும், அந்தக் கட்சியின் கோடிக்கணக்கான சொத்தும் இணைந்திருக்கும் வரைதான் அம்மா புராணம் அரங்கேறிக் கொண்டிருக்கும்.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் கதி என்ன என்பது நமக்கு தெரியும். இதுவே அதற்கு உதாரணம்.

காங்கிரஸ் 1967 உடன் தமிழகத்தில் காலாவதியாகி விட்டது. ஆனாலும் அனைத்துத் தேர்தல்களிலும் காங்கிரசிற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்கு கிடைக்கிறது. அது தோழமையால்தான் என்பது உண்மை என்றாலும் காங்கிரசிற்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் தமிழகத்தில் காங்கிரஸ் தங்கி இருக்க ஒரு மூல காரணம் என்பதை மறக்கக் கூடாது.

மத்தியில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் அது ஸ்திரம் பெற சொத்து ஒரு மூல காரணம். மூப்பனார் காங்கிரஸை விட்டு வெளியே வந்து கட்சியை ஆரம்பிக்கும் பொழுதும் சத்தியமூர்த்தி பவன் சார்ந்த சொத்து அவர் கைவசம் இருந்தது. இதையும் இங்கே நினைத்துக் கொள்ளுங்கள்.

திருவண்ணாமலையில் அன்று நண்பர் பொதிய வெற்பன் சார்ந்த என் நண்பர்களுடன் நான் விவாதித்துக் கொண்டிருந்த இந்தத் தகவல்கள் இன்று என் நினைவுக்கு வருகிறது.

சில மார்க்ஸிய சிந்தனையாளர்கள் பெரியாரை முன்னெடுத்து திடீரென்று இப்பொழுது பேசத் தலைப்படுகின்றனர். இதனால் தலித் சமுதாயத்தவர்களை மார்க்ஸிய பதாகைக்குக் கீழ் கொண்டு வரலாம் என்று நினைப்பார்களேயானால் மார்க்ஸியவாதிகள் மீண்டும் பாரமான வரலாற்றுப் பிழை புரியத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதுதான் என் கருத்து.

மார்க்ஸியத்திற்குள்ளேயே ஒரு விவாதம் உள்வைக்கப் படுவது உண்டு. மார்க்ஸிய தலைவர்களே பிராமணியத்திலிருந்துதான் தரப் படுகிறார்கள் என்ற விவாதம் எங்கிருந்து பிறந்திருக்கும்? பெரியாரிய சிந்தனையை ஒரு சாயலில் புரிந்துக் கொண்ட மார்க்ஸிய நண்பர்களால்தான் என்பதையும் நினைவு கூறுங்கள்.

ஒருக்கால் இந்தக் குற்றச் சாட்டில் உண்மை இருக்குமானால் பார்ப்பணியம் இந்த சிந்தனையை எங்கிருந்து எடுத்திருக்கும்? பெரியாரிய வேறு ஒருவகையானப் புரிதலின் அடிப்படையில்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இந்தச் சிந்தனையை இப்பொழுது தொட்டு வைப்போம். தொடர்ந்து வரக் கூடிய சிந்தனைகளில் இருந்து நமக்கும் சமூகத்திற்கும் நல்ல சிந்தனை கிடைக்கிறதா என்று காத்திருப்போம்.