நேரம் வந்துவிட்டது!!!
தலகான். பயம் நிறைந்த பிரதேசம். அருகில் வேறு
நகரங்கள் கிடையாது. அரபுகளும், பாரசீகர்களும் வணிகத்துக்குப் புறப்பட்டால் தலகான்
இடையிலே தடுத்து நிற்கும். சுற்றுப்புறம் எங்கும் ஓர் ஆழ்ந்த அமைதி நிரந்தரம்
கொண்டிருக்கும்.
தலகானின் கொள்ளைக் கூட்டம் அந்தப் பிரதேசத்தை
குலுக்கிக் கொண்டிருக்கிறது. வணிகக் கூட்டத்தினரும் வேறு மாற்று வழி இல்லாமல்
திணறினர்.
காடுகளும் அடர்த்தி. மனிதன் வாழ்ந்துதான் ஆக
வேண்டும். ஆபத்துகளை அனுபவித்துக் கொண்டே ஆதாயங்களை சேகரித்துக் கொள்ளும் கலை
மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மகோன்னதம்.
மாலை நேரம் இன்னும் சிறு பொழுதில் அங்கே
நழுவி நழுவி இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஒரு வணிகர் குழு தலகான் கானகத்தைப்
பத்திரமாகக் கடந்துவிட விரைந்து கொண்டிருந்தது. அந்த வணிகக் குழுவில் ஒரு மனிதன்
மட்டும் அளவுக்கு அதிகமாகப் பதறிக் கொண்டிருந்தான். அந்தக் குழுவில் அவனிடம்தான்
நாணயங்கள் குவியலாகக் கிடந்தன.
இதுவரை காத்து வந்த நாணயக் குவியலை இந்தக்
கானகத்தின் கள்வர் கையில் ஒப்படைக்க நேரிடுமோ என்ற உள்ளச்சம் அவனை வதைத்தது.
சுற்றும் முற்றும் பார்க்கிறான். கள்வர்களின்
விழிக் கூர்மை, அவர்களின் வாள் முனையை விட வலிமை மிக்கது. அவனுக்கும் இது
புரியும்.
எப்படியும் இந்த வணிகக் குழுவின் வரவுக்கும்
எங்கோ ஓர் இடத்தில் கள்வர் கூட்டம் காத்திருப்பதாக உள்ளுணர்வு அவனை உலுக்கிக்
கொண்டே இருக்கிறது.
கள்வர்கள் இந்த வணிகர் கூட்டத்தைக்
கவனிக்கும் நேரத்தில் நாம் தனித்து விடுவதே பத்திரமான பாதுகாப்பு என அவனின்
பிடரியில் அறிவு அறிவிக்கிறது.
வணிகக் கூட்டம் கானகத்தை விசுக்கென்று
கடந்துவிடத் துரிதம் காட்டுகிறது. அவன் மட்டும் நாணயக் குவியலுடன் கூட்டத்தை
விட்டுப் பின் தங்குகிறான். சாதுர்யத்துடன் நழுவுகிறான்.
ஒரு இலை உதிர்வதால் மரம் மொட்டையாவதில்லை.
அவன் தங்கி விட்டதால் அந்த வணிகக் கூட்டம் பலம் குறைந்து விடவில்லை.
கூட்டம் மேலும் மேலும் முன்னேறி கள்வர்களை
ஏமாளிகளாக்கத் தீவிரம் காட்டியது.
இரவுத் தங்கி மறுநாள் பகலில் தலகானைத்
தாண்டுவதே பாதுகாப்பு என்னும் அவனின் முடிவு அவனை வேறொரு திசைக்கு வழி நடத்தியது.
நாணயக்குவியளுடன் ஒரு ஒற்றை
மனிதன்.கண்களுக்கு ஏதேனும் வீடு தென்படாதா என்ற எதிர்பார்ப்புடன் நிற்கிறான்.
தென்புறத்தில் ஒரு கூடாரம். கொஞ்சம்
தொலைவில். உறுத்துப் பார்க்கிறான். ஒரே ஒரு மனிதர் மாதிரி ஒரு உருவம் அங்கே புகைத்
தோற்றத்தில் படுகிறது.
அவனுக்குள் முடிவு உறுதியாகிறது. நாணயத்தின்
பாதுகாப்பு அங்கே நிச்சயம் இருக்கும். அப்படி ஒரு வெறி நம்பிக்கை.
கூடாரத் திசையில் பாதங்கள் தடம் பதிக்கின்றன.
அழுக்கடைந்த ஆடை. இரும்பு மேனி. முறையற்ற
மயிர்க்காடு. அழுத்தமான விரல்களுக்கு இடையில் தபசுமணி உருள்கிறது. வாயிதழ் இறை
நாமத்தை உச்சரிக்கிறது. கூடாரத்துக்குள் அவரைத் தவிர்த்து எவரும் இல்லை.
அவனுக்கு பெருத்த மகிழ்ச்சி. ஒரு மஹானிடம் அடைக்கலம்
கிடைத்திருக்கிறது. நாணயத்தை இவரைவிட எவரும் இப்போதைக்குப் பாதுகாக்க முடியாது.
கூடார நுழைவாயிலில் அந்த ஒற்றை மனிதன் நாணயக்
குவியலைச் சுமந்து நிற்கிறான்.
கூடாரத்தின் உள்ளிருந்து குரல் வெட்ட
வெளிக்குள் குதிக்கிறது.
"யாரப்பா அங்கே..?"
வந்தது கேள்வி அல்ல. அதட்டல்.
மஹானே நான் வழிப் போக்கன், வணிகன். பெரும்
செல்வத்துடன் இங்கே நிற்கிறேன். என்னுடன் வந்த வணிகர்கள் என்னைத் தவற விட்டு
விட்டு முன்னேறிச் சென்று விட்டனர். இரவு இறங்கிக் கொண்டிருக்கிறது. தலகான்
கள்வர்களின் தலை வாசல். எனக்குப் பாதுகாப்பு வேண்டும். செல்வத்துக்கு சேதாரம்
வந்துவிடக் கூடாது. தாங்களே அடைக்கலம்.
அவன் நடுங்கி நடுங்கி வார்த்தைகளை பிழிந்துக்
கொண்டிருந்தான்.
"என்னிடம் என்ன
எதிர்பார்க்கிறாய்?" கூடார மஹானின் குரலில் கம்பீரம் எழுந்தது.
"அடைக்கலம். பாதுகாப்பு" அவனின்
குரல் வழிந்தது.
"உன் செல்வத்துக்கு நான் பாதுகாப்பா?
நெருப்பிடம் சருகுக்கு அடைக்கலமா? படைத்தவன் கட்டளை அதுவானால் பாதுகாப்பு
வழங்கித்தான் ஆகவேண்டும். சரி. உன் கையிருப்பை கூடாரத்தின் உள்ளே என் விழிபடும்
தொலைவில் வை".
உத்தரவு பிறந்து விட்டது.
வணிகன் தன் நாணயச் சுமையினை கூடாரத்தின்
உள்ளே வைக்கிறான். இன்னும் நிற்கிறான்.
"வேறு என்ன? உன் வேலை முடிந்துவிட்டது.
நீ செல்லலாம். இங்கே ஈக்களுக்கு இடமில்லை. இது உலைக்களம். போ. விடிந்ததும் வா.
அப்போது உன் பொருளை எடுத்துச் செல். அடைக்கலப்பொருளை, இந்த நெருப்பு ஒரு போதும்
தீண்டாது. சென்று வா..."
கூடாரவாசி
தன் கைவிரல்களுக்கு இடையில் தபசு மணியை உருட்ட ஆரம்பித்துவிட்டார்.வாயிதழ். இறை
உச்சாடனத்தை மௌன அசைவில் வரிசைப்படுத்த ஆரம்பித்துவிட்டது.
வணிகன் கூடாரத்துக்கு வெளியே மீண்டும் தனி
ஒற்றை மனிதனாக நிற்கிறான். அவன் அச்சம் கூடாரவாசியின் முன்னே கட்டுண்டு
கிடக்கிறது. அவனுக்குள் இப்போது பழைய மனிதன் சிறுகச் சிறுக முகத்தை
நுழைக்கிறான்.கூட வந்த கூட்டத்தை விட்டு விலகியது துரோகமா? பாதுகாப்புக்காக மனித
நியதிகளை மீறுவது தப்பாகுமா? இப்போது உள்ள தனிமை தண்டனையா? அல்லது இளைப்பாறலா?
இதில் எது சரி? எது தவறு?
அந்த வணிக மனிதன் அல்லாட ஆரம்பித்துவிட்டான்.
ஒன்றாக வந்தவர்களின் கதி?
அப்போது அச்சம் இருந்ததில் அர்த்தம்
இருந்தது. இப்போது அச்சப்படுவதில் அவமானம் இருக்கிறது.
வணிகக் கூட்டம் சென்ற திசை நோக்கி ஓடுகிறான்.
ஏதேதோ விநோதச் சத்தங்கள். முனங்கல்கள். வணிக
மனிதன் பதுங்கினான். என்ன நடந்து விட்டது?
ஒரு கூட்டம் மூட்டை முடிச்சுக்களுடன்
திரும்பிக் கொண்டிருக்கிறது. அவைகள் இவனுடன் வந்த வணிகர் கூட்டத்தின் பொருள்கள்.
கள்வர்கள் தங்களின் வெற்றியை நிலை
நாட்டிவிட்டார்கள்.
வணிக மனிதனுக்குள் மீண்டும் அதிர்ச்சி.
முன்னேறுவது மரணத்துக்குச் சமீபம் போவது போலாகும். இப்போதும் பாதுகாப்பு அந்தக்
கூடாரம்தான். கள்வர்களின் விழிகளுக்கு விலக்காகிக் கூடாரம் நோக்கி அந்த வணிக
மனிதன் பின்னுக்கு நழுவினான்.
அவன் போகும் திசையில் கள்வர் கூட்டமும்
நகர்கிறது.
கூடாரம் அருகில் கள்வர் கூட்டம் காத்து
நிற்கிறது. ஆணை பிறக்க வேண்டும். பின்பே உள் நுழைய முடியும்.
நேரம் நகர்கிறது. கூடார வாசியிடமிருந்து ஆணை
வரவில்லை. கள்வர் கூட்டம் கைப்பற்றிய பொருள்களுடன் காத்து நிற்கிறது. சற்றுத்
தொலைவில் வணிக மனிதன் சகல பயங்களின் பிம்பமாக நிற்கிறான்.
"முடிந்ததா? வாருங்கள் உள்ளே...
கூடாரவாசியின் கட்டளை எதிரில் நின்ற வணிக மனிதனின் காதிலும் இடித்தது.
கள்வர்கள் கொண்டு வந்த பொருள்களை
கூடாரவாசியின் முன் வைக்கின்றனர். அவர் கண்ணின் கருவிழிகள் அனைத்துப் பொருள்கள்
மீதும் உருள்கின்றன. அதுபோதும். அத்தனையும் மனதுக்குள் பதிந்து கொண்டன.
வணிக மனிதன் பாதங்களுக்குக் கீழ் பூமி
குலுங்கியது.
"வழிப்பறிக் கள்வர்களின் தலைவனிடமே
நாணயக் குவியலை வலிய வந்து ஒப்படைத்துவிட்டேனா"?
மஹான் தோற்றத்தில் மாபாவியா? இறை வசனம் ஒரு
ஏமாற்று ஒலிக்குறிப்பா?" வணிக மனிதன் வாய்விட்டு அலறினான்.
சப்தம் வந்த திசைக்குள் கள்வர்கள் பாய்ந்தனர்.
வணிக மனிதனை ஒரு கட்டெரும்பைத் தட்டிவிடுவது போல் தட்டித் தள்ளினர்.
கூடாரவாசி அவனைப் பார்த்தார்.
"ஏனப்பா இவ்வளவு அவசரம்? சரி அதோ பார்
உன் நாணய மூடை. அதை எடுத்துக் கொண்டு நீ புறப்படு. நீ போகும் நேரம் வந்துவிட்டது.
நீ புறப்படு. கள்வர் பயம் இனித் தேவையில்லை. என் உத்திரவு உனக்கு
வழங்கப்பட்டப்பின் எந்த கள்வனும் உன் புருவ ஓரத்துப் பூனை மயிரினைக் கூட அண்ணாந்து
பார்க்க மாட்டான். போ. உடனே புறப்படு."
கூடாரவாசியின் பேச்சு முற்றுப் பெற்று
விட்டது.
வணிக மனிதன் தன் மூட்டையைத் தோளில் சுமந்து
அந்த கனத்த இருட்டுக்குள் கரைந்து விட்டான்.
"தலைவா! தங்கள் முன்பே நாணயத்தை
வைத்துவிட்டு தங்களையே அதை பாதுகாக்கவும் ஒருவன் துணிந்துவிட்டானா?"
"இல்லை. அவன் என் அடைக்கலம். அவனுக்கு
என் பாதுகாப்பில் பூரண நம்பிக்கை. வழிப்பறி பாதகம். நம்பிக்கைத் துரோகம் படுபாதகம்.
நான் எப்போதும் படு பாதகத்துக்கு எதிரி. அதனால்தான் அவனுக்கு என் அனுமதி
கிடைத்தது."
கள்வர் போர்வையில் ஒரு மஹானின் கர்வம் தெரிகிறது.
*********
ஒரு நள்ளிரவு. அந்தக் கூடார வாசியான கள்வர்
தலைவன் தன் காதலியை நாடி வருகிறான்.
காதலி வீட்டின் சுவரேறிக் குதிக்கிறான்.
கள்வன் காதலில் கூட வழிப்பறிப் பழக்கத்தைத்தான் கடைபிடிக்கிறான்.
அந்த இரவில் எங்கோ ஒரு குடிசைக்குள் இருந்து மெல்லிய
ரம்மியமான ஓசையில் திருமறை வசனத்தை ஒருவர் ஓதுகிறார்.
"விசுவாசங் கொண்டவர்களின்
இதயங்கள்
அல்லாஹ்வை நினைத்தும் அவன்
இறக்கி வைத்த சத்தியங்களைக் கவனித்தும்
பயப்படக் கூடிய நேரம் (இன்னும்)
வரவில்லையா?"(57;15)
திருமறைச் செய்தி கள்வர் தலைவன்
செவிப்பறைகளைச் சல்லடையாக்கியது.
காதலியைத் தேடி மதிலேறியவனின் கவனத்தைக்
கொக்கி மாட்டி இழுத்தது.
உள்ளுக்குள் கனன்ற கங்கு மீது குவிந்து
கிடந்த சாம்பல் சூறாவளியால் துடைத்தெறியப்பட்டது!
"ஏக நாயகனே! எங்கள் ரட்சகனே! நேரம்
வந்துவிட்டது. இதோ உன் திருமுன் எண்சாண் உடம்பும் துகள் துகள்களாகத் துடிக்கின்றன.
என் நேரம் வந்துவிட்டது! என் நேரம் வந்துவிட்டது!."
கள்வர் தலைவன் அந்த ஷணமே இறைஞானத் தடாகத்தில்
துள்ளிக் குதித்து, துடித்துக் களித்து முக்குளித்து எழுந்தார்.
புளைல் இப்னு இயால் (ரஹ்) ஞானத்தின் புதையலை
அள்ளி அள்ளி மகிழ்ந்தார். வழிப்பறி தந்த வாழ்வை பறித்த, ஞானத்தின் மஞ்சத்தில்
மூர்ச்சை அற்று விழுந்தார்.
கானகக் கூடாரம் மீண்டும் வந்தது. அங்கே
வழிப்பறிப் பொருள்களின் வாசனைக் கூட ஹராமாகிவிட்டது.
ஹலாளைத் தவிர வேறு எதுவும் இனி அங்கே தலை
தூக்க முடியாது. அப்படி ஒரு கட்டாய கட்டுப்பாடு அங்கே விதியாகிவிட்டது.
*********
அதே கூடாரம். மக்கள் கூட்டம் தேவைகளுக்காக
அங்கே காத்துக் கிடக்கிறது.
"எங்களின் மஹானே! ஒரு ஊரை நான் கடந்து
வரும் போது ஒரு அதிசயம் கண்டேன். ஒரு நீருற்று அங்கே இருக்கிறது. பகலில் அதில்
நீர் சுரக்காது. முற்றிலும் வறண்டு விடும். இரவில் இனிய நீர் சுரக்கும். இது என்ன
அதிசயம்? மஹானே! இறைவன் உங்களுக்கு அறிவிக்கக் கூடும். நீங்கள் எமக்கு அதைத்
தெரிவியுங்கள்."
இப்படி ஒரு மனிதர் புளைல் அவர்களிடம்
கேட்கிறார்.
மஹானின் விழிகள் மூடிக் கொள்கின்றன. விழி
ஓரங்களில் நீர் வழிகின்றன. ஒரு புதுச் சுனை அங்கே சுரந்து ஒழுகுகின்றது. விழி
திறந்தார்கள். கண்ணீர் சுனை வற்றவில்லை.
"அந்த அதிசய ஊரில் ஒரு ஏழைக்
குமரிப்பெண் திருமணத்திற்கு வாய்ப்பின்றி வதங்கிக் கொண்டிருக்கிறாள். வேதனையில்
அவள் விழித்திருக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்துகின்றாள். அதனால் அந்த
நீர்ச்சுனையே வறண்டு விடுகிறது. அவள் தன்னை மறந்து உறங்கும்போது கண்ணீர்
நின்றுவிடுகிறது. எனவே நீர்ச்சுனையில் தண்ணீர் சுரக்கிறது"
வார்த்தைகளை முடிக்கும்போது மஹானின் விழிகள்
தெப்பத்தில் மிதந்தன. அப்போது எந்தக் கடல் வற்றியதோ..?